ஸ்பெஷல் 1
Published:Updated:

நாளையில் வாழ.... இன்றை தொலைக்காதீர்கள் !

வே.கிருஷ்ணவேணி படங்கள்: ச.இரா.ஸ்ரீதர், பா.காளிமுத்து

##~##

''வாழ்க்கைக்காகத்தான் பணம். ஆனால், அதைச் சேர்க்கும் ஓட்டத்தில், வாழ்க்கையைத் தொலைப்பவர்கள் பலர். கடிவாளம் கட்டிக்கொண்டு உழைத்து... வீடு, வசதி, பேங்கில் பணம் என்று எதிர்பார்ப்பை எல்லாம் பூரணமாக்கி அவர்கள் நிமிரும்போது, வயதும் வாழ்க்கையின் சின்ன, பெரிய சந்தோஷங்களும் அவர்களை விட்டுக் கடந்திருக்கும்!''

- அதிரும் உண்மையுடன் ஆரம் பித்தார் கரூரைச் சேர்ந்த மனநல மருத்துவர் செந்தில்வேலன்.

''தனி மனிதனின் சுக, துக்கங்கள் மட்டுமே முக்கியமாகக் கருதப்படும் 'இண்டிவிஜூவலைஸ்டு சொஸைட்டி’ எனப்படும் மேல்நாட்டு கலாசாரத்தில், சேமிப்புக்கு முக்கியத்துவம் இல்லை. ஆனால், சேமிப்பு என்பது நம் நாட்டின் கலாசாரத்தில் கலந்த ஒன்று. அதுவே... பணத்தாசை என்று மாறும்போதுதான் பிரச்னை ஆரம்பிக்கிறது.

பணம் சம்பாதிக்கும், பொருள் சேர்க்கும் வெறி வளர்ந்துகொண்டே போக, இல்லற சந்தோஷங்கள், உடல் நலம், குழந்தைகள் மீதான கவனம், பெரியவர்கள் மீதான அக்கறை என வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உதறிவிட்டு, அதை நோக்கியே இயந்திரத்தனமாக இயங்குகிறார்கள்.

நாளையில் வாழ.... இன்றை தொலைக்காதீர்கள் !

1990-ல் வந்த புதிய பொருளாதாரக் கொள்கைதான் இந்த மாதிரியான பொருள் சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு முன்பு வரை 500 ரூபாய் சம்பளத்திலும் அழகாகக் குடும்பம் நடத்த முடிந்தது. இன்றோ, 50 ஆயிரம் சம்பாதித்தாலும் நிறைவில்லை. வீடு வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும், குழந்தைகளுக்கு நகை, பணம் சேர்க்க வேண்டும் என்று ஆடம்பரமான இலக்குகள் மனதில் குடிகொண்டு, ஆட்டிப் படைக்கின்றன. அதனை அடையும் முயற்சியில் வேகம் எடுத்து, 'நாளை’யில் வாழ்வதற்காக 'இன்றை’ தொலைக்கிறார்கள் பலரும்.

என்னிடம் வந்த அந்த முதிய தம்பதியைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ''சின்ன வயசுலயே எனக்கு கவர்ன்மென்ட் வேலை கிடைச்சிடுச்சு. வீடு கட்டணும், கார் வாங்கணும், குழந்தைகளுக்கு சேர்த்து வைக்கணும்னு நிறைய ஆசைகள். சிக்கனமா புழங்கி, பணத்தை சேமிச்சோம். குழந்தைகளோட சின்ன சின்ன ஆசைகளைக் கூட நிறைவேத்தாம... கால் வலி, கழுத்து வலினு எங்களோட உடல் தொந்தரவுகளையும் சரி பண்ணிக்காம, 'எல்லாத்துக்கும் சேர்த்து ரிட்டயர் மென்ட் லைஃப்ல என்ஜாய் பண்ணிக்கலாம்’னு நாங்களே சமாதானம் சொல்லிக்கிட்டோம். திட்டம் போட்ட மாதிரியே ரிட்டயர்ட் ஆனப்போ சொந்த வீடு, கார், சொத்துகள்னு சாம்பாதிச்சிருந்தேன். ஆனா, சந்தோஷம்..? 'ஆரம்பத்துலயே வந்தா சரி பண்ணியிருக்கலாம்... இப்போ எலும்பெல்லாம் தேய்மானம் ஆயிடுச்சு’னு டாக்டர் சொல்லிட்டார். இப்போ வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடக்குறோம். பிள்ளைகளுக்கு நாங்க சேர்த்துக் கொடுத்திருக்கற சொத்தைப் பத்தின சந்தோஷத்தைவிட, குழந்தைப் பருவத்துல சைக்கிள், ஃபேமிலி டூர்னு அவங்களோட சின்னச் சின்ன தேவைகளைக்கூட நிறைவேற்றாம விட்ட கோபம்தான் எங்கமேல அதிகமா இருக்கு'’ என்று கண் கலங்கினார் அந்த முதியவர்.

நாளையில் வாழ.... இன்றை தொலைக்காதீர்கள் !

அதனால், பணத்துக்கு அடிமையாகாதீர்கள். உங்கள் வாழ்க்கையை எதிர்காலத்துக்குச் சேமிக் காமல்... நிகழ்காலத்தில் வாழுங்கள்!''

- நெற்றியடியாக முடித்தார் செந்தில்வேலன்.  

நாளையில் வாழ.... இன்றை தொலைக்காதீர்கள் !

டாக்டர் சொல்லும் உண்மையை நன்றாகவே உணர்ந்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த குடும்பத் தலைவர் ரமேஷ் ராஜா. ''நான் சேல்ஸ் ரெப்பா இருக்கேன். இதே வேலையை டிரான்ஸ்ஃபர்ல போய் வெளியூர்ல பார்த்தா, இதைவிட அதிகமா சம்பளம் கிடைக்கும். ஆனா சந்தோஷம்..? அந்த சில ஆயிரம் ரூபாய்களைவிட, என் மனைவி, குழந்தைங்களோட சேர்ந்து இருக்கிற நிம்மதி தான் எனக்கு முக்கியம்னு முடிவெடுத் துட்டேன். சம்பாத்தியத்துக்குள்ள அடங்குற, அடிப்படைத் தேவைகளையும் சந்தோஷங் களையும் தொந்தரவு பண்ணாத சேமிப்பை நாங்களும் செய்துகிட்டுதான் இருக்கோம்'' என்றார் ரமேஷ் ராஜா அழகாக.

சென்னை, பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் குடும்பத்தலைவி அனுராதா. ''அவர் எப்பப் பார்த்தாலும் பிஸினஸ், ஆபீஸ், டென்ஷன்னு இருப்பார். குழந்தை 'அப்பா’னு ஓடினா கண்டுக்காம அக்கவுன்ட்ஸ் நோட் எடுத்துட்டு உட்கார்ந்திடுவார். உறவினர் விசேஷங்களுக்கு நானும் குழந்தையும்தான் போய் நிப்போம். கேட்டா, 'உங்களுக்காகத்தானே நான் இப்படி ஓயாம உழைக்கிறேன்’னு விளக்கம் சொல்வார். மனவேதனையில எங்களைத் தவிக்க விட்டுட்டு, நாளைக்கு அவர் தங்க முலாம் பூசின சிலையவே கொடுத்தாலும், அது எங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்துடுமா?ங்கறத மெள்ள புரிய வெச்சேன். இப்போ அவர் நிறைய மாறிட்டார். 'வருஷத்துல ஒரு நாள் போடப்போற தங்க நகைக்காக, வருஷம் முழுக்க வயித்தைக் கட்டி, வாயைக் கட்டி சேமிக்கிற பெண்களைப் பார்த்தா பரிதாபமா இருக்கு!’னு அவரே சொல்ற அளவுக்கு, அவருக்கு பணத்தையும் சந்தோஷத்தையும் பிரிச்சுப் பார்க்கத் தெரிஞ்சுடுச்சு!'' என்றார் புன்னகையுடன்!

ஆரோக்கியமும் சந்தோஷமும் நிம்மதியும்தான் பெரிய சேமிப்பு!