Published:Updated:

அழுகை மொழியை அலட்சியம் செய்யாதீர்கள் !

அழுகை மொழியை அலட்சியம் செய்யாதீர்கள் !

பிரீமியம் ஸ்டோரி

சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்
குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

அழகிய கண்ணே... உறவுகள் நீயே...’ என 'உதிரிப்பூக்கள்’ சினிமாவில் எஸ்.ஜானகி பாடியதைப் போலவே... மிக இனிமையாக, ராகம் குலையாமல்... ஸ்ருதி விலகாமல் பாடி தன் செல்லக் குழந்தை யாழினியைத் தூங்க வைக்க படாதபாடு ப(£)டுகிறார் அம்மா இளவழகி. ஆனால், 'உன்னை ஒரு வழி பண்ணுகிறேன் பார்’ என்கிற ரேஞ்சில் அழுதுகொண்டே இருக்கிறாள் யாழினி.

அழுகை மொழியை அலட்சியம் செய்யாதீர்கள் !
##~##

இந்தத் 'திருவிளையாடல்’ ஒரு நாள் நிகழ்ந்தால், பிரச்னையில்லை. தினம் தினம் இதுதான் என்றால்... அதுதான் 'கடின குழந்தை' (Difficult children). இது, அம்மாக்கள் 'அலர்ட்’ ஆக இருக்க வேண்டும் என்பதற்கான 'சிக்னல்’. தூக்கம், ஓடுவது, ஆடுவது மாதிரியான செயல்பாடுகள், அழுகை, பால் குடிப்பது, சாப்பிடுவது போன்ற புற நடவடிக்கைகள் இயல்பாக இருந்தால்தான், உங்கள் குழந்தையின் மனதும், உடலும், வளர்ச்சியும் சீராக பிரச்னையின்றி இருக்கிறது என்று அர்த்தம்.

உதாரணமாக, ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு, பத்து மணி நேர தூக்கம் மிக அவசியம். ''எங்க எழில்மொழி காலையில எங்கூட ஆறு மணிக்கே எழுந்துடுவா. சமர்த்தா பால் குடிச்சுட்டு, பாட்டிகூட விளையாடுவா. எட்டரை மணிக்கெல்லாம் குளிப்பாட்டி, பவுடர் பூசி, அழகா மை வைச்சு, டிரெஸ் போட்டு கொஞ்சம் இட்லி ஊட்டுவேன். பத்து மணிக்கெல்லாம் தூங்கிடுவா. திரும்ப நான் சமையல் எல்லாம் முடிக்கறதும், அவ எழுந்திரிக்கறதும் கரெக்டா இருக்கும்.''

- இப்படி குழந்தையின் தூக்கம் ரெகுலராக இருந்தால், குழந்தை நன்றாக இருக்கிறது... கவலைப் படத் தேவையில்லை. ''ஐயோ... எங்க அமுதன் எப்ப எந்திரிப்பான், எப்பத் தூங்குவான்னு சொல்லவே முடியாது'' எனும் அம்மாக்களே... 'குறையில்லை... பயமில்லை’. என்றாலும், ஒருமுறை குழந்தை மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.

சில குழந்தைகள் கொஞ்சிக் கொஞ்சி அழும்; சில குழந்தைகள் சிணுங்கி, முனகி அழும்; கத்தி ஊரைக்கூட்டி, ஆர்ப்பாட்டம் செய்து அழும் குழந்தைகளும் உண்டு; நசநசவென்று பெய்யும் மழை போன்ற அழுகையை வெளிப்படுத்தும் குழந்தைகளும் உண்டு. இந்த ஒவ்வோர் அழுகைக்குள்ளும் ஒரு காரணம் இருக்கிறது என்கிறது குழந்தை மனநல அறிவியல்.

'அம்மா எனக்கு பசிக்குது’, 'சீக்கிரம் என்னைத் தூங்க வையுங்கம்மா’, 'ஐயோ, எறும்பு கடிச்சிருச்சு’, 'அண்ணணுக்கு மட்டும் முத்தம் கொடுக்குற... எனக்கு..?!’ என்று பல விஷயங்களை நம்மிடம் சொல்வதற்கு அழுகைதான் குழந்தைக்குத் தெரிந்த ஒரே வழி. ஆகையால், குழந்தை அழும்போது அலட்சியமாக இருக்காமல், 'என்ன சொல்ல வருகிறது’ என்பதைக் கவனியுங்கள்!

ஆசை ஆசையாக, ஆர்வமாகச் சாப்பிடும் குழந்தைகள் அபூர்வம்தான். ஆனால், பால் குடிப்பதற்கோ, 'மம்மு’ சாப்பிடுவதற்கோ அழுதுகொண்டே இருந்தால் ஏதோ பிரச்னை என்று அர்த்தம். சளி பிடித்திருக்கலாம், காதுக்குள் வலி இருக்கலாம்... இப்படி பல 'இருக்கலாம்’ இருக்கும். அவை என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்கான இன்டிகேட்டர்தான், அழுகை உள்ளிட்ட புற நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்கள்!

குழந்தை கையில் வைத்திருப்பதை தூக்கி எறிந்து விளையாடும். எதைப் பார்த்தாலும் எடுக்க வேண்டும் என்று துடிக்கும். குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு கிச்சனில் சமைத்துக் கொண்டுஇருப்பீர்கள். அது, ஷெல்ஃப்பில் இருக்கும் பாத்திரங்களை இழுத்து வேலை வைக்கும். 'ஆ, வூ, ம்மா, த்தா, ப்பா’ என்று எதையாவது பேச முயற்சிக்கும். தெரிந்தவர்களைப் பார்த்தால் அடை யாளம் கண்டுபிடித்து சிரிக்கும். இப்படி எல்லாம் சேட்டை செய்தால்தான் அது 'ஆக்டிவ்’ குழந்தை!

பசி, தூக்கம், சாப்பாடு இவற்றில் பிரச்னையில்லாமல் இருந்தால், குழந்தை வீடு என்கிற சூழ்நிலையோடு சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உறவாடிக் கொண்டிருக்கிறது. சூழ்நிலையில் பிரச்னைஎன்றாலும், குழந்தைக்குள் பிரச்னை என்றாலும் புற நடவடிக்கைகள் பாதிக்கப்படும். குறிப்பாக, குழந்தையைப் பார்ப்பதற்கு 'ஆயா’ வைத்திருப்பவர்கள், உங்கள் குழந்தை அந்த ஆயாவிடம் நன்றாக சாப்பிட்டு, விளையாடுகிறதா, சரியான நேரத்தில் சரியான அளவு தூங்குகிறதா என்பதைஎல்லாம் ஒருநாள் உடனிருந்து 'செக்’ பண்ணுங்கள். இவை அனைத்தும் சுமுகமாக இருந்தால் கவலைப் படத் தேவையில்லை. குழந்தையின் இதுபோன்ற நடவடிக்கைகளில்தானே நம் நிம்மதியும் அடங்கி இருக்கிறது.

சரி, குழந்தைக்கு கதை சொல்லும் பெற்றோரா நீங்கள்? கதைக்கும் குழந்தை வளர்ச்சிக்கும்கூட சம்பந்தம் இருக்கிறது. அது என்ன?

- வளர்ப்போம்...

படம்: விஜய் மணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு