Published:Updated:

பிள்ளைக்காகவா... பிற சுகங்களுக்காகவா..?

பிள்ளைக்காகவா... பிற சுகங்களுக்காகவா..?

பிரீமியம் ஸ்டோரி

என் டைரி - 243
வாசகிகள் பக்கம

 வசதியான வீட்டுல பிறந்த ஒரே செல்லப் பொண்ணு நான். இயல்புலயே இரக்க குணமும், மத்தவங்கள புரிஞ்சு நடக்கற பக்குவமும் எங்கிட்ட ஊறிப் போயிருச்சு. அதனால... உறவுகள், நண்பர்களுக்கு நான் இஷ்டமான பொண்ணு. காலேஜ் ஸ்டூன்ட்ஸோட பிரஸிடென்ட் அளவுக்கு என்னை வெற்றி பெற வெச்சதும் அந்தக் குணங்கள்தான்.

பிள்ளைக்காகவா... பிற சுகங்களுக்காகவா..?

செகண்ட் இயர் படிக்கிறப்ப, வடமாநிலத்துல இருக்கிற அநாதை இல்லம் ஒண்ணுக்கு என்.எஸ்.எஸ். கேம்ப் போனோம். இல்லத்தை சீர்படுத்தறது, குழந்தைகளுக்குப் பாடம் சொல்லி தர்றது, வயசானவங்கள குளிப்பாட்டுறது, அவங்களுக்கு ஆறுதல் சொல்றதுனு பத்து நாளும் போனதே தெரியல. அந்த இல்லத்துக்காக தன்னையே அர்ப்பணிச்சுட்டிருக்கிற உன்னதமான ஒரு மனுஷனையும் அங்க சந்திச்சேன். ஊருக்கு திரும்பின பிறகும், போன் மூலமா அவர்கிட்ட  நட்பைத் தொடர்ந்தேன். ஒரு கட்டத்துல அது காதலா மாறிடுச்சு எனக்கு. ''இந்த இல்லம்தான் என் குடும்பம்''னு மறுத்தவரை விடாம வற்புறுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ''இனி எங்க மூஞ்சியிலயே முழிக்காதே''னு தலை முழுகிட்டாங்க பெற்றோர்.

மன தைரியத்தோட, வடமாநிலத்துல வாழ்க்கையைத் தொடங்கினதுக்கு சாட்சியா அழகான ஆண் குழந்தை. இந்த நிலையில, கடவுள் அந்த குரூரமான திருப்பத்தைக் கொடுத்தது கொடுமை. திடீர்னு ஒரு ஆக்ஸிடென்ட்ல அவர் இறந்துட்டார். அதைத் தாங்கிக்க முடியாம பலமுறை தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணின நான், மனசு மாறி குழந்தைக்காக வாழ ஆரம்பிச்சேன்.

அதே ஹோம்லயே தங்கி வேலை செஞ்சுட்டு வர்றேன். இருந்தாலும், மனநல சிகிச்சை எடுத்துக்கற அளவுக்கு பித்து பிடிச்ச மாதிரி இருக்கேன். இப்போ என்னைத் தேடி வந்த என்னோட அம்மா, ''நீ எங்க கூட இருந்தா, நல்லாயிடுவ. 25 வயசுகூட ஆகல. வேற வாழ்க்கையை அமைச்சுக்கலாம். குழந்தையை அந்த அநாதை இல்லத்துலயே விட்டுட்டு வந்துடும்மா''னு கூப்பிடறாங்க.

நிகழ்கால சூழல், எதிர்கால பயம் இதெல்லாம் சேர்ந்து... ''அவங்க சொல்றதுதான் சரி'னு சொல்லத் தோணுது. அதேசமயம், 'ஊருக்கெல்லாம் சேவை செய்த நாம, நம்மளோட ரெண்டு வயசு குழந்தையை அநாதை இல்லத்துல விடணுமா?'னு நினைச்சா... உயிரே வெடிக்குது.

பிள்ளைக்காக வாழ்வதா... பிறசுகங்களுக்காக வாழ்வதா... என்ன செய்யட்டும் நான்?

- ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகி
படம்: விஜய் மணி

'பிரிவில் புரியும் பாசம் !'

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 242ன் சுருக்கம்...

''கணவர், கன்சல்டன்ஸி நிறுவனம் தொடங்க, உதவியாக இருந்ததோடு, நிறுவனப் பணிகளையும் பொறுப்பேற்று செய்து வந்தேன். ஆனால், புதிதாக ஒரு நபர் பார்ட்னராக சேர, சதா சர்வகாலமும் அவருடனே பொழுதைக் கழிப்பது, குடிப்பது என்று பணத்தை வாரி இறைக்கிறார். இதைப் பற்றி கேட்ட என்னை, அலுவலகத்துக்கே வரவேண்டாம் என்று நிறுத்திவிட்டதோடு, ஆபீஸ் விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதையும் தவிர்க்கிறார். என்னை விடுங்கள்... குழந்தைகளையும் கூட கண்டு கொள்ளாமல் இருக்கிறார். புதிதாக வந்து சேர்ந்த வில்லங்க நட்பை விரட்ட என்ன வழி..?''

என் டைரி 242-க்கான வாசகிகளின் ரியாக்ஷன்...

உன் கணவர் ஏதோ சிக்கலில் மாட்டி, அதை மறைக்கத்தான் குடிக்கிறாரோ என்று தோன்றுகிறது. பணத்துக்காக அந்த நபர், உங்கள் கணவரை கைக்குள் போட்டுக் கொண்டு ஆடுகிறாரா... அல்லது இந்த பிரச்னைக்கு உங்கள் கணவரே முழுக் காரணமா என்பதை சற்று தீவிரமாக ஆராயுங்கள். இதற்கான விடை தெரிந்தால்தான், உங்கள் கணவரை மீட்பதற்கு மற்றவர்களின் உதவியை நாட முடியும். மாமியார், மாமனாரை சில நாட்கள் உங்களுடன் தங்க வைத்துக் கொள்ளுங்கள். பெற்றோருக்குப் பயந்து வீட்டுக்கு வருவதுடன், அவர்களிடம் மனம்விட்டு பேசவும் வாய்ப்பு உண்டு. அன்பான... பாசமான அணுகுமுறைதான் எதிலும் கைகொடுக்கும்!

- கீதா நாராயணன், மும்பை

கூடா நட்பு குடும்பத்தின் நிம்மதியைக் குழிதோண்டி புதைத்துவிடும். இனியும் தாமதிக்காமல், ஏற்கெனவே இருக்கும் அனுபவத்தை வைத்து, கம்பெனியின் முன்னாள் பார்ட்னரின் துணையுடன் புதிதாக மேனேஜ்மென்ட் கன்சல்ட்ன்ஸி தொடங்கு. உன் கணவரிடம் அவர் நண்பரைப் பற்றி குறை கூறாமல், வேலைக்குப் போவதாக சொல். அவருடைய புதிய பார்ட்னர் இவரை படுகுழியில் தள்ளி விடுவதற்குமுன், நீ உன் மூலம் பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொள். அப்போதுதான் உன் கணவர் நலிந்தபோது கை கொடுத்து உதவ முடியும். கண்கெட்ட பிறகாவது, கூடா நட்பை விடுத்து உன்னைத் தேடி வருவார்.

- செ.கலைவாணி, சென்னை-16

ஒருவர் மீது நம்பிக்கை வந்துவிட்டால், பாசம்கூட கண்ணை மறைத்து விடும். எத்தனை சொல்லியும் கேளாமல் தன் பிடிவாதத்தை விடாத உன் கணவரைத் திருத்துவது என்பது வேஸ்ட். கையில் பணம் இருக்கும் வரைதான் நட்பும் இருக்கும். நல்லது, கெட்டதைப் பட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளை உன் பெற்றோரிடம் விட்டுவிட்டு, நல்ல வேலையைத் தேடிக்கொள். முடிந்தால், தாய் வீட்டில்கூட சில காலம் இருக்கலாம். பிரிவின்போதுதான் மனைவியின் அன்பு புரியும். நாளடைவில் எல்லாம் சரியாகி விடும்.

- ராஜி குருசாமி, சென்னை-88

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு