ஸ்பெஷல் 1
Published:Updated:

அன்று,ஏழாம் வகுப்புடன் பிரேக்... இன்று, ஏகப்பட்ட ரெக்கார்ட் பிரேக் !

ரியாஸ்

##~##

''குடும்ப வறுமையாலும், சூழ்நிலையாலும் ஏழாம் வகுப்புடன் என் படிப்பு தடைப்பட்டு நின்றபோது, 'இதுதான் முற்றுப்புள்ளி' என்று நான் சமரசம் ஆகிவிடவில்லை. எட்டு வருடங்களுக்குப் பின் மீண்டும் என் படிப்பைத் தொடர்ந்தேன். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பி.ஏ, எம்.ஏ, பி.எட், எம்.ஃபில், பிஹெச்.டி, தையற்கலை, தட்டச்சு, இந்தி என கல்வியில் என் எல்லைகளை விரித்தேன். கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என இவை எல்லாம் இப்போது எனக்கான அடையாளங்கள்!''

- முன்னுரையிலேயே ஈர்க்கிறார் வேலூர், விநாயக முதலியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் ருக்மணி பன்னீர்செல்வம்!

''ஆம்பூர்தான் சொந்த ஊர். வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட விவசாயக் குடும்பம். படிப்பு வாசனையே அறியாதவர்கள்தான் தாயும் தந்தையும். மொத்தம் ஏழு பிள்ளைகளில் நான் ஒருத்திதான் தொடக்கப் பள்ளியைத் தாண்டி, உயர்நிலைப் பள்ளிக்கு வந்தவள். ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி கால் அடிபட்டதில், படிப்பைத் தொடர முடியவில்லை.

அன்று,ஏழாம் வகுப்புடன் பிரேக்... இன்று, ஏகப்பட்ட ரெக்கார்ட் பிரேக் !

எட்டு ஆண்டுகள் இப்படியே ஓடிய நிலையில்... 'ஏழாம் வகுப்பு படித்தவர், வீட்டில் இருந்தபடியே படித்து எட்டாம் வகுப்புத் தேர்வெழுதலாம்!’ என்று செய்தித்தாளில் வந்த தனியார் பயிற்சி பள்ளியின் விளம்பரத்தைப் பார்த்தபோது என்னுள் நம்பிக்கை துளிர்விட்டது. வீட்டில் அனுமதி கிடைக்காது என்பதால், வீட்டுக்குத் தெரியாமல் அஞ்சல் மூலமாக பாடங்களைப் பெற்று படித்தேன். அப்பா, அம்மா இருவருமே வேலைக்கு போய்விட்டு இரவுதான் திரும்புவார்கள் என்பதால், இதை ரகசியமாகவே வைத்திருந்தேன். எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற பிறகுதான், அவர்களிடம் சொன்னேன். இந்த

அன்று,ஏழாம் வகுப்புடன் பிரேக்... இன்று, ஏகப்பட்ட ரெக்கார்ட் பிரேக் !

நிலையில், பிழைப்புத் தேடி வேலூருக்கு இடம் பெயர்ந்தது குடும்பம்.

என்னுடைய அண்ணன் நந்தகோபாலின் உதவியோடு எஸ்.எஸ்.எல்.சி, ப்ளஸ் டூ, தையல்கலை,  தமிழ், ஆங்கிலம் தட்டச்சு முதுநிலை, இந்தியில் ராஷ்ட்ரபாஷா என்று தனியாகவே தேர்வெழுதி வெற்றிபெற்றேன். பிறகு, டி.கே.எம். கல்லூரியில் பி.ஏ, வரலாறு சேர்ந்தேன். 'யுனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட்’ என்கிற பெருமையுடன், ஊரீசு கல்லூரியில் எம்.ஏ. சேர்ந்தேன். தமிழகத்தின் பல இடங்களில் கவியரங்கம், பட்டிமன்றம், கருத்தரங்கம் என்று என் இலக்கியப் பயணத்தையும் தொடர்ந்தேன்.

இந்நிலையில், தாய்மாமன் பன்னீர்செல்வத்தை எனக்கு மணம்முடித்தனர். புரட்சிகரமான சிந்தனையிலும் முற்போக்கான எண்ணங்களிலும் விருப்பம் கொண்ட எனக்கு, அதே அலைவரிசையில்

அன்று,ஏழாம் வகுப்புடன் பிரேக்... இன்று, ஏகப்பட்ட ரெக்கார்ட் பிரேக் !

கணவர் அமைந்தது ஆசீர்வாதம். ரத்தப் பொருத்தம் பார்த்தே திருமணத்தை உறுதி செய்தோம். விதவை மாமியார் கைகளால் தாலி எடுத்துக் கொடுக்க வைத்து திருமணம் செய்து கொண்டோம். 'வாழ்த்த வரும் சுற்றமும் நட்பும் அன்பளிப்புகளைத் தவிர்க்கவும். முடிந்தால் ரத்ததான முகாமில் மணமக்களுடன் இணைந்து ரத்த தானம் செய்யவும்’ என்ற வேண்டுகோள் வைத்ததற்கு பலனாக, 20 பேர் வரை ரத்த தானம் செய்தனர். அன்றைய தினம் விபத்தில் சிக்கி ரத்தம் இழந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஓர் இளைஞனின் உயிர் இதனால் காப்பாற்றப்பட்டது!''

- ஆச்சர்யப்படுத்தினார் ருக்மணி.

''பி.எட் முடித்து, தமிழினியன், சிந்தனா என்ற இரு குழந்தைகளுக்குத் தாயான பின்பு சிறு இடைவெளிக்குப் பின் எம்.ஃபில், பேராசிரியர் பணிக்கான 'ஸ்லெட்’ தேர்வு இதையெல்லாம் முடித்த நான், மலேசியாவின் வெவ்வேறு இடங்களில் இலக்கிய சொற்பொழிவுக்காகவும் சென்று வந்தேன். ஊரீசு கல்லூரியில் வருகைப் பேராசிரியர் என்கிற பணியிலும் சிலகாலம் இருந்தபோது... வேலூர் மகளிர் சிறையில் ஆயுள்தண்டனை கைதிகளாக இருந்த 10 பெண்களுக்கு எம்.ஏ. வரலாறு பாடம் நடத்தும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நான் பெற்ற கல்வியின் பயனை, திருப்தியை முழுமையாக உணர்ந்தது, அந்தப் பெண்களின் தேர்ச்சியில்தான்''

- நெஞ்சம் நெகிழ்கிறது ருக்மணிக்கு.

ஆசிரியர் வேலைக்கு நடுவே, பிஹெச்.டி முடித்து முனைவர் பட்டத்தையும் பெற்ற ருக்மணி... ஒரு எழுத்தாளராகவும் வடிவெடுத்து 'வில்லேந்திய புறாக்கள்’ என்கிற கவிதைத் தொகுதி, 'இந்திய வரலாறு கண்ட இணையில்லா அரசிகள்’ உள்ளிட்ட சில நூல்கள் என படைத்திருக்கிறார். ஏகப்பட்ட விருதுகளையும் குவித்திருக்கிறார்!

''எனது கல்விப் பயணத்தில் நான் பட்ட இன்னல்கள் எதுவும் என் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல... எந்தப் பிள்ளைக்கும் நேரக்கூடாது என்பதே என் அக்கறை. இது பெற்றோர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள்... உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுங்கள். நம்மால் அவர்களுக்கு கொடுக்கக்கூடிய சிறந்த சொத்து அதைவிட வேறொன்றும் இல்லை!''

- தானே அதற்கு உதாரணமாகிறார், ருக்மணி டீச்சர்!