Published:Updated:

பெரியபாளையத்தாளே !

பெரியபாளையத்தாளே !

பிரீமியம் ஸ்டோரி

அருள் தரும் அம்மன் உலா !
கரு.முத்து
படங்கள் : கே. கார்த்திகேயன்

இறைசக்திக்கு முன் நாம் எதுவுமில்லை' என்பதை ஆலயங்களில்தான் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும். பெரியபாளையத்தாளின் ஆலயத்தில் அப்படி அவளின் அருள் சக்தியை உணர்ந்துதான், தங்களை முற்றிலுமாக ஆத்தாளிடம் ஒப்புக் கொடுக்கிறார்கள் பக்தர்கள்!

பெரியபாளையத்தாளே !
##~##

சென்னை மாநகரில் இருந்து எளிதில் செல்லக்கூடிய தூரத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில்  இருக்கிறது பெரியபாளையம். அங்கே அருளுருவாக நிற்கிறது அம்மனின் ஆலயம். செவ்வாடையோ, மஞ்சளாடையோ உடுத்தி குடும்பம் குடும்பமாக வந்து தாயின் காலடியை தஞ்சமடைந்து கொண்டேயிருக்கிறார்கள் பெண்கள். பொங்கல் வைப்பது, அடித்தண்டம் உருட்டுவது, மொட்டையடித்துக் கொள்வது, அங்கப்பிரதட்சணம் செய்வது என்று பல்வேறு விதமான நேர்த்திக் கடன்களை செலுத்தும் அவர்களில், இன்னும் சிலர் ஆத்தாளின் பிள்ளைகளாகி, அந்த அரிய காரியத்தைச் செய்கிறார்கள்.

அப்படி என்ன செய்கிறார்கள்?!

அருகே ஓடிக்கொண்டிருக்கும் ஆரணி ஆற்றில் குளித்து, தங்கள் உடலில் இருக்கும் ஆடைகளைக் களைந்து, ஆத்தாளுக்கு பிடித்த வேப்பிலையை மட்டுமே உடலில் அணிந்துகொண்டு ஆலயத்தை சுற்றி வந்து வணங்கி அருள் பெறுகிறார்கள். பலர் முன்னிலையில் இதை எந்தச் சங்கடமும் இல்லாமல்... சிறு குழந்தைகள், பருவப் பெண்கள், நடுத்தரப் பெண்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் வேப்பிலையையே சேலையாகஉடுத்தி பிரார்த்திக்கிறார்கள், நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள். அனைவரும் ஆத்தாளின் அருளை மட்டுமே மனதில் நிறுத்தி அப்படிச் செய்வது, ஆச்சர்ய அர்ப்பணிப்பு!

பெரியபாளையத்தாளே !

தன் தம்பியின் குழந்தைகளுக்கு வேப்பிலை ஆடை அணிவித்து பிராகாரத்தை வலம் வந்து கொண்டிருந்தார் சென்னையைச் சேர்ந்த துர்கா. ''இந்தக் குழந்தைகளுக்கு உடம்புல சின்னச் சின்ன பிரச்னைகள் இருந்துச்சு. பல டாக்டர்கள்கிட்ட காட்டியும் பலனில்ல. அப்பதான் பெரியபளையத்தாகிட்ட வேண்டிகிட்டா, எல்லாம் சரியாகும்னு பலரும் சொன் னாங்க. பாதி நம்பிக்கையோடதான் வேண்டிக்கிட்டேன். ஆனா, ஆத்தா என் னோட அவநம்பிக்கையை மன்னிச்சு, வேண்டுதலை நிறைவேத்திட்டா. எல்லா பிரச்னைகளும் தீர்ந்து, இப்போ குழந்தைங்க ரொம்ப ஆரோக்கியமா இருக்காங்க. அதான் நேர்த்திக் கடனை நிறைவேத்தறோம்!'' என்று விறுவிறு வென வலத்தை தொடர்ந்தார்.  

நேர்த்திக்கடன் முடித்து பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார் பொன்னேரியைச் சேர்ந்த சூர்யகலா, ''பையனுக்கு மஞ்சள்காமாலை, பெண்ணுக்கு தோல்வியாதினு வந்து படுத்தி எடுத்திடுச்சி. 'தாயே நீதான் குணமாக்கணும்’னு வேண்டிகிட்டேன். குணமாக்கிட்டா. அதுக்காக வந்து நேர்த்திக்கடன் நிறைவேத்துறேன்'' என்று ஆத்தாளின் அருளில் பரவசமானார்.

'பவானியம்மன்’ என்பது அவளின் பெயர். ஆனால் 'பவானித்தாயே’ என்று யாரும் அவளை அழைப்பதில்லை. 'பெரியபளையாத்தாள்’ என்றுதான் அழைக்கிறார்கள் அடியவர்கள்.

அவள் இங்கே வெளிப்பட்டது எப்படி?

பெரியபாளையத்தாளே !

கம்சன் - கண்ணன் கதை தெரியுமில்லையா? அதில்தான் இருக்கிறது இந்த பவானியின் வரலாறும். தன் தங்கை தேவகியின் வயிற்றில் பிறக்கும் குழந்தையால்தான் தனக்கு அழிவு என்று, தேவகியையும் அவளு டைய கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்து, அவர்களுக்கு பிறந்த ஏழு குழந்தைகளையும் கொன்றான் கம்சன். எட்டாவது குழந்தை யாகப் பிறந்தவர் பகவான் கிருஷ்ணர். அவர் பிறந்த வுடன் தன்னை ஆயர்பாடியில் இருக்கும் நந்தகோபன் - யசோதை தம்பதியின் வீட்டில் விட்டுவிட்டு, அங்கே பிறந்திருக்கும் மாயாதேவியை இங்கே கொண்டுவந்து விடும்படி தந்தையிடம் பணித்தார். அவ்வாறே செய்யப்பட, பகவானுக்கு மாற்றாக சிறைக்கு வந்தாள் மாயாதேவி. கம்சன் அவளை அழிக்க முற்பட்டபோது அவனது மார்பில் எட்டி உதைத்து வானில் எழுப்பியவள்தான், நேராக இங்கு வந்து ஆயுதபாணியளாக ஆரணி ஆற்றங்கரையில் அமர்ந்தாள்; பவானி என்னும் திருநாமத்தையும் பெற்றாள் என்று தலபுராணம் சொல்கிறது.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களின் கடலோர மீனவ மக்களுக்கு குலதெய்வமாகவே விளங்குகிறாள் அன்னை. கடலுக்குச் சென்ற ஆண்கள் எந்த ஆபத்துமின்றி மீண்டு வர இவளிடம்தான் முறையிடுகிறார்கள். அப்படி ஒரு தடவை தன் கணவனை பெரிய ஆபத்துகளில் இருந்து காப்பாற்றிய அன்னைக்கு, தன் மாங்கல்யத்தை காணிக்கையாக கொடுத்திருக்கிறார் ஒரு மீனவரின் மனைவி. இது நடந்தது ஒரு காலத்தில். ஆனால், அன்று தொடங்கி, 'அன்னையிடம் கேட்டால் தாலி பாக்கியம் நிலைக்கும்’ என்றபடி ஆலயத்துக்கு வரும் பக்தைகள் லட்சக்கணக்கில் பெருகியிருக்கிறார்கள். அப்படி தாலி பாக்கியம் கிட்டியவர்கள் தினம் தினம் ஆலயத்துக்கு வந்து தாலி காணிக்கை செலுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.

இன்னும் பல பல வேண்டுதல் களுக்கு மாவிளக்கு போட்டும், வேப்பஞ்சேலை அணிந்தும், ஆடு கோழி சுற்றிவிட்டும், கரகம் சுமந்து வந்தும் காணிக்கை செலுத்துகிறார்கள். முக்கியமாக, மஞ்சள் புடவையை அணிந்து அம்மனாக வேடமிட்டு, தலையில் கரகம் சுமந்து வருகிறார்கள். ஆண்களாக இருந்தாலும்கூட புடவை அணிந்து அம்மன் உருவில் வருகிறார்கள்.

ஆரணி ஆற்றங்கரையில் ஆரம்பத்தில் சிறிய அளவில் இருந்த கோயில், இப்போது மிகப் பெரியதாக உருமாறியிருக்கிறது. தன் சந்நிதியில் கிழக்குப் பார்த்து அமர்ந்திருக்கிறாள் அன்னை. எல்லோரும் நன்றாக கண்குளிர பார்த்து தரிசிக்கும்படி எதிரே மேடை வசதி செய்யப்பட்டிருக்கிறது. அங்கே இருந்து பார்க்கும்போது அருளுருவின் கருணை முகம் நம்மை பரவச மாக்குகிறது. சுயம்புவான அம்மன் வெள்ளிக் கவசத்துடன் கீழே காட்சியளிக்க, கைகளில் சங்கு, சக்கரம், வாள், அமுத கலசம் ஏந்தி, நாகக்குடையுடன் சுதை உருவமாக கம்பீரம் காட்டி நிற்கிறாள்.

பெரியபாளையத்தாளே !

''கைகளில் சங்கு, சக்கரத்துடன் அம்மன் தோன்றும் காட்சியே... பகவான் கிருஷ்ணருக்கு மாற்றாக, மாயாதேவியாக விளங்கியவள் இவள் என்பதை உணர்த்துகிறது. பகவானையே காப்பாற்றப் பிறந்தவள் இவள். இன்றும் உலகத்து மக்களை எல்லாம் கண்கலங்காமல் காத்து வருகிறாள். அன்னையின் அருட்பார்வை கிடைத்தவர்களுக்கு நெற்றியில் வைத்த பொட்டும், தலையில் சூடிய பூவும் என்றும் நிலைத்திருக்கும், குடும்பத்தில் எல்லா செல்வங்களும் கிடைத்திருக்கும் என்பது அவளை நம்புகிறவர்களின் சத்தியமான ஆணையாக இருக்கிறது!'' என்று அன்னையின் மகாத்மியத்தை சொல்கிறார் ஆலயத்தின் பிரதான அர்ச்சகரான விஜயகுமார்.

பெரியபாளையத்தாளே போற்றி!

எப்படிச் செல்வது?

 

சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், 40-வது கிலோ மீட்டரில் இருக்கிறது பெரியபாளையம். கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறநகர் பேருந்துகள் உள்ளன. இந்த வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகளிலும் பயணிக்கலாம். இத்துடன் கோயம்பேடு, வள்ளலார்நகர், பிராட்வே ஆகிய இடங்களில் இருந்து நகரப் பேருந்துகளும் செல்கின்றன. கோயில் வாசலில் உள்ள கடைகளில் வேப்பிலை ஆடை உட்பட எல்லா பிரார்த்தனை பொருட்களும் கிடைக்கின்றன.

கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 5.30 முதல் 12.30 மணி வரை. மாலை 2.30 முதல் 9.00 மணி வரை. அலுவலக தொலைபேசி எண்: 044-27991631

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு