Published:Updated:

சாட்டை எடுக்கும் சாந்தி... ஓர் அதிரடி ஆர்.டி.ஓ !

ஆர்.குமரேசன் படங்கள்: வீ.சிவக்குமார்

சாட்டை எடுக்கும் சாந்தி... ஓர் அதிரடி ஆர்.டி.ஓ !

ஆர்.குமரேசன் படங்கள்: வீ.சிவக்குமார்

Published:Updated:

'காத்திருக்கும் வரை
நமது பெயர் காற்றென்றே
இருக்கட்டும்
புறப்பட்டு விட்டால்
புயலெனப் புரியவைப்போம்'

##~##

- கவிஞர் மு. மேத்தாவின் கவிதைக்குப் பாராட்டுகளுடன் பொருந்துகிறார், சாந்தி. கரூர் ஆர்.டி.ஓ. (வருவாய் கோட்டாட்சியர்) பதவியை இவர் ஏற்றுக்கொண்ட ஆறு மாதங்களில், சுனாமியில் சிக்கிய சுக்கானாக கதிகலங்கிக் கிடக்கின்றனர் மணல் கொள்ளையர்கள்; அலறிக் கொண்டிருக்கின்றனர் ஆக்கிரமிப்பாளர்கள்; சத்தமில்லாமல் கிடக்கிறார்கள் சமூக விரோதிகள். அதேநேரம்... அவருடைய தோழமையான அணுகுமுறையால் மக்களிடம் நல்ல பெயர் குவிந்து கொண்டே இருக்கிறது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பரபரப்பு குறைந்த ஒரு ஞாயிற்றுக்கிழமையில் சாந்தியை சந்தித்தபோது... கம்பீர புன்னகையுடன் வரவேற்று, பேசத் தொடங்கினார்.

''அரியலூர் மாவட்டம், இலுப்பையூர் கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். அப்பா செல்லமுத்து, வயலில் வாழ்க்கையைத் தேடிக்கொண்டு இருக்கும் சராசரி இந்திய விவசாயி. அவருக்கு ஒத்தாசையாக அம்மா தமிழ்ச்செல்வி. பொருளாதாரச் சிக்கலில் சிக்குண்ட குடும்பச் சூழல். அரியலூரில் பள்ளிப் படிப்பை முடித்து, பொருளாதாரத் திணறல்களுக்குப் பின் திருச்சியில் இன்ஜினீயரிங் முடித்தேன். ஐ.ஏ.எஸ். லட்சியக் கனவு... வசதி, வாய்ப்பு இல்லாத நிலையில், புத்தகங்களுக்கு இடையில் புதைய, சென்னையில் சாஃப்ட்வேர் கம்பெனி வேலையில் சேர்ந்தேன்.

நல்ல சம்பளம். பொருளாதாரச் சிக்கல்களும் குறையத் தொடங்கியபோது... ஐ.ஏ.எஸ். கனல், மீண்டும் பற்றி எரியத் தொடங்கியது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு சுபதினத்தில் பணியை உதறினேன். வங்கி இருப்பில் இருந்த பணத்தைக் கொண்டு ஐ.ஏ.எஸ். தேர்வுப் பயிற்சியைத் தொடங்கினேன். கையிருப்பு கரைந்து, திக்குத் தெரியாமல் நின்றபோது, 'ஈஸியா சம்பாதிக்குற சாஃப்ட்வேர் துறையை விட்டுட்டு ஏன் இப்படி கஷ்டப்படுறே? திரும்பவும் அந்த வேலைக்கே போ!’ என நண்பர்கள் சிலர் ஆலோசனை சொன்னார்கள். லட்சியத்தை மாற்றிக் கொள்ள தயாராக இல்லாத நான், டியூஷன் எடுத்து பொருளாதார சூழலைச் சமாளித்தேன்.

சாட்டை எடுக்கும் சாந்தி... ஓர் அதிரடி ஆர்.டி.ஓ !

சைதை துரைசாமி சாரின் 'மனிதநேய அறக்கட்டளை’யில் சேர்ந்த பிறகு... லட்சியக் கரையின் கலங்கரை விளக்கு கண்ணில் தெரியத் தொடங்கியது. குரூப் - 1 , குரூப் - 2 இரண்டு தேர்வுகளையும் எழுதி... இரண்டிலும் தேர்வானேன். குரூப் - 1-ல் மாநில அளவில் இரண்டாவது இடம். கோயம்புத்தூரில் சப் - கலெக்டராக பயிற்சி முடித்து, முதல் பணியாக இந்த ஆர்.டி.ஓ. பதவியில் அமர்த்தப்பட்டுள்ளேன். மனநிறைவுடன் இப்போது இந்தப் பணியைச் செய்கிறேன். கூடவே, ஐ.ஏ.எஸ். முயற்சிகளும் தொடர்கின்றன...''

- உறுதியான வார்த்தைகள் உதிர்க்கும் சாந்தியின் முன் பாதி... எளிய சூழலில் இருப்பவர்களின் வலிய கனவுகளுக்கு நம்பிக்கை தருகிறது. அவர் தொடரும் பின் பாதி... நேர்மையான அரசு அதிகாரிகள் குறித்த நம் பாராட்டுகளையும், ஏக்கத்தையும் சம்பாதிக்கிறது.

''பதவி ஏற்ற பிறகு, செல்போன் எண்ணை பத்திரிகைகள் மூலமாக மக்களுக்குத் தெரிவித்தேன். அடுத்த நாளே... மணல் திருட்டு, சமூக விரோதச் செயல்கள், மக்கள் பிரச்னைகள் என அனைத்து

சாட்டை எடுக்கும் சாந்தி... ஓர் அதிரடி ஆர்.டி.ஓ !

தகவல்களையும் என்னிடம் சேர்ப்பிக்கத் தொடங்கிவிட்டார்கள். மணல் திருடிய வண்டிகள், பொக்லைன் ஆகியவற்றை கைப்பற்றி நடவடிக்கை எடுத்தேன். இரவு இரண்டு மணிக்கு மேல் ரோந்து சென்று, மணல் லாரியைப் பிடித்தேன். விவசாய சங்க பிரதி நிதிகள் - அதிகாரிகள் அடங்கிய குழுக்களை நியமித்து மணல் திருட்டைக் கண்காணித்தேன். மணல் திருட்டு தற்போது ஒழிந்திருக்கிறது.

மக்களின் நம்பிக்கை பெற்ற அதிகாரியாக நான் இருப்பதால்தான்... ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என போராட்டத்தில் இறங்கும் கரூர்வாசிகள், நான் பேச்சுவார்த்தை நடத்திய பத்தாவது நிமிடத்தில் நம்பிக்கையுடன் கலைந்துவிடுகிறார்கள். அதிகாரி என்கிற தோரணையை அகற்றிவிட்டு அவர்களுள் ஒருவராக பேசும்போது, பிரச்னை முடிவுக்கு வந்துவிடுகிறது''

- மக்களிடம் நன்மதிப்பைப் பெற, சாந்தியின் இந்த அணுகுமுறையுடன், அவரின் அதிரடிகளும் முக்கிய காரணம்.

வீட்டு சிலிண்டரை அதிக விலைக்கு வாங்கி, கார்களுக்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த ரகசிய இடத்தை கண்டுபிடித்து 37 சிலிண்டர்களையும், நான்கு கார்களையும் பறிமுதல் செய்தது தொடங்கி, சாலையோர ஆக்கிரமிப்புகள்தான் விபத்துக்குக் காரணம் என்பதை உரியவர்களுக்குப் புரிய வைத்து விபத்து பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியது உள்ளிட்ட அவரின் ஆன் தி ஸ்பாட் அதிரடிகள் ஒவ்வொன்றும் நம் ஒவ்வொருவரின் அப்ளாஸுக்கு உரியவை.

''சக அதிகாரிகளிடம், 'நான் இப்படித்தான்’ எனப் புரிய வைத்துவிட்டால், நம் நேர்மைக்குத் தொந்தரவுகள் வராது. நான் சிறப்பாகச் செயல்படுவதாக மக்கள் சொன்னால், அந்தப் பாராட்டுக்கான நன்றிகளை, பின்னணியில் இருந்து எனது முயற்சிகளுக்கு ஆலோசனைகளையும், அனுமதியையும் வழங்கும் எங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்குத்தான் சமர்ப்பிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கிராமத்துப் பின்னணியில் இருந்து வந்து, அரசு அதிகாரியாவது வரையிலான எனது பாதையில், கூடவே பயணம் செய்து என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருப்பது, 'உன்னால் முடியும்' என்கிற நம்பிக்கைதான்!''

- பார்க்க கல்லூரிப் பெண்போல் இருக்கும் சாந்தியின் ஆளுமை, அழுத்தமானது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism