ஸ்பெஷல் 1
Published:Updated:

உறவு...நல்ல வரவு !

வே.கிருஷ்ணவேணி ஓவியம்: ராஜ்குமார் ஸ்தபதி

##~##

''இன்றைய நாகரிக உலகின் குழந்தைகள், ஆண்கள் அனைவரையும் அங்கிளாகவும், பெண்கள் அனைவரையும் ஆன்ட்டியாகவுமே அறிகிறார் கள். சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா, தாத்தா, பாட்டி என்ற உறவுகள் எல்லாம் தெரியாம லேயே வளர்கிறார்கள். பணத் தையே பிரதானமாக நினைக்கும் அவர்களின் 21-ம் நூற்றாண்டுப் பெற்றோருக்குப் புரியவில்லை... உறவுகளை சேமிப்பதே அவர்களை நல்ல மனிதர்களாக வளர்க்கும் என்பது!''

- அக்கறையும், வேதனையும் கலந்திருந்தன மனநல மருத்துவர் கீதாஞ்சலியின் வார்த்தைகளில்.

''கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து, அனைவரும் அவ    ரவர்களின் வேர்களில் இருந்து பிரிந்து தீவு வாழ்க்கை வாழ்கிறார்கள். அன்பையும், அவசியத்தையும் தடுக்கிறது நாம் சேர்த்து வைத்திருக்கும் பணம். விளைவு, 'அவங்க இல்லாம நான் வாழ முடியாதா..? எனக்கு யாரும் தேவைஇல்லை’ என்கிற தப்பான நம்பிக்கையை வளர்க்கிறார்கள். இன்னொரு பக்கம், சுழற்றி அடிக்கும் வேலைகளுக்கு இடையே சொந்தங்களை பேண முடியாமல், கைவிடுகிறவர்களும் ஏராளம்.

உறவு...நல்ல வரவு !

'நான் இன்னிக்கு ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ்ல ஃபர்ஸ்ட் வந்தேன்’ என்று தாத்தாவிடம் சொல்ல வேண்டியதையும், 'இன்னிக்கு காலேஜ்ல ஒரு பையன் என்னை கேவலமா டீஸ் பண்ணிட்டான்’ என்று சித்தியிடம் சொல்ல வேண்டியதையும், 'எனக்குப் புரோமோஷன் கிடைச்சிருக்கு’ என்று அப்பாவிடம் சொல்ல வேண்டியதையும் என, தங்கள் வாழ்வின் அனைத்துப் பக்கங்களையும் ஸ்டேட்டஸ் அப்டேட்களாக சமூக வலைதளங்களில் பகிர்கிறார்கள் பலர். சுக, துக்கங்களை பகிர்ந்துகொள்ள பலருக்கும் உறவுகள் இல்லை என்பதே, அந்த வலைதளங்களின் வெற்றிக்குப் பின் மறைந்திருக்கும் வேதனையான உண்மை. எனவே, சொந்தங்களைப் பேணுங்கள், குழந்தைகளுக்கு அனைத்து உறவுகளையும் அறிமுகப்படுத்துங்கள்'' என்றார் கீதாஞ்சலி.

''அப்பா, அம்மா, தாத்தா, அவரின் உடன்பிறந்த தாத்தாக்கள், அம்மாச்சி, அந்த தாத்தா, அவருடன் பிறந்த 6 தாத்தாக்கள், மாமன்கள் என்று உறவுமுறைகள் சூழ வளர்ந்தவன் நான். ஆனால், இன்று என் குழந்தைகளுக்கு இவ்வளவு உறவுகள் கொடுத்து வைக்கவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டாக வேண்டும்'' என்று ஆரம்பித்த 'மாயாண்டி குடும்பத்தார்' இயக்குநர் ராசு மதுரவன்,

உறவு...நல்ல வரவு !

''பெற்றோர் வேலைக்குச் செல்ல, பிள்ளைகள் 'கிரெஷ்’சுக்குச் செல்கின்றனர். இதில் உறவுகளின் முக்கியத்துவத்தை உணரும் வாய்ப்பு எப்படிக் கிடைக்கும் அவர்களுக்கு..? 'இந்த வருஷம் சித்திரை திருவிழாவுக்காவது வர்றானானு தெரியலையே..?’ என்று ஊரில் உங்களுக்காகக் காத்திருக்கும் உறவுகளின் தவிப்பை உணர்ந்தவர்களுக்கு அன்பு என்பது கடமை அல்ல என்பது புரியும். எனவே, பொருளாதாரச் சூழ்நிலை யால் அங்கங்கு சிதறிப் பிரிந்து இருந்தாலும், ஆறு மாதம் அல்லது வருடத்துக்கு ஒருமுறை என உறவுகளுடன் ஒன்று கூடுங்கள். வாழலாம் வாழையடி வாழையாக!'' என்றார் ராசு மதுரவன்.

வருத்தம் பொங்க பேசும் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, ''என்றைக்கு இருவருக்கு ஒரு குழந்தை என ஆனதோ, அன்றைக்கு ஆரம்பித்தது உறவுகளுக்கு இடையிலான பிரிவு. 'ஒரே ஒரு பிள்ளை. இவனைப் பொத்தி வளர்த்தால் போதும். வேறு யாரும் தேவையில்லை’ என நினைத்து தனியே வாழ ஆரம்பித்து விடுகிறார்கள். உறவுகள் மீதான பிரிவினையை, பகைமையை, 'பெரியப்பா நம்ம சொத்தை பிடுங்கிக்கிட்டார்’, 'அத்தை, அப்பாவை அவமானப்படுத்திட்டார்’ என்று குழந்தைகள் மீதும் திணித்துவிடுகிறார்கள். விளைவு... உறவுகள் இன்றி வளர்கின்றன குழந்தைகள்.

இன்று அதிகரித்து வரும் குழந்தைகள் தற்கொலைக்குக் காரணம்... அவர்கள் மனம் விட்டுப் பேச யாரும் இல்லை என்பதுதான். எனவே, உறவுகளைச் சேமியுங்கள். வாழ்க்கையில் உற்சாகமான தருணங்களை உறவுகளோடும், நண்பர்களோடும் கொண்டாடுங்கள். வாழ்க்கை வசந்தமாகும்!'' என்றார் புன்னகையுடன்.