Published:Updated:

முன்னேறிவிட்டதா பெண் இனம்?

படங்கள்: எம்.உசேன், நாச்சியாள்

முன்னேறிவிட்டதா பெண் இனம்?

படங்கள்: எம்.உசேன், நாச்சியாள்

Published:Updated:

 பாஸிட்டிவ்... நெகட்டிவ் அலசல்

##~##

ஆண்டுதோறும் மார்ச் - 8 அன்று 'மகளிர் தினம்' கொண்டாடப்படும் வேளையில், 'பெண்களுக்குப் படிப்புச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது, வேலைக்குச் செல்கிறார்கள், கைநிறைய சம்பாதிக்கிறார்கள், கார் ஒட்டுகிறார்கள், ஜீன்ஸ் போடுகிறார்கள்... அவர்களின் நிலை முன்னேற்றமடைந்துள்ளது!’ என்று ஒருபுறம் பாஸிட்டிவாக முழக்கமிடுகின்றன பல மேடைகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மற்றொருபுறம், 'பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து இருக்கிறது, எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் அவள் ஆணாதிக்கச் சூழல் வட்டத்தில் இருந்து விடுபட முடிவதில்லை, பெண்கள் வாழ்வதற்குப் பாதுகாப்பில்லை’ என்கிற நெகட்டிவ் குரல்களும் கேட்கின்றன.

'உண்மையில் பெண்களின் நிலை இன்று எப்படி இருக்கிறது?' என்பதை சமூக அக்கறையுடன் ஒன்று கூடிப் பேசினார்கள், விவாதித்தார்கள் பெண்ணியச் செயல்பாட்டாளர்களான... கவிஞர் ஓவியா, சமூக ஆர்வலர் ஷீலு, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வானதி ஸ்ரீநிவாஸன் மற்றும் கல்லூரி மாணவி சத்யப்பிரியா...

உரையாடலைத் தொடங்கினார் ஓவியா: பெண்களின் கல்வியிலிருந்து நாம் ஆரம்பிக்கலாம். பத்து வருடங்களுக்கு முன், இன்றுள்ள அளவுக்கு பெண்கள் படிக்கவில்லை, அதற்கான விழிப்பு உணர்வுச் சூழலும் அப்போது இல்லை. நடுத்தர, பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களிலும் பெண்ணைப் படிக்க வைப்பதன் அவசியத்தை இன்று உணர்ந்திருக்கிறார்கள்.

முன்னேறிவிட்டதா பெண் இனம்?

சத்யா: கிராம பெண்களும் படித்து கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் வாய்ப்பு இந்த பத்தாண்டுகளில் அதிகம் கிடைத்திருக்கிறது.

ஷீலு: அதனால்தான் 2001-ல் 53 சதவிகிதமாக இருந்த பெண்கல்வி, இன்று 65 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. பாராட்டுக்குரிய வளர்ச்சி.

வானதி: பெண்கல்வி உயர்ந்ததால்தான், பெண்கள் இதுவரை வேலை செய்ய மறுக்கப்பட்ட எல்லா துறைகளிலும்... குறிப்பாக, ராணுவம், காவல்துறை, தீயணைப்புத் துறை, வாகனம் ஓட்டுவது என கடினமான துறைகளிலும் இன்று நுழைந்து இருக்கிறார்கள். ஆணுக்குச் சமமாக, உழைக்கிறார்கள். அதேசமயம்... ஆபீஸ், வீடு, சமூகம் சார்ந்த பொறுப்புகள் என பல்முனைச் சுமைகளுக்கும் ஆளாகி இருக்கிறார்கள் என்பதை மறுக்கமுடியாது.

ஓவியா: வேலை செய்யும் இடங்களில் பாலியல் பிரச்னைகளையும் சந்திக்க வேண்டிஇருக்கிறது. ஆணுக்கு இருக்கும் அதிகாரத்தால் உருவாகும் பிரச்னை இது.

முன்னேறிவிட்டதா பெண் இனம்?

ஷீலு: இன்றும், திருமணச் சந்தையில் பெண் அதிக வரதட்சணை கொடுக்க வேண்டியுள்ளது. சுருக்கமாக சொன்னால்... கல்வி, பெண்ணுக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறது. அந்த அதிகாரத்தை குடும்ப நிறுவனம் பறிக்கிறது.

வானதி: பெண்கள், தங்களின் ஆரோக்கியத்தில் அடைந்திருக்கும் விழிப்பு உணர்வு, நல்ல விஷயம். 'பெண்கல்வியின் பலன்' என்று சொல்லலாமா ஷீலு?

ஷீலு: ஒரு வகையில் உண்மைதான். பெண்கல்வி பெண் குழந்தைகளின் இறப்பு சதவிகிதத்தையும், மகப்பேறின்போது பெண்கள் இறக்கும் சதவிகிதத்தையும் குறைத்திருக்கிறது. ஆனால், கருவில் இருக்கும் பெண் குழந்தையைக் கொல்வது சில ஆண்டுகளாக அதிகரிக்கிறது. தர்மபுரி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் 0-6 வயதுள்ள ஆண் - பெண் குழந்தைகளின் விகிதம் 1000:892 என மிகமிகக் குறைவாக இருக்கிறது.

ஓவியா: பெண் நலம் என்பது மிகமுக்கியப் பிரச்னை. ஆனால், அரசுக்கு அதுபற்றிய அக்கறை அதிகம் இல்லை. மக்கள் தொகையில் பாதியாக இருக்கும் பெண்களுக்கென்றே வரும் நோய்களான கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மெனோபாஸ் பிரச்னைகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து நலம் காக்கும் சிந்தனை... அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இல்லை. ஏனென்றால்... அதிகாரத்தில் இருப்பது ஆண்கள்தானே!

வானதி: இதுமட்டும் இல்லை ஓவியா. இன்றைக்கு டீன் ஏஜ் பிள்ளைகளின் கர்ப்பம் அதிகரித்து வருவது ஆபத்தான விஷயம். இன்டெர்நெட், டி.வி, செல்போன் போன்றவற்றின் மூலமாகவே பாலியல் சம்பந்தமான தகவல்கள் ஆயிரமாயிரம் கிடைக்கின்றன. அவை சரியா, தவறா என்று இளம் வயதினர் பகுத்து உணரக்கூடிய பக்குவத்தை இந்தக் கல்வி தர வில்லை. 'குட் ட்ச்', 'பேட் டச்' தெரியாத எட்டாம் வகுப்புச் சிறுமி, எப்படி தன்னை பாதுகாத்துக் கொள்வாள்... பாலியல் சீண்டல்களில் இருந்து?

சத்யா: கல்லூரியில் இருக்கும் எங்களுக்கே எது தவறு, எது சரி என்று தெரியவில்லை. பாவம் பள்ளிச் சிறுமிகள். என்ன நிகழ்ந்தது என்றே தெரியாமல் கர்ப்பிணியாக நிற்கும் பள்ளிச் சிறுமிகளும் இருக்கிறார்கள், இணைய தள தேடலின்போது எதிர்பாராதவிதமாக போர்னோ படம் பார்க்க நேரிட்டதற்காக தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற கல்லூரிப் பெண்களும் இருக்கிறார்கள். பாலியல் கல்வி என்பதை உடல் சார்ந்த விஷயம் என்ற வட்டத்துக்குள் இருந்து விடுவித்து,  மருத்துவ அறிவியலாகப் பாடம் புகட்டும் பாலியல் கல்வி இன்று அவசியம்.

ஷீலு: முன்பெல்லாம், 'பிள்ளை பெத்தாச்சு... இனி எதற்கு உடம்பை கவனிக்க வேண்டும்..?’ என்ற எண்ணம் பெண்களுக்கு இருந்தது. இன்று... தேக நலனில், வெளிப்புறத் தோற்றத்தில் அக்கறை காட்டுகிறார்கள். அதேநேரம் அதிகமான பெண்கள் வீடு, அலுவலகம் என்று சந்திக்கும் மன வன்முறைகளால் பலவித மனநோய்க்கும் ஆளாகிறார்கள்.

சத்யா: மேடம், பெண்களின் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு சொல்ல சட்டங்கள் இல்லையா?

வானதி: நிறைய இருக்கின்றன. வரதட்சணை, பெண் சிசுக்கொலை, பெண் சொத்துரிமை, ஈவ் டீசிங், குடும்ப வன்முறை என்று பல வற்றுக்கும் சட்டங்கள் வந்துவிட்டன. ஆனால், சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தித் தப்பிப்பதுதான் அதிகமாக இருக்கிறது. சட்டங்களைச் செயல்படுத்துவதிலும் அரசு இயந்திரம் மெத்தனமாக இருக்கிறது. அதேசமயம், பெண் கொடுமைகள்  குறைந்திருக்கின்றன. குறிப்பாக வரதட்சணைச் சாவுகள்.

ஓவியா: இந்த சட்டங்கள் எல்லாம் முழுமையாக செயல்படுத்த அரசியல் அதிகாரம் பெண்கள் கையில் இருந்தால்தானே சாத்தியம்!

முன்னேறிவிட்டதா பெண் இனம்?

ஷீலு: பெண்கள் முழுக்க அரசியலுக்குள் வருவதற்கு, நிலைமை இன்று சாதகமாக இல்லையே?

வானதி: ஆண்களின் ஆதிக்கமும் அராஜகமும் நிறைந்த இடமாக புரையோடிக் கிடக்கிறது அரசியல். அங்கு ஒரு பெண் ஜெயிக்க வேண்டுமானால்... பொறுமை, அதீத சகிப்புத் தன்மை, தளராத தைரியம் எல்லா மும் வேண்டும். அதைக் கற்றுக்கொடுக் கும் கல்வியும், ஊக்கப்படுத்தும் சமூக அமைப்பும் இங்கில்லையே..!

சத்யா: பெண்கள் அரசியலுக்கு வந்தாலே அவர்களின் நடத்தையும் குணமும் விமர்சிக்கப்படுகிறது. 'அவளா... மோசமானவ...’ என்ற விஷ வார்த்தைகளுக்குப் பயந்தே யாரும் வருவதில்லை. என் பேத்திகளாவது அரசியலில் ஆளுமைகளாகி சாதிப்பார்கள் என்று நம்புகிறேன்.

(அனைவரும் குலுங்கிக் குலுங்கி சிரிக்கின்றனர்)

வானதி: அவ்வளவு வருடங்கள் காத்திருக்க வேண்டுமா சத்யா? 33 சதவிகிதம் இடஒதுக்கீடு கிடைத்தால்... நிச்சயம் அரசியலின் முகம் மாறும். சமீப வருடங்களில் சடசடவென மேலெழும்பி வந்துள்ள பெண்களின் நிலை அதற்கான நம்பிக்கையைத் தருகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்... பெண்கள் கல்வியில், ஆரோக்கியத்தில், வேலை வாய்ப்பில் முன்னேறி இருக்கிறார்கள். அதேசமயம் அதை ஒட்டி நிறையச் சவால்களும் உருவாகியிருக்கின்றன என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அந்தச் சவால்களை எதிர்கொண்டு ஜெயிப்பதே உண்மையான பெண் விடுதலை!

அனைவரும் அதை கைதட்டி ஆமோதிக்க... மகளிர் தின வாழ்த்துக்களை முன்கூட்டியே பரிமாறியபடி சபை கலைந்தது நிறைவாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism