Published:Updated:

திருமதி GUN ம்மா !

உ.அருண்குமார் படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

திருமதி GUN ம்மா !

உ.அருண்குமார் படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Published:Updated:
##~##

''எனக்கு தோசை சுமாராதான் சுடத் தெரியும். ஆனா, துப்பாக்கி சூப்பரா சுடுவேன்!''

- கலகலவெனச் சிரிக்கிறார் மதுரையைச் சேர்ந்த இல்லத்தரசி சவீந்தனா தேவி! தேசிய அளவில் கலக்கிக் கொண்டிருக்கும் இந்த ரைஃபிள் வீராங் கனையை, புனேயில் நடந்த தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றதற்கான வாழ்த்தோடு சந்தித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தாத்தா, அப்பா ரெண்டு பேருமே காட்டுக்கு வேட்டையாடப் போற பழக்கமுள்ளவங்க. எனக்கு துப்பாக்கி மேல ஈர்ப்பு வர்றதுக்கு அதுதான் காரணம். ஸ்கூல்ல படிக்கறப்ப என்.சி.சி-யில சேர்ந்தேன். எனக்குள்ள ஏதோ ஆர்வம் இருக்கறதை ஸ்கூல் என்.சி.சி. இன்ஸ்பெக்டர் அருள்நிறைச்செல்வி மேடம் கவனிச்சு, ஸ்பெஷல் டிரெயினிங் கொடுத்தாங்க. ஒன்பதாவது படிக்கறப்பவே டெல்லியில் நடந்த தேசிய அளவிலான என்.சி.சி. போட்டிகள்ல தங்கப் பதக்கம் வாங்கிட்டேன்.

இப்படி என்.சி.சி, துப்பாக்கினு நான் துடிச்சுட்டே இருக்கறது எங்க வீட்டுக்குப் பிடிக்கவே இல்ல. 'நாலு ஆம்பளைங்க போற இடத்துக்கு, வயசு புள்ள நீ எதுக்கு போறே?’னு திட்டுவாங்க. இதனாலயே முறையான ரைஃபிள் பயிற்சி எதுக்கும் போக முடியல. மனசுல அந்த ஆசை ஊற்று வற்றாமலே இருந்துச்சு. எம்.ஏ. முடிச்சதும் கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. அப்போதான் எதிர்பாராத அந்த பெரிய சந்தோஷத்தைச் சந்திச்சேன். என் கணவரும் துப்பாக்கி காதலர்! ஆமாம், 'மதுரை ரைஃபிள் அசோஸியேஷன்’ல அவர் பயிற்சிக்கு போயிட்டு இருந்தாரு!''

திருமதி GUN ம்மா !

- இங்கிருந்துதான் ஆரம்பித் திருக்கிறது சவீந்தனாவின் செகண்ட் இன்னிங்ஸ்!

''என் ஆசையை, ஆர்வத்தை, கனவைச் சொன்னேன். ஆச்சர்ய மானவர், என்னையும் பயிற்சியில் சேர்த்துவிட்டார். என் வாழ்நாள் ஆசை நிறைவேறின மகிழ்ச்சி யோடு பயிற்சி எடுத்தேன். ஒரு கட்டத்துல, போட்டிகள்ல கலந் துக்குற அளவுக்கு முன்னேறி, வெற்றிகளோடவும் திரும்பினேன்.

ரெண்டு பெண் குழந்தைகள் பிறக்க... நாலு வருஷம் போட்டிகளைத் தவிர்த் தேன். இருந்தாலும், பயிற்சியை விடல. குழந்தைங்க கொஞ்சம் வளர்ந்ததும் மறுபடியும் போட்டி  களுக்கு போக ஆரம்பிச்சுட்டேன்'' என்ற சவீந்தனா, புனே போட்டி அனுபவம் பற்றி பகிர்ந்தார்.

''நேஷனல் ரைஃபிள் அசோஸியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பால அங்கீகரிக்கப்பட்ட 'கன் ஃபார் குளோரி’ அமைப்பு, தேசிய அளவில் போட்டிகள் நடத்தினாங்க. 1,200 போட்டி யாளர்கள், நாலு பிரிவுகள்ல போட்டிகள்னு பிரமாண்ட ஏற்பாடு. அதுல பத்து மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவுல கலந்துக்கிட்டேன். நாட்டின் சிறந்த 300 போட்டியாளர்களோட மோதின அனுபவம், ரொம்ப த்ரில்லிங். தேசிய அளவில் அது தான் எனக்கு முதல் போட்டிங் கறதால, நம்பிக்கையைவிட பயம்தான் அதிகமா இருந்துச்சு. 'இது உன் வாழ்நாள் கனவு. உன்னைவிட துப்பாக்கியை நேசிச்சவங்க இங்க யாரும் இல்லை’னு நானே நம்பிக்கை கொடுத்துட்டு, ஷூட் செய்தேன். முதல் ஆளா வந்து தங்கப் பதக்கம் வாங்கினப்போ, அந்த சந்தோஷத்தை எனக்கு வார்த்தைகள்ல சொல்லத் தெரியல!'' எனும்போது, சவீந்தனா வின் கண்கள் பிரதிபலிக்கின்றன அந்த வெற்றிக் களிப்பை!

திருமதி GUN ம்மா !

''ஒரு பெண்ணா பிறந்து... மகள், மனைவி, அம்மானு குடும்பப் பொறுப்புகளையும் விட்டுக் கொடுக்காம, நான் விரும்பின இலக்கை அடைஞ்சுருக்குற பெருமை என் மனசுல இருக்கு. தினமும் கணவரை ஆபீஸுக்கும் குழந்தைகளை ஸ்கூலுக்கும் அனுப்பி வெச்சுட்டு, காலை 11 மணியிலிருந்து மதியம் 2.30 மணி வரைக்கும் பயிற்சி. போட்டிகளுக்கு வெளியூர் போற நாட்கள்ல குழந்தைகளை என் அம்மாவும், கணவரும் பார்த்துப்பாங்க. பெரியவ, 'ஆல் த பெஸ்ட் மா’ சொல்லி அனுப்பி வைப்பா. யூ.கே.ஜி படிக்கிற சின்னக் குட்டிதான் போன் பண்ணி, 'இப்போவே வாங்கம்மா’னு அழும். துப்பாக்கி சுடும்போது மனசை ஒருமுகப்படுத்துறது ரொம்ப முக்கியம்ங்கிறதால, குழந்தைகள் நினைப்பை எல்லாம் விட்டுட்டு கல் மனசாகவும் கத்துக்கிட்டேன்.

ஒரு ஆண் தன்னோட வெற்றிக்கு அவன் மட்டும் ஓடணும், ஒரு பெண், தன் குடும்பத்தையும் சுமந்துட்டு ஓடணும்னு சொல்லுவாங்க. அந்த வகையில நான் இவ்வளவு தூரம் ஓடி வந்தது எனக்குச் சந்தோஷம்! இப்போ எல்லாம் என் வீட்டுல நான் ஒவ்வொரு முறை ஜெயிக்கும்போது மனசாரப் பாராட்டுறாங்க, உற்சாகப்படுத்துறாங்க. அடுத்ததா... இந்த வருஷம் நடக்கப் போற 'சாம்பியன் ஆஃப் சாம்பியன்ஸ்’ போட்டிக்கான பயிற்சிகள்ல இப்போ தீவிரமா இருக்கேன். நிச்சயமா ஜெயிப்பேன்!''

- சவீந்தனா துப்பாக்கி எடுத்து குறிபார்க்கும் துல்லியம், அவர் நம்பிக்கைக்கு உத்தரவாதம் தருகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism