ஸ்பெஷல் 1
Published:Updated:

கறுப்பு...சிவப்பு... யுத்தம் !

நாச்சியாள் கே.கார்த்திகேயன் படங்கள்: பொன்.காசிராஜன்,

##~##

''பெண் குழந்தை பிறந்திருக்காமே..?! கறுப்பா இருக்கா, இல்ல அவ அம்மா மாதிரி சிவப்பா இருக்கா..?!'’,

''நேத்து பொண்ணு பார்த்துட்டு வந்தீங்களே... பொண்ணு கறுப்பா, சிவப்பா?'’,

''ரோட்ல நடந்து வரும்போது ஒரு பொண்ணப் பார்த்தேன். என்ன கலரு தெரியுமா?’'

- இப்படி நிறம் குறித்த எண்ணங்களை இந்தச் சமூகம் 21-ம் நூற்றாண்டிலும் சுமந்து கொண்டுதான் இருக்கிறது.

'கறுப்பாக இருப்பது கொஞ்சம் அவமானம் தரும் விஷயம்தான்' என்கிற தவறான பொதுப் புரிதல், மெள்ள மெள்ள சமூகத்துக்குள் நுழைந்து, இன்று பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது. அதனால்தான் இன்று தெருவுக்கு இரண்டு, மூன்று அழகு நிலையங்கள் முளைத்துக் கொண்டு இருக்கின்றன.

கறுப்பாக இருப்பது தகுதிக் குறைவான விஷயமா? சிவப்பு நிறம் போற்றுதலுக்கு உரியதா? இந்தச் சிந் தனை சரியானதா? என்கிற கேள்விகளை கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள், இளைஞர்கள் என சாம்பிளாக சிலரிடம் கேட்டோம்.

''சிவப்பு நிறத்துக்கு ஸ்பெஷல் அட்டென்ஷன் கிடைக்குதுங்கறது உண்மைதான். இல்லைனு மறுத்தா அது வடிகட்டின பொய். ஆண்களும் கொஞ்சம் கலரா இருக்கற பெண்களைத்தான் பாக்கறாங்க'' என்று எடுத்ததுமே அழுத்தம் கொடுத்தார் ராது. இவர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் 'விஸ்காம்’ படிக்கும் மாணவி.

கறுப்பு...சிவப்பு... யுத்தம் !

''அந்த அட்டென்ஷன் தனக்கும் வேண்டும் என்பதால்தான் பெண்கள் ஃபேர்னெஸ் க்ரீம் யூஸ் பண்றாங்க, பியூட்டி பார்லர் போறாங்க. பெண்கள் மட்டுமில்ல... ஆண்களுக்கும் இப்போ மார்க்கெட்டில் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சிவப்பழகு க்ரீம்களை அறிமுகப்படுத்துறாங்க. அந்தளவுக்கு இந்த விஷயம் மக்கள்கிட்ட சென்ஸிட்டிவ்வா இருக்கு'' என்றார். இவரின் கருத்தை அவரின் தோழிகள் அனைவருமே ஆமோதித்தனர்.

ராது சொன்ன கருத்துக்கு ஆண்கள் கூறும் பதில் என்ன..? ''ஒரு பெண்ணின் நிறத்துக்கும் அவளுடைய அழகுக்கும் அணு அளவும் சம்பந்தம்இல்லை. அவளின் உடல் மொழியும் சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்ஸுமே ஒருவரை ஈர்ப்பதில் மிகப் பெரிய பங்காற்றுகின்றன'' என்று அடித்துச் சொன்னார், பிராட்காஸ்ட்டிங் டிசைன் இன்ஜினீயர் பணியில் இருக்கும் பாலசுந்தர்.

''பெண் பார்க்கும்போது, அந்த ஆணைவிட பெண் கொஞ்சம் கலரா இருந்தா நல்லதுங்கிற எண்ணம் எல்லாருக்கும் இருக்கும்தான். ஆனா, அந்த தோற்ற மயக்கம் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். அதுக்குப் பிறகு இல்லறத்துல அன்பும், அனுசரணையும் மட்டும்தான் பிரதானமா இருக்கும். ஒருத்தவங்களோட தனிப்பட்ட குணம், திறமைக்கு முன்ன நிறமெல்லாம் தோத்துப் போகும்'' என்கிறார் சென்னை, கோடம்பாக்கத்தை சேர்ந்த இல்லத்தரசி இந்திரா.

கறுப்பு...சிவப்பு... யுத்தம் !
கறுப்பு...சிவப்பு... யுத்தம் !

''கறுப்பா இருந்தா சாதிக்க முடியாது. சிவப்பா இருந்தாதான் எதிலும் முதன்மையான இடம் கிடைக்கும் என்கிற கருத்து தவறு. கஜோல், ராணி முகர்ஜி, நந்திதா தாஸ், ஷோபா, சிநேகா மாதிரியான மாநிற நடிகைகள் வெற்றி பெறலையா..? கல்பனா சாவ்லா, இந்திரா நூயி மாதிரியான சாதனையாளர்களும் மாநிறம் தானே? சாதனைக்கும், கலருக்கும் சம்பந்தமில்லை'' என்கிறார் நம் வாசகியும் கல்லூரிப் பேராசிரியருமான ஐஸ்வர்யா.

'சிவப்பு நிறம்தான் ஹீரோயின் ஆவதற்கான தகுதியா..? அந்த நிறத்துக்காகத்தான் அவர்களுக்கு சினிமாவில் அங்கீகாரம் கிடைக்கிறதா?’ என்று 'வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்த’ இயக்குநர் வெற்றிமாறனிடம் கேட்டோம்.

''சினிமா ஒரு மிகைப்படுத்தப்பட்ட, கவர்ச்சி உலகம்ங்கிறதால நிறமான பெண்களை இதில் பயன்படுத்துறாங்க... ரசிகர்களும் அதை எதிர்பார்க்கிறாங்க. ஆனா, தொடர்ந்து நிறத்துக்காக மட்டுமே இங்க எந்த நடிகையும் கொண்டாடப்படுறது இல்லை. நடிப்பு, டான்ஸ்னு எல்லா ஏரியாவுலயும் திறமை காட்டினாதான், அவங்களால நிலைக்க முடியும். இதுக்கு எத்தனையோ உதாரணங்கள் மக்களுக்கே தெரியும். தவிர, ரீலுக்கும் ரியலுக்கும் உள்ள வித்தியாசத்தையும் நம்ம மக்கள் அறிவாங்க'' என்று உண்மையைப் புரிய வைத்தார் வெற்றிமாறன்.

''சினிமா என்கிற ஊடகம், வியாபாரத்தை முதன்மையாக வைத்து நடப்பது. மாநிறமான தமிழ்ப் பெண்களில் பெரும்பாலானவர்கள் நடிக்க முன்வராத காரணத்தால்தான் வெளி மாநில சிவப்பு பெண்களை நடிக்க அழைத்து வருகிறோம். ஆனால், நிறத்துக்கும், தன்னம்பிக்கைக்கும் உழைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்கு மாநிறமான நானே உதாரணம்!'' என்றார் 'கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு’ இயக்குநர், நடிகர் சேரன்.

கறுப்பு...சிவப்பு... யுத்தம் !
கறுப்பு...சிவப்பு... யுத்தம் !
   
''வெள்ளைக்காரர்களின் ஆட்சிக்குப் பிறகுதான் இங்கே சிவப்பு நிறத்தின் மேல் ஈர்ப்பு வந்திருக்கக் கூடும். தற்போது சிவப்பாக இருந்தால்தான் அழகு என்கிற எண்ணம் வியாபார காரணங்களுக்காக வலிந்து திணிக்கப்படுகின்றன. அதை நிலை நிறுத்துவதற்காகத்தான் 'உள்ளூர் அழகி’கள், 'இந்திய அழகி'கள், 'உலக அழகி'கள் எல்லாம் உருவாக்கப்படுகின்றனர். இதற்குள் இருக்கும் அரசியல் புரியாமல், நாமும் ஃபேர்னஸ் க்ரீம்களை வாங்கி பூசிக்கொண்டிருக்கிறோம்.

சிவப்பு நிறத்துக்காக கர்வப்படவோ... கறுப்பு நிறத்துக்காக தாழ்வு மனப்பான்மையில் கண்ணீர்விடவோ தேவையில்லை. காரணம், நிறம் என்பது இயற்கையானதொரு விஷயம். வட மாநிலத்தவர் சிவப்பாக இருக்கிறார்கள் என்றால், அது அவர்கள்  மண், நீர் சார்ந்து வரும் விஷயம். அந்த நிறம் நமக்குக் கிடைக்க வேண்டும் என ஏன் நினைக்க வேண்டும்? கறுப்பு என்பது போராட்டத்தைச் சொல்லும் நிறம். அது நம்மிடம் இருப்பதற்காக நாம் பெருமைப்பட வேண்டும்!'' என்கிறார் பேராசிரியர் பர்வீன் சுல்தானா!

இனி வரும் சந்ததிக்காவது, நிறத்தில் எதுவும் இல்லை என்கிற நிதர்சனத்தைப் புரிய வைப்போம்!

மாறவே மாறாது!

கறுப்பு...சிவப்பு... யுத்தம் !

'ஃபேர்னெஸ் க்ரீம் பூசுவதால் கறுப்பு நிறம், சிவப்பாக மாறுமா?’ என்று சருமநோய் நிபுணர் செந்தமிழ்ச்செல்வியிடம் கேட்டோம்.

''கறுப்பு நிறத்துக்குக் காரணம்... மெலனின் என்கிற நிறமி அதிக அளவில் இருப்பதுதான். இது மரபு, சுற்றுச்சூழ்நிலை, உணவு போன்ற காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. மெலனின் நிறமியை எந்த கெமிக்கலும் கன்ட்ரோல் செய்யாது என்பதுதான் உண்மை. எனவே, பிறக்கும்போது இருந்த நிறத்தைத் தொடர்ந்து ஒரு க்ரீமை பயன்படுத்துவதால் மாற்ற முடியாது. மேலும் எந்த சரும நோய் மருத்துவரும் தொடர்ந்து ஒரு க்ரீமைப் பயன்படுத்த பரிந்துரைக்க மாட்டார்கள். தோலில் சில காரணங்களால் கறுப்புத் திட்டுக்கள் தோன்றினால், அதைக் குணப்படுத்தலாமே ஒழிய, கறுப்பாக இருக்கிற ஒருவரை சிவப்பாக மாற்றுவது இயலாத விஷயம்; இயற்கைக்கு முரணான விஷயம்!'' என்றார் செந்தமிழ்செல்வி.