Published:Updated:

வெங்காயம் இல்லாத சமையலும் சத்தானதே !

வெங்காயம் இல்லாத சமையலும் சத்தானதே !

பிரீமியம் ஸ்டோரி

எட்டாத விலையா... விட்டுத் தள்ளுங்கள்...

இருபது வருடங்களுக்கு முன், ஒரு தெருவில் ஒன்றிரண்டு வீட்டில் ஆன்டெனா பொருத்தப்பட்டிருக்கும். அதைப் பார்த்து, ''ம்ம்... அவங்க பணக்காரங்க. டி.வி.எல்லாம் வெச்சிருக்காங்கப்பா'' என்று ஏக்கப் பெருமூச்சு விட்டவர்கள் உண்டு!

வெங்காயம் இல்லாத சமையலும் சத்தானதே !
##~##

ஆனால், அந்த டி.வி. பெட்டிகூட இன்று வீட்டுக்கு ஒன்று, இரண்டு என்றுகூட அழகாக உட்கார்ந்திருக்கிறது. ஆனால், உணவுப் பொருட்களின் விலை 'விண்ணைத் தாண்டியும் போவாயோ’ என எகிறிக் கொண்டிருக்கிறது!

ஏற்கெனவே அரிசி, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஊகிக்க முடியாத அளவுக்கு உயர்ந்து, நடுத்தர மற்றும் ஏழை மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. 2010-ன் இறுதியில் உயர ஆரம்பித்திருக்கும் வெங்காயம் மற்றும் பூண்டு விலையேற்றம், இனிமேல் 'பை நிறைய' பணம் வைத் திருப்பவர்கள் மட்டும் தான் 'வயிறு நிறைய’ சாப்பிட முடியும் என்ற அளவுக்கு கஷ்டமான சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த சில வாரங்களாக, 'உயர்ர்ர்ர்ந்து கொண்டே’ இருக்கிறது வெங்காயம் மற்றும் பூண்டின் விலை. 'இனி வெங்காயம், பூண்டு சேர்க்காத சமையலைத்தான் பழகிக்கணும்...’ என்று இல்லத்தரசிகள் ஆற்றாமையில் புலம்புவதும் கேட்கிறது. புலம்பல் மட்டும் அல்ல... அதுதான் இப்போது பல அடுப்படிகளின் பொருளாதார விருப்பமும்கூட!

''வெங்காயம், பூண்டை சமையலில் கட்டாயம் பயன்படுத்த வேண்டுமா..? அப்படி பயன்படுத்தவில்லை எனில் பாதகம்..?'' என்ற கேள்வியை பலரின் சார்பாக இந்தச் சிலரிடம் கேட்டோம்.

வெங்காயம் இல்லாத சமையலும் சத்தானதே !

''எப்படிங்க வெங்காயம் போடாம சமைக்க முடியும்? அப்படியும் சமைச்சுப் பார்த்தோம். ஆனா, 'டேஸ்ட்’ நல்லா இல்லியே. அதுவும் சாம்பார், கீரை, குழம்பு வகைகள்ல வெங்காயம், பூண்டு சேர்க்காம சமைச்சா...  கஷ்டப்பட்டு சமைச்சதை இஷ்டப்பட்டு சாப்பிட முடியலையே'' என்று சொன்னார்கள் நம் வாசகிகள் பலர்.

கேள்வியை சமையல் கலை நிபுணர் செஃப் ஜேக்கப் முன் வைத்தோம். ''சமையல்ங்கிறது பழக்கம்தானே! நம்ம நாட்டுக்குள்ள வெங்காயம், பூண்டு 18-ம் நூற்றாண்டுலதான் வந்துச்சு. அதுக்கு முன்ன நம்ம முப்பாட்டன், பாட்டிகள்... அதைஎல்லாம் பயன்படுத்தாமத்தான் சமைச்சுட்டு இருந்தாங்க. இப்ப நம்ம நாக்கு அந்தச் சுவைக்கு அடிமையாயிடுச்சு. அதனால அதையெல்லாம் சேர்க்காம சமைச்சா, சமைச்ச திருப்தியே பெரும்பாலானவங்களுக்கு வர்றதில்ல. அப்படியே சமைச்சு சாப்பிட்டாலும், சுவையில வித்தியாசம் இருக்கும். அந்த வித்தியாசம் சிலருக்குப் பிடிக்கும். பலரால 'அட்ஜஸ்ட்’ பண்ணிக்க முடியாது. ஏன்னா, நம் உடல் உறுப்புகள்லயே நாக்குதான் நெகிழ்வுத்தன்மை கொண்ட உறுப்பு. ஆனா, அதுதான் சீக்கிரம் எதையும் அட்ஜஸ்ட் பண்ணிக்காதுங்கிறதுதான் பெரும் பிரச்னை. இது ரெண்டையும் போடாம சமைக்கிற சுவைக்கு நம்ம நாக்கு பழகிடுச்சுனா... இந்த விலையேற்றம் பிரச்னையில்ல. இன்னிக்கும் ஜெயின் சமூகத்தினர் வெங்காயம், பூண்டு பயன்படுத்தாமத்தானே சமைக்கறாங்க..?'' என்று கண்களைத் திறந்து வைத்தார்.

''வெங்காயம், பூண்டு நம்ம உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். அதனாலதான் அதை சாம்பார், கூட்டு, பொரியல், ரசம்னு எப்படியாவது ஒருவிதத்துல சேர்த்துக்க ஆரம்பிச்சோம்'' என்று சொல்லும் இயற்கை மற்றும் ஹோமியோபதி மருத்துவர் ஜீவா சேகர்,

''வெங்காயம், பூண்டு ரெண்டையும் ரெகுலரா பயன்படுத்தாம போனா... உடம்புக்கு பெரிய பாதிப்பு இல்ல. ஆனா, இது ரெண்டுக்கும் கேன்சர் வராம தடுக்கற சக்தி இருக்கு. இதை அதிகம் பயன்படுத்த முடியலேனா... அதுக்குப் பதிலா மிளகு, பெருங்காயம், சீரகம், வெந்தயம் மாதிரியான பொருட்களை சேர்த்துக்கணும். இதுங்கள்லயும் வெங்காயம், பூண்டுக்கு இணையான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு'' என்று மாற்று வழி சொன்னார்.

உங்கள் நாக்குக்கு வசதி எப்படி?!

''இனி, மெள்ள விலை குறையும்!''

வெங்காயம் இல்லாத சமையலும் சத்தானதே !

''குடும்பத் தலைவிகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த விலையேற்றம், எப்போது குறையும்?'' என தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி. சொரூபனிடம் கேட்டோம். ''பூண்டு விலை ஒரு மாசத்துக்கு அப்புறம் குறைய வாய்ப்பு இருக்கு. 2008-09 வருஷங்கள்ல ஒரு மடங்கு பூண்டை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செஞ்சோம். ஆனா, 2010-ல நாலு மடங்கு அதிகமா ஏற்றுமதி செஞ்சுட்டோம். அதேசயம், சீனாவுல இருந்து பூண்டை இறக்குமதி செய்றதுக்கு இந்தியா தடை விதிச்சுடுச்சு. இதனாலதான் பூண்டு விலை தாறுமாறா எகிறிடுச்சு. பதுக்கலும்கூட இதுக்கு ஒரு காரணம். ஜனவரி மாசத்துல வரத்து அதிகமாகும்போது விலை குறையும்'' என்றவர்,

''வெங்காயத்தின் விலை பொங்கலுக்கு அப்புறமும் குறையறதுக்கு வாய்ப்பு இல்ல. பாகிஸ்தான்ல இருந்து வெங்காயம் வர்றது தொடர்ந்து பிரச்னையா இருக்கறதால, பிப்ரவரி நடுவுலதான் விலை குறைய வாய்ப்பிருக்கு!'' என்றார்.

 நாச்சியாள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு