ஸ்பெஷல் 1
Published:Updated:

லாபம் பொங்கும் பங்கு..!

சேனா சரவணன்

##~##

ஒரு காலத்தில் சேமிப்பு, முதலீடு என்றாலே உண்டியலாக இருந்தது. பின்னர் ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம் என மாறியது. தற்போது ஏராளமான நவீன முதலீட்டு வாய்ப்புகள் நம் கண்முன் அணிவகுத்து நிற்கின்றன. அதில் குறிப்பிட்டு சொல்லக் கூடியதாக இருக்கிறது, பங்குச் சந்தை முதலீடு!

பங்குச் சந்தை முதலீட்டில் பெண்கள் லாபகரமாக ஈடுபடுவது எப்படி என்கிற கேள்வியுடன், சென்னையில் உள்ள பங்குச் சந்தை ஆலோசனை நிறுவனமான 'மெட்டாசிஸ்’-ன் ரிசர்ச் அனலிஸ்ட் எஸ்.தேவியை சந்தித்துப் பேசினோம்.

''பெரும்பாலான பெண்கள் முதலீட்டின் மூலம் அதிக லாபம் பெற விரும்புகிறார்கள். ஆனால், அவர்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்குகிறார்கள். விளைவு... 8 முதல் 9 சதவிகிதம் வருமானம் தருகிற ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணத்தை முடக்கி விடுகிறார்கள். நாட்டில் பணவீக்கம்  வங்கி வட்டியைவிட அதிக அளவில் இருக்கும் போது, முதலீடுமீதான வருமானம் அதைவிடக் குறைவாக இருப்பது, நம் முதலீட்டை கரையான் அரிப்பதுபோல்.

லாபம் பொங்கும் பங்கு..!

இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் புரியும். நீங்கள் 100 ரூபாயை முதலீடு செய்திருக்கிறீர்கள். அதற்கு 9% வட்டி கிடைக்கிறது என்றால், ஓராண்டில் 109 ரூபாயாக அது அதிகரித்து இருக்கும். அதேநேரத்தில் பணவீக்க விகிதம் 12% என்றால், ஓராண்டுக்கு முன் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருளை, இப்போது 112 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும். அதாவது, கூடுதலாக மூன்று ரூபாய் கையிலிருந்து போட்டால் தான் அந்தப் பொருளை வாங்க முடியும். எனவே, பணவீக்க விகிதத்தை தாண்டி வருமானத்தை கொடுக்கக் கூடிய முறையில் முதலீடு செய்வதுதான் லாபகரமானது. அதற்கு சிறந்த வழியாக பங்குச் சந்தை முதலீடு இருக்கிறது'' என்று அழகாகப் புரிய வைத்த தேவி, பங்குச் சந்தை முதலீடு பெண்களுக்கு எப்படி ஏற்றது என்பதையும் விளக்கிச் சொன்னார் பொறுப்பாக!

''பங்குச் சந்தை முதலீட்டில் பொறுமை, நிதானம், அலசி ஆராயும் திறன் அவசியம். இவை எல்லாமே பெண்களிடம் தாராளமாக இருப்பதால், நிச்சயம் அவர்களால் பங்குச் சந்தையில் கணிசமான லாபத்தைப் பார்க்க முடியும். அவர்கள் இதில் சில டெக்னிக்குகளையும் கற்றுக்கொண்டால் 30 சதவிகிதத்துக்கும் அதிகமான லாபத்தைப் பார்க்க முடியும்!

நீங்கள் வாங்கப் போகும் பங்குக்கு உரிய நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறதா, அதன் கைவசம் நிறைய ஆர்டர்கள் இருக்கிறதா, எதிர்காலத்தில் அதிக ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா, குறைந்தது கடந்த 5 முதல் 10 ஆண்டுகளில் லாபகரமாக இயங்கி வருகிறதா என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும். அதன் பங்குகளில் நிறுவனத்தின் நிறுவனர்கள் (புரமோட்டர்கள்), அந்நிய நிதி நிறுவனங்கள் (எஃப்.ஐ.ஐ), மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் கணிசமான அளவுக்கு முதலீடு செய்திருந்தால் நல்லது. மிக முக்கியமாக அந்த நிறுவனம், அதன் லாபத்தை பங்கு முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்டாக தொடர்ந்து பிரித்துக் கொடுத்து வந்தால் மட்டுமே பங்கை தேர்வு செய்யவும். கூடவே, கடந்த காலத்தில் அதன் பங்கு, ஈட்டிக் கொடுத்த வருமானம் எவ்வளவு என்பதையும் கவனிக்கவும்.

முக்கியமாகக் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. பல கம்பெனிகள் மிகவும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்.. ஆனால், அவற்றின் பங்குகள் மீதான வருமானம் பெரிய அளவில் இருக்காது. ஆண்டுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமான அளவுக்கே விலையேற்றம் இருக்கும். எனவே, நுகர்வோர் மார்க்கெட்டில் சிறப்பாகச் செயல்படும் நிறுவனமாக மட்டும் இல்லாமல், பங்கு வர்த்தகத்திலும் அதன் பங்குகள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிக் கொண்டுஇருக்கும் நிறுவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், அதன் சப்ளையைவிட டிமாண்ட் அதிகமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பங்குகள்தான் அதிக லாபத்தைத் தரும்'' என்ற தேவி, முதலீட்டில் கடைப்பிடிக்க வேண்டிய சில நுணுக்கங்களை விவரித்தார்.  

லாபம் பொங்கும் பங்கு..!

''ஃபிக்ஸட் டெபாசிட் போலவே கால வரையறை நிர்ணயித்துக் கொண்டு பங்குகளில் முதலீடு செய்வது நல்லது. ஒரு லட்சம் ரூபாயை பங்குகளில் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால்... அதில் பாதியை ஒன்று முதல் இரண்டாண்டு கால கணக்கில் முதலீடு செய்யுங்கள். மீதியை 10 அல்லது 15 ஆண்டு முதலீடாக மேற்கொள்ளுங்கள். குறுகிய கால முதலீட்டில் 10-15% லாபம் கிடைத்தாலே விற்றுவிட்டு வெளியே வந்துவிடுங்கள். பிறகு, விலை குறையும்போது அதே பங்குகளை அல்லது வேறு நல்ல பங்குகளை வாங்கி இப்படி 10-15% லாபத்தில் விற்கும்போது, ஓராண்டில் 20 முதல் 30% லாபம் சுலபமாகப் பார்த்துவிட முடியும்.

நீண்டகால முதலீடு என்கிற போது குழந்தைகளின் படிப்பு, கல்யாணச் செலவுக்கு வைத்துக் கொள்ளலாம். இதில் பங்குகளின் விலை அதிகரிப்பதோடு டிவிடெண்ட், இலவசப் பங்குகள் போன்றவை கூடுதல் லாபமாக வந்து சேரும். போட்ட முதலீடு பல மடங்கு பெருகி இருக்கும் நிலையில் அதை பாதுகாப்பான முதலீடாக மாற்றுவது அவசியம். உதாரணத்துக்கு பங்கு முதலீட்டில் போட்ட ஒரு லட்ச ரூபாய், எட்டாவது வருடம் 5 லட்ச ரூபாயாக வளர்ந்திருக்கிறது எனில், இதில் மூலதனம் ஒரு லட்சத்தை அப்படியே பங்குகளில் வைத்துவிட்டு, மீதி 4 லட்ச ரூபாயை எடுத்து ஃபிக்ஸட் டெபாசிட்டில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். அல்லது தேவை இருக்கும்பட்சத்தில் தங்கமாக வாங்கி வைத்துக் கொள்ளலாம்'' என்றும் பாதுகாப்பான பாதை காட்டியவர்,

''வாருங்கள் பெண்களே சுலபமாகச் ஜெயிக்கலாம் பங்குச் சந்தை களத்தில்!'' என்று வரவேற்பும் வைத்தார்!

பங்குச் சந்தை முதலீடு... தேவையான ஆவணங்கள்!

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முதலில் பான் கார்டு தேவை. முகவரிக்கான ஆதாரம் (குடும்ப அட்டை) மற்றும் புகைப்பட அடையாள அட்டை (வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம்) இருந்தால் பான் கார்டு பெற்றுவிட முடியும். இதைக் கொண்டு பங்கு தரகு நிறுவனம் ஒன்றில் டீமேட் கணக்கை ஆரம்பிக்க வேண்டும். இந்த டீமேட் கணக்கு என்பது கிட்டத்தட்ட வங்கிக் கணக்கு போல்தான். வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்; டீமேட் கணக்கில் பங்குகள் வரவு வைக்கப்படும். பான் கார்டு வாங்க 200 ரூபாய், டீமேட் கணக்குத் தொடங்க சுமார் 500 ரூபாய் செலவாகும்.

ஷேர் மார்கெட்... சேஃப்டி டிப்ஸ்கள்!

 லட்சக்கணக்கான ரூபாய் தேவை இல்லை... சில ஆயிரங்கள் இருந்தாலே பங்கு முதலீட்டை ஆரம்பித்துவிட முடியும்.

எடுத்த எடுப்பிலே அதிக தொகையை முதலீட்டில் இறக்காதீர்கள். ஆரம்பத்தில் சில நூறு அல்லது ஆயிரம் ரூபாயை முதலீட்டில் இறக்குங்கள்; விலை குறைவான, அடிப்படையில் வலுவான பங்குகளைத் தேர்வு செய்து வாங்குங்கள்.

சிபாரிசின் பெயரில் எந்தப் பங்கையும் வாங்காதீர்கள். குறிப்பிட்ட நிறுவனம், அதன் பங்கின் போக்கு தெரிந்தால் மட்டுமே முதலீடு செய்யுங்கள்.

எவ்வளவு சிறந்த நிறுவனமாக இருந்தாலும் ஒரே நிறுவனத்தில் மட்டும் மொத்தத் தொகையை முதலீடு செய்யாதீர்கள். இரண்டு, மூன்று பங்குகளில் முதலீட்டைப் பிரித்துப் போடுவது ரிஸ்க்கை குறைக்கும் முக்கிய வழி.

வேலைக்குச் செல்லும் பெண்கள் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலும், குடும்பப் பெண்கள் வீட்டு வேலை முடிந்து கிடைக்கும் நேரங்களிலும் பங்குகளைப் பற்றி ஆராயலாம். நல்ல பங்குகளை அடையாளம் காட்டும் 'நாணயம் விகடன்’ இதழை தொடர்ந்து படிப்பதும் உங்களுக்கு பல வழிகளில் கைகொடுக்கும்.