##~## |
''மாதா, பிதா, குரு, தெய்வம் என்று பகுத்தறிவிக்கும் ஆசிரியரை... கடவுளுக்கும் ஒரு படி அதிகமான இடத்தில் வைத்துக் கொண்டாடும் தேசம் இது! ஆனால், இன்று ஆசிரியர்கள் குருவாக இருப்பதில்லை; மாணவனை மதிப்பெண் அதிகமாக வாங்கும் இயந்திரமாக மாற்றும் வித்தைக்காரர்களாகத்தான் இருக்கிறார்கள்'’ என சமூக ஆர்வலர்கள், பெற்றோர்களின் குற்றச்சாட்டு ஒருபுறம் அனலாக வீசுகிறது!
மறுபுறமோ... ''மாணவர்களைத் தண்டிக்கக் கூடாது என்று அரசாங்கமே சொல்கிறது. இது, மாணவன் - ஆசிரியர் உறவில் எல்லை மீறி தலையிடும் செயலே! இதன் காரணமாக மாணவர்களிடம் இயல்பாகப் பழக முடியாத சூழ்நிலையை அரசும், இந்த சமூகமும் உருவாக்கி வைத்துவிட்டது'’ என்று குமுறுகிறார்கள் ஆசிரியர்கள்!
ஆக, இன்றைய ஆசிரியர் - மாணவன் உறவு அத்தனை சுமுகமாக இல்லை என்பதே நிதர்சனம்.
'ஆனால்... வீடு, நாடு இரண்டும் வீறுநடை போட வேண்டுமானால்... இந்த இருவருக்கும் இடை யில் உள்ள உறவு நெருக்கமானதாக வேண்டுமே!' என்று மனநல ஆலோசகர் ராஜ்மோகனிடம் கேட்டோம். அந்த உறவை பலப்படுத்த, அவரின் ஆக்கமிக்க கருத்துக்கள்...

''இன்றைய பள்ளிக் கல்விமுறை என்பது குருகுல முறை, திண்ணைப் பள்ளிக்கூடம் போன்ற பல படிநிலைகளைத் தாண்டி வந்தது. குருகுல முறையில் மாணவர்களுக்கு இதைத்தான் கற்பிக்க வேண்டும் என்கிற 'சிலபஸ்’ எல்லாம் கிடையாது. குரு, தன்னிடம் வந்து தங்கிப் படிக்கும் மாணவர்களுக்குப் பல வேலைகளைக் கொடுப்பார். அதில் இருந்து மாணவர்களே சுயமாக உணர்ந்து கற்றுக்கொள்ள, அதை மேம்படுத்தும் சக்தியாக மட்டுமே குரு இருப்பார். ஒருவன் எந்த சூழ்நிலையில் இருந்து, எதற்காக நம்மிடம் கற்றுக்கொள்ள வந்திருக்கிறான் என்று மாணவனைப் பற்றிய முழு பின்புலம் குருவுக்குத் தெரியும். குருவின் மேல் மாணவனுக்கு மிகுந்த மரியாதையும் பக்தியும் இருந்தது.
ஆனால்... இன்று..? நிலைமை தலைகீழாகவே இருக்கிறது! பிள்ளைகள், தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை பள்ளியிலும், கல்லூரியிலும்தான் கழிக்கிறார்கள் என்பதால், இந்த விஷயத்தில் பெற்றோரும்... ஆசிரியர்களும் மிகுந்த அக்கறை காட்டியே ஆகவேண்டும்!
'குரு’ என்கிற 'பிராண்ட்’டை மட்டும்தான் பெரும்பாலான ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த குருவுக்கு உரிய சகல திறமைகளுடனும் அர்ப்பணிப்புடனும் இருந்தால்தானே மாணவன் - ஆசிரியர் உறவு குளிர்ச்சியாக இருக்கும்..? இங்கே, 'சகல திறமை' என்பது இன்று கேள்விக்குரியதாக இருப்பதுதான் வேதனை. 'எந்த வேலையும் கிடைக்கல, அதனால டீச்சர் வேலைக்கு வந்தேன்’ என்கிற ஆசிரியர்கள்தான் தனியார் பள்ளிகளில் இன்று அதிகம். 'ஆசிரியர் வேலையை மனம் விரும்பித் தேர்ந்தெடுத்து வந்தேன்’ என்கிற 'சாய்ஸ்’ டீச்சர்ஸ் பெரும்பாலும் வாய்க்காமல் போக, 'எதுவும் கிடைக்கல, இதுதான் கிடைச்சுது’ என்கிற 'சான்ஸ்’ டீச்சரிடம் மாட்டுகிற மாணவன்தான் அல்லல்படுகிறான். அடுத்த நல்ல வேலை கிடைக்கும்வரை இந்த வேலையில் ஒட்டிக்கொண்டிருக்கும் சான்ஸ் டீச்சர்களில் பெரும்பாலானவர்கள், மாணவனின் கற்றல் திறமையை மேம்படுத்த எந்த முயற்சியும் செய்யமாட்டார்கள்.

ஒரு மாணவனை நல்லவனாக, சிறந்தவனாக, பண்புள்ளவனாக உருவாக்குவதில் ஒரு ஆசிரியர் தொடர்ந்து தன் உழைப்பையும் அறிவையும் நேரத்தையும் முதலீடு செய்பவராக இருப்பது அவசியம். தன் மாணவனின் குடும்ப பின்புலம், அவனது குறிக்கோள் என்ன என்பனவற்றை அறிந்துகொள்வதில்தான் அனைத்தும் அடங்கி இருக்கிறது. ஆசிரியரின் அணுகுமுறைதான் ஒரு மாணவனை நல்லவனாக்கும்; தீயவனாக்கும். தண்டிப்பதற்கும் கண்டிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை ஆசிரியர்கள் சரியாகவும் நேர்மையாகவும் புரிந்துகொள்ளாவிடில், இருவருக்கும் இடையில் ஆன உறவு இடியாப்பச் சிக்கல்தான்! கண்டிப்பு சீராக்கும்; தண்டிப்பு முரடனாக்கும் என்ற உளவியல் உண்மையை தெரிந்து கொண் டிருப்பவர்தான் முழுமையான ஆசிரியர்.
மாணவன் தொடர்ந்து கற்றுக்கொள்வதற்கும் ஆர்வமாகக் கற்றுக்கொள்வதற்கும் ஆசிரியர் ஒரு சப்போர்டிங் சிஸ்டமாக இருக்க வேண்டுமே ஒழிய, மாணவன் முழுக்க முழுக்க தன்னைச் சார்ந்து இருக்கும்படியான கற்பித்தலை உருவாக்காமல் இருப்பது அந்த பணிக்கும் உறவுக்கும் அழகு! அதேபோல, மாணவன் என்பவனும் சக உயிரே என்கிற சமத்துவ மனநிலைமைதான் உறவை பலப்படுத்தும். எனவே, அவனை எப்போதும் மரியாதையுடன் நடத்துவது அவசியம்'' என்று சொன்ன ராஜ்மோகன்,
''எல்லாவற்றையும் ஆசிரியருக்கே சொல்கிறாரே... என்று நினைக்க வேண்டாம். அவர்கள்தான் புரியும் வயதில் இருப்பவர்கள். மாணவர்களோ, புரிந்த மாதிரியும்... புரியாத மாதிரியுமான குழப்ப வயதில் இருப்பவர்கள். எனவே, அவர்களின் மனதில் பதியம்போட வேண்டிய மிகமிக முக்கியமான ஒரு விஷயம்... 'என் ஆசிரியர் எனக்கு நல்லதுதான் செய்வார், அவருக்கு எல்லாம் தெரியும்' என்கிற நம்பிக்கையைத்தான்!'' என்று வேண்டுகோளாகவே வைத்தார்!