Published:Updated:

ஐயோ...பையா !

ஆசிரியைக்கு வில்லனான பள்ளி மாணவன்

பிரீமியம் ஸ்டோரி

கூடவே ஒரு குற்றவாளி!
ஆபத்துகளை அடையாளம் காட்டும் தொடர்

மகாபாரதத்தில் சபையில் வைத்து பாஞ்சாலியை துகிலுரித்தான் துச்சாதனன். இன்றைய நவீன உலகில் கேமரா செல்போன் மூலம் பெண்களைப் படம் பிடித்து, 'மார்பிங்’ (Morphing) முறையில் இன்டர்நெட்டில் மானபங்கப்படுத்தும் நவீன துச்சாதனர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருப்பது வேதனை.

ஐயோ...பையா !
##~##

ஒரு புகைப்படம், ஓவியம் என்று எதுவாக இருந்தாலும், அதில் சிலவற்றை நீக்கியோ... அல்லது சேர்த்தோ... அதிலிருக்கும் உருவத்தை மாற்றும் லேட்டஸ்ட் டெக்னாலஜிதான் 'மார்பிங்’. ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்குப் பயன்படுத்துவதற்கான இந்தத் தொழில்நுட்பம், வில்லன்களின் கையில் சிக்கி, அழிவுப்பூர்வமான விஷயங்களுக்கும் துணைபோய்க் கொண்டிருக்கிறது.

உதாரணமாக, ஒரு பெண்ணின் புகைப்படத்தில் கழுத்துக்குக் கீழ், வேறொரு அரைகுறை ஆடையில் உள்ள பெண்ணின் உடலை ஒட்டி, மோசடி செய்வது. இதுதான் இன்று நெட் உலகின் டாப் கேடித்தனம். ஒரு பெண்ணைப் பழி  வாங்க, தங்களின் பொழுபோக்குக்காக, புரொஃபஷனலாக (!) என இந்த அநாகரிக செயலில் இறங்குகிறார்கள் பலர். அப்படி நாங்கள் சந்தித்த அதிர்ச்சி கேஸ் இது...

டெல்லியைச் சேர்ந்த திருமணமாகாத இளம் பள்ளி ஆசிரியை அவர். மிகவும் கட்டுப்பாடான குடும்பம் அவர்களுடையது. ஒருநாள் அவருக்குப் போன் செய்த உறவுக்கார பெண், ''எப்படி சொல்றதுனே தெரியல... உன்னோட நிர்வாண போட்டோவை யாரோ நெட்ல போட்டிருக்காங்க... இப்பத்தான் பார்த்தேன்...'' என்று படபடப்புடன் வெப்சைட் அட்ரஸையும் சொல்லியிருக்கிறார். உச்சக்கட்ட ஷாக்குடன், அதைத் தேடிப் பார்த்த ஆசிரியை, கிட்டத்தட்ட உயிரற்ற உடலாகிப் போனார். அழுது துடைத்த கண்களுடன் பெற்றோரிடம் தகவலைத் தெரிவித்திருக்கிறார். துடித்த அவர்கள், ''உனக்கு வேண்டாத யாரோ தான் இந்த ஈனச் செயலை செய்திருக் கணும்'' என்று அவரிடம் விசாரித் தனர்.

இறுதியாக, தன்னுடன் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், தன்னை ஃபாலோ செய்தது, ஃபார்வர்டு மெஸேஜ் அனுப்பியது, இறுதியாக, 'வாலன்டைன்ஸ் டே’க்கு கார்டு தந்து தன்னிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது அந்தப் பெண்ணுக்கு நினைவு வர, ''அவனாதான் இருக்கும்!'' என்றார் தன் பெற்றோரிடம். போலீஸில் புகார் கொடுத்து, அந்த ஆசிரியரை நையப் புடைத்தபோது, ''ஐயோ... அவங்க மேல எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது உண்மைதான். ஆனா, இந்த ஈனக்காரியத்தை சத்தியமா நான் செய்யல...'' என்று கதறினார் அவர்.

ஐயோ...பையா !

அதற்குள், ''மிஸ்ஸுக்கு ஏதோ பிராப்ளமாம்...'' என்று ஸ்கூல் முழுக்க பேச்சு எழ, 'இனி இந்த விஷயத்தை ரகசியமாதான் ஹேண்டில் செய்யணும்’ என்று போலீஸை விடுத்து, ஒரு தனியார் டிடெக்டிவ் ஏஜென்ஸியிடம் சென்றது அந்தக் குடும்பம். அந்த ஏஜென்ஸியுடன் எங்கள் டீமும் சேர்ந்து விசாரணையில் இறங்கினோம்.

அந்த ஆசிரியையின் தலை, இன்னொரு பெண்ணின் நிர்வாண உடலுடன் ஒட்டப்பட்டு உருவாக்கப்பட்ட அந்த 'மார்பிங்’ படத்தை வெப்சைட்டில் போட்டது யார் என்ற கேள்விக்கு விடை காண, அந்தப் படம் வெப்சைட்டில் பதிவேற்றப்பட்ட தேதி, பதிவேற்றம் செய்யப்பட்ட கணினியின் அடையாள எண் (மி.றி.ழிஷீ) போன்ற விவரங்களைச் சேகரித்தோம். அந்த கணினிக்கு இணைய இணைப்பை வழங்கியிருந்த தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தின் மூலமாக, அந்தக் கணினி எந்த முகவரியில் இருக்கிறது என்று தெரிந்து கொண்டோம். அது... டெல்லி, கரோல்பாக் பகுதியில் வசிக்கும் ஒரு வழக்கறிஞரின் முகவரி!

மேற்கொண்டு மிகமிக உஷாராக காய் நகர்த்திய நாங்கள், அந்த வழக்கறிஞர், அவருடைய மனைவி, அவருடைய 16 வயது மகன் மூவர் மட்டுமே அங்கே வசிக்கின்றனர் என்பதை உறுதி செய்தோம். அவர்களை ரகசிய கேமரா மூலம் போட்டோ எடுத்து, அந்த ஆசிரியையிடம் காட்டினோம். ''இவங்க யாருனே எனக்குத் தெரியலயே...'' என்று குழம்பியவர், அடுத்ததாக அந்தப் பையனைப் பார்த்து அதிர்ந்தார்... ''ஐயோ... இவன் என் கிளாஸ்ல படிக்கற பையன்தான்!''

யாராலும் யூகிக்க முடியாத திருப்பம்தான். மீசைகூட சரியாக முளைக்காத, பள்ளி மாணவனான அந்த பதினாறு வயது பையன்தான் குற்றவாளி! ''ஆனா, இவன்கிட்ட எப்படி இப்படி ஒரு போட்டோ..? இதை ஏன் இவன் செஞ்சான்...?'' என்று ஆசிரியை தழுதழுக்க, மாணவனை விசாரித்த 'விதத்தில்’ கக்கினான் உண்மைகளை!

''அந்த மிஸ்ஸை ஆரம்பத்துல இருந்தே பிடிக்கல. பல தடவை கிளாஸ்ல மத்த ஸ்டூடன்ட்ஸ் முன்னால கடுமையா திட்டியிருக்காங்க. அந்த அவமானம், கோபத் துல எனக்கு அவங்கள பழி வாங்கணும்னு தோணுச்சு'' என்றான்.

பள்ளியில் 'கம்ப்யூட்டர் புலி’ என்று பெயரெடுத்திருந்த அந்த மாணவன்,  ஸ்கூலுக்கு மொபைல் கேமரா கொண்டு வந்து, அந்த ஆசிரியைக்கே தெரியாமல் பல கோணங்களில் போட்டோக்களை எடுத்திருக்கிறான். தன் அதீதமான கம்ப்யூட்டர் அறிவால், அந்தப் புகைப்படங்களை இப்படி 'மார்பிங்’ செய்து நெட்டில் உலவ விட்டிருக்கிறான்.

பள்ளி நிர்வாகம் அவனை பள்ளியில் இருந்து நீக்கியது. ஆனால், மாணவனின் பழிவாங்கும் எண்ணத்தால் அந்த ஆசிரியர் பட்ட அவமானம், வேதனை, விரக்தியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

நம் புகைப்படங்களே இப்படி நமக்கு எதிரியாகும் கொடுமையில் சிக்காமல் இருக்க, தேவை கவனம்... எப்போதும்!

வேலை நிமித்தம் மனைவியைப் பிரிந்து, வடகிழக்கு மாநிலத்தில் வசிக்கிறான் கணவன். மனைவியோ... இரவு நேரங்களில் ஓயாமல் செல்போன்... எஸ்.எம்.எஸ்... என்று யாரிடமோ சிக்கியிருக்கிறார். விஷயம் தன் கவனத்துக்கு வந்த போதும்கூட, மனைவிக்கு புத்தம் புதிதாக மொபைல் போன் ஒன்றை வாங்கிக் கொடுக்கிறான் கணவன். அதைத் தொடர்ந்து..?

                               - திகில் பரவும்...

 இர.வரதராஜன்
ஓவியம்: அரஸ்

உஷார்!

 

பொது இடங்களில் உங்களை யாராவது படமெடுப்பதாகத் தோன்றினால், உடனடியாக கண்டித்து அதை நிறுத்துங்கள்.

செல்போனில் எடுக்கும் படங்களை உடனடியாக சிஸ்டத்தில் பதிவேற்றம் செய்துவிட்டு, செல்லில் இருந்து 'டெலிட்’ செய்துவிடுங்கள்.

செல்போனை சர்வீஸ் சென்டரில் கொடுக்கும்போது, புகைப்படங்கள் பதிவாகி இருக்கும் 'மெமரி கார்ட்’டை அகற்றிவிட்டுக் கொடுப்பது புத்திசாலித்தனம்.

காதலன், தோழிகள், நண்பர்கள், தம்பி, தங்கை தங்களின் மொபைல் கேமராக்களில் உங்களை படம் எடுப்பதை தவிர்ப்பது நலம். அது அவர்களின் அனுமதியோடோ, அனுமதியில்லாமலோ அவர்களின் நண்பர்கள், குடும்பத்தினருக்கு பரிமாறப்பட வாய்ப்பிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு