பிரீமியம் ஸ்டோரி

- இது புதிதாக கிளம்பி வந்திருக்கும் 4ஜி, 5ஜி ஊழல் கணக்கல்ல... குடும்பத்தில் அப்பா-அம்மா இருவரிடையே ஏற்படும் மோதல் காரணமாக மட்டுமே கடந்த இருபது ஆண்டுகளில் (1985-2005) இந்தியாவில் இறந்து போன பெண் குழந்தைகளின் எண்ணிக்கை!

18,000
##~##

நடுராத்திரி. கணவன்- மனைவி இடையே கடும் வாக்குவாதம். ''நீங்க பண்றது கொஞ்சம்கூட நல்லா இல்ல. மனசாட்சியே கிடையாதா உங்களுக்கு..?'' என மனைவின் வார்த்தைகள் கண்ணீருடன் வெடிக்கின்றன.

''ஏய், ரொம்ப பேசுற நீ...' என ஆக்ரோஷமாகிறார் கணவன். வெளியே சொல்ல முடியாத பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு மனம் பட்டுப்போன மனைவி, அடக்க முடியாத ஆற்றாமையில் கொட்டுகிறாள் சில சொற்களை. அவற்றை முடிக்கும் முன்னே அவள் கன்னம் சிவக்கிறது. அவன் அறைந்த அறையின் வலி தாங்க முடியாமல் கத்தி அழுகிறாள், கதறுகிறாள்.

''நடிக்காதடி...'' என அதற்கும் அடி... அடி... அடி.

- இப்படியரு காட்சி நிகழாத குடும்பங்கள் இந்தியாவில் அரிது.

சரி, இப்படி குடும்பச் சண்டையில் மனைவி பாதிக்கப்படும்போது என்ன ஆகும்?

''குடிக்க பணம் தா'' என்று மனைவிடம் கேட்கிறார் கணவன். ''எங்கிட்ட அஞ்சு பைசா கூட இல்ல'' என்று சொல்கிறார் மனைவி. மீண்டும் மீண்டும், ''எப்படியாவது பணம் தா'' என்று நச்சரித்த கணவன், கையில் கிடைத்த கம்பியால் தலையில் அடிக்க, சுருண்டு விழுந்த மனைவி சில மணி நேரத்தில் இறந்து போகிறார்.

- இது, சென்னை, துரைப்பாக்கம், அருளானந்தத்தின் மனைவி மரியவிசுவாசத்துக்கு நேர்ந்த கதி!

குழந்தைகள் இருவர் தலையிலும் கெரோசினை ஊற்றி, தீ பற்ற வைத்தார் அந்தத் தாய். அவை இரண்டும் எரிந்து துடித்து இறந்து போக, தானும் அதேபோல நெருப்பை வைத்துக் கொண்டு துடிதுடித்து இறந்து போகிறார். குடிகாரக் கணவனிடம் தினசரி அடி வாங்கி வாங்கி மனம் வெறுத்துப் போனதால் இப்படியரு முடிவை எடுத்துவிட்டார் மனைவி.

- இது திருவள்ளூர் மாவட்டம், இறையாமங்கலம், அரிகிருஷ்ணனின் மனைவி சங்கீதாவின் சோக முடிவு!

18,000

உயிரை உலுக்கி நெஞ்சத்தை பதற வைக்கும் இம்மாதிரியான சம்பவங்கள் நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களில் மட்டும்தான் நிகழுமா..?

சென்னை குடும்ப நல கோர்ட்டில் வளாகத்திலேயே ராணுவ அதிகாரி (?!) ஒருவர் தன் மனைவியை வயிற்றில் எட்டி உதைக்க, அந்தப் பெண் வாயில் ரத்தம் சொட்ட சொட்ட துடிக்கிறார். போலீஸ் தலையிட்டு சமாதானம் செய்கிறது.

''தினமும் குடிச்சிட்டு வந்து அடிச்சு, என்னையும் குழந்தைகளையும் சித்ரவதை செய்றார். நானும் என் குழந்தைகளும் இவர் பண்ற கொடுமைகளைத் தாங்க முடியாம செத்து போயிடுவோமோனு பயமாயிருக்கு'' என்று போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார் 'ஈரமான ரோஜாவே' சினிமாவின் கதாநாயகன் நடிகர் சிவாவின் மனைவி மீனாட்சி. சிவாவை கைது செய்து உள்ளே தள்ளியிருக்கிறது போலீஸ்.

அடுத்த அதிர்ச்சி இது... மனைவியை அடியோ அடி என அடித்துள்ளார் அவர். அடிதாங்கும் அளவுக்கு உடம்பில் தெம்பு இல்லாததால் வலி பொறுக்க முடியாமல் மனைவி அலற, அக்கம் பக்கத்தினர் போலீஸுக்கு தகவல் சொல்ல, போலீஸ் வந்து மனைவியைக் காப்பாற்றியுள்ளது. மனைவியை மாடு போல் நினைத்து அடித்தவர், லண்டனில் வசிக்கும் இந்தியாவுக்கான தூதரக அதிகாரி (?!) அனில் வர்மா.

இவை அனைத்தும் ஒரே ஒரு நாளில் (ஜனவரி 10), ஒரேயரு செய்தித் தாளில் வெளிவந்த சோகச் செய்திகள்.

கொடுமைகளைத் தாங்க முடியாமல் தீ வைத்து தற்கொலை முயற்சி செய்து, கடைசி நிமிடத்தில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களால் காப்பாற்றப்பட்டு, இன்று தீ காயங்களுடன் வாழ்க்கையின் கோர முகத்தை பிள்ளைகளுக்காக எதிர்கொண்டு பயணம் செய்து கொண்டிருக்கும் தாய்மார்கள், அதற்கான பலமான, பரிதாபமான சாட்சியாக கண் முன் உலவுகிறார்கள்.

''தினம் தினம் சிகரெட் சூடு, அதைவிடக் கொடுமையான வார்த்தை சூடு என்று வாங்கிக் கொண்டு உடல் வலியையும் மனவலியையும் கண்ணீரில் கரைத்து, முகபவுடரில் மறைத்து வேலைக்கு செல்லும் பெண்களும் திரும்பும் திசையெல்லாம் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த அநீதி... கணினி, தொழில் புரட்சி நடக்கும் இந்த 21-ம் நூற்றாண்டிலும் தொடர்வதுதான் அதிக கவலை தருகிற, வெட்கக்கேடான விஷயம்'' என்கிறார் பெண்களின் சம உரிமைக்காக பல வருடங்களாக குரல் கொடுத்து வரும் சமூக ஆர்வலர் ஷீலு.

'இப்படி பெற்றோரின் சண்டையால், பிரிவால், தாயின் இழப்பால் சத்தான சாப்பாடு கிடைக்காமல், நோய் வந்தால் முறையான மருத்துவம் கிடைக்காமல்... கடந்த இருபது வருடங்களில் இறந்து போன 1-5 வயது வரையிலான பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 18,00,000' என்ற 'பகீர்’ ஆய்வறிக்கையை அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து வெளிவரும் 'ஆர்க்கைவ்ஸ் ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அண்ட் அடலசன்ட் மெடிசின்’ என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.

'40 சதவிகிதம் பெண்கள் அடி, உதை, தகாத வார்த்தைகள், பட்டினி என பல வடிவங்களில் குடும்ப வன்முறையால் நொடிக்கு நொடி பாதிக்கப்பட்டுக் கொண்டுள்ளனர்’ என்பதும் அந்த ஆய்வறிக்கையில் இடம் பெற்றிருக்கும் இன்னொரு பகீர்!

தீர்வுகளின் வேர்கள் எங்கே இருக்கின்றனவோ!

- நாச்சியாள்

வன்முறை வெடிக்காமல் இருக்க என்ன வழி?

குடிகாரக் கணவனால் சண்டை, சந்தேகப் பேயாக திரியும் கணவனால் சண்டை என்பதெல்லாம் ஒருபக்கமிருக்க... கணவன்-மனைவிக்குள் வரும் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள்கூட, வன்முறையாக வெடித்து, குடும்பத்தையே குலைத்துவிடும் ஆபத்து இருக்கிறது. அப்படியெல்லாம் ஆகாமல் இருக்க வழி சொல்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி.

18,000

 ''ஆண்களுக்கு பல மாதங்களுக்கு, வருடங்களுக்கு முன்பு நடந்த விருப்பமில்லாத நிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் குறைவு. ஆனால், பெண்களுக்கு அதில் அசாத்திய திறன். சமயங்களில், 'போன வருஷம் மே மாசம் உங்க அம்மா, உங்க பெரிய அண்ணன் முன்னாடி என்னை இப்படியெல்லாம் திட்டினாங்களே’ என்று பழைய பிரச்னைகளை, தவிர்க்க முடியாமல் சொல்லிக் காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும். ஆனால், அதே அளவுக்கு வாதாட ஆணிடம் வார்த்தைகள் இல்லாததால், வன்முறையில் இறங்குகிறார். அதுபோன்ற சமயங்களில் 'ஷார்ட் அண்ட் ஸ்வீட்’ ஆக சொல்வதன் மூலம் நாம் சொல்ல வந்த

விஷயத்தைத் தெளிவாக புரிய வைப்பதோடு, பிரச்னையையும் குறைக்கலாம்.

 ஓர் ஆணிடம், 'நீ அதிகாரம் இல்லாதவன்’ என்று அவனுடைய ஈகோவை உடைப்பது போல் நடந்து கொண்டால்... அவன் வன்முறையில் இறங்கி, தன் ஈகோவை நிலை நிறுத்தப் பார்ப்பான். அதே ஈகோ பெண்ணுக்கும் உண்டுதானே! எனவே, பரஸ்பரம் இருவருமே ஈகோ பிரச்னையைக் கிளப்பாமல் இருப்பது நலம்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு