Published:Updated:

ஜெஸிகாவை யாருமே கொல்லவில்லை !

கொல்லப்பட்ட பெண்ணுக்கு நியாயம் செய்யும் சினிமா

பிரீமியம் ஸ்டோரி

ஆர்.ஷஃபி முன்னா

ஜெஸிகா லால்... இந்தப் பெண்ணை, இந்தியா அவ்வளவு எளிதாக மறக்க முடியாது!

ஜெஸிகாவை யாருமே கொல்லவில்லை !

மாடலிங் உலகில் நுழைவதற்காக தீவிர முயற்சிகளில் இருந்த இளம் பெண் ஜெஸிகா லால், அதற்குஇடையே டெல்லியின் தென்பகுதியில் இருக்கும் மெஹ்ரோலி என்ற இடத்திலுள்ள ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தார். அதன் மதுபான விடுதியில் பரிமாறும் பணி தான் அவருக்கு. 1999-ம் வருடம், ஏப்ரல் 30-ம் தேதி... அன்றைய பார்ட்டியில் பரிமாறப்பட்ட மதுபானங்கள் தீர்ந்துபோன பின்பும், அதைக் கேட்டு மூன்று இளைஞர்கள் தகராறு செய்தனர். ''மது இல்லை'' என்றார் ஜெஸிகா. கோபமடைந்த மூவரில் ஒருவன், தன் இடுப்பில் செருகியிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தில் ஒரு முறை சுட்டுவிட்டு, அடுத்த குண்டை ஜெஸிகாவின் நெற்றியில் பாய்ச்சினான். அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார் அவர்.

நாட்டையே உலுக்கிய இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளிகளாக ஹரியானா மாநிலத்தின் அப்போதைய அமைச்சர் வினோத் சர்மாவின் மகன் மனு சர்மா, உ.பி-யின் முன்னாள் எம்.பி-யான டி.பி. யாதவின் மகன் விஷால் யாதவ் மற்றும் அமர்தீப் சிங் கில் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். அது பிரபலமான மதுபான விடுதி என்பதால், ஜெஸிகா சுடப்பட்ட சமயத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் அங்கே இருந்தனர். ஆனால், 'குற்றவாளிகளுக்கு எதிரான சாட்சிகள் இல்லை’ என்று சொல்லி 12 பேருமே விடுவிக்கப்பட்டதுதான் கொடுமை!

##~##

''இது அநியாயம்... அக்கிரமம்... ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி வேண்டும்'’ என்று பொதுமக்கள் கொதிக்க... நாடு முழுவதும் பெரும் பரபரப்பும், சர்ச்சையும் கிளம்ப, மீடியாக்கள் இந்த விஷயத்தைக் கையில் எடுத்தன. வழக்கு மீண்டும் உயிர்பெற்று, பல்வேறு தடைகளைத் தாண்டி, இறுதியில் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்தது.

வழக்கின் வெற்றிக்கு ஜெஸிகாவின் 22 வயது சகோதரி சபரினா லால் பட்ட துன்பங்கள், மீடியாவின் பங்கு மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டங்கள் என அனைத்தை யும் சித்திரித்து தற்போது வெளியாகியுள்ள இந்தி திரைப்படம், 'நோ ஒன் கில்ட் ஜெஸிகா’ (ழிஷீ ஷீஸீமீ ளீவீறீறீமீபீ யிமீssவீநீணீ). பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த படத்தில்... வழக்கில் புதைந்துள்ள உண்மைகள்... அதை வெளிக் கொண்டு வருவதற்காக காட்டப்பட்ட உழைப்பு... எல்லாமே அபாரம்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி அருகேயுள்ள நொய்டாவில் வசித்த பல் டாக்டரின் மகள் ஆருஷி தல்வார் கொலை செய்யப்பட்டார். பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில், 'அவரை யாரும் கொலை செய்யவில்லை' என்று சி.பி.ஐ. தரப்பு சமீபத்தில்தான் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இத்தகைய சூழலில், ஜெஸிகா லால் பற்றிய படம் வந்திருப்பது பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

துவக்கத்திலேயே... வெறும் ஒரு கிளாஸ் மதுவுக்காக ஜெஸிகாவின் உயிர் அநியாயமாக பறிக்கப்படுவது பார்வையாளர்களின் பதைபதைப்பை துவக்கி வைக்கிறது. அதில் ஆரம்பித்து... ஓர் இளம் பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி, பெரும் போராட்டத்துக்குப் பிறகு கிடைக்கும் நீதி என அனைத்திலும் நாமும் நேரடியாக பங்கு பெறுவது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துகிறது படம். நிருபராக வரும் ராணி முகர்ஜி, ஜெஸிகாவின் சகோதரி சபரினா லாலாக வரும் வித்யா பாலன்... இந்த இரு நடிகைகள் தவிர, படத்தில் பெரும்பாலானவர்கள் புதியவர்களாக இருப்பதும் அதற்கு முக்கிய காரணம்!

இங்கு எழுத்தில் கொஞ்சம் பார்ப்போம் அந்தப் படத்தை...

ஜெஸிகாவை யாருமே கொல்லவில்லை !

சபரினா லால், தன் மூத்த சகோதரி ஜெஸிகாவின் மரணத்துக்கு நீதி பெறுவதற்காக ஆரம்பத்திலிருந்தே தனியாகவே கஷ்டப்படுகிறார். கடைசியில் வழக்கின் விசாரணை நடக்கும்போது முக்கிய சாட்சிகளில் நான்கு பேர் அடிக்கும் அந்தர் பல்டி... சபரினா   வுடன் சேர்ந்து நம்மையும் மனம் உடைந்துபோகச் செய்கிறது.

குறுக்கு விசாரணையில், ''குற்றவாளியை சரியாக அடையாளம் காட்டும் நீங்கள், சம்பவத்தன்று அவர் அணிந்திருந்த உடைகளின் நிறங்களையும் கூறி விட்டீர்கள். நீங்கள் என்ன உடை அணிந்திருந்தீர்கள் என்று கூற முடியுமா?'' என முக்கிய சாட்சிகளில் ஒருவரான ஓட்டல் அதிபரின் மகளிடம் கேட்கிறார் குற்றம் சாட்டப்பட்டிருப் பவரின் வழக்கறிஞர். இதற்கு, தனது ஆடைகளின் பிராண்ட் உள்ளிட்ட விவரங்களைக் கூறிவிட்டு, அன்று தான் அணிந்திருந்த உள்ளாடைகளின் விவரங்களையும் சரியாகக் கூற முடியும் என தைரியமாக அந்தப் பெண் பதிலடி தரும் இடம், நெத்தியடி!

''குற்றவாளியை அடிக்காமல் விசாரிப்பதற்காக மட்டும் எனக்கு ரூபாய் 70 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது'' என சபரினாவிடம் கூறும் விசாரணை அதிகாரி, மீண்டும் வழக்கு உயிர் பெறுவதற்காக முக்கிய ஆதாரமான 'விசாரணை டேப்’பை மறைமுகமாக கொடுத்து உதவுகிறார். வழக் கில் டெல்லி போலீஸார் குற்றவாளிகளைத் தப்பவிடும் நோக்கில் வேண்டுமென்றே கோட்டைவிட்ட பல விஷயங்களைப் புலன் விசாரணை செய்து பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வந்ததும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

இவற்றை ஆதாரமாகக் கொண்டு கையெழுத்து வேட்டை மற்றும் மெழுகுவர்த்தி ஊர்வலங்கள் என டெல்லிவாசிகள் அறப்போராட்டத்தில் இறங்கும்போது, நாமும் ஒருவராக மெழுகுவர்த்தி ஏந்திச் செல்ல ஏங்குகிறது மனம். சபரினாவுக்கு உதவிய பெண் பத்திரிகையாளர் மீராவின் பாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்துள்ளார் ராணி முகர்ஜி.

இந்தப் படம் உருவாக முழு ஒத்துழைப்பு கொடுத்த சபரினா லாலிடம் பேசினோம். ''கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் கூறிய பொய்யால் வழக்கு தோற்க வேண்டியாதயிற்று. மேல் முறையீடு செய்தால் வெற்றி கிடைக்குமா என அப்போது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. குற்றவாளிகள் தப்பியதைக் கேட்டு, என் தாய்க்கு மாரடைப்பு வந்து அவரைப் பிரிய நேர்ந்தது. என் தந்தை இந்த வழக்குக்காக நீதிமன்ற படிகள் ஏறி, இறங்கியே தன் நினைவுகளை இழந்து உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையானார்...'' என வழக்கின் நினைவுகளில் பெருமூச்சு விட்டவர்,

''இந்தப் படம், ஜெஸிகாவை மக்கள் முன்பு அழிவில்லாதவளாக ஆக்கியிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜெஸிகாவுக்கு நியாயம் வழங்கப்பட்டுள்ளது!'' என்றார் துன்பங்கள் துடைத்து!

இறுதியில், டெல்லி போலீஸார் வேறு வழியின்றி ஜெஸிகா லால் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற பெஞ்சில் மேல் முறையீடு செய்வதுடன் படம் நிறைவடைகிறது.

உண்மை வழக்கில்... கடந்த டிசம்பர் 18, 2006-ல் வெளியான தீர்ப்பில் மனு சர்மாவுக்கு ஆயுள் தண்டனையையும், ஆதாரங்களை மறைக்க முயன்றதாக விகாஸ் யாதவ் மற்றும் அமர்தீப் சிங் கில் ஆகிய இருவருக்கும் தலா நான்கு வருட தண்டனையையும் டெல்லி உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் அறிவித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட, அங்கிருந்து ஏப்ரல் 19, 2010 அன்று வெளியான தீர்ப்பிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதேபோல டெல்லியில் பரபரப்பாக பேசப்பட்ட ஆரூஷி தல்வார்... பத்திரிகையாளர் ஷிவானி... ஆகியோரின் கொலை வழக்குகளும் சினிமாத் திரையை எட்டிப் பார்க்கப் போகின்றனவாம்!

படங்கள்: சதீஷ்குமார் நாயர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு