Published:Updated:

குழந்தைகளுக்காக ஒரு போலீஸ்

குழந்தைகளுக்காக ஒரு போலீஸ்

பிரீமியம் ஸ்டோரி

 வே. கிருஷ்ணவேணி

பெற்றோரின் அக்கறையும், ஆசிரியரின் கண்காணிப்பும் ஒவ்வொரு குழந்தைக்கும் மிக முக்கியம். ஆனால், அது இல்லாமல் போவதால், ஒரு கட்டத்தில் வீட்டையும் பள்ளியையும் விட்டே ஓடிவிடுகின்றனர் குழந்தைகள். அப்படிப்பட்ட குழந்தைகளை கண்காணித்து, கரை சேர்ப்பதற்காகவே 'குழந்தைகள் நல பெண் போலீஸ்’ என்ற பதவியை உருவாக்கியுள்ளது தமிழக அரசு.

குழந்தைகளுக்காக ஒரு போலீஸ்
##~##

சென்னை புறநகர், நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் முதல் நபராக... அக்கறையுடன் பணியை ஆரம்பத்திருக்கிறார் பெண் போலீஸ் மரிய ஜானி விக்டோரியா. சீருடை தவிர்த்து, சேலையில் இருந்தவர், ''போலீஸ்னாலே எல்லாருக்கும் பயம் கலந்த ஒரு பிம்பம் ஞாபகத்துக்கு வர்றது, துரதிர்ஷ்டமான விஷயம். அதனாலதான் குழந்தைகள் மிரண்டுடாம இருக்கவும், மனசு விட்டுப் பேசவும் யூனிஃபார்மை தவிர்க்கச் சொல்லியிருக்காங்க'' என்றவர்,

''படிப்பு, பரீட்சை, ஆசிரியர்கள்னாலே சிலர்கிட்ட இருக்கற பயம், ஒரு கட்டத்துல வெறுப்பாகி, 'ஸ்கூலை விட்டு நின்னுடணும், இல்லைனா ஊரை விட்டே ஓடிடணும்’னு யோசிக்க வைக்குது. அப்படி திசை மாறிப் போற குழந்தைகளை அழைச்சுட்டு வந்து, ஆலோசனைகள் வழங்கறோம்.

குழந்தைகளுக்காக ஒரு போலீஸ்

சமீபத்துல... இந்த ஏரியாவைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கற அபினாஷ் காணாம போயிட்டதா, அவனோட அப்பா புகார் கொடுத்தார். ஒரு வாரமா ஸ்கூலுக்கே போகாம... ஃப்ரெண்ட்ஸ் வீட்டு கார் பார்க்கிங், தோட்டம்னு ஒளிஞ்சுட்டு இருந்தவனை பிடிச்சு, 'என்ன பிரச்னை?’னு கேட்டோம். 'எனக்கு அம்மா இல்ல. அப்பா, அவரோட வேலையைத்தான் பார்த்துட்டே இருப்பாரு. என்னைக் கவனிச்சுக்க ஆள் இல்ல. அதனால ஹோம் வொர்க் செய்யாம தெருப் பசங்களோட விளையாடுவேன். ஸ்கூல்ல 'ஏன் ஹோம் வொர்க் செய்யல?’னு பனிஷ்மென்ட் கொடுப்பாங்க. அதனால படிக்கவே இஷ்டமில்லாமப் போயிடுச்சு'னு சொன்னான். அவன், அவங்க அப்பா, ஸ்கூல் டீச்சர்ஸ், ஃப்ரெண்ட்ஸுனு எல்லாருக்குமே கவுன்சிலிங் கொடுத்து அனுப்பின பிறகு, இப்ப ஒழுங்கா ஸ்கூலுக்குப் போறான்'' என்ற மரிய ஜானியின் முகத்தில் சந்தோஷம்!

நந்தம்பாக்கம், இன்ஸ்பெக்டர் அஸ்லாம் பாஷா, ''இதுமாதிரி நிறைய கேஸ்கள் வந்துகிட்டே இருக்கு. எங்க கவுன்சிலிங்கோட பாஸிட்டிவ் ரிசல்ட்டைப் பார்த்துட்டு சில பள்ளிகள், 'எங்களோட எல்லா மாணவர்களுக்கும் கவுன்சிலிங் செஷன் நடத்திக் கொடுங்களேன்’னு கேட்கறாங்க. மாற்றுவோம் மாணவர்களோட மனசை!'' என்று நம்பிக்கையுடன் முடித்தார்

படங்கள் : ச.இரா. ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு