ஸ்பெஷல் 1
Published:Updated:

இளமை இதோ... இதோ!

மஞ்சளில் மறையும் 'ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் !வயது நிர்ணய நிர்வாக நிபுணர் டாக்டர் கௌசல்யா நாதன்

உங்களை மெருகேற்றும் மேக்னெட் தொடர்

##~##

திருமணம் முடிந்த புதுப்பெண்ணுக்கு, அழகு பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. கணவர், புது உறவுகள், விருந்து, ஸ்பெஷல் கவனிப்புகள் என அவர்களின் மனதில் ஊறும் பூரிப்பே அவர்களை அழகாக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்ளும். அதேசமயம், அந்தப் பூரிப்பிலும், நான்-ஸ்டாப்பாக விருந்துகளுக்குச் சென்ற சந்தோஷத்திலும் ஒரே மாதத்தில் பல கிலோ எடை கூடி... பிறகு, வருந்தும் புதுப்பெண்களும் உண்டு. எனவே, எடை விஷயத்தில் திருமணத்துக்குப் பின் ஆன மாதங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

திருமணத்தில் நிகழும் ஒரு பாஸிட்டிவ் உடல் மாறுபாட்டைக் குறிப்பிட்டாக வேண்டும். வயிற்று வலி, ஒழுங்கற்ற சுழற்சி என்று அதுவரை மாதவிடாய் பிரச்னைகள் இருந்த பெண்களுக்கு, தாம்பத்யத்துக்குப் பின் அது சீராகும். எனவே, அதனால் ஏற்பட்ட பக்கவிளைவுகளும் தணியும். திருமணம் முடிந்தவுடன் புதுப்பெண்ணும், மாப்பிள்ளையும் மட்டுமல்ல... இரு குடும்பத்தார்களுக்கும் விரியும் முதல் கனவு... குழந்தை.

மூன்றெழுத்தில் ஓர்
கவிதை
எழுதச்
சொன்னார்கள்
'அம்மா’ என்றேன்!

- இப்படியரு கவிதை உண்டு. அம்மா என்ற வார்த்தையே அழகுதான். அதேபோல்தான் தாயான வுடன் இன்னும் அழகாகிறாள் ஒரு பெண்.

21 - 23 வயதுக்குள் இருக்கும் பெண்கள், குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடுவது பற்றி யோசிக்கலாம். 28 வயதுக்கு மேல் உள்ள பெண்கள், கண்டிப்பாக குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடக் கூடாது. பிரக்னன்ஸியில் இரண்டு வகைகள் உண்டு. எதிர்பார்த்துக் கருவுறும் பிளான்டு பிரக்னன்ஸி, எதிர்பாராமல் நிகழும் அன்பிளான்டு பிரக்னன்ஸி. இவற்றில் பிளான்டு பிரக்னன்ஸியே சிறந்தது. உடல் அளவிலும், பொருளாதார அளவிலும் தம்பதிகள் தங்களை தயார்படுத்திக் கொண்டு காத்திருக்கும் சமயத்தில் கருவுறும்போது, அந்தப் பெண்ணால் தாய்மையை முழுமையாக ரசிக்கவும் பூரிக்கவும் முடியும். மாறாக, உடல் ஆரோக்கியம், பொருளாதாரச் சிக்கல்களை சமாளிக்க முடியாமல் இருக்கும் நேரத்தில் நிகழும் அன்பிளான்டு பிரக்னன்ஸி, தாய்மையை பரிபூரணமாக உணரவிடாததுடன், மனதளவில் ஒரு பாதுகாப்பற்ற தன்மையையும் தந்துவிடும். அது, புறத்திலும் பிரதிபலிக்கும். விளைவு... அழகு வெளிப்பட வேண்டிய கர்ப்ப காலத்தில் அவருடைய அகத்தை முகம் பிரதிபலிப்பதால், மலர்ச்சி இன்றி காணப்படுவார்.

கர்ப்பிணிகள் வாரத்துக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். இந்த நேரத்தில் வியர்வை அதிகமாக வெளியேறும் என்பதால், நீர்ச்சத்து குறைந்து போகாமல் இருக்க, தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். அது குழந்தையின் நலத்துக்கு மட்டுமல்லாமல், சரும நலத்துக்கும் கைகொடுக்கும்.

இளமை இதோ... இதோ!

கர்ப்பிணிகளை தங்களின் புறத்தோற்றத்தைப் பற்றிக் கவலைப்பட வைக்கும் முக்கிய விஷயம்... 'ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்’ எனப்படும் வயிற்றில் ஏற்படும் வரிகள். பொதுவாக கர்ப்பகாலமான ஒன்பது மாதங்களில் உடல் எடையானது 12 கிலோ வரை அதிகரிக்கும். அந்த எடை மற்றும் குழந்தையின் வளர்ச்சி காரணமாக வயிறு பெரிதாகும்போது, சருமம் விரிந்து கொடுக்கும். அப்போது ஏற்படுபவையே இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ். பிரவசத்துக்குப் பின் சிலருக்கு இந்த வரிகள் அப்படியே தங்கிவிடும் என்பதால், அது புற அழகைக் கெடுக்கும். இதைத் தவிர்க்க, வயிறு கொஞ்சமாக வெளித் தெரிய ஆரம்பிக்கும் நான்காம் மாதத்தின் இறுதியில் இருந்தே தினமும் இரவு நேரத்தில் வயிற்றில் வெண்ணெய் அல்லது மஞ்சள் மற்றும் நல்லெண்ணெய் கலந்து தடவலாம். இதற்கென மார்க்கெட்டில் கிடைக்கும் கிரீம்களைவிட, இந்த இயற்கை முறை முயற்சி நல்ல பலன் தரும், வரிகளைத் தவிர்க்கும்.

ரெகுலராக பார்லர் போகும் பழக்கம் உள்ள பெண்கள், கர்ப்பகாலத்தில் பிரேக் எடுத்துக்கொள்ள வேண்டும். ஐ-புரோ த்ரெடிங் செய்வது, வாக்ஸிங் செய்வது என இவை எல்லாம் வலி உணரச் செய்பவை. நாம் கேட்கும் இசையைக் கருவில் இருக்கும் குழந்தை உணரும் எனில், நாம் அனுபவிக்கும் வலியும் ஏதோ ஒரு வகையில் குழந்தையைச் சென்றடைய சாத்தியமுள்ளது அல்லவா? கூடவே, இந்த நேரத்தில் சருமம் மிகவும் சென்ஸிட்டிவ்வாக இருக்கும் என்பதால், ஃபேஷியல், பிளீச் என்று உபயோகிக்கும் காஸ்மெடிக் க்ரீம்களும் பரிந் துரைக்கத் தக்கவை இல்லை. இந்த மாதங்களில் பின்னங்கழுத்து, தொடை என இந்தப் பகுதிகள் எல்லாம் கறுப்பாக மாறலாம். இவை எல்லாம் உடலினுள் நடக்கும் ஹார்மோன் மாற்றங்களின் விளைவு என்பதால், இவற்றை மாற்ற நினைத்து பார்லர் முயற்சிகள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம். பிரசவத்துக்குப் பின் அவை தானாகவே சரியாகிவிடும். மொத்தத்தில், பார்லர் ட்ரீட் மென்ட்டுகள் வேண்டாம் இந்த ஒன்பது மாதங்களுக்கு.

கர்ப்ப காலத்தில் ஃப்ளாட் காலணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் உடுத்தும் உடைகள், வெளிப்பார்வைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். எப்போதும்போல் இறுக்கமாக அணியாமல், நார்மல் சைஸைவிட ஒரு சைஸ் கூடுதலாக அணிவது வசதியாக இருக்கும். காட்டன் புடவை, சுடிதார் அணியலாம். இடுப்பில் நாடா கட்டும்போது நடு வயிற்றில் இறுகக் கட்டாமல் மேல்வயிற்றிலோ அல்லது கீழ்வயிற்றிலோ சற்றுத் தளர்வாகக் கட்டலாம். அசௌகரியத்தால் உடை தளர்வாகி இறங்குவது போன்ற சிரமங்களைத் தவிர்க்க, எலாஸ்டிக் கொண்ட லெகிங்ஸ்களை அணிந்துகொள்ளலாம்.

அழகான அம்மாவாக இருங்கள்... அகம், புறம் இரண்டிலும்!

- இளமை வளரும்...