Published:Updated:

"நான் அர்த்தம் தெரிஞ்சு அம்மி மிதிச்சவ...!"

அசத்தும் அமெரிக்க மருமகள்

பிரீமியம் ஸ்டோரி

 பி.ஆரோக்கியவேல்

மார்கழி முடிந்து, தை பிறந்துவிட்டது. தெருவுக்குத் தெரு கெட்டிமேளச் சத்தம் முழங்கும். மணவறையில் மணிக்கணக்காக புகை மூட்டத்தில் உட்கார்ந்திருப்பார்கள் மணமக்கள். ஆனால், அவர்கள் எல்லோருக்குமே... புரோகிதர் என்ன மந்திரம் சொல்கிறார், அதற்கு என்ன அர்த்தம், ஏன் மாலை மாற்றிக் கொள்ளச் சொல்கிறார், ஏன் மெட்டி போடுகிறார்கள், ஏன் அம்மி மிதிக்கச் சொல்கிறார்கள், இந்த சம்பிரதாயங்களுக்கு எல்லாம் அர்த்தம் தெரியுமா என்றால்... 'இதென்ன கேள்வி..?’ என்று ஏதோ விசித்திரமானதை நாம் கேட்டுவிட்டதாக நினைப்பவர்கள்தான் இங்கு அநேகம்!

"நான் அர்த்தம் தெரிஞ்சு அம்மி மிதிச்சவ...!"

''ஆனால், நான் இதற்கு விதிவிலக்கு. திருமணத்துக்கு முன்பே, 'கல்யாண சடங்குகள், அவற்றின் தாத்பர்யம், புரோகிதர் சொல்லும் மந்திரங்களின் அர்த்தம், மெட்டி போடுவது, அம்மி மிதிப்பது... இதைப் பற்றியெல்லாம் முழுமையாகத் தெரிந்து, புரிந்து கொண்டதற்குப் பிறகுதான், நீங்கள் கட்டும் தாலியை வாங்கிக் கொள்வேன்!’ என்ற நிபந்தனையுடன்தான் இவரின் மனைவி ஆனேன்!'' என்று அழுத்தம் கொடுத்துச் சொல்கிறார் கிறிஸ்டின். இவர், தமிழரை மணந்துகொண்ட அமெரிக்க மருமகள்!

##~##

கிறிஸ்டின், ஜப்பானில் மொழி யியல் பள்ளி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அங்கே பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக வேலை பார்த்த ஆனந்த் கிருஷ்ணனுடன் காதல் மலர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும், பூர்விகத்தில் திருநெல்வேலி தமிழரான ஆனந்த் கிருஷ்ணனுக்கும், கிறிஸ்டினுக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நம் மரபுப்படி திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகளாகின்றன. தம்பதிக்கு... ரூபன், ரோகம் என்று இரண்டு பிள்ளைகள்.

ஆனந்த் கிருஷ்ணன், யு.எஸ். ஃபாரின் சர்வீஸ் தேர்ச்சி பெற்று, சென்னையில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் அதிகாரியாக தற்போது பணியாற்றுகிறார். அடையாறில் இருக்கும் அவர்களது வீட்டில், புன்னகையுடன் வரவேற்றார் மேல்நாட்டு மருமகள் கிறிஸ்டின்!

"நான் அர்த்தம் தெரிஞ்சு அம்மி மிதிச்சவ...!"

''பேச ஆரம்பிப்பதற்கு முன் எங்கள் திருமண ஆல்பத்தை ஒருமுறை பாருங்கள்...'' என்று கிறிஸ்டின் நீட்டிய ஆல்பத்துடன், ஒரு சின்னப் புத்தகமும் இணைப்பாக இருந்தது. அது... திருமண நிகழ்ச்சி நிரல்! காலை 8.30-8-45 காசி யாத்திரை, 8.45-9.00 மாலை மாற்றுதல் என்று ஒவ்வொரு சடங்கின் பெயரும், அதன் முக்கியத்துவமும், புரோகிதர் உச்சரிக்கும் மந்திரங்களின் அர்த்தமும் ஆங்கிலத்தில் இடம் பெற்றிருந்தன.

''திருமணம் செய்துகொள்ளும் எங்களின் முடிவை, 'சந்தோஷமான விஷயம்தான்' என்று ஏற்றுக் கொண்ட ஆனந்த் வீட்டினர், 'ஆனால், திருமணத்துக்காக நீ சொல்லும் தேதி சனிக்கிழமையில் வருகிறது. அது வேண்டாம். புரோகிதரிடம் கேட்டு நல்ல நாள் பார்த்துச் சொல்கிறேன்...’ என்றார்கள். இது தெரிந்து, 'சனிக்கிழமை ஏன் வேண்டாம், நல்ல நாள் என்றால் என்ன, புரோகிதர் என்றால் யார், நம் திருமணத்தில அவரின் பங்கு என்ன, நல்ல நாளை அவர் எப்படிக் கண்டுபிடிப்பார்..?’ என்று கேள்விகளால் துளைக்க ஆரம்பித்து விட்டேன். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால், அவருக்கும் பதில் தெரியவில்லை'' என்றவர்,

''ஆனால், எந்த ஒரு விஷயத்தையும் அதற்கான காரணம் தெரியாமல் கண்மூடித்தனமாக செய்வதில் எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை என்பதால், இன்டர்நெட்டில் தேடினேன். வாவ்..! அந்த அலங்காரம், மேடை, புரோகிதர், யாகம், மந்திரங்கள், சம்பிரதாயங்கள், சொந்தங்கள் என்று ஒவ்வொரு விஷயமும் என்னை ஈர்த்தன. 'ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே...’ என்பதனால் எழுந்த ஆச்சர்யம் அல்ல. திருமணம் எனும் பெருநிகழ்வை அவ்வளவு அழகாக, அர்த்தமுள்ளதாக, ஆனந்தம் நிறைந்ததாக ஒருங்கிணைத்து வைத்திருந்த உங்கள் முன்னோர்களின் மேல் எழுந்த மரியாதை தந்த வியப்பு'' எனும் கிறிஸ்டின், தன் திருமணமும் அப்படி ஒரு நிகழ்வாக இசைய வேண்டும் என்பதற்காக எடுத்த முயற்சிகள் அதிகமே!

''ஆனந்த்தை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தேன். அவருடைய அப்பா, அம்மாவுடன் சென்று திருமணத்துக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் அலைந்து வாங்கினேன். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பட்டுகள் சரசரக்க, மருதாணிக் கரங்கள் மணக்க, மயிலாப்பூர் திருமணம் போல மணம் முடித்துக் கொண்டோம்.

"நான் அர்த்தம் தெரிஞ்சு அம்மி மிதிச்சவ...!"

குறிப்பாக... அக்னியும், புரோகிதரும் நான் மிகவும் விரும்பி ஏற்பாடு செய்த விஷயங்கள். அதிலும், மந்திரங்களின் பொருள் என்ன என்பதை முன்கூட்டியே புரோகிதரிடம் கேட்டேன். அதில், சில மந்திரங்களோடு என்னால் உடன்பட முடியவில்லை. உதாரணமாக, 'கணவனுக்கு எந்த நேரத்திலும் அடங்கி ஒடுங்கி இருப்பேன்’ என்பது போன்ற வரிகளைத் தவிர்க்குமாறு முன்கூட்டியே சொல்லிவிட்டேன். கடவுளை சாட்சியாக வைத்துக் கொண்டு ஒரு உறுதி எடுத்துக் கொள்கிறோம் என்றால், அது மதிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் அல்லவா?! அதனால்தான்!'' என்று கிறிஸ்டின் சொன்னபோது ஆச்சர்யம் நமக்கு!

''நம்மூர் கலாசாரம் மீதான அன்பு, நாளுக்கு நாள் அவளிடம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் இருந்தாலும் சரி, சென்னையில் இருந்தாலும் சரி... 'திருமதி செல்வம்’, 'தென்றல்’, 'செல்லமே’... மூன்று சீரியல்களையும் மிஸ் பண்ணாமல் பார்த்துவிடுவேன். 'இப்படி விடாமல் பார்க்கிறீர்களே... எனக்கும் கதை சொல்லுங்கள்’ என்று ஆர்வமாக கேட்பாள் கிறிஸ்டின். கதையைக் கேட்டுவிட்டு, 'இப்படி எல்லாம் நடக்குமா..? இன்ட்ரஸ்ட்டிங்!’ என்று நம் தமிழ் குடும்பங்கள் பற்றி இன்னும் சுவாரஸ்யமாவாள். அதனாலேயே இப்போது ஒரு பேராசிரியரிடம் முறையாக தமிழ் கற்றுக் கொள்ளவும் ஆரம்பித்திருக்கிறாள்'' என்று அருகிலிருந்த மாமியார் சொல்ல...

''யெஸ்... ஆ..ர...ம்...பி...த்...தி...ரு...க்...கி...றே...ன்!'' என்று வழிமொழிந்தார் மேல்நாட்டு மருமகள்!

படங்கள் : வி. செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு