Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன !

அனுபவங்கள் பேசுகின்றன !

பிரீமியம் ஸ்டோரி

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன !

150
வாசகிகள் பக்கம்

நட்புக்கு ஒரு போன்!

அனுபவங்கள் பேசுகின்றன !
##~##

எங்கள் வீட்டுக்கு வந்திருந்த அண்ணன் குடும்பத்தினர், அன்று ஊர் திரும்புவதற்கு ரெடியாகிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் என் தோழி, கணவருடன் திடீரென்று வந்து விட்டாள். குடும்பம், குழந்தைகள் நல விசாரிப்புகளுக்குப் பிறகு, ஆரம்பித்தாள் அவர்களின் 'மல்டிலெவல் மார்கெட்டிங்’ கச்சேரியை! பலவிதமான பொருட்களை அவர்கள் விற்பனை செய்வதாகவும், அப்படி எங்களையும் செய்யச் சொல்லி கணவன், மனைவி இருவரும் வற்புறுத்தியதுடன், அவ்வாறு வியாபாரம் செய்தே பலர் 'லட்சாதிபதி’ ஆகி உள்ளதாக ஒரு புத்தகத்தை வேறு வைத்து படம் காண்பித்தார்கள். ''எங்களுக்கு விருப்பம் இல்லை'' என்று சொல்லியும் விடுவதாக இல்லை. இன்னொரு பக்கம்... அண்ணன் குடும்பம் ரயிலுக்குச் செல்ல நேரம் ஆகிக் கொண்டே இருந்ததால், என் மனதுக்குள் ஒரே பதற்றமும் படபடப்பும். அன்று நாங்கள் பட்ட பாடு... ஹய்யோ ரகம்!

தோழிகளே... நெருங்கிய நண்பர்களோ, உறவினர்களோ, யார் வீட்டுக்கும் செல்வதற்கு முன்பும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்கள் விருப்பத்தையும் வசதியையும் தெரிந்து கொண்டு சென்றால்... எப்போதும் நட்பு நலமாக இருக்கும்!

- ரம்யா சங்கர நாராயணன், பெங்களூரு

அலட்சியம் தந்த ஆபத்து!

அனுபவங்கள் பேசுகின்றன !

ஒரு நாள் ஆஸ்பத்திரியில் டாக்டரைப் பார்க்கக் காத்திருந்தோம். அப்போது தன் மூன்று மாதக் கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்த அந்தப் பெண், பதற்றத்துடன் அழுதபடி டாக் டரின் அறைக் குள் நுழைந் தார். குழந்தை யின் பிஞ்சுக் காதிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந் தது. டாக்டரிடம் காண்பித்து வெளியே வந்தவரிடம் ''என்னாச்சு..?'' என்று விசாரித்தேன். ஆசுவாசப்படுத்திக் கொண்டவர், ''என் கணவர் காது குடையும் 'பட்’டினால் காதைக் குடைந்துவிட்டு, அதை அலட்சியமாக ஹாலில் தூக்கி எறிந்து விட்டார். இரண்டரை வயது மூத்த மகள், அதை எடுத்து தன் தம்பியின் காதில் வைத்துத் திருக... பச்சைக் குழந்தை கொஞ்ச நேரத்தில் துடிதுடித்து அலறியது. அப்புறம்தான் ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்தேன்'’ என்றார் பதற்றம் தணியாத குரலில்.

சிறுவயது குழந்தைகள் உள்ள வீட்டில் பெரியவர்கள் இரட்டைக் கவனத்துடன் இருக்க வேண்டுமல்லவா தோழிகளே..?  

- கி.மஞ்சுளா, திருவாரூர்

'லைவ்' கொள்ளை!

அனுபவங்கள் பேசுகின்றன !

பிரபலமான தமிழ் சேனல் ஒன்றின் நேரலைப் போட்டியில், நடிகரின் கண்களைக் காண்பித்து, 'அவர் யார்’ எனக் கண்டுபிடிப்ப வருக்கு பெரிய பரிசுத் தொகை வழங்கப்படும் என்று சொன் னார்கள். அதில் கலந்துகொள்ள ஆசையுடன் போன் செய்தேன். ''சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் லைன் கிடைத்துவிடும்'' என பதிவு செய்யப்பட்ட குரல் சொல்லிக் கொண்டே இருந்தது. எனக்கு லைன் கிடைப்பதற்குள் நிகழ்ச்சியே முடிந்து விட்டது. 'சரி, நம் அதிர்ஷ்டம் அவ்வளவுதான்’ என்று போனை கட் செய்த நான், 'கால் காஸ்ட்’டைப் பார்த்ததும் மூர்ச்சையாகிவிடாத குறைதான். கிட்டத்தட்ட 200 ரூபாய் கட்டணம்! சம்பந்தப்பட்ட மொபைல் கம்பெனிக்கு போன் செய்து கேட்டதற்கு... ''இது போல சேனல் நிகழ்ச்சிகளுக்கு செய்யும் கால்களுக்கு நிமிடத்துக்கு பத்து ரூபாய் கட்டணம். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல'' என்றார்கள். 'இப்படி ஒரு நூதன கொள்ளைக்கு ஆர்வக்கோளாறால் நாம் பலிகடா ஆக வேண்டுமா?’ என்று அப்போதுதான் உரைத்தது எனக்கு!

நீங்கள் 'லைவ்’ புரோகிராமுக்கு கால் செய்கிறீர்களா..?!

- அகிலா, நாமக்கல்

உஷாரம்மா உஷாரு... எங்கேயும் உஷாரு!

அனுபவங்கள் பேசுகின்றன !

கணினி மயமாக்கப்பட்ட ரயில்வே பயண முன்பதிவு அலுவலகத்துக்கு அண்மையில் சென்றிருந்தேன். ரிசர்வேஷன் படிவம் வாங்கி எழுதுமிடத்தில், நின்றிருந்த கல்லூரி மாணவிகள் சிலர், தாங்கள் அடித்து, திருத்தி எழுதி வீணான படிவங்களை கீழே போட்டபடி இருந்தனர். அவர்களை அழைத்து, ''இது பல தரப்பட்ட மக்களும் வரக்கூடிய பொது இடம். படிவத்தில் இப்படி உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் என பர்சனல் விவரங்களை எழுதி வீசிஎறிந்துவிட்டால், அதை சிலர் தவறாக பயன்படுத்த நேரிடுமே..?'' என்று எடுத்துச் சொன்னேன். ''ரொம்ப தாங்க்ஸ், இனிமே கவனமா இருக்கோம்...'' என்றனர் புன்னகையுடன்!

அவர்கள் புன்னகை எனக்கும் வந்தது!  

- சி.பியூலா சார்லஸ், கோயம்புத்தூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு