Published:Updated:

செல்போன் டவர் உஷார்....

சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல... நீங்களும்தான்!

பிரீமியம் ஸ்டோரி

சொந்தங்களே...

உயிர்களை உரசும் தொடர்
மேனகா காந்தி

இலையுதிர் காலத்தில் மரங்களில் இருந்து இலைகள் விழுவதை ஒரு முன்னெச்சரிக்கையாக வைத்துக் கொண்டு, அதையடுத்து வரவிருக்கும் குளிர் காலத்துக்கு தேவையான உணவுகளை சேமித்து வைத்துக் கொள்வார்கள் அப்பகுதி மக்கள்.

மனிதர்கள் சரி... விலங்குகள்?

செல்போன் டவர் உஷார்....
##~##

அவையெல்லாம் நம்மைவிட புத்திசாலித்தனமானவை என்பதுதான் ஆச்சர்யமான பதில்! உதாரணமாக... மிருகங்களும், பிராணிகளும், பூச்சிகளும் குளிர்காலத்தை எதிர்கொள்ள இடப்பெயர்ச்சி செய்கின்றன. இடப்பெயர்ச்சி என்றால், 'இங்கே இருந்து அங்கே...’ என்ற கதையல்ல. கடல் கடந்து, கண்டம் கடந்து செல்கின்றன; யுகம் யுகமாக தங்கள் மூதாதையர்கள் எந்த இடத்துக்குப் போனார்களோ, அதே இடத்துக்கு இவை ஆண்டுதோறும் செல்கின்றன.

வேடந்தாங்கல், கூடங்குளம் என்று தமிழகத்தில் இருக்கும் நீர்நிலைகளுக்கு ஆண்டுதோறும் 'விசிட்’ செய்யும் வெளிநாட்டுப் பறவைகள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களே! அவையெல்லாம் எதை வைத்து பல ஆயிரம் கிலோ மீட்டர் கடல் கடந்து வந்து தங்கள் இலக்கை சரியாக அடைகின்றன? மனிதனுக்கு மாபெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தக்கூடிய கேள்வி இது. வானத்தில் இருக்கும் சூரியனின் நிலை, நட்சத்திரங்களின் நிலை, கடலில் விழுகின்ற தங்களின் நிழல்... இவை எல்லாவற்றையும் ஆதாரமாக வைத்தே இந்த அதிசயத்தை அவை நிகழ்த்துவதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

ஆனால், 'இவை மட்டும் காரணமல்ல... பூமியின் காந்த அலைகளையும் பறவைகள் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்கின்றன’ என்பது இப்போது கண்டறியப்பட்டிருக்கிறது!

எப்படி இது சாத்தியம்?!

அவற்றின் ஐம்புலன்கள்தான் இந்த நுணுக்கங்களை எல்லாம் அவற்றுக்குச் சாத்தியப்படுத்துகின்றன. சொல்லப் போனால், மனிதர்களைவிட விலங்குகள்தான் தங்களின் புலன்களை அதிகமாக, அற்புதமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக, திக்கு திசை தெரியாத கடலில் பயணிக்கும்போது எது வடக்கு, எது மேற்கு என்பதை கண்டறிய உதவும் 'காம்பஸ்’ கருவி, பூமியின் காந்த மண்டலத்தை ஆதரமாக வைத்தே இயங்குகிறது என்பது நாம் அறிந்ததே.

கடல் வாழும் ஆமைகள், திமிங்கிலங்கள், டால்பின்கள், தரையிலும் தண்ணீரிலும் வாழும் தவளைகள், மலர்களில் வசிக்கும் பட்டாம்பூச்சிகள், தேனீக்கள், ஆகாயத்தில் பறக்கும் பறவைகள், இருட்டில் படபடக்கும் வெளவால்கள், பூமிக்கு அடியில் வாழும் எலிகள்... ஏன், கொசு மற்றும் கண்ணுக்கே தெரியாத அளவுக்கு சிறியதாக இருக்கும் பாக்டீரியாக்கள் என்று பல உயிரினங்களின் உடம்பிலும் காந்த மண்டலத்தை ஆதாரமாக வைத்து திசைகளைக் கண்டறிய உதவும் 'காம்பஸ்’ மாதிரியான அவயம் இருப்பதை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

செல்போன் டவர் உஷார்....

'உயிரினங்களின் உடம்பில் காம்ப்ஸா..?’ என்று ஆச்சர்யப்படாதீர்கள். ஆம்... இந்த உயிரினங் களின் நரம்பு மண் டலத்தில் காந்த துகள்கள் கலந்திருக்கின்றன.

எண்பது ஆண்டுகள் வாழக்கூடிய 'ஆலிவ் ரிட்லி’ ஆமைகள், ஒரிஸ்ஸா மாநில கடற்கரையில் பிறந்தாலும், பசிஃபிக் சமுத்திரத்தின் கரை வரை நீந்திச் செல்லும். சரியாக முப்பது ஆண்டுகள் கழித்து, தான் பிறந்த அதே கடற்கரைக்கு வந்து முட்டை யிடும். இந்த ஆமைகளை ஒரு பெரிய ஏரியில் விட்டு, அந்த ஏரியில் சில உபகரணங்களைப் பயன்படுத்தி செயற்கையாக காந்த அலைகளை உருவாக்கினார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதனால் குழம்பிப் போன ஆமைகள், செயற்கையான காந்த அலை ஏற்படுத்திய அதிர்வைப் பின்பற்றி தங்களின் பயணத்தை மேற்கொண்டன. இதை வைத்தே, காந்த அலைகளை உணரும் சக்தி பிராணிகளுக்கும் உண்டு என்பதை கண்டறிந்தனர்.  

இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகம், 1983-ம் ஆண்டு வெளியிட்ட ஆராய்ச்சி அறிக்கை கவனிக்கத் தக்கது. அது -

'இடப்பெயற்சி செய்யும் பறவைகளைப் போலவே, மனிதர்களின் உடம்பிலும்... குறிப்பாக, மூக்கு எலும்பு களின் இடுக்கில் காந்த சக்தி இருக்கிறது. ஆனால், பறவைகள் அளவுக்கு வீரியமிக்கதாக இல்லை.'

இப்போதெல்லாம் மின்சாரக் கம்பிகள், கம்ப்யூட்டர் சாதனங்கள், செல்போன்கள் போன்றவற்றிலிருந்து வெளிப்படும் கதிரலைகளை விலங்கின் உடலில் இருக்கும் காந்த சக்தி உள்வாங்கிக் கொள்கிறது. இந்தச் செய்தியோடு இன்னொரு செய்தியையும் இணைத்துப் பார்த்தால்... நாம் எதிர் நோக்கி வரும் ஆபத்து புரியும்.

செல்போன் கோபுரங்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் சிட்டுக் குருவிகள் காணாமல் போய்க் கொண்டிருப்பதை கவலையோடு நோக்க ஆரம்பித்துள்ளனர் பறவை ஆர்வலர்கள்.

குருவிகளுக்காக வேதனைப்படாவிட்டாலும், அதே காந்த சக்தியைத் தானும் பெற்றுள்ள மனிதன், தன்னை எப்படி இந்த கதிரலைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளப் போகிறான் என்ற கேள்விக்காவது விடை காண முயலட்டும்!

- சந்திப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு