ஸ்பெஷல் 1
Published:Updated:

Money...Money...Money...

தங்கமே தங்கமே..!நிதி ஆலோசகர் அனிதா பட்

பணத்தைப் பெருக்கும் மந்திரத் தொடர்

##~##

கிராமத்து வாசகி ஒருவர் தொலைபேசினார் எனக்கு. 13.3.2012 தேதியிட்ட இதழின் 'Money... Money... Money ’ தொடரில், தங்கத்தில் முதலீடு செய்வதைப் பற்றி எழுதியிருந்த சேப்டர் குறித்துப் பேசியவர், 'நாங்க தங்கத்தில் முதலீடு செய்ய தங்க காயின்களாத்தான் வாங்கி வெச்சுருக்கோம். ஆனா, அதை விற்கும்போதோ... நகையா மாற்றும்போதோ சேதாரம், செய்கூலினு ஏகப்பட்ட பணம் போயிடுது. நீங்க எழுதின பேப்பர் தங்கத்தைப் பத்திப் படிச்சோம். எங்க கிராமத்துல பல பெண்கள் பேப்பர் தங்கத்துல முதலீடு செய்ய இருக்கோம். இன்னும் விவரமா அதைப் பத்திச் சொல்லுங்களேன்!’ என அன்பான வேண்டுகோள் விடுத்தார்.

நகரத்தில் உள்ள பெண்களுக்கே 'பேப்பர் கோல்டு’ போன்ற வார்த்தைகள் எல்லாம் அந்நியமாக இருக்க, அழைத்த அந்த கிராமத்து வாசகியும் அவர் தோழிகளும் இணையம், புரோக்கிங் நிறுவனம், யூனிட் தங்கம் என பலவற்றைப் பற்றியும் அறிந்து வைத்திருந்தது, ஆச்சர்யமும் சந்தோஷமும் அளித்தது. அவர்களைப் போலவே கடிதம் மற்றும் தொலைபேசி வழியாக தங்கத்தின் மீதான முதலீடு குறித்து அதிக தகவல்கள் கேட்டிருந்தனர் வாசகிகள் பலரும். அவர்களின் சந்தேகங்களைப் போக்கும்விதமாக, தங்கத்தின் மீதான முதலீடுகள் பற்றி மீண்டும் இங்கே பார்ப்போம்.

உங்களிடம் ரூபாய் 50,000 கையில் இருக்கிறது. இதனை பீரோவில் வைத்தால் திருட்டு பயம். இதன் காரணமாக வங்கி சேமிப்புக் கணக்கில் போட்டுவைத்து, தேவையின்போது எடுத்துக் கொள்கிறீர்கள். இதேபோல்தான் பேப்பர் கோல்டும். 15 ஆண்டுகள் கழித்து வரப்போகும் மகளின் திருமணத்துக்கு இப்போதே தங்கம் வாங்கிச் சேமிக்க நினைக்கிறீர்கள். மாதம் ஒரு கிராம் தங்க காயின் அல்லது ஆண்டுக்கு ஐந்து சவரன் நகை என வாங்கிச் சேமிக்கிறீர்கள். 15 ஆண்டுகள் கழித்து, நீங்கள் வாங்கிச் சேமித்த காயினை நகைக்கடையில் கொடுத்து நகைகளை வாங்கிக் கொள்ள முயற்சிக்கும்போது, 'சேதாரம்' என சிறிது கிராம்களை கழிப்பார்கள்.

Money...Money...Money...

ஒருவேளை நகையாக வாங்கி வைத்திருந்தீர்கள் எனில்,  பதினைந்து வருடங்கள் கழித்து உங்கள் மகளுக்கு நீங்கள் வாங்கி வைத்த பழைய டிசைன் நகைகள் பிடிக்காமல், அன்றைய மாடலில் நகை வாங்க நினைத்தால், பழைய நகையை மாற்றியோ அல்லது விற்றோதான் புதிதாக வாங்க முடியும். இப்படி வாங்கும்போது பத்து சவரன் நகைக்கு... சுமார் ஒரு சவரனுக்கான  விலையைச் சேதாரம், செய்கூலிக்கு கொடுக்க நேரிடும். இப்படி கண்ணுக்குத் தெரிந்தே நம் பணம் போவதைத் தடுக்க வந்த சேமிப்பு முறைதான்... பேப்பர் தங்கம். வங்கியில் எலெக்ட்ரானிக் முறையில் உங்கள் கணக்கில் பணம் இருப்பது போன்று, டீமேட் கணக்கில் உங்கள் கணக்குக்கு தங்கம் வாங்கி வைப்பதுதான் பேப்பர் தங்கம். இதற்குத் தேவை டீமேட் அக்கவுன்ட் மற்றும் டிரேடிங் அக்கவுன்ட்.

டீமேட் அக்கவுன்ட்

வங்கியில் பணம் போட சேமிப்புக் கணக்கு துவங்குவது போல், பேப்பர் தங்கம் வாங்க முதலில் தேவை டீமேட் அக்கவுன்ட். இந்த டீமேட் அக்கவுன்டை வழங்க இந்தியாவில் சி.டி.எஸ்.எல், என்.எஸ்.டி.எல். என்ற இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. உங்கள் ஊரிலிருக்கும் ஷேர் புரோக்கிங் அலுவலகத்துக்குச் சென்று, 'டீமேட் அக்கவுன்ட் ஆரம்பிக்க வேண்டும்’ எனச் சொன்னால், உங்கள் பெயரில் ஆரம்பித்துக் கொடுப்பார்கள். இந்தியன் வங்கி, எஸ்.பி.ஐ. போன்ற வங்கிகள்கூட டீமேட் அக்கவுன்ட் தொடங்கிக் கொடுக்கிறார்கள். இந்த அக்கவுன்டை பராமரிப்பதற்கு ஆண்டு பராமரிப்புக் கட்டணமாக 150 - 170 ரூபாய் வரை வாங்கிக் கொள்வார்கள். இந்தக் கட்டணம் ஒவ்வொரு புரோக்கிங் நிறுவனத்துக்கும் மாறுபடும். குறைந்த கட்டணம் வாங்கும் நிறுவனத்தில் அக்கவுன்ட் துவக்குங்கள்!

டிரேடிங் அக்கவுன்ட்

கோல்டு இ.டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் முறையில் தங்கத்தை வாங்க, டிரேடிங் அக்கவுன்ட் வேண்டும். இதனையும் புரோக்கிங் நிறுவனமே ஆரம்பித்துக் கொடுப்பார்கள். டீமேட் அக்கவுன்ட் என்பது உங்கள் பணம் வைத்திருக்கும் லாக்கர் போன்றது. டிரேடிங் அக்கவுன்ட் என்பது தங்கத்தை வாங்க, விற்க பயன்படும் நகைக்கடைக்காரர் போன்றது. இந்த இரண்டு அக்கவுன்ட்களும் ஆரம்பித்துவிட்டால், பேப்பர் தங்கம் வாங்கலாம். ஒரு கிராம் தங்கம் என்பது கோல்டு இ.டி.எஃப்-பில் ஒரு யூனிட் எனக் கணக்கிடப்படும். நீங்கள் அக்கவுன்ட் ஆரம்பித்த புரோக்கரிடம் ஒரு யூனிட் வாங்க வேண்டும் என்று கூறினால், உங்கள் டீமேட் அக்கவுன்டில் ஒரு யூனிட் தங்கத்தை வாங்கி வைப்பார்.

ஒருவேளை நீங்கள் வாங்கிய நாளில் ஒரு யூனிட் 2,000 ரூபாய் என இருந்து, ஒரு மாத காலத்துக்குப் பிறகு ஒரு யூனிட் 3,000 ரூபாய் என போகும்போது, புரோக்கரிடம் ஒரு யூனிட்டை விற்கச் சொன்னால், விற்று அந்தப் பணத்தை உங்கள் டீமேட் கணக்கில் வரவு வைத்துவிடுவார். உங்களுக்கு லாபம் 1000 ரூபாய்.

ஒருவேளை இப்படி விற்று லாபம் பார்க்காமல், மகளின் திருமணத்தின்போது மொத்தமாக விற்றுக் கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கலாம். யூனிட்களை வாங்கி வைத்துவிட்டால் உங்களுக்குத் தேவையின்போது விற்று, உங்கள் மகளுக்குப் பிடித்த அன்றைய டிசைனில் நகை வாங்கிக் கொள்ளலாம். தங்கம் விலை ஏற ஏற, நீங்கள் வாங்கி வைத்திருக்கும் யூனிட்டின் மதிப்பும் உயரும். இது கோல்டு இ.டி.எஃப். வாங்கும் முறை.

கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட்

இது நகைக்கடையில் நகைச்சீட்டு போடுவது போன்றது. குவாண்டம், ரிலையன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ, எஸ்.பி.ஐ, கோட்டக் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் என ஐந்து திட்டங்கள் இதற்காகச் செயல்படுகின்றன. இதற்கு வங்கிக் கணக்கு மட்டும் இருந்தால் போதும். நீங்கள் எந்தத் திட்டத்தை விரும்புகிறீர்களோ அந்தத் திட்டத்தின் படிவத்தை நிரப்பி, வங்கிக் காசோலையுடன் மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட் அல்லது புரோக்கிங் அலுவலகத்தில் கொடுத்தால் போதும்... மாதந் தோறும் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நீங்கள் குறிப்பிடும் தேதியில் பணம் பிடித்துக் கொள்வார்கள். நீங்கள் எத்தனை வருடங்களுக்கு  

  இந்தத் திட்டத்தில் பணம் போட நினைக்கிறீர்களோ போட்டுக் கொள்ளலாம். ஒரு வருடம், ஐந்து வருடம், பத்து வருடம் என இருக்கும். பணம் போடும் காலம் முடிந்தவுடன் நீங்கள் கட்டிய தொகைக்கு பணமாகவோ அல்லது தங்கமாகவோ வாங்கிக் கொள்ளலாம். இதிலும் தங்கத்தின் விலை ஏற ஏற, உங்கள் அக்கவுட்ன்ட்டில் வாங்கி வைக்கப்படும் தங்கத்தின் விலையும் ஏறும். தங்கத்தை வாங்கி சேமிக்கச் சிறந்த வழி இது. பெருகட்டும் தங்கம்!

- பணம் பெருகும்...