Published:Updated:

மயிலிறகு மனசு !

தமிழச்சி தங்கபாண்டியன்

மயிலிறகு மனசு !

தமிழச்சி தங்கபாண்டியன்

Published:Updated:

உள்ளத்தை வருடும் நெகிழ்ச்சித் தொடர் 12

##~##

உலகின் மிக அற்புதமான அந்தச் சொல்லை அவள் எனக்குப் பரிசளித்த அந்த நாள், நவம்பர் 23. ஒரு முன் மாலைப் பொழுதில் மொட்டவிழாத பூவென அவளைக் கைகளில் ஏந்தியபோது, என் அப்பாவும் அருகிருந்தார். பஞ்சுப்பொதி மேகமொன்று கண் விழிப்பது போல, அவள் இமைசுருக்கி விரித்தபோது ஆகாயம் முழுவதும் ஆயிரம் அம்மாக்கள் நட்சத்திரங்களாக என் பிம்பத்தில் தெறித்து ஒளிர்ந்தார்கள். அவளது 'ங்கா’ என்றொரு முனகலில் எடையற்றவளாகி, லட்சம் சிறகுகள் முளைக்க, அம்மாவான நான், அந்தக் கணத்திலிருந்து என் அம்மாவை இன்னும் அதிகமாக நேசிக்கத் துவங்கினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிரித்தும், சிணுங்கியும் அன்பைப் பகிர்ந்தபடி இன்றுவரை பயணிக்கின்ற அவளுக்கு 'சரயு’ என என் அப்பாதான் மிகப் பொருத்தமாக நதியின் பெயரைச் சூட்டினார். முதல் குழந்தை பெண் என்றால் பேரானந்தம் என்றபடி அவள் வளர்ந்து இன்றெனக்குத் தோழியாய் மிளிர்கையில், வாழ்வின் மீதான நன்றியுணர்வே அவளுக்கு நான் தரும் ஒவ்வொரு முத்தமும். 'அம்மு’ எனச் செல்லமாக அவளை நான் அழைப்பதும், 'ஆத்தா’ என அவள் என்னைச் சமயங்களில் விளிப்பதும் வாடிக்கை.

பூக்கள் அனைத்தும் பிரபஞ்ச மணத்தைப் பரப்புபவை. என்றாலும், ஒவ்வொன்றுக்கும் தனித்தொரு வாசமிருப்பதைப் போலவே, அம்முவும் ஒரு மகள்தான். ஆனால், அது மட்டுமல்லாது... ஆளுமை, தோழமை, குறும்பு, அதீத பாசம், கோபம், தன்னம்பிக்கை, எதிர்பார்ப்புகள் என அனைத்தும் கொண்ட அடுக்குமல்லிப் பூ அவள். அவளுடைய எட்டாவது வகுப்பு வரை, என் உலகம் முழுவதும் அவளைச் சுற்றியே இருந்தது. அதற்குப் பின்பான என் பணிச்சுமையை, கவிதைப் பரப்பினைப் புரிந்துகொண்டு என் சிறகுகளைக் கோதிப் பறக்கவிட்ட, என் முதன்மைச் சிநேகிதி அவள்.

மயிலிறகு மனசு !

பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புகள் என பள்ளிப் பருவத்தின் மிக முக்கியமான இரண்டு வருடங்களை எனக்காக விடுதியில் கழிக்கச் சம்மதித்த பெருந்தன்மை அவளுக்கு உண்டு. முனைவர் பட்ட ஆய்வுக்காக, ஆஸ்தி ரேலியாவுக்கு நான் பயணப்படுவதற்கு அவளது ஒத்துழைப்பே முழுமுதற் காரணம். ஒரு தாயாக என்னை எவ்விதக் குற்ற உணர்ச்சிக்கும் உட்படுத்தாத புரிந்துகொள்ளலும் அரவணைப்புமே அவளது பலம். ஆஸ்திரேலியாவில் அவளைப் பிரிந்திருந்த அந்த நாட்களின் வெறுமையைக் குறுஞ்செய்திகளாலும், கடிதங்களாலும், வாழ்த்து அட்டைகளாலும் நிரப்பிய அவள், எனது மேற்படிப்புக்காகத் தனது சௌகர்யங்களை இழக்கச் சம்மதித்த தாயுமானவள். விட்டுக் கொடுத்தலும், பொறுப்புஉணர்வும் அற்ற மகளாக வளர்ந்திருந்த என்னை... பல சமயங்களில் அவளது பெருந்தன்மை எனும் மழையே குளிர்வித்திருக்கிறது!

என் அப்பாவுக்கு அவளென்றால் உயிர். எனது பால்யத்தை அவளில்தான் அவர் மீட்டெடுத்தார். தனது தந்தைமையின் அப்பத்தை எனக்கும், தம்பிக்கும் அவர் பகிர்ந்தளித்திருந்தாலும், ஒரு தாத்தாவின் நேசம் முழுவதையும் அவளுக்கே அவர் அர்ப்பணித்தார்.

மிகப்பெரிய விபத்தொன்றை 2007-ம் ஆண்டு அவள் சந்தித்தபோது, நான் ஒரு நாடக ஒத்திகைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். நகரத்தின் புகழ்பெற்ற 'தீம்பார்க்' ஒன்றுக்குத் தோழிகளுடன் சுற்றுலா சென்றிருந்தவள், 'ரோலர் கோஸ்டர் ரைட்' எனும் ராட்சத ராட்டினத்திலிருந்து கீழே விழுந்துவிட்டதாகச் செய்தி வந்தது. தனியருவளாக, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வரை பதற்றப்படாமலிருந்த நான், அறுவை சிகிச்சையைத் தவிர்க்க வேண்டுமென்றால், மூன்று மாதங்கள் படுக்கையில் அவளிருக்க வேண்டுமென்றவுடன் உடைந்து போனேன். வலி மறைத்த புன்னகையுடன் என்னைத் தேற்றிய முதல் வார்த்தை அவளுடைய 'கூல் மா' என்பதுதான்.

தளராத தன்னம்பிக்கையுடன், அந்தக் கொடூர விபத்திலிருந்து மீண்டு வந்தாள். மிக இளவயதில் அவளுக்கிருந்த திடம் எனக்கொரு பாடம். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஆஸ்திரேலியத் தூதரகம் உயரிய விருதொன்றை அளித்து, நான் உள்ளிட்ட சில ஆராய்ச்சியாளர்களைக் கௌரவித்தது. தயங்கியபோதும், என்னை உற்சாகப்படுத்தி, டெல்லி சென்று அவ்விழாவில் கலந்து கொண்டேயாக வேண்டும் என பிடிவாதித்து, வெற்றி பெற்ற அவளின் மன உறுதி என் வரம்.

மன உறுதியுடன் ப்ளஸ் டூ-வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, எவ்விதப் பரிந்துரையும் இல்லாமல், தனது மதிப்பெண்களின் தரவரிசையிலேயே பொறியியல் படிப்பில் சேர்ந்த அவள், தனது எடை குறித்து கூடுதல் அக்கறை செலுத்தவில்லை என்பது எனக்குக் குறைதான். ஆனால், அவளது பளீர் சிரிப்பும், மலர்ந்த முகமும், இறுக்குகின்ற அணைப்பும் அதனை மறக்கச் செய்கின்ற மாய வித்தைகள் - மிக அழகாக அவள் எடுக்கும் புகைப்படங்களும்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி நான் படுக்கையில் முடங்கியிருந்தபோது, அவள் என்னை அருகிருந்து கவனிக்கையில், முதல் முறையாக அவளுக்குத் தாய்ப்பாலூட்டிய தருணங்களை மீட்டெடுத்தேன். இளைய சகோதரியைக் கவனித்துக் கொள்ளும் மூத்த தமக்கையாய் ஆச்சர்யமாய் அவள் வெளிப்பட்டதும் அப்போதுதான்.

அயல்தேசத்தில், பகுதிநேர வேலை பார்த்துக் கொண்டே மேற்படிப்புப் படிக்கின்ற அவளது பொறுப்புணர்வைச் சுமந்தபடி, சில தினங்களுக்கு முன் எனது இருபத்தி ஐந்தாவது திருமண நாளுக்கு அவளிடமிருந்து மிகச்சிறந்த பரிசொன்று வந்தது. வாழ்வின் அநித்தியத்தை... நித்யமாக்குகின்ற உறவுகளில் மகளென்பது தலையாயது என்பதை, இரண்டாம் முறையாக நான் உணர்ந்தேன்.

சண்டைகளும், விவாதங்களும், கோபங்களும், தொடர் மௌனங்களும் உள்ளடக்கிய உறவுதான் எங்களுடையது. ஆனால், இருவருக்குமிடையே இதுவரை ரகசியங்கள் இருந்ததில்லை. கல்லூரிப் பணியை நான் ராஜினாமா செய்தபோது அவளுக்கு என் மேல் அளவில்லாத வருத்தமிருந்தாலும், எனது இத்தனை வெற்றிகளும் அவளன்றிச் சாத்தியமில்லை. எனது அவமானங்களை, கல்லெறிகளைப் புரிந்துகொண்டு குறைத்தும், மகிழ்ச்சியைப், பூங்கொத்துக்களை, பகிர்ந்துகொண்டு பெருக்கியும், வாழ்வெனும் அகலைத் தூண்டிவிடும் சுட்டுவிரல் அவள். ஒரு சராசரி இந்தியப் பெண், குடும்பம், குழந்தைகளுக்காகச் செய்கின்ற எவ்வித தியாகத்தையும் நான் பெரிதாகச் செய்ததில்லை. அதுகுறித்த புகார்களற்று, தன் அம்மா ஒரு பெண் என்பதையும், அவளுக்கான தனிவெளி உண்டு எனவும் புரிந்து வைத்திருக்கின்ற என் அம்மு மிக அழகானவள். அன்பைச் சொரிதலே அழகுதானே!

தனக்கென்று ஒரு சிறிய இல்லம், பொறுப்பான வேலை என எளிய கனவுகள் வைத்திருக்கின்ற என் மகள், குழந்தைமையின் கதகதப்புடன் என் மடி நாடி வரும் இரவுகள் இப்போதும் உண்டு. அப்போதெல்லாம் இருவருக்கும் அம்மாவாய், அலாதி அன்புடன் தாய்ப்பாலாய் ஒழுகும்... நிலவு!

- இறகு வருடும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism