ஸ்பெஷல் 1
Published:Updated:

நாட்டு பட்ஜெட்... வீட்டுக்கென்ன லாபம் ?

சி.சரவணன்

##~##

வந்தேவிட்டது... 2012-13-ம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்! வீட்டு பட்ஜெட்டை நேர்த்தியாகப் போட்டு, குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் பெண்கள், நாட்டு பட்ஜெட்டில் தங்களுக்கு என்ன லாபம் என்று தெரிந்து கொண்டால், வீட்டு பட்ஜெட்டை இன்னும் தெளிவாகப் போட முடியும்தானே!

பட்ஜெட்டின் முதல் முக்கியத் தகவல், 'தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது' என்பது. அதேநேரத்தில் பெண்களுக்கான தனிப்பிரிவு நீக்கப்பட்டு, அவர்களும் பொதுப்பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும், அவர்களுக்கும் லாபம் இல்லாமல் இல்லை. தற்போது பெண்களுக்கான அடிப்படை வருமான வரி விலக்கு ரூ. 1,90,000 என்று இருக்கிறது. இது 2 லட்ச ரூபாயாக உயர்வதால், பெண்கள் வரும் ஆண்டில் கூடுதலாக 1,030 ரூபாய் வரியை மிச்சப்படுத்த முடியும். இதற்கு முன் 5 - 8 லட்சம் வரையிலான வருமானத் துக்கு, 20% வருமான வரி விதிக்கப்பட்டது. இந்த வரம்பு... வரும் நிதி ஆண்டில் (2012 ஏப்ரல் - 2013 மார்ச்) 10 லட்சமாக உயர்த்தப்படுகிறது. அந்த வகை யில் 10 லட்ச ரூபாய் சம்பாதிக்கும் பெண்களுக்கு அதிகபட்சம் 21,030 ரூபாய் வரை வரிச் சலுகை கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சி கொள்ளலாம்.

அண்மைக் காலமாக பெண்கள் பங்குச் சந்தையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இவர்களைப் போன்ற சிறு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதுபோல், 'ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்க்ஸ் ஸ்கீம்’ என்கிற பங்குச் சந்தை முதலீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி, ரூபாய் 10 லட்சத்துக்குக் குறைவான ஆண்டு வரு மானம் இருப்பவர்கள், நேரடியாகப் பங்குகளில் ரூபாய் 50,000 முதலீடு செய்தால், 50% வரிச் சலுகை கிடைக்கும். மூன்றாண்டுகளுக்கு இந்தப் பணத்தை எடுக்க முடியாது. இதற்கான விரிவான விதி முறைகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.  

வங்கி சேமிப்பு கணக்குகளில் போடப்பட் டிருக்கும் பணத்துக்குக் கிடைக்கும் வட்டி வரு மானத்தில் ஆண்டுக்கு 10,000 ரூபாய் வரை வருமான வரி இல்லை என்பதும், தாய்மார்களை நிச்சயம் மகிழ்ச்சி கொள்ள வைக்கும். அப்பா, கணவர், பிள்ளைகள் என்று குடும்பத்தோடு பயனளிக்கும் செய்தி இது.

நாட்டு பட்ஜெட்... வீட்டுக்கென்ன லாபம் ?

நோய்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், மார்பகப் புற்று, கர்ப்பவாய் புற்று என்று பெண்கள் தொடர்பான நோய்கள்தான் நாட்டில் அதிகம். இதனால் அவர்கள் அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில், நோய் இருக்கிறதா என்று கண்டறிய செய்துகொள்ளும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு ரூபாய் 5,000 வரை வரிச்சலுகை பட்ஜெட் டில் அறிவிக்கப்பட்டிருப்பது, பெண்களுக்கு உதவிகரமாக இருக்கும்.  இதை தற்போது  நடைமுறையில் இருக்கும் வருமான வரிப்   பிரிவு 80 டி-ன் கீழ் மெடிக்ளைம் பிரீமிய கழிவு 15,000 ரூபாயுடன் சேர்த்து வரிச்சலுகை பெறலாம்.

பட்ஜெட் என்றாலே சாதகமும் பாதகமும் சேர்ந்ததுதானே..? அந்த வகையில் பெண்களை மிகவும் பாதிக்கும் அம்சம், நகை விற்பனை மீது விதிக்கப்பட்டிருக்கும் வரிகள். தங்க நகை மீது முதன் முதலாக 1% உற்பத்தி வரி விதிப்பு, தங்க இறக்குமதி மீதான வரி 2 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக உயர்வு, ஒருவர் ரூபாய் 2 லட்சத்துக்கு மேல் தங்க நகைகள் அல்லது தங்கக் கட்டிகளை ரொக்கம் கொடுத்து வாங்கும்போது, அந்தப் பணத்துக்கு டி.டி.எஸ். 1% வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயம், மேலும் தங்க நகைகளின் செய்கூலி மீது விதிக்கப்பட்டிருக்கும் சேவை வரி... இவை எல்லாம் சேர்ந்து ஒரு பவுன் தங்கத்தின் விலையை ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கக் கூடும் என்கிறார்கள், நகைக் கடை அதிபர்கள்.

பிளான் செய்யுங்கள்... பட்ஜெட்டுக்கு ஏற்ப!