Published:Updated:

"எங்கள் வீட்டு அலமாரியில் ஏகப்பட்ட 'பாட்டி'கள் !"

"எங்கள் வீட்டு அலமாரியில் ஏகப்பட்ட 'பாட்டி'கள் !"

பிரீமியம் ஸ்டோரி

'உங்கள் வாழ்வின் இறுதி வரை துரோகம் செய்யாமல் உடன் வரும் உற்ற நண்பன்... புத்தகம்!’ என்பார்கள். அந்த நல்ல நண்பனைத் தேடி சென்னைவாசிகள் வருடந்தோறும் படையெடுக்கும் இடம்... சென்னை புத்தகக் கண்காட்சி! இதோ... இனிதே நடந்து கொண்டிருக்கிறது அந்தத் திருவிழா. சமீப ஆண்டுகளாக இத்திருவிழாவில் பெண்களின் வருகை, ஆண்களையும்  மிஞ்சிவிடுவது, ஆரோக்கியமான முன்னேற்றம்.

"எங்கள் வீட்டு அலமாரியில் ஏகப்பட்ட 'பாட்டி'கள் !"
##~##

மாதம் பிறந்தவுடன் வெங்காயம் வாங்கவே பட்ஜட்டில் ஆயிரங்கள் ஒதுக்க வேண்டிய இந்தக் காலத்தில், புத்தகங்கள் வாங்குவதற்காக அந்த மாதத்துக்கான தங்களின் மற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டு கண்காட்சிக்கு குடும்பம் குடும்பமாக வருவது, ஆச்சர்யப்பட வைக்கும் மாற்றம்!

''பொதுவாக என்னுடைய விருப்பம்... உடல்நலம், அழகுக்குறிப்பு, குழந்தை வளர்ப்பு முதலிய நூல்கள்தான். முன்பெல்லாம் வீட்டில் பெரியவர்கள் இருப்பார்கள். நமக்குத் தெரியாத விஷயங்களை எடுத்துச் சொல்லுவார்கள். இன்று 'நியூக்ளியர் ஃபேமிலி’யாக சுருங்கிப் போய் இருக்கும் நகரத்துவாசிகளுக்கு இதுபோன்ற புத்தகங்கள்தான் ஆசான், தோழி எல்லாமும்!

'வயித்துக்கு சரியில்லையே...’ என்று நாம் சோர்வானால், 'மிளகு கஷாயம் வெச்சு குடிச்சுப் பாரு...’ என்று சொல்லிக் கொடுத்து நம் பதற்றம் தவிர்க்கும் பாட்டியின் ஆலோசனையை, 'செரிமான பிரச்னையால் வயிற்றுப் போக்கு ஏற்படலாம்’ என்று ஆரம்பித்து மருத்துவ விளக்கங்களோடு இன்னும் விரிவாக சொல்லிக் கொடுக்கின்றன புத்தகங்கள். அந்த வகையில் எங்கள் வீட்டு அலமாரியில் நிறைய பாட்டிகள் இருக்கிறார்கள்!'' என்று ரசனையாகப் பேசினார் சுமனி.  

"எங்கள் வீட்டு அலமாரியில் ஏகப்பட்ட 'பாட்டி'கள் !"

ஸ்ரீலதா - முத்துக்குமார் தம்பதியின் சாய்ஸ்... சைக்காலஜி, தத்துவம் சம்பந்தப் பட்ட புத்தகங்கள்.

''ஏராளமான தத்துவ ஞானிகளும், அறிஞர்களும் பிறந்த பூமி இது. தத்துவங்கள் மனதை பக்குவப்படுத்தும். எங்கள் இருவரின் ரசனையும் ஒரே தளத்தில் இருப்பது புத்தக பட்ஜெட்டை ஆளுக்குப் பாதியாக பிரித்துக் கொள்ளும் சங்கடத்தை தராமல், இருவரும் சேர்ந்தே புத்தகங்களைத் தேர்வு செய்ய வைக்கிறது...'' என்று கூட்டாக அறிவிக்கும் இவர்களின் இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவுக்கான பட்ஜெட்... 3,000 ரூபாய்.

பள்ளி மாணவியான விகாஷினிக்கு, வீட்டுக்குப் போகும் எண்ணமே இல்லை. கண்கள் நிறைய தேடல் கொப்புளிக்க, ஒவ்வொரு ஸ்டாலாக சுற்றிச் சுற்றி வந்தார். ''சின்ன வயதில் 'காமிக்ஸ்’ புத்தகங்கள் படித்து ஆரம்பமானது என் வாசிப்பு பழக்கம். இப்போது ப்ளஸ் ஒன் படிக்கிறேன். என்னுடைய ஃபேவரைட், அகதா கிறிஸ்டியின் க்ரைம் திரில்லர் நாவல்கள்தான். பாடப் புத்தகங்களின் சுமையில் இருந்து விடுபட என்னுடைய தேர்வு நாவல்கள்தான்!'' என்றார் சந்தோஷமாக!

கடந்த 11 ஆண்டுகளாக தவறாமல் புத்தகக் காட்சியில் கலந்து கொள்ளும் துளசி, ''வரலாற்று நாவல்தான் என்னுடைய ஃபேவரைட். கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' படித்துப் பாருங்கள் அது புரியும். ஒரு தனி மனிதனின் வரலாறு, நாட்டின் வரலாறு ஆகும் சுவாரஸ்யம்... கற்பனையை மிஞ்சும் ஆச்சர்யம்!'' என்கிறார் அழகான வர்ணனையோடு!

கல்லூரிப் பேராசிரியையான சுடர்விழியின் தேடலுக்கான காரணம், வேறு. ''இப்போது மாணவர்களுக்கான எக்ஸ்போஷர் சிறப்பாக இருக்கிறது. இன்டர்நெட், அவர்களை எட்டு திசைகளிலும் சுலபமாக தகவல் சேகரிக்க வைக்கிறது. அவர்களுக்கு ஈடுகொடுக்க, நானும் தயாராக வேண்டும்தானே..? அதனால், இந்தப் புத்தக திருவிழாவில் மாணவ சமுதாயத்துக்கு நெருக்கமான, அவர்களுக்குப் பிடித்த தலைப்புகளில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் அள்ளிக் கொண்டிருக்கிறேன்!'' என்றார் மேடம்.

"எங்கள் வீட்டு அலமாரியில் ஏகப்பட்ட 'பாட்டி'கள் !"

கண்காட்சியில் தினந்தோறும் பரபரவென விற்பனையாகும் புத்தகங்களின் எண்ணிக்கை மக்களின் வாசிப்பு நேசத்தை சொல்ல, இன்னொருபுறம் ஏராளமான மாணவர்கள் சலுகை விலையில் பாடப்புத்தகங்களும், கைடுகளும் மட்டுமே வாங்குகின்றனர். கூடவே, மாறி வரும் சூழலுக்கு ஏற்ற குழந்தைகளுக்கான கதைகள் தமிழில் இல்லை. தெனாலிராமனும், விக்கிரமாதித்தனுமே தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர் என்பதெல்லாம், வாசிப்பாளர்களின் குறைகளாக அடுக்கப்படுகின்றன... பதிப்பகங்களின் கவனத்துக்கு!

- மோ.அருண் ரூப பிரசாந்த்
படங்கள்: வி.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு