Published:Updated:

கொஞ்சம் பணம்... கொஞ்சம் முயற்சி... நிறைய வெற்றி...

தில்லாக ஜெயித்த ஸ்டெல்லா! வே.கிருஷ்ணவேணி, படங்கள்: வி.செந்தில்குமார்

கொஞ்சம் பணம்... கொஞ்சம் முயற்சி... நிறைய வெற்றி...

தில்லாக ஜெயித்த ஸ்டெல்லா! வே.கிருஷ்ணவேணி, படங்கள்: வி.செந்தில்குமார்

Published:Updated:
##~##

''வாழ்வின் தேவைகள்தான் நம்மை வெளிச்சத்தை நோக்கி நகர வைக்குது. ரெண்டு குழந்தைகளோட அநாதரவா நின்ன நிலைதான், என்னையும் சுயமுன்னேற்றத்தை நோக்கி ஓடவெச்சுது. உழைப்பும், உறுதியும் கைகொடுக்க, 'வெற்றிகரமான சுயதொழில் முனைவோர்'ங்கற பெருமையோட இப்ப நான் நிமிர்ந்து நிக்கறேன்!'' - நிதானமான வார்த்தைகளில் ஆரம்பித்தார், சென்னை, கிண்டியைச் சேர்ந்த ஸ்டெல்லா. இன்று 'பேப்பர் ஃபைல்’ பிஸினஸில் மாதம் சுமார் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கும் ஸ்டெல்லாவின் நேற்றைய பக்கங்கள், துயரமும் தோல்வியும் நிரந்தரமல்ல என்கிற பாடம் சொல்பவை.

சென்னை, ராயபுரம், காசிமேடு பகுதியில் 'விடிவெள்ளி’ என்று போர்டு மாட்டிய தன் கடையில், வேலைகளுக்கு இடையே நம்மிடம் பேசினார் ஸ்டெல்லா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தஞ்சாவூர்தான் நான் பிறந்த மண். அப்பா, அம்மா ரெண்டு பேருமே டீச்சர்ஸ். நல்லா படிப்பேன். ஓவியம், டைப்ரைட்டிங்னு எப்பவும் எதையாச்சும் கத்துக்கிட்டு துறுதுறுனு இருப்பேன். கால ஓட்டத்துல சென்னையில செட்டில் ஆக, கிண்டியில இருக்கற செல்லம்மாள் மகளிர் கல்லூரியில பி.காம். முடிச்சேன்.

வீட்டுல சும்மா இருக்க பிடிக்காம, தினமும் ஸ்கூல் பசங்களுக்கு டியூஷன் எடுத்தேன். அந்த வருமானத்துலயே கல்யாணத்துக்கு 15 பவுன் சேர்த்தேன். 'கெட்டிக்காரப் பொண்ணு... நல்லவிதமா பிழைச்சுக்குவா’னு எல்லாரும் ஆச்சர்யமா பேசினாங்க. ஆனா, விதி என்னை வாழ்க்கையோட போராட வைக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை'' எனும்போது, குரல் மாறுகிறது ஸ்டெல்லாவுக்கு.

கொஞ்சம் பணம்... கொஞ்சம் முயற்சி... நிறைய வெற்றி...

''திருமணம் முடிஞ்சு... ஒரு ஆண், ஒரு பொண்ணுனு ரெண்டு குழந்தைங்க பிறந்தாங்க. இந்த நிலையில மனஸ்தாபத்தால நானும் கணவரும் பிரிஞ்சுட்டோம். பையனையும், பொண்ணையும் படிக்க வெச்சு ஆளாக்க வேண்டிய பொறுப்பு என் முதுகில். வருமானத் துக்கு வழி தேடி அலைஞ்சேன். கிண்டியில இருக்கற சுயதொழில் வேலைவாய்ப்பு நிலையத்துல மூணு மாசம் தையல் பயிற்சி முடிச்ச கையோட, அங்க... இங்கனு தேடி அலைஞ்சு ஆண்களுக்காக ஷர்ட்ஸ் தைச்சு கொடுக்குற ஆர்டரைப் பிடிச்சேன். நகை எல்லாத்தையும் அடகு வெச்சு, அஞ்சு தையல் மெஷின்களை வாங்கிப் போட்டேன். அஞ்சு ஆட்களையும் வேலைக்குச் சேர்த்தேன். முதலாளியா நிக்காம, நானும்கூட சேர்ந்து தைச்சேன்.

நல்லா போயிட்டு இருந்த பிஸினஸ், திடீரென வேலை ஆட்கள் வராம போக சறுக்கிடுச்சு. எங்கிட்ட வேலை பார்த்தவங்க எல்லாரும் ஒரேசமயத்துல விலகி, நான் ஆர்டர் வாங்கின நிறுவனங்கள்லயே வேலைக்குச் சேர்ந்துட்டாங்க. அது தீபாவளி நேரம் வேற. நிலைமையைச் சமாளிக்க முடியாம, அத்தனை மெஷின்களையும் வித்துட்டேன். ஆனாலும் அந்தத் தோல்வியில சில பாடங்கள் கத்துக்கிட்டேன். சோர்ந்து உட்காராம, 'அடுத்து என்ன?'னு யோசிச்சேன். மறுபடியும் சுயதொழில் வேலை வாய்ப்பு நிலையத்தை அணுகினேன். ஃபைல்கள் செய்ற தொழில் தொடங்குற ஐடியா கொடுத்தவங்க, தொழில்ல முன் அனுபவம் இருந்ததால் மூணு லட்ச ரூபாய் லோனும் கொடுத்தாங்க. தேவையான உபகரணங்கள், மூலப்பொருட்கள் வாங்கினேன். ஒரு கடையையும் வாடகைக்குப் பிடிச்சேன்'' என்றவர்,

கொஞ்சம் பணம்... கொஞ்சம் முயற்சி... நிறைய வெற்றி...

''ஆரம்பத்தில் பிளாஸ்டிக் ஃபைல்களையும், பர்ஸ்களையும்தான் செய்துட்டு இருந்தேன். அப்புறம்தான் பழவேற்காட்டில் இருக்கற மகளிர் சுய உதவிக்குழுக்கள், வேஸ்ட் பொருட்களை மறுசுழற்சி செய்து... பேப்பர் அட்டைகள் செய்றதைக் கேள்விப்பட்டு, அவங்ககிட்ட ஹோல்சேல் ரேட்ல அட்டைகளை வாங்கினேன். அதுல என்னென்ன பொருட்கள் எல்லாம் செய்யலாம்னு மூளைக்கு வேலை கொடுத்தேன். நோட் பேட், ஃபைல், டைரி, டேபிள் மேட், பென் ஸ்டாண்ட்னு பல பொருட்களைத் தயாரிச்சேன். சென்னை, தீவுத் திடல் கண்காட்சியில முதல் முறையா ஸ்டால் போட்டேன். அத்தனை பொருட்களும் விற்றுத் தீர்ந்ததோட, ஆர்டர்களும் குவிஞ்சுது. என் ஒற்றை ஆளோட உழைப்பு பத்தாதுங்குற அளவுக்கு விற்பனை விரிய, ஆறு பெண்களை வேலைக்குச் சேர்த்து தொழிலை விரிவுபடுத்தினேன்.

சென்னையில டபுள்யூ.சி.சி, எம்.ஓ.பி-னு மகளிர் கல்லூரி விழாக்கள்ல ஸ்டால் போட்டேன். என் பொருட்கள் அவங்களுக்குத் தரமா, திருப்தியா இருந்ததால தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கறாங்க. இந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஹேண்ட் பேக், செல்போன் பவுச், கிஃப்ட் அயிட்டம்னு என்ன மாதிரி பொருட்களை இளம்பெண்கள் விரும்பறாங்கனு அவங்ககிட்ட பேச்சுக் கொடுத்தே தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கு ஏத்தமாதிரியான பொருட்களைக் கொண்டுபோக ஆரம்பிச்சுட்டேன். பெரிய நிறுவனங்கள்ல வேலை பார்க்கிற ஹெச்.ஆர் அதிகாரிகள் கிட்டயும் போய் ஆர்டர்கள் வாங்கறேன்... சில்லறை விற்பனைனு நாலா பக்கமும் ஓடுறேன்.

இப்படி ஒவ்வொரு அடியையும் நிதானமா வைக்கறதால, தோல்விகளுக்கு இடமில்லாம பார்த்துக்குறேன். நாளண்ணுக்கு ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் ஆர்டர் எடுக்கிறேன். மூணு பேர் வேலை பார்க்கறாங்க. மாசம் சுமார் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. என் பிள்ளைங்களுக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை கொடுக்க முடியும்ங்கிற நம்பிக்கை இப்போ எனக்கு 200 சதவிகிதம் வந்திருக்கு''

கொஞ்சம் பணம்... கொஞ்சம் முயற்சி... நிறைய வெற்றி...

- கையிலிருந்த பேப்பர் ஃபைல் வேலையை முடித்துவிட்டு நிமிரும்போது, நிறைவு ஸ்டெல்லா முகத்தில்.

''இந்தத் தொழிலுக்கு எதிர்கால உத்தரவாதம் இருக்கு. ஏதாச்சும் பிடி கிடைக்காதானு என்னைப் போல வாடற பெண்கள், இதை தைரியமா எடுத்துச் செய்யலாம். கொஞ்சம் பணத்தோட பயிற்சியும் முயற்சியும்தான் முக்கிய மூலதனம்!''

- நம்பிக்கை ஊட்டினார் ஸ்டெல்லா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism