Published:Updated:

லஷ்மி...

தொண்ணூறு வயதில் ஒரு தொண்டுள்ளம்! பூ.கொ.சரவணன்,படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

லஷ்மி...

தொண்ணூறு வயதில் ஒரு தொண்டுள்ளம்! பூ.கொ.சரவணன்,படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

Published:Updated:
##~##

தாம்பரத்தை அடுத்து உள்ள லட்சுமி புரத்தில் இருக்கிறது அந்தச் சின்னஞ் சிறிய வீடு. பிஞ்சுக் குழந்தைகளின் ஆரவார சத்தங்களுக்கு இடையே அமர்ந்திருக்கிறார் 90 வயது லஷ்மி அம்மாள்.

''இருங்க செல்லங்களா... வரிசையா வாங்கிக் கோங்க...'' என்று கண்களில் கருணை பொங்க, கை நீட்டும் பிள்ளைகளுக்கு இனிப்புகள் தந்து கொண்டிருந்தவருக்கு... வணக்கம் வைத்தோம். புன்னகையுடன் பதில் வணக்கம் சொன்னார். ஆதரவற்ற பல குழந்தைகளுக்கும், பெரியவர் களுக்கும் பற்றாக இருக்கும் அந்த பெண்மணியின் பேச்சு ஆரம்பித்தபோது, நம் வார்த்தைகள் அடங்கின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''திருவாரூர், நான் பிறந்த மண். பி.ஏ. ஹானர்ஸ் முடித்து, ராணுவத்தில் வேலை பார்த்தவரை திருமணம் செய்துகொண்டேன். மூன்று வருடங்கள் மட்டுமே நீடித்தது வாழ்க்கை. சீனப் போரில் அவர் மரணம் அடைந்துவிட்டார். ஒன்றரை வயதில் ஒன்று, ஆறு மாதத்தில் ஒன்று என கையில் இரண்டு ஆண் பிள்ளைகள். என் அண்ணனின் அரவணைப்புடன், அத்தியாவசிய பொருள் விநியோக அலுவலராக வேலை பார்த்து, பிள்ளைகளைக் காப்பாற்றினேன். கூடவே, பிறருக்கு உதவும் காரியங்களையும் செய்தேன். தெருக்குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் மனு கொடுப்பது தொடங்கி, தீ விபத்தில் காயம்பட்டவர்களுக்கு முதலுதவி செய்வது வரை விரிந்திருந்தன என் பணிகள்.

அரசியல் மீதிருந்த நம்பிக்கையினால் அ.தி.மு.க-வில் இணைந்து, மகளிரணி மாநிலச் செய லாளர் பதவியில் பணி யாற்றினேன். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின், காங்கிரஸில் இணைந்தேன். பல மொழிகள் தெரியும் என்பதால், ராஜீவ் காந்தியின் அமேதி தொகுதியில் களப்பணி ஆற்றும் வாய்ப்பு பெற்றேன். அப்போதுதான் ஜி.கே. மூப்பனாரின் அறிமுகமும் அன்பும் கிடைத்தது. இடையில், என் பிள்ளைகளும் படிப்பு முடித்து நல்ல வேலைகளில் அமர்ந் தனர்.

இந்த நிலையில்தான் என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட அந்த நிகழ்வை எதிர்கொண் டேன். இதயத்தின் நான்கு வால்வுகளும் பழுதடைந்துவிட்டன. 'இனி அவ்வளவுதான்’ என்று கைவிடப்பட்ட நிலை. எனக்கான முழுச் செலவையும் மூப்பனார் ஏற்றுக்கொள்ள, நான்கு வால்வுகளையும் நீக்கிவிட்டு, செயற்கை வால்வுகள் பொருத்தப்பட்டன. மருத்துவ அற்புதத்தால் மீண்டும் உயிர்த்தெழுந்தேன்.

லஷ்மி...

மறுஜென்மத்தை நன்முறையில், பிறருக்கு உதவும் வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, அதற்கான வேலைகளில் இறங்கினேன். வெளிநாட்டில் இருந்த என் பிள்ளைகள் 'எதற்கு அதெல்லாம்..?’ என்றார்கள். 80 வயதான பிறகும், யாருக்கும் நான் கட்டுப்படத் தேவையில்லை என என் முடிவில் உறுதியாக இருந்தேன். ஆதரவற்ற குழந்தைகளுக்கு 'அன்னை தெரசா இல்லம்', முதியவர்களுக்கு 'இந்திரா காந்தி இல்லம்' ஆரம்பித்தேன். அப்போது ஆயிரம் ரூபாய்தான் என்னிடமிருந்த முதலீடு. வாய் பேச முடியாத ஒரு சிறுமியும், பெற்றோர் அற்ற ஒரு இஸ்லாமியச் சிறுமியும்தான் என் இல்லத்துக்கான துன்பமான முதல் நல்வரவு.

ஆர்வத்தில் இல்லங்களை ஆரம்பித்து விட்டாலும், தொடக்கத்தில் அதை கொண்டு செலுத்த மிகவும் சிரமப்பட்டேன். பலசமயங்களில் பேருந்துக்குக்கூட காசில்லாமல் என் பாதங்கள் நடந்திருக்கும் தூரம் அதிகம். பலரின் உதவியோடு அதையெல்லாம் சமாளித்தேன். நாளாக ஆக, இல்லங்களின் வரவுகள் கூடினர். 83 குழந்தைகள் 62 முதியவர்கள் இங்கே இருக்கிறார்கள்.  

தினமும் காலையில் மூன்று மணிக் கெல்லாம் எழுந்து  குழந்தைகளுக்குச் சமைத்தது; வெள்ளம் வந்தபோது குழந்தைகளை கூடையில் வைத்து தலைக்கு மேல் தூக்கிச் சென்று காப்பாற்றியது... என்று முழு அர்ப்பணிப்புடன் உழைத்த நிறைவு என்னிடம் இருக்கிறது. பொருளா தார உதவிகளைப் பகிர்ந்து கொள்ள சில நல்லவர்களும், சமையல், பிற வேலைகள் என உடல் உழைப்பை பகிர்ந்துகொள்ள சில ஆதரவற்ற தொண்டுள்ளப் பெண்களும் என்னுடன் இணைந்து இந்த இல்லங்களை இப்போது சுவாசிக்க வைக்கிறார்கள். சுற்றி இருக்கும் கல்லூரி மாணவர்கள், கடைக்காரர்கள், மக்கள் ஆகியோரின் உதவிக்கு நான் கடமைப் பட்டுள்ளேன். காலையில் இருபது பாக்கெட்டுகள் பால் போடுகிற பால்காரர், தன் பங்குக்கு இலவசமாக ஒரு பாக்கெட் பால் போடுவார். இப்படிச் சின்ன சின்ன உதவிகளால் இயங்குகிறது எங்களின் உலகம்.

பெற்றோரால் குப்பைப் தொட்டியில் எறியப்பட்டு, பன்றி கடித்து இங்கே வந்து சேர்ந்தான் ஹரிஷ் என்ற சிறுவன். அவனுக்கு இருந்த உடல் குறையைக் கேள்விப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள், ஒன்றரை லட்சம் ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்தார்கள். 'மியாட்’ மருத்துமனை, இலவசமாகவே அறுவை சிகிச்சை நடத்தியது. அந்தப் பணம் இப்போது ஹரிஷ் பெயரில் வங்கியில் வளர்கிறது.

என் பிள்ளைகளுடனான தொடர்பு அறுந்துவிட்டது. 'உதவியே வாழ்க்கை' என்று இருக்கும் இந்த அம்மா, அவர்களுக்குப் பிடிக்கவில்லையாம். இருந்தால் என்ன... இந்த இல்லக் குழந்தைகள் எல்லாம் என் பேரன், பேத்திகள்தான். இவர்கள் எல்லாம் தரையில் உறங்குவதுதான் இப்போது எனக்கிருக்கும் கவலை. கொஞ்சம் பெரிய இடம் கிடைத்தால் இவர்களைக் கட்டிலில் படுக்க வைக்கலாம்.

ஒன்று தெரியுமா... நான் உட்பட இல்லத்தில் இருக்கும் அனைவரின் கண்களையும் கண் தானத்துத்துக்கு எழுதி வைத்திருக்கிறோம். விருப்பம் உள்ளவர்கள், தங்கள் உடலை மருத்துவக் கல்லூரிகளுக்கு உடல் தானமும் செய்திருக்கிறோம். இருக்கும் வரை மட்டுமல்ல... அதற்குப் பின்பும் பிறருக்கு உதவக் காத்திருக்கிறோம் நாங்கள்!'' என்று நம்மிடம் முடித்தவர்,

'இந்தாங்கய்யா..!’ என்று இல்லத்தில் புதுவரவாக இணைந்திருக்கும் அந்த முதியவருக்கு இரண்டு வேட்டி - சட்டைகளைத் தந்தார்.

செயற்கை வால்வுகள் கொண்ட அவரின் இதயத்தில், ஊற்றெடுக்கிறது இயற்கையான அன்பும், கனிவும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism