Published:Updated:

'அம்மி வாங்கலையோ...ஆட்டுக்கல் வாங்கலையோ...

பழைய காலத்துக்கு துரத்தும் 'பவர்கட்'!மோ.கிஷோர்குமார் படங்கள்: பா.காளிமுத்து

'அம்மி வாங்கலையோ...ஆட்டுக்கல் வாங்கலையோ...

பழைய காலத்துக்கு துரத்தும் 'பவர்கட்'!மோ.கிஷோர்குமார் படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
##~##

'இரண்டு மணி நேரம்' என ஆரம்பித்த மின்தடை அகிம்சை... இன்று, எட்டு மணி நேர வன்முறையாக வளர்ந்திருப்பது, தமிழகத்தின் சாபம். டி.வி, ஃப்ரிட்ஜ், கம்ப்யூட்டர் இல்லாமல் இருந்துவிடலாம்... அல்லது இன்வர்டர் போட்டுக் கொள்ளலாம். ஆனால், சட்னி அரைக்க... மிக்ஸியும், மாவு அரைக்க... கிரைண்டரும் இல்லாமல் தினசரி உணவு தயாரிப்புக்கு நம் பெண்கள் படும்பாடு... பரிதாபம்!

''இவங்க அப்பப்ப 'விடுற’ கரன்ட்ல, எங்கிட்டு மிக்ஸி, கிரைண்டர் எல்லாம் ஓட்டுறது? அம்மி, ஆட்டுக்கல்லுனு வாங்கிப் போட்டுற வேண்டியதுதான்!'' என்று மக்கள் சீரியஸாகவே அவற்றைத் தேட ஆரம்பிக்க, 'ஆட்டுக்கல் வாங்கினா... அம்மி ஃப்ரீ!', 'அம்மி வாங்கினா... உரல் ஃப்ரீ!' என்று ஆஃபர்களை அள்ளி வீச, மதுரையில் ஷாப்பிங் ஏரியாக்கள் அம்மி, ஆட்டுக்கல் விற்பனையில் சூடாகிக் கிடக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் ஆதிகால மெஷின்களை ஷாப்பிங் செய்ய வந்திருந்த சில இல்லத்தரசிகளிடம் பேச்சு கொடுத்தபோது, அந்தக் கொடுமையை பொங்கித் தீர்த்தார்கள்... கோபமும் குஷியுமாக(!)...

'அம்மி வாங்கலையோ...ஆட்டுக்கல் வாங்கலையோ...

சாந்தி ரத்தினம், ''வீட்டு உபயோகத்துக்குத் தேவையான எல்லா எலெக்ட்ரிக் பொருட்களும் எங்ககிட்ட இருக்குங்க. ஆனா, கரன்ட்? பிள்ளைங்களை ஸ்கூலுக்கு அனுப்பணும், வீட்டுக்காரரை ஆபீஸுக்கு அனுப்பணும்னு காலை நேரத்துல அவங்க எல்லாருக்கும் அவசரமா சாப்பாடு ரெடி பண்ணிட்டு இருப்போம். 'ஒன்பது மணிக்குக் கரன்ட் போறதுக்குள்ள சட்னி, சமையலுக்கு மசாலா, மாவு எல்லாம் அரைச்சுடலாம்’னு தயாரானா, 'யார் சொன்னது?’னு அதுக்கு முன்னயே கரன்ட் கட் ஆயிடும். காலையில 9 - 12, மதியம் 3 - 6, ராத்திரி 8 - 9, அப்புறம் யூகிக்க முடியாத நேரங்கள்ல இன்னும் ஒரு மணி நேரம்னு இஷ்டத்துக்கும் கட் பண்றாங்க. கொடுமையா இருக்குங்க. புலம்பிப் புலம்பி சலிச்சுப்போய்தான்... 'சரி... அம்மி, ஆட்டுக்கல்லாச்சும் வாங்கலாம்’னு முடிவெடுத்து வந்துருக்கோம்'' என்று நொந்து கொண்டவர்,

''ம்... இதெல்லாம் சின்ன வயசுல அரைச்சது. வீட்டுக்குப் போய் ரிகர்சல்தான் பார்க்கணும்!'' என்று சிரித்தார் அந்த வேதனையிலும்!

நாகலட்சுமி, ''சட்னிக்குப் பதிலா பொடி, மசால் அரைச்சு ஊத்தாத குழம்பு, முதல் நாள் வெச்ச குழம்பே மறுநாளைக்கும்... இப்படி சமையலே மாறிப் போச்சுங்க. சமயங்கள்ல மாவும் அரைக்க முடியாமப் போயிட... பிரெட், நூடுல்ஸ்னு பிள்ளைங்களுக்குக் கொடுக்குறேன். வாய்க்கு ருசியா சமைக்கறதெல்லாம் போய், இப்போ 'கரன்ட் கட்’டுக்கு பயந்து பண்ற சமையல்தான் நடக்குது. நிலைமை சீராகற வழி தென்படல. அதான் வீட்டுக்காரரைக் கூட்டிட்டு அம்மி, ஆட்டுக்கல் வாங்க வந்துட்டேன். அம்மியில அரைச்சு சமைச்சா சுவையா இருக்கும்னு சந்தோஷமா சமைச்சுட வேண்டியதுதான்'' என்றவர்,

''பல ஆயிரங்கள் செலவழிச்சு ட்ரெட் மில் மாதிரியான ஜிம் பொருட்களை வாங்கறதுக்குப் பதிலா... அம்மியும், ஆட்டுக்கல்லும் வாங்கிப் போட்டுடலாம். வேலைக்கு வேலையும் ஆகும்... உடம்பும் ஸ்லிம் ஆகும்ல!'' என்றார் குஷியோடு!

'அம்மி வாங்கலையோ...ஆட்டுக்கல் வாங்கலையோ...

உமாமகேஸ்வரி, ''எட்டு மணி நேரம்ங்கிறது அஃபீஷியல் அறிவிப்பு. ஆனா, மதுரையில 10 மணி நேரம் வரைக்கும் பவர் கட் ஆகுதுனு உங்களுக்குத் தெரியுமா? டி.வி-யில இருந்து பிள்ளைங்களோட படிப்பு வரைக்கும் எல்லாம் போச்சு. மத்ததை எல்லாம் சகிச்சுக்கிட்டாலும், சாப்பாட்டுல எப்படி சமரசம் பண்ண முடியும்? மாவும், மசாலாவும், சட்னியும் இல்லாம என்ன சமையல் செய்துட முடியும்? அதான் அம்மி, ஆட்டுக்கல்லுக்கு மாறிடலாம்னு கிளம்பிட்டேன். ஒரு அம்மி 400 ரூபாய்ல ஆரம்பிச்சு சைஸுக்கு தகுந்த மாதிரி கிடைக்குது. ஆட்டுக்கல் 500 ரூபாய்ல ஆரம்பிச்சு 900 ரூபாய் வரை சைஸுக்கு தகுந்த மாதிரி கிடைக்குது. மிக்ஸி, கிரைண்டர் மாதிரி ரிப்பேர் பிரச்னையே இல்ல. லைஃப் லாங் கியாரன்டி!'' என்று விளம்பரமே செய்தவர், ''தமிழ்நாட்டுல கட்டுற வீடுகள்ல வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் வைக்க இடம் ஒதுக்குற மாதிரி அம்மி, ஆட்டுக்கல்லுக்கும் இனி, கட்டாயம் ஒதுக்கிடணும்!'' என்று உருப்படியான யோசனையையும் சொன்னார்!

சரியான யோசனைதான்... 2 மணி நேரம்... 8 மணி நேரம் என்று வளர்ச்சியடைந்து வரும் கரன்ட் கட், 24 மணி நேரம் என்று மாறினால்கூட கவலைப்பட தேவையிருக்காதுதானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism