Published:Updated:

உங்கள் பணத்துக்கு 100 % பாதுகாப்பு

ம.பிரியதர்ஷினி படங்கள்: என்.விவேக்

##~##

''சேமிப்பு என்றாலே நம் நினைவுக்கு வருவது... ஆதிகாலம் துவங்கி, இன்று வரை வீட்டை ஆளும் பெண்கள்தான். தினசரி காய்கறி, மளிகை சாமான் வாங்கியது போக... மீதம் இருக்கும் ஐந்து அல்லது பத்து ரூபாய்களை அஞ்சறைப் பெட்டி டப்பா முதல்... அஞ்சல் அலுவலகம் வரை அவர்கள் சேமிக்கும் அழகே... அழகு!'' என்று பாராட்டு பத்திரம் வாசிக்கிறார்... சென்னை நகர மத்திய கோட்டம் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளரான ஆர். வெங்கடராமன் ஐ.பி.எஸ்.

''பங்குச்சந்தை, தங்க நகை சேமிப்பு, மாதாந்திர சீட்டு என பலவிதமான சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும்... இன்றும் கிராமங்கள் துவங்கி நகரங்கள் வரை பிரபலமாக இருப்பது அஞ்சலகங்கள் மூலமாக நடைபெற்று வரும் சிறுசேமிப்பு திட்டங்கள்தான். காரணம்... இவை அத்தனை எளிமையாக இருப்பதோடு, நூறுசதவிகிதம் பாதுகாப்பானதும்கூட என்பதுதான். இதில் சேர்வதற்கு எந்த ஒரு    அஞ்சலகத்தை வேண்டுமானாலும் அணுகலாம்'' என்று சொல்லும் வெங்கடராமன், அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டார்.

ரெக்கரிங் டெபாசிட்: 'ஆர்.டி. ஸ்கீம்' எனப்படும் இது, 8 சதவிகித வட்டியைத் தரக்கூடிய ஐந்து ஆண்டு ஸ்கீம். பத்து ரூபாயில் ஆரம்பித்து, எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் மாதந்தோறும் டெபாசிட் செய்யலாம். உதாரணமாக, மாதம் 2,000 ரூபாயை சேமிக்கிறீர்கள் என்றால்... ஆண்டுக்கு 24,000 ரூபாய். ஐந்து ஆண்டுகள் கழித்து 1,20,000 ரூபாயாக உயர்ந்திருக்கும். இதற்கான வட்டியாக 27,724 ரூபாய் சேர்த்து... மொத்தம் 1,47,724 ரூபாய் கிடைக்கும்.

உங்கள் பணத்துக்கு 100 % பாதுகாப்பு

இக்கட்டான சூழ்நிலையில் பணம் தேவைப்படுகிறது என்று நீங்கள் நினைத்தால், ஓராண்டில் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கிறதோ... அதில் 50 சதவிகித தொகையை பெற்றுக் கொள்ளலாம் (இது கிட்டத்தட்ட கடன் போலத்தான்). மாதம்தோறும், அபராதம் இல்லாமல் குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தைக் கட்டினால்தான் ஐந்து ஆண்டுகள் கழித்து முழுப்பலனோடு பணம் திரும்பக் கிடைக்கும்.

18 வயது முதல் 53 வயது வரையிலானவர்கள் இதில் சேரமுடியும். இதில் சேர்ந்திருக்கும் நபர் திடீரென மரணம் அடைந்தால், ஐந்து ஆண்டுகள் கழித்து கிடைக்க வேண்டிய முதிர்வுத் தொகை, உடனடியாக அவருடைய குடும்பத்திடம் வழங்கப்படும். இதனாலேயே இதற்கு 'புரொடக்டட் சேவிங்க்ஸ் ஸ்கீம்' என்கிற பெயரும் இருக்கிறது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு அபராதத் தொகை இல்லாமல் பணம் கட்டியிருக்க வேண்டும், பணத்தை திரும்பப் பெற்றிருக்கக் கூடாது என்பதெல்லாம் இதற்கான நிபந்தனைகள்.

டைம் டெபாசிட்: 'குறித்த கால வைப்பு நிதி' என்று சொல்லப்படும் இந்த திட்டம்... 1 ஆண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டு, 5 ஆண்டு என்று தனித்தனியாக இருக்கின்றது. நீங்கள் கட்டி வரும் தொகையை, நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் ஆண்டு/ஆண்டுகளின் முடிவில் திரும்பப் பெறமுடியும். குறைந்தபட்சம்... 200 ரூபாய். அதிகபட்சம்... வசதியைப் பொறுத்தது.

உங்கள் பணத்துக்கு 100 % பாதுகாப்பு

ஓராண்டுக்கு 7.70 சதவிகிதம்; 2 ஆண்டுக்கு - 7.80 சதவிகிதம்; 3 ஆண்டுக்கு - 8 சதவிகிதம்; 5 ஆண்டுக்கு 8.30 சதவிகிதம் என வட்டி கிடைக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு மாதம் தவறாமல் கட்டி வந்தால்... 8.30 சதவிகித வட்டியோடு வருமான வரிவிலக்கும் உண்டு. மாத சம்பளக்காரர்களுக்கு ஐந்து ஆண்டு டைம் டெபாசிட் பெஸ்ட்!

மாதாந்திர வருவாய் திட்டம் (எம்.ஐ.எஸ்.): இது, 5 ஆண்டுக்கான சேமிப்புத் திட்டம். 8.2 சதவிகித வட்டியுடன் கூடிய இத்திட்டத்தில் ரூ. 1,500 மினிமம் தொகையாகவும், அதிகபட்சமாக லட்சங்களிலும் கட்டலாம். உதாரணத்துக்கு மூன்று லட்ச ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால், வட்டியாக மாதம் 2,050 ரூபாய் வரும். இதை, ஒரு ஆர்.டி. அக்கவுன்ட் ஆரம்பித்து அதில் இன்வெஸ்ட் செய்தால்... தனியாக சேர்ந்து கொண்டே வரும். நீங்கள் முதலீடு செய்த தொகை ஐந்து ஆண்டுகளில் அப்படியே திரும்பக் கிடைக்கும். தவிர, ஆர்.டி-யில் சேமித்த வட்டிப் பணம் ப்ளஸ் அதற்கான வட்டியும் கிடைக்கும்.

ஏதோ ஒரு காரணத்தால் உங்களால் ஓராண்டுக்கு மேல் இதைத் தொடர முடியவில்லை என்றால்... நீங்கள் கட்டிய தொகை, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் கிடைக்கும். அப்போதும் 2 சதவிகித தொகை கழிக்கப்பட்டு மீதித் தொகையே வழங்கப்படும்.

உங்கள் பணத்துக்கு 100 % பாதுகாப்பு

எம்.ஐ.எஸ். திட்டத்திலேயே 'மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்' என்ற ஒன்றும் உள்ளது. இதற்கு 9 சதவிகித வட்டி கிடைக்கும். மினிமம் 1,000 ரூபாயில் இருந்து 15 லட்ச ரூபாய் வரை இன்வெஸ்ட் செய்யலாம். இதில் சேர 60 வயது ஆகியிருக்க வேண்டும். வேலையிலிருந்து வி.ஆர்.எஸ். வாங்கியவர்கள் என்றால்... 55 வயது. 5 ஆண்டுகளுக்கான இந்த திட்டத்தில், முன்கூட்டியே பணம் எடுக்க முடியாது.

என்.எஸ்.சி. (தேசிய சேமிப்பு பத்திரம்): மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கானது என்றே இது அறியப்படுகிறது. காரணம்... வருமானவரி தள்ளுபடிக்காக அவர்கள்தான் இதை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். உதாரணத்துக்கு உங்கள் வருமானத்துக்கு நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் வரி கட்ட வேண்டுமென்றால், உடனடியாக அஞ்சல கத்தில் 10 ஆயிரம் ரூபாய்க்கு என்.எஸ்.சி. வாங்கி விடலாம். 5 மற்றும் 10 ஆண்டுகளுக்கான பத்திரம் இது. 5 ஆண்டுக்கு 8.4 சதவிகிதம் வட்டி கிடைக்கும். குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாக இதைத் திரும்பப் பெறமுடியாது. வங்கிக் கடனுக்கு அடமானமாக என்.எஸ்.சி. பயன் படும்.

நிறைவாக பேசிய வெங்கடராமன், ''மேலே சொன்ன பல்வேறு திட்டங்கள் தவிர, பணம் கிடைக்கும்போதெல்லாம் பேங்கில் போட்டு வருவது போலான சிறுசேமிப்பும் உண்டு. இதில் எப்போது வேண்டுமானாலும் பணம் போடலாம். ஏஜென்ட்டுகள் மூலமாக பணத்தை செலுத்து பவர்கள், பாஸ்புத்தகத்தில் முறைப்படி பதிவாகி இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். முடிந்தால் அவ்வப்போது அஞ்சலகத்துக்கு நேரடியாக வந்து கணக்கு சரிவர பராமரிக்கப் படுகிறதா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்வது நல்லது'' என்றவர்,

''புரியாத திட்டங்களில் எல்லாம் முதலீடு செய்துவிட்டு கடைசியில் கையைப் பிசைவதை விட, உங்கள் மூளையைக் குழப்பிக் கொள்ளாமல், ஐந்து ரூபாயில் ஆரம்பித்து பல லட்சங்கள் வரை எளிதாக சேமிக்க ஒரே வழி... இந்த சிறுசேமிப்புத் திட்டங்கள்தான்'' என்று நிதர்சனத்தைப் புரிய வைத்தார்!