ஸ்பெஷல் 1
Published:Updated:

வில்லங்கம் இல்லாத வீட்டுமனை வேண்டுமா?

கோவிந்த் பழனிச்சாமி படங்கள்: வி.ராஜேஷ்

##~##

'வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்!’ என்ற பழமொழியுடன் இப்போது, 'இடத்தை வாங்கிப்பார்’ என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம் போல. அந்தளவுக்கு ரியல் எஸ்டேட் ஏரியாவில் நிரம்பிக் கிடக்கின்றன புதைகுழிகள். அதில் சிக்கிக் கொண்டுவிட்டால், மீள்வதென்பது அத்தனை சுலபமல்ல!

இங்கே அப்படி சிக்கிக் கொண்டு ஒருவழியாக மீண்டுவிட்ட கோயம்புத்தூர், காரமடையைச் சேர்ந்த ஆறுச்சாமி - பத்மாவதி தம்பதி, அதையடுத்து கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு தேடி, அழகான இடத்தை விலைக்கு வாங்கி வீட்டைக் கட்டி, தற்போது சந்தோஷமாக குடியேறியிருக்கின்றனர்.

புதிதாக வீட்டுமனை வாங்கிப் போட நினைப்பவர்களுக்கு, இந்தத் தம்பதியின் அனுபவம்... அருமையானதொரு பாடம்!

''சொந்த வீடு கட்டியே தீரணும்ங்கிற வைராக்கியத்தோட எங்க சேமிப்புக்குத் தோதான விலையில இடம் தேடினோம். கோவையிலிருந்து 30 கி.மீ. தள்ளி, ரியல் எஸ்டேட்காரங்ககிட்டப் போனோம். அவுங்க வெச்சிருந்த கவர்ச்சிகர விளம்பர போர்டு; ஐ.நா. சபைமேல பறக்கிற மாதிரி பல வர்ணக்கொடிகள்; கூட்டிப்போய் இடத்தைக் காட்டறதுக்கு கார்; குடிக்கறதுக்கு கூல்டிரிங்ஸ்; கூட வர்ற குட்டீஸ்களுக்கு ஐஸ்கிரீம்னு உபசாரம் பண்ணினதைப் பார்த்தும், அவங்க கொடுக்குறதா சொன்ன தங்கக் காசுக்கு ஆசைப்பட்டும், என்ன ஏதுனு பார்க்காம ஒரு கிரவுண்ட் நிலத்துக்கு அப்பவே அட்வான்ஸைக் கொடுத்தோம்.

வில்லங்கம் இல்லாத வீட்டுமனை வேண்டுமா?

'பள்ளிக்கூடம் அருகில், கல்யாண மண்டபம் பக்கத்தில், மருத்துவமனை, பஸ் நிலையம் ஒரு கிலோ மீட்டருக்குள், 24 மணி நேரமும் பன்னீர் மாதிரி தண்ணீர், காலையில் வாக்கிங் போக அருகில் உள்ளது நெடுஞ்சாலை’னு அவங்க கொடுத்த வாக்குறுதி நோட்டீஸை, எங்க வீட்டுக்கு வந்திருந்த சொந்தக்காரர்கிட்ட காட்டினோம். அவர் யூனியன் ஆபீஸ்ல வேலை பார்க்கறவர். 'அப்ரூவ்டு சைட்டா?’னு கேட்டார். பதில் சொல்லத் தெரியாம நாங்க முழிக்க, சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலக அதிகாரிக்கு போன் செஞ்சு விசாரிச்சார். அப்போதான் தெரிஞ்சுது அது அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனையே இல்லைங்கிற விஷயம். அங்க வீடு கட்டினா... தண்ணி வசதி, தெரு விளக்கு, சாலை, கழிப்பறை வசதி வங்கி லோன்னு எதுவும் கிடைக்காதுனு அவர் விளக்க, தூள்தூளாகிப் போச்சு எங்க மனசு'' என்ற ஆறுச்சாமி - பத்மாவதி தம்பதி, ''ரியல் எஸ்டேட் கம்பெனிக்கு ஓடினோம். அவங்ககிட்ட நாங்க கொடுத்த அட்வான்ஸை திரும்ப வாங்குறதுக்குள்ள ரொம்பவே பட்டுட்டோம். அப்புறமா அந்த உறவினரை வெச்சே நிதானமா விசாரிச்சு இந்த இடத்தை வாங்கி வீடு கட்டினோம்!'' என்றார்கள் சந்தோஷமாக.

வில்லங்கம் இல்லாத வீட்டுமனை வேண்டுமா?

''இப்போதெல்லாம் போலி வாக்குறுதிகளை நம்பி இடம் வாங்கி ஏமாறுவது பெருகி வருகிறது. அதற்கு மக்களிடம் விழிப்பு உணர்வு இல்லாததுதான் காரணம். இடம் வாங்குவதில் உள்ள சட்டக் கூறுகள் தெரியாமல் ரியல் எஸ்டேட் புரோக்கர்களிடம் சிக்கிக்கொள்ளும் மக்கள் பலர். ஓர் இடம் வாங்க முடிவு செய்து விட்டால், பத்திரப் பதிவுக்கு முன் பரிசீலிக்க வேண்டிய 13 முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. இவற்றை ஒவ்வொருவரும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்'' என்று அறிவுறுத்திய கோயம்புத்தூர் முன்னோடி சட்ட ஆலோசகர்களில் ஒருவரான லோகநாதன், அவற்றைப் பட்டியலிட்டார்.

 இடம் வாங்கும்போது முதலில் பார்க்க வேண்டியது... வில்லங்கப் பத்திரம். குறைந்தபட்சம் அந்த நிலத்தைப் பற்றிய 30 ஆண்டு கால பத்திர விவரங்களை சார்-பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, தகுந்த கட்டணம் செலுத்திப் பெற்று, அதை சட்ட ஆலோசகர் மூலம் படித்துப் பார்த்து, எந்த ஒரு வில்லங்கமும் இல்லையெனில் அடுத்த படி ஏறலாம்.

 குறிப்பிட்ட இடம் அரசு அங்கீகாரம் பெற்றுள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஊரின் உள்ளாட்சி அலுவலகத்தில் சென்று இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

 அந்த இடத்துக்கான வரி முறையாக, தொடர்ந்து செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும் மேற்படி அலுவலகத்தின் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்.

வில்லங்கம் இல்லாத வீட்டுமனை வேண்டுமா?

 இடத்தின் ஒரிஜினல் பத்திரம் மற்றும் மூல பத்திரங்களை கண்டிப்பாகப் படித்துப் பார்க்க வேண்டும். பத்திரத்தில் இருக்கும் உரிமையாளர்தான் உங்களிடம் இடம் விற்பனை செய்யும் நபரா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

 இடம் தொடர்பாக பொது அதிகார பத்திரம் (பவர்) வேறு யாருக்காவது கொடுக்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

 குறிப்பிட்ட மனையின் வரை படம் பெறுவது முக்கியம். இதற்கு முன்பு அந்த இடத்தில் கிணறு, குட்டை, குழி, போன்றவை இருந்து மூடப்பட்டுள்ளதா என்று பார்க்கவேண்டும். அது தெரியாமல் அங்கு வீட்டைக் கட்டினால், மழைக்காலத்தில் வீடு உள் இறங்கிவிடும்.

 சொத்துவரி மற்றும் கணிப்பொறி சிட்டாவில் மனையை விற்பவர் பெயர் அல்லது விற்கும் நிறுவனத்தின் பெயர் இருக்க வேண்டும்.

 இடம் விற்பவரின் போட்டோ ஐ.டி. புரூஃப்-ஐ செக் செய்ய வேண்டும்.

 லே - அவுட் மேப் கட்டாயம் வாங்கிப் பார்க்க வேண்டும். ஒரு லே-அவுட் போடுகிறார்கள் என்றால்... ஸ்கூல், நீச்சல் குளம், வாட்டர் டேங்க் போன்றவை எங்கெங்கே வரப்போகின்றன என்பதையெல்லாம் குறிப்பிட்டு, அரசாங்கத்திடம் அனுமதி பெற்ற பிறகே அதற்கான அனுமதி கிடைக்கும். இந்த தகவல்கள் எல்லாம் லே-அவுட் மேப்பில் குறிக்கப்பட்டிருக்கிறதா என்று செக் செய்து கொள்ளுங்கள்.

 இடத்தை விற்பவரின் ரத்த சொந்தங்களுக்கு உரிமை இருப்பின், அவர்களிடம் தடை இல்லாச் சான்று பெற வேண்டும்.

வில்லங்கம் இல்லாத வீட்டுமனை வேண்டுமா?

 கைடு - லைன் வேல்யூ (ஒரு இடத்துக்கு அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் விலை) தெரிந்துகொள்ள வேண்டும். இதை பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது இணையதளம் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.

 அக்ரிமென்ட் போடும் பட்சத்தில், அதையும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது நல்லது.  

 எல்லாவற்றுக்கும் இடைத்தரகரையே முன்னிறுத்தாமல், விலை உள்ளிட்ட பல விஷயங்களையும் விற்பனையாளரிடம் நேரடியாகப் பேசுவதே நல்லது. இது பல வகையில் நாம் ஏமாறாமல் காப்பாற்றும்.

பட்டியலை பக்காவாக போட்ட லோகநாதன், ''குறைந்தபட்சம் இந்த 13 விஷயங்களில் கவனம் எடுத்து, அவற்றை முறையாகக் கடைப்பிடித்து, வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற்ற பிறகு காலிமனை வாங்கினால், ரியல் எஸ்டேட் கொள்ளையர்களிடம் இருந்து தப்பித்து, அரசாங்கம் தரும் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைந்த இடத்தில் புதுமனை புகுவிழா நடத்தலாம்!'' என்று வாழ்த்தினார்.