Election bannerElection banner
Published:Updated:

ஃபேஷன் ஜுவல்லரி மேக்கிங்...

விரல் நுனியில் பொங்குது லாபம் !படங்கள்: க.கோ.ஆனந்த்

பிஸினஸ் வெற்றிக் கதைகள்

##~##

''மனசுக்குப் பிடிச்சு வேலை செய்யணும். அல்லது மனசுக்குப் பிடிச்சதை, வேலையா செய்யணும். வெற்றி நிச்சயம்!''

- பளிச்சென ஆரம்பிக்கிறார் ரம்யா நாயக். சிறுவயதிலிருந்து ஆபரணங்கள் அணிவதில் தனக்கிருந்த ஆர்வத்தையே முதலீடாக்கி, ஃபேஷன் ஜுவல்லரி மேக்கிங் தொழிலை ஆரம்பித்தவர், இன்று ஒரு கடையின் முதலாளி! மாதம் 20 ஆயிரம் ரூபாய் லாபமும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நிரந்தர வாடிக்கையாளர்களுமாக கலக்கிக் கொண்டிருக்கும் இந்த சென்னைப் பெண்ணை, மயிலாப்பூர், சி.ஐ.டி. காலனியில் உள்ள ஷாப்-ல் சந்தித்தோம்!

''ஸ்கூல் படிக்கும்போதே... ஓவியம், டிசைனிங்னு நிறைய ஆர்வம். ப்ளஸ் டூ முடிச்சதும் ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ்ல 'ஹிஸ்டரி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்' கோர்ஸ் சேர்ந்தேன். என் டிரெஸ்ஸுக்கு மேட்சான ஃபேஷன் ஜுவல்ஸை எப்பவுமே கடையில் வாங்க மாட்டேன்... என் கிரியேட்டிவிட்டியைத் தட்டிவிட்டு... நானே செய்துதான் போட்டுக்குவேன்.

'வாவ்! உனக்கு மட்டும் எப்படிப்பா இவ்ளோ அழகான கம்மல், மாலை, பிரேஸ்லெட் எல்லாம் கிடைக்குது?’னு என் ஃப்ரெண்ட்ஸ் அவ்ளோ ரசிப்பாங்க. 'நானே செஞ்சது!’னு சொன்னா, ஆச்சர்யப்படுவாங்க. அந்தப் பாராட்டுகள் எல்லாம் என்னை உற்சாகப்படுத்தி, ஒவ்வொரு முறையும் இன்னும் புதுசு புதுசா ஜுவல்ஸ் செய்து அணியத் தூண்டிச்சு. 'நீ மட்டும் ஒரு ஃபேஷன் ஜுவல்லரி ஷாப் வெச்சா... சூப்பர் டூப்பர் ஹிட்!’னு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்லுவாங்க. அதெல்லாம் பேச்சு வாக்குல அப்படியே வந்து விழுந்தாலும், அது உண்மைங்கறது எனக்கு நல்லாவே தெரியும். அதனாலதான் படிப்பு முடிச்சதும்... டெக்ஸ்டைல்ஸ் டிசைனர், கிராஃபிக் டிசைனர், வெப் டிசைனர்னு தோழிகள் பலரும் வேலைக்குச் சேர, நான் 'ஃபேஷன் ஜுவல்லரி மேக்கிங்' பிஸினஸ்ல இறங்கிட்டேன். மனசுக்குப் பிடிச்சதை வேலையா செய்தா வெற்றி நிச்சயம். அந்த நம்பிக்கையும், இதில் எனக்கிருந்த ஆர்வமும்தான் இந்தத் தொழிலுக்கான முக்கிய முதலீடுகள்!''

ஃபேஷன் ஜுவல்லரி மேக்கிங்...

- சின்னதாகச் சிரிக்கிறார் ரம்யா நாயக்!

''ஆரம்பத்துல ஒருத்தர்கிட்ட ஜுவல் மேக்கிங் வேலை பார்த்தேன். தொழில்ரீதியா அதோட நெளிவு சுளிவுகளைக் கத்துக்கிட்டதுக்கு அப்புறம்... சுயமா செய்ய ஆரம்பிச்சுட்டேன். கம்மல், பிரேஸ்லெட், மாலை, கொலுசுனு நிறைய நிறைய பீஸ்கள் செய்வேன். 'ஒரு செட் வித்ததும்... அடுத்த செட் செய்யலாமே?’னு அம்மாவும் அப்பாவும் கொஞ்சம் பயந்தாங்க. ஆனா, என் காலேஜ் தோழிகளே என்னோட ஆரம்பகட்ட கஸ்டமர்களாக, எல்லா பீஸும் விற்றுத் தீர்ந்ததோட, 'இன்னும் வேணும்!’னு க்யூவில் நின்னாங்க. உற்சாகமாகி, ஜெட் ஸ்பீட்ல ஜுவல்ஸ் செய்வேன்.

என் தோழிகள், அவங்க ஆபீஸ் தோழிகள், அவங்களோட உறவுப் பெண்கள்னு என்னோட வாடிக்கையாளர்கள் வட்டம் சீக்கிரமாவே விரிஞ்சதுக்குக் காரணம், 'ரம்யாவோட ஜுவல்ஸ் எல்லாம் 'யுனிக்’கா இருக்கு!’னு நான் வாங்கின நல்ல பேர்தான். என்னோட பிஸினஸ் பிக் - அப் ஆனதைப் பார்த்த என் பேரன்ட்ஸ், சி.ஐ.டி காலனியில் அவங்க நடத்துற பேக்கரியின் ஒரு போர்ஷனை எனக்காகத் தர, என்னோட தொழில் அடுத்த கட்டத்தை அடைஞ்சுது!'' எனும்போது, ரம்யாவின் மீதான பெருமிதம் அவர் பெற்றோரின் முகத்தில்.

''பெண்களையும் நகையையும் பத்தி சொல்லவே வேண்டாம். எங்கிட்ட வர்ற கஸ்டமர்ஸும் நிறைய எதிர்பார்ப்புகளோடதான் வருவாங்க. அதையெல்லாம் எந்தக் குறையும் இல்லாம பூர்த்தி செய்வேன். அதேசமயம், ஒரு வாடிக்கையாளர் தனக்குப் பொருத்தமில்லாத ஒரு நகையைத் தேர்வு செய்தா, 'வித்தா போதும்’னு இருக்க மாட்டேன். 'உங்களோட நீளமான கழுத்துக்கு, இந்த மெல்லிசான மாலையைவிட அடர்த்தியான மாலைதான் நல்லா இருக்கும்’னு எடுத்துச் சொல்வேன். அதனாலேயே என் வாடிக்கையாளர்களுக்கும் எனக்கும் தொழிலைத் தாண்டியும் ஒரு நம்பகமான இணைப்பு இருக்கும்.

ஃபேஷன் ஜுவல்லரி மேக்கிங்...

டி.நகர்ல கிடைக்கிற ஜுவல்ஸ்தான் என்கிட்டயும் கிடைக்கும்னா, தொழில்ல ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்காது இல்லையா..? அதனால பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மெட்டீரியல்ஸ் வாங்கி, மரம், கண்ணாடி, ஜெர்மன் சில்வர், பவளம்னு என் ஜுவல்ஸோட குவாலிட்டியை அடுத்த லெவலுக்குக் கொண்டு போனேன். 100 ரூபாயில் இருந்து பல ஆயிரம் ரூபாய் வரையிலான ஃபேஷன் ஜுவல்ஸ் இப்போ எங்கிட்ட கிடைக்குது. தொழிலை ஆரம்பிச்ச இந்த ரெண்டு வருஷத்துல... 4 வயசு குழந்தையில் இருந்து 60 வயசுப் பாட்டி கள் வரை எனக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ரெகுலர் கஸ்டமர்கள் கிடைச்சுருக்காங்க. இதுல சின்னத்திரை ஸ்டார்களும் உண்டு. மாசம் 20 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்கிறேன்!'' என்ற ரம்யா நாயக், இந்தத் தொழிலின் அடிப்படைகள் பகிர்ந்தார்.

''கைவேலைப்பாட்டில் ஆர்வமும், கிரியேட்டிவிட்டியும் இருந்தாபோதும்... இந்தத் தொழிலுக்கு. ஜுவல் மேக்கிங்ல சில மாத கோர்ஸ் அல்லது சில காலம் ஜுவல் மேக்கிங் வேலை பார்ப்பது நம்மை இன்னும் பட்டை தீட்டும். அங்கேயே இந்தத் தொழிலோட அத்தனை நுணுக்கங்களையும் கத்துக்கிட்டு, சீக்கிரமே சுயமா களத்துல இறங்கிடலாம்.

இதுக்கான மெட்டீரியல்ஸ் சென்னை தவிர, வெளி மாநிலங்கள்லயும்... குறிப்பா, பெங்களூரு, கொல்கத்தா மாதிரியான ஊர்கள்ல குறைஞ்ச விலைக்கு மொத்தமா வாங்கலாம். உதாரணமா, 20 கற்கள் வாங்கினா அதில் இரண்டிலிருந்து நான்கு வரை ஜுவல்ஸ் செய்யலாம். ஒரு பீஸ் நானூறு ரூபாயிலிருந்து அதிகபட்சமா ஐயாயிரம் ரூபாய் வரைக்கும் விற்கலாம். ஆக, குறைந்தது மூவாயிரம் ரூபாய் முதலீட்டில் அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்.

பாதுகாப்பு, ஏறிக்கிட்டே இருக்கற விலைனு பல காரணங்களால தங்க நகைகள்ல இருந்து விலகுற பெண்கள், ஃபேஷன் மேல காதலா இருக்கற பெண்கள்னு பலரும் இப்போ இந்த ஃபேன்ஸி ஜுவல்ஸைத்தான் அதிகம் விரும்புறாங்க. அதனால, உத்தரவாதமுள்ள தொழில் இது. முக்கியமான விஷயம்... கற்பனைத் திறன்ல புதுசு புதுசான டிசைன் நகைகளை உருவாக்கிட்டே இருக்கணும். அதுதான் இந்தத் தொழில்ல இருக்கிற போட்டியைச் சமாளிக்க வைக்கும். அதேபோல, வாடிக்கையாளர்கள் சொல்ற குறைகளையும் சரிபடுத்திக்கணும்.

கல்லூரிப் பெண்கள், இல்லத்தரசிகள், ஆபீஸ் பெண்கள்னு முதல்ல ஒரு கஸ்டமர்ஸ் வட்டத்தை நாமதான் தேடிப் போய் உருவாக்கணும். காலேஜ் பெண்கள்கிட்ட அவங்களுக்குப் பிடிச்ச ஒரு டிசைனை ஆர்டர் வாங்கி, கிளாஸ் மொத்தத்துக்கும் செய்து கொடுக்கிறது, திருமணப் பெண்களுக்கு அவங்களோட முகூர்த்த, ரிசப்ஷன் புடவைகளுக்கு ஏற்ற நிறக் கற்கள் வெச்சு பிரத்யேகமா செய்து கொடுக்கிறது, சிலருக்கு அவங்க கேட்கிற டிசைன்ல அசல் மாறாம செஞ்சு கொடுக்கிறது, குழந்தைங்களுக்கு வெயிட்லெஸ் கம்மல் செய்து கொடுக்கிறதுனு செய்துட்டே இருக்கணும்.

வருமானம் கூடக் கூட, நாமும் அடுத்த கட்டத்துக்கு வளரணும். என்னையே எடுத்துக்கோங்க... இப்போ ஜுவல்ஸ் கூட கை வேலைப்பாட்டு கிஃப்ட் பொருட்கள், கிரீட்டிங் கார்டுகள், திருமண மொய் கவர் எல்லாம் செய்து விற்பனை செய்றேன். கூடிய சீக்கிரமே என்னோட சேல்ஸுக்கு ஒரு வெப்சைட் ஆரம்பிக்கப் போறேன். இதனால் இன்னும் நிறைய நிறைய கஸ்டமர்கள் கிடைப்பாங்க'' என்ற ரம்யா,

''மொத்தத்துல, விரல்களின் நுனியில் வருமானம் அள்ள ஃபேஷன் ஜூவல் மேக்கிங் தொழில் உங்களை அழைக்குது!'' என்றார் நிறைவான புன்னகையுடன்!

- லாபம் வளரும்...  

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு