பிரீமியம் ஸ்டோரி

எஸ்.ராமகிருஷ்ணன்

முகம் தெரியாத எத்தனையோ வாசகர்களை சந்தோஷப்படுத்தும் ஒரு எழுத்தாளன், தன் வீட்டில் எழுத ஆரம்பிக்கும்போது... அவன் குழந்தையோ, மனைவியோ எதையாவது பேச வந்தால் அதை சகித்துக் கொள்ள முடியாமல் கோபப்படுகிறான். இதுதான் எழுத்தாளன் சுபாவம். இதற்கு நானும் விதிவிலக்கில்லை. எழுத்தாளனின் மனைவியாக இருப்பது ஒரே நேரத்தில் தேவதையாகவும், அடிமைப் பெண்ணாகவும் இருக்கக் கூடிய இரட்டை நிலை. ஒரு வகையில் அது சாபம், இன்னொரு வகையில் அது தனித்துவமான சந்தோஷம்!''

என் மனைவி !

- வார்த்தைகளில் அன்பு சமைத்து விருந்து பரிமாறுகிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

##~##

''என் மனைவி, சந்திரபிரபா. என்னையும் எழுத்தையும் நேசிக்கிறவள். கட்டடக்கலை பயின்றவள். ஐந்து ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவள், என் தங்கையோடு படித்தவள். அவளுடைய அண்ணன் என்னுடைய கல்லூரித் தோழன். சொந்த ஊர் ராஜபாளையம் அருகில் உள்ள சம்சிகாபுரம். அவளுடைய அப்பா வங்கியில் வேலை பார்த்தார். அதனால் விருதுநகரில் குடியிருந்தார்கள்.

எங்கள் காதலுக்குக் காரணமாக இருந்தது, புத்தகங்கள்தான். காதலித்த நாட்களில் நிறைய பேசினோம். சேர்ந்து பய ணம் செய்தோம். பரஸ்பரம் ஒருவரை மற்றவர் தெளிவாகப் புரிந்து கொண்டோம். ரசனைதான் எங்கள் காதலின் அடிப்படையாக இருந்தது. இரண்டு வீட்டிலும் எங்கள் அன்பை பூரண மனதுடன் ஆசீர்வதித்தார்கள்.

காதலின் தீவிரம் நிறைந்த அந்த நாட்களில், இந்த உலகில் நாங்கள் இருவர் மட்டுமே இருப்பதுபோல நடந்து கொண்டோம். அவளுடைய வீடு இருந்த தெருவில் அவள் மட்டுமே குடியிருக்கிறாள் என்றுதான் அந்த நாட்களில் நம்பினேன். முடிவற்ற, இலக்கில்லாத எனது கனவுகளை ஒருமுகப்படுத்தியது அந்தக் காதல்தான்.

என் மனைவி !

எந்த வேலைக்கும் போகக்கூடாது, முழுநேர எழுத்தாளனாக மட்டுமே வாழ வேண்டும் என்ற பிடிவாதம் காரணமாக, நான் வெறுமனே அலைந்த நாட்களில் எனது தேவைக்கான பணத்தை சம்பாதித்து தந்தவள் அவள். எனக்காகவே வேலைக்குச் சென்றாள். காதலின் பெயரால் அவள் தந்த பணத்தைக் கொண்டு, வட இந்தியாவெங்கும் சுற்றியலைந்தேன். அந்த நாட்களில் எழுத்தாளன் ஆவது என்பதைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருந்ததைவிட, பல மடங்கு அதிக நம்பிக்கையை கொண்டிருந் தாள். உண்மையில் அவளுடைய ஆசைகளை, கனவுகளை கொஞ்சம் கொஞ்சமாக நான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன் என்றுதான் தோன்றுகிறது.

'உப பாண்டவம்’ நாவல் எழுதிய நாட்களில், இரண்டு ஆண்டுகள் நான் எந்த வேலையும் செய்யவில்லை. ஒரு பைசா சம்பாத்தியம் கிடையாது. ஒன்றரை வயது பிள்ளையைக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, மனைவி அலுவலகம் போய் விடுவாள். நாள் முழுவதும் படித்துக் கொண்டிருப்பேன். எழுதுவேன். குழந்தை அழுதால் அதனைக் கவனிப்பேன். இவ்வளவு நெருக்கடியிலும் ஒரு நாள்கூட, 'நீ ஏன் வேலைக்கு போய் சம்பாதிக்காமல் இப்படி படிப்பதும் எழுதுவதுமாக இருக்கிறாய்..?’ என்று என்னைக் குற்றம் சொன்னதேயில்லை.

அந்த சுதந்திரமும் அக்கறையும் இல்லாமல் போயிருந்தால்... நான் எழுத்தாளன் ஆகியிருக்கவே முடியாது என்பதுதான் உண்மை.

என் மனைவி !

அதை விடவும், நான் ஒரு ஊர்சுற்றி. நினைத்த நேரம் நினைத்த பஸ்ஸில் ஏறிப் போய்விடுவேன். வீட்டில் இருந்து காய்கறி வாங்க பையோடு சைக்கிளில் செல்வேன். அப்படியே மனது மாறி, பஸ் பிடித்து பயணம் செய்து ஹம்பியோ, திருவனந்தபுரமோ, கங்கைகொண்ட சோழபுரமோ சென்று விடுவேன். இன்று இருப்பது போல பதினைந்து வருடங்களுக்கு முன் டெலிபோன், செல்போன் வசதிகள் கிடையாது. அதனால் எங்கிருக்கிறேன் என்ற தகவலைக்கூட சுலபமாக தெரிவிக்க முடியாது. அந்த நாட்களில் எல்லாம் நான் எங்கே போனேன் என்றுகூடத் தெரியாமல் என் மனைவி காத்திருந்தது எவ்வளவு வலிமிக்கது என்று இன்று உணர்கிறேன்; அந்த வேதனையை அப்போது அறிந்து கொள்ளத் தவறியதற்கு வருந்துகிறேன்.

திடீரென ஒரு இரவில் வீடு வந்து சேர்வேன். 'இத்தனை நாள் எங்கே சென்றாய், ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்..?’ என்று அவள் புகார் சொன்னதேஇல்லை. மாறாக, அத்தனை நாட்களிலும் நான் சரியாக சாப்பிட்டேனா, நன்றாக தூங்கினேனா என்று ஆதங்கப்படுவாள். அடுத்த முறை அவளே பணம் தந்து ஊர்சுற்றி வர அனுமதிப்பாள். இப்படி ஏற்றுக் கொள்வதற்கு விசாலமான மனமும் தீராத அன்பும் வேண்டும். அந்த மனதிலும் அன்பிலும் சந்திரபிரபா அபூர்வமான நிறைகுடம்.

எங்களுக்குள்ளும் சண்டைகள் வருவதுண்டு. அது பிள்ளைகளை நான் கண்டிப்பதில்லை என்பதில் மட்டுமே துவங்கும், முடியும். எங்களுக்கு ஹரி, ஆகாஷ் என்று இரண்டு பையன்கள். அவர்களின் படிப்பு மீது எனக்கு நம்பிக்கைஇருக்கிறது. நாங்கள் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ள நல்ல சூழல் அவர்களைப் படிக்க வைத்து விடும் என்று நம்புவேன். ஆனால், 'அப்படி விட்டுவிடக் கூடாது. அவர்களின் படிப்பிலும் தனித்திறனிலும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்பாள் என் மனைவி. அவளே பாடங்களைக் கற்றுத் தருவாள். அதுதான் சரியென்று என் மனதும் உணர்ந்தாலும், பிள்ளைகளின் விளையாட்டு மனதும், ஏக்கமான கண்களும் அவர்கள் வேண்டும் அனுமதியை என்னிடமிருந்து எளிமையாக அவர்களுக்குப் பெற்றுத் தந்துவிடும். அப்போது எங்களுக்குள் உருவாகும் சண்டைகள் நீர்க்குமிழ் போல சில நிமிடங்களில் உடைந்து காணாமல் போய்விடும்.

மகாபாரதத்தில் உள்ள கௌரவர்கள் நூறு பேரின் பெயரும் எனக்கு நினைவில் இருக்கிறது. தஸ்தாயெவ்ஸ்கி நாவலில் எத்தனை கதாபாத்திரம் என்று நீங்கள் கேட்டால், துல்லியமாக சொல்ல முடியும். ஆனால், எனது வங்கிக் கணக்கு எண்ணோ, நண்பர்களின் செல்போன் எண்களோ எதுவும் நினைவில் தங்குவதேயில்லை. ஒவ்வொரு முறையும் 'கஜினி’ சூர்யா போல எண்களை அட்டையில் எழுதி வைத்து நினைவு கொள்கிறேன். அதனால் வீட்டு வேலைகள், பிள்ளைகள், படிப்பு, வங்கி, குடும்ப விழாக்கள் என அத்தனையையும் என் மனைவியே கவனித்துக் கொள்கிறாள். என் பர்ஸில் பணம் வைப்பது முதல், பயணச்சீட்டை சரிபார்ப்பது வரை அத்தனையும் அவள் துணையில்லாமல் நடப்பதில்லை.

உறவுகளையும் நண்பர்களையும் பேணுவதில் நான் அதிகம் கவனமில்லாதவன். என் நண்பர்கள், உறவினர்களின் பிறந்த நாட்களை, திருமண நாட்களை எனக்கு நினைவுபடுத்தி வாழ்த்தச் சொல்வதும் அவளே. அடிக்கடி நண்பர்களை குடும்பத்தோடு அழைத்து விருந்து தருகிறாள். அதை விடவும் ஒவ்வொரு வார ஞாயிற்றுக் கிழமையும் என்னைத் தேடி முன்னறிவிப்பின்றி வந்து சேரும் வாசகர்கள், உதவி இயக்குநர்கள் என சகலரையும் வரவேற்று உபசரிக்கிறாள். 'விடுமுறை நாள் கூட எங்களுக்கானதில்லையா...’ என்று கோபிக்காமல், உலக விவகாரங்கள் பேசி விவாதிக்க எங்களை முகம் கோணாமல் அனுமதிப்பது எளிதான ஒன்றில்லை. அவள் அதை பெருமனதுடன் செய்கிறாள்.

எப்போதுமே எழுத்தாளன் உலகின் துயரங்களுக்காக தன்னை வருத்திக் கொள்வதுடன், தனது உடனிருப்பவர்களை யும் வருத்தப்பட செய்பவனாகவே இருக்கிறான். அதுதான் உண்மை. ஆகவே அவனை மற்றவர்கள் புரிந்து கொள்வது எளிதான காரியமில்லை. ஒன்று, அவனை விலக்கி வைத்து விடுவார்கள். அல்லது, அவனை வெறுப்பார்கள். இந்த இரண்டுமே இல்லாமல் 'எழுதுவது மட்டுமே உன் வேலை. மற்ற அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று எப்போதும் துணை நிற்கும் பெண் எனக்கு கிடைத்தது அரிய பாக்கியம்.

எங்கள் காதலின் வயது இருபது. திருமணம், பிள்ளைகள் என்று கடந்து வந்தபோதும் மனதில் ஆதி காதலின் சுடர் அணையாமல் காப்பாற்றி வருகிறோம். அந்தக் காதல்தான் எங்களை இன்னும் வழி நடத்துவதாக நம்புகிறேன்!''

படங்கள் : என். விவேக்
சந்திப்பு: நா.கதிர்வேலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு