Published:Updated:

Money Money Money

தகதக தங்க முதலீடுகள் !நிதி ஆலோசகர் அனிதா பட்

Money Money Money

தகதக தங்க முதலீடுகள் !நிதி ஆலோசகர் அனிதா பட்

Published:Updated:

 பணத்தைப் பெருக்கும் மந்திரத் தொடர் 12

##~##

தங்கத்தை ஆபரணங்களாக வாங்கிச் சேமித்தார்கள் நேற்றைய தலைமுறையினர். இன்றோ... பல முறைகளில் தங்க முதலீடு செய்யும் வழிமுறைகள் வந்துவிட்டன. தங்க நகைகளை நேரடியாக வாங்கிச் சேமிக்கும்போது செய்கூலி, சேதாரம் என்று ஒரு தொகை உங்களிடம் இருந்து பறிபோகும். கோல்டு இ.டி.எஃப், இ-கோல்டு போன்ற பேப்பர் தங்க முதலீடுகளில் அந்தத் தொல்லை இல்லை. இந்த முதலீடுகள் பற்றி இங்கு பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோல்டு இ.டி.எஃப். (Gold ETF-Exchange-Traded Fund): இது தங்கத்தை யூனிட்களாக வாங்கிச் சேமிப்பது. இதற்கு, பங்குச் சந்தை போலவே டீமேட் கணக்கு அவசியம். இந்தக் கணக்கைத் தொடங்க 300-500 ரூபாய் வரை செலவாகும். ஆண்டு பராமரிப்புக் கட்டணம் 300 ரூபாய்.

ஒரு யூனிட் என்பது ஒரு கிராம் தங்கத்தைக் குறிக்கும். ஒவ்வொரு நாளும் அன்றைய தங்க விலைக்கு நீங்கள் எத்தனை யூனிட்கள் வேண்டுமானாலும் வாங்கி, உங்களுடைய கணக்கில் வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது விற்று பணமாகப் பெற்றுக் கொள்ளலாம். அதை வைத்து நீங்கள் நகைகளை வாங்கிக் கொள்ளலாம்.

இ-கோல்டு (E Gold): மாதந்தோறும் நூறு ரூபாய், இருநூறு ரூபாய் என்று உங்கள் வசதிக்கு ஏற்ப தங்கத்தை வாங்கிச் சேமிக்கும் திட்டம். இதற்கும் டீமேட் கணக்குத் தேவை. இதை தங்க நகைச்சீட்டு போல, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகே விற்க முடியும். பணமாகவோ... தங்கமாகவோ வாங்கிக் கொள்ளும் வசதி இதில் உண்டு.

கமாடிட்டி கோல்ட் சேவிங்ஸ் !

Money Money Money

இதில் 'கோல்டு பெட்டல்' (Gold Petal) மற்றும் 'கோல்டு குனியா' (Gold Guinea)என்று இரண்டு வழிகளில் தங்கத்தை சேமிக்க முடியும். இதற்கு கமாடிட்டி டீமேட் அக்கவுன்ட் மற்றும் டிரேடிங் அக்கவுன்ட் தேவை. இவற்றை ஷேர் புரோக்கிங் அலுவலகம் மூலமாகவே ஆரம்பிக்கலாம். இதற்கு 300-500 ரூபாய் வரை செலவாகும். டீமேட் கணக்குக்கு ஆண்டு பராமரிப்புக் கட்டணம் 300 ரூபாய். இந்த முறைகளில் தங்கத்தை வாங்கினால், தங்கத்தின் விலை ஏற்றத்தைப் பொறுத்து லாபம் கிடைக்கும். விலை இறங்கினால் நஷ்டத்தை நாம்தான் கட்ட வேண்டும்.

முழுப்பணம் வேண்டாம்... மார்ஜின் போதும்!

கோல்டு பெடல்: இது, ஒரு கிராம் தங்கத்தைக் குறிக்கும். இந்த ஸ்கீம் மூலமாக ஒவ்வொரு கிராம் தங்கமாக வாங்கிச் சேமிக்கலாம். ஒருவர், எத்தனை கிராம் வேண்டுமானாலும் வாங்கிச் சேமிக்கலாம். இன்றைய தேதியில் ஒரு கிராம் தங்கம் சுமார் 2,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் வாங்குகிறீர்கள் என்றால், முழுத் தொகையையும் கட்ட வேண்டியதில்லை. மார்ஜின் பணமாக 400 ரூபாய் கட்டினால் போதும்... உங்கள் கணக்கில் ஒரு கிராம் வரவு வைக்கப்படும். தங்கம் விலை கிராமுக்கு 200 ரூபாய் ஏறுகிறது என்றால், அந்த ரூபாயை உங்கள் கணக்கில் புரோக்கர் வரவாக சேர்த்துவிடுவார். இதுவே 200 ரூபாய் இறங்கினால், உங்கள் கணக்கிலிருந்து 200 ரூபாய் எடுத்துக் கொள்வார். 2,600 ரூபாய்க்கு வாங்கின தங்கம் 3,600 ரூபாய்க்கு ஏறினால் லாபத் தொகையான ஆயிரம் ரூபாய் உங்களுக்கு வந்துவிடும். நீங்கள் கட்டியிருப்பது வெறும் 400 ரூபாய் மட்டுமே!

கோல்டு குனியா: இது, ஒரு சவரன் (எட்டு கிராம்) தங்கத்தைக் குறிக்கும். இதையும் கோல்டு பெட்டல் போலவே, வாங்கிச் சேமிக்கலாம். இதற்கு மார்ஜின் பணமாக சுமார் 3,000 ரூபாயை செலுத்த வேண்டியிருக்கும்.

உங்களுக்கு பணம் தேவைப்படும் சமயத்தில், அதுவரை நீங்கள் வாங்கி சேமித்திருக்கும் கோல்டு பெட்டல், கோல்டு குனியா ஆகியவற்றில் நீங்கள் கட்டிய மார்ஜின் தொகை மற்றும் லாபத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை நஷ்டமடைந்திருந்தால், மார்ஜின் தொகையில் கழித்துக் கொண்டு மீதியைக் கொடுப்பார்கள். தங்கமாக வாங்க நினைத்தாலும், இதே வழிமுறைகளில் வாங்கிக் கொள்ளலாம்.

முதலீடு மட்டுமல்ல... சம்பாத்தியமும் உண்டு !

வீட்டிலிருக்கும் பெண்கள், முதலில் ஷேர் புரோக்கர்களிடம் கோல்டு பெட்டல், கோல்டு குனியா வாங்கும் முறைகளை கற்றுக்கொண்டு, பிறகு நீங்களே டிரேடிங் செய்யலாம். முதலீட்டு முறையில் மட்டுமல்லாமல் சம்பாதிக்கும் விதமாகவும் இந்த டிரேடிங் பயன்படும். சமீபத்தில் வந்த ஆய்வு முடிவின்படி பெண்கள் அதிக அளவில் தங்கத்தை இப்போது கமாடிட்டி முறையில் வாங்குகிறார்கள் என தெரியவந்துள்ளது. கமாடிட்டி மூலம் இப்படித் தங்கத்தை மட்டுமல்ல, வெள்ளியையும் வாங்கலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தங்கத்தை வாங்கிப் பழகிக்கொண்டு பிறகு அதிக அளவில் வாங்கலாம். ரிஸ்க் இருக்கிறது என்றாலும், தங்கத்தின் விலை அந்தளவுக்கு அதலபாதாளத்துக்குப் போய் விடாது என்பதுதான் சந்தை நிபுணர்களின் கணிப் பாக இருக்கிறது.

சமீபகாலமாக தங்கம்தான் அதிகளவில் வருமானம் கொடுத்து வருகிறது. உலக முதலீட்டாளர்கள் அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்வதைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். நகைக்கடைகளே இப்போது பொதுவான நகைச்சீட்டுகளைவிட, புதிய முறையில் தங்கத்தை ரிசர்வ் செய்துகொள்ளும் முறையை அறிமுகப்படுத்தி வருகின்றன. நீங்களும், குறைந்த பணத்தில் அதிக தங்கத்தை வாங்கக் கற்றுக்கொள்ளுங்கள்... இந்த நவீன முதலீட்டு முறைகள் மூலமாக!

- பணம் பெருகும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism