ஸ்பெஷல் 1
Published:Updated:

முதல் பெண் ஜவான்...

சாதனைப் பெண் சாந்தி டீக்கா !ஆர்.ஷஃபி முன்னா

##~##

'ஆணுக்குக் குறைந்தவளல்ல பெண்’ என்பதை அவள் அனைத்துத் துறைகளிலும் கால் பதித்து நிரூபித்துவிட்டாள். இருந்தும், 'பலத்தில் பெண் குறைந்தவளே’ என்கிற கருத்து, இன்றும் உண்டு. அதை உடைத்த முன்னோடிகளில் தானும் ஒருவராகச் சேர்ந்திருக்கிறார்... சாந்தி டீக்கா. ஆம்... இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவாக இருக்கும் 'டெரிடோரியல் ஆர்மி'யில் ஜவான் பதவிக்கு முதன் முறையாகத் தேர்வாகிஇருக்கிறார்!

முதல் பெண் ஜவான்...

சேமப்படை (ரிசர்வ் ஃபோர்ஸ்) என்கிற வகையில் வரும் டெரிடோரியல் ஆர்மியை... தமிழில் பிரதேச ராணுவம் என்கிறார்கள். தேசத்துக்காக பாடுபட விரும்பும் பொதுமக்கள் யார் வேண்டுமாலும் இதில் இணைந்து நாட்டுக்கு சேவை செய்யலாம் என்பதே இதன் சிறப்பு.

நம்முடைய ராணுவப் படையில் வீரராக தேர்வாவதற்கு எத்தனை எத்தனை பயிற்சிகள் உண்டோ, கிட்டத்தட்ட அதே அளவுக்கான பயிற்சிகளை முடித்தவர்கள் மட்டுமே இந்த டெரிடோரியல் ஆர்மியில் சேர முடியும்! ஓடுதல், உயரம் தாண்டுதல், மலை ஏறுதல், துப்பாக்கி சுடுதல், ஊர்ந்து செல்லுதல் என கடுமையான பயிற்சிகள் உண்டு. இளம் வயது ஆண்களில் பலரே இவற்றில் எல்லாம் பாஸ் செய்ய முடியாமல் பாதியில் திரும்பிக் கொண்டிருக்க, அனைத்தையும் வெற்றிகரமாக முடித்து, பெண் குலத்துக்கே பெருமை தேடித் தந்திருக்கிறார்... சாந்தி!

மேற்குவங்க மாநிலத்தின் ஆதிவாசிப் பெண்ணான சாந்திக்கு வயது 35. இமயமலையின் குளிர்பிரதேசங்களில் ஒன்றான டார்ஜிலிங் செல்லும் வழியில் ஜல்பாய்குடி மாவட்டத்தில் இருக்கும் சால்சா ரயில் நிலையத்தில் 'பாயின்ட்ஸ்மேன்’ பணியில் இருக்கிறார், இந்த சாந்தி. இந்திய ராணுவம் மற்றும் வடகிழக்கு ரயில்வே ஆகியவற்றில் சிறப்பு அனுமதி பெற்ற பிறகே, அவள் விகடனுக்காக அவரை நேரில் சந்திக்க முடிந்தது!

''இந்த ஜவான் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கும் ஆண்களையே தேர்ந்தெடுப்பதுதான் ராணுவத்தின் வழக்கம். இரண்டு வருடங்களுக்கு முன், என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமே என நானும் விண்ணப்பித்தேன். பலரும் கேலி செய்து கொண்டிருந்த நிலையில், ராணுவ அதிகாரி ஒருவர் போன் செய்து, 'பெண்கள் யாருமே இதுவரை இந்தப் படையில் சேர்க்கப்பட்டதில்லை. என்றாலும், உங்களின் ஆர்வத்தை புறக்கணிக்க முடியாது. ஆண்களுடன் சேர்ந்தே நீங்களும் பயிற்சி எடுக்கலாம்... வாருங்கள்!’ என்று அழைப்பு வைத்தார்.

பீகாரின் ஜமால்பூர் ராணுவ முகாமில் 199 ஆண்களுடன், ஒரே பெண்ணாக நானும் நின்றிருந்தேன். 'இவள் சாவதற்கே வந்திருக்கிறாள் போல’, 'பயிற்சியின் மறுநாளே ஓடப் போகிறாள் பார்’ என அந்த 199 பேரில் பலரும் கிண்டல் செய்தனர். துவளாமல், பயிற்சியிலேயே தீவிரமாக இருந்தேன். நாட்கள் நகர, என்னை உதாரணம் காட்டி, 'ஒரு பெண் இதைச் சாதாரணமாகச் செய்கிறாள்... நீங்கள் ஓட முடியாமல் மூச்சு வாங்குகிறீர்களே..?’ என அதிகாரிகளே வியக்கும் அளவுக்கு  முன்னேறினேன். மெடல் மற்றும் பரிசுகளை அள்ளினேன்'' என்ற சாந்தி,

முதல் பெண் ஜவான்...
முதல் பெண் ஜவான்...
முதல் பெண் ஜவான்...
 

''ஒரு பெண்ணால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கைக்காகத்தான் இதைச் சொல்கிறேனே தவிர, என்னுடன் பயிற்சி பெற்ற சகோதரர்களின் மனம் புண்படுவதற்காக அல்ல'' என்று அழகாகச் சொல்லி தன் குடும்பம் பக்கம் கவனத்தைத் திருப்பினார்.

முதல் பெண் ஜவான்...

''ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்தவளான எனக்கு, 11 வயதிலேயே மணம் முடித்தனர். அப்போது என் கணவருக்கு வயது 34. அவர் வடகிழக்கு ரயில்வே பணியில் இருந்தார். 2003-ல் நடந்த விபத்தில் அவர் காலமாக, அவருடைய 'பாயின்ட்ஸ்மேன்’ பணி எனக்குக் கிடைத்தது. ரயில் பெட்டிகளை இன்ஜினுடன் இணைப்பது, துண்டிப்பது உள்ளிட்ட கடுமையான பணி அது. 'இந்திய ரயில்வேயின் முதல் பெண் பாயின்ட்ஸ்மேன்’ என்ற பெருமையுடன் பணியில் சேர்ந்தபோது, 'வேலைப்பளு தாங்காமல் ராஜினாமா செய்துவிடுவாள்' என்றே பலரும் காத்திருந்தனர். அவர்கள் எல்லோரும் இப்போது வாயடைத்துவிட்டனர்'' என்ற சாந்தி, மேற்குவங்கம், பீகார் ஆகிய மாநில அரசுகளின் மேடைகள் முதல் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வரை பாராட்டப்பட்டுள்ளார்.

''ஏழாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் என் இரு மகன்களும்தான் என் வாழ்க்கைக்கான ஆதாரம். கடந்த இருபது வருடங்களாக மேற்கு வங்காளத்தின் ஆதிவாசிகளில் யாரும் ஐ.பி.எஸ். பாஸ் செய்தது இல்லை. என் மகன்கள் அந்தத் சாதனையைச் செய்து, தேசத்துக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது என் கனவு!'' - கண்கள் மின்னுகின்றன சாந்திக்கு!

நிகழட்டும்!