Published:Updated:

கரன்ட் இல்லை...காசு இல்லை... மார்க் உண்டு...

பிளாட்பாரம் to ஸ்கூல் ஃபர்ஸ்ட் !ஆர்.குமரேசன், பா.ஜெயவேல், மோ.கிஷோர்குமார், நா.சிபிச்சக்கரவர்த்தி படங்கள்: வீ.சிவக்குமார், ப.சரவணகுமார், ச.லெட்சுமிகாந்த்

கரன்ட் இல்லை...காசு இல்லை... மார்க் உண்டு...

பிளாட்பாரம் to ஸ்கூல் ஃபர்ஸ்ட் !ஆர்.குமரேசன், பா.ஜெயவேல், மோ.கிஷோர்குமார், நா.சிபிச்சக்கரவர்த்தி படங்கள்: வீ.சிவக்குமார், ப.சரவணகுமார், ச.லெட்சுமிகாந்த்

Published:Updated:
##~##

பெற்றோரின் அரவணைப்பு, டியூஷன், படிப்பதற்கேற்ற சூழல் இவையெல்லாம் கிடைக்கும் குழந்தைகளே... படிப்பில் பார்டரில் பாஸ் செய்யும் சூழலில், இவை எதுவும் இல்லாமல், ஏழ்மையான குடும்பங்களில் இருந்து அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்... பத்தாம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பதே சாதனைதானே! அப்படி மதிப்பெண்கள் அள்ளிய சில மாண்புமிகு மாணவிகள் பேசுகிறார்கள் இங்கு..!

குடும்ப கஷ்டத்தையும் சேர்த்தே படிச்சேன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காவியா (411/500 மதிப்பெண்கள், அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி- சோழவந்தான்): ''பாடங்களை மட்டுமே படிக்காம, குடும்பக் கஷ்டத்தையும் சேர்த்துப் படிச்சதால நல்ல மார்க் வாங்க முடிஞ்சுதுனு நினைக்கிறேன். அப்பா மகாலிங்கம், பிரைவேட் பஸ் டிரைவர். வீட்டுல நான், ரெண்டு தங்கச்சினு மூணு பொம்பளப் புள்ளைங்க. நான் வாங்கின மார்க் குறைவுதான்ங்கிறது என்னோட எண்ணம். ஆனா... அப்பாவும் அம்மாவும், 'என் பொண்ணு ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டா!’னு சந்தோஷமா சொல்லிட்டு இருக்காங்க.

கரன்ட் இல்லை...காசு இல்லை... மார்க் உண்டு...

இப்ப ஒரு ஆறு மாசமாதான் வீட்டுல கரன்ட் இருக்கு. அதுக்கு முன்ன வரைக்கும் ஃப்ரெண்ட் திவ்யா வீட்டுக்குத்தான் படிக்கப் போவேன். அவங்க வீட்டுல உள்ளவங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும். நாங்க இருக்கிற இந்தக் குடிசை வீட்டுக்கு 300 ரூபாய் வாடகை. வசதி குறைவுதான். இருந்தாலும் நான் படிக்க உட்கார்ந்துட்டா... விளக்கு கொண்டு வர்றது, டீ போட்டுத் தர்றதுனு அப்பா, அம்மா, தங்கச்சிங்கனு எல்லாருமே தாங்குவாங்க. படிக்கறது கவர்மென்ட் ஸ்கூல்ங்கிறதுனால இப்போவரைக்கும் படிப்பு செலவு பெருசா இல்ல. ஆனா... ப்ளஸ் டூ முடிச்சு, காலேஜ் எல்லாம் படிக்கறதுனா பணம் வேணுமே? அதான் இப்போவே தையல் கிளாஸ் போயிட்டு இருக்கேன்!''

ஃப்ரீ டியூஷன் ப்ளஸ் ஃப்ரீ சார்ஜர் லைட்!

குமுதா, (435/500 மதிப்பெண்கள், அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப்பள்ளி- செங்கல்பட்டு): ''சமூக அறிவியல் பாடத்துல நான் நூத்துக்கு நூறு! ரொம்ப சந்தோஷமா இருக்கு. 'ஒரு விவசாயியோட பொண்ணு... நூத்துக்கு நூறு வாங்கியிருக்கா!’னு பெருமை பேசற அப்பாவைப் பார்க்க அவ்வளவு நெகிழ்ச்சியா இருக்கு. தினமும் ஸ்கூல் முடிஞ்சதும், அங்கயே ஸ்பெஷல் கிளாஸ் வைப்பாங்க. நானும் படிச்சுட்டு, தெரியாத பிள்ளைங்களுக்கும் சொல்லிக் கொடுப்பேன். பக்கத்து ஏரியாவுல ஒருத்தவங்க ஃப்ரீயா டியூஷன் சொல்லிக் கொடுக்கிறாங்க. அதைவிட முக்கியமா கரன்ட் போனாலும் அவங்க வீட்டுல சார்ஜர் லைட் இருக்கும். அதனால அங்க போய் படிச்சுட்டு வீட்டுக்கு வருவேன். அப்பா தோட்டத்துல மல்லிப்பூ போட்டிருக்காரு. ஆறு மணியில இருந்து ஏழு மணி வரை தோட்டத்துக்குப் போய் பூ பறிச்சுக் கொடுத்துட்டு, மறுபடியும் படிக்க உட்காருவேன்.

கரன்ட் இல்லை...காசு இல்லை... மார்க் உண்டு...

இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சுருக்கலாம்னு தோணுது. ப்ளஸ் டூ-வில் இன்னும் நிறைய மார்க் எடுத்து, எம்.பி.பி.எஸ். சேரணும். அதுக்குள்ள கரன்ட் பிரச்னை தீர்ந்துடுமா?''

60 கிலோ மீட்டர் பஸ்... 2 கிலோ மீட்டர் நடை!

மஞ்சுளா தேவி (426/500 மதிப்பெண்கள், அரசு மேல்நிலைப்பள்ளி, பழனி சாலை, திண்டுக்கல்): ''ஒட்டன்சத்திரம் பக்கத்துல இருக்கிற தும்மிசம்பட்டிதான் எங்க ஊரு. அப்பா தவமணி, வாட்ச் கடையில வேலை பாக்குறாங்க. அம்மா சின்ன வயசுலயே இறந்துட்டாங்க. கூட பொறந்தவங்க யாரும் இல்லை. அப்பா வருமானம் சாப்பாட்டுக்கே சரியா இருக்கும். பழனியில இருக்கற பாட்டி வீட்டுலதான் 5|ம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். அப்புறம் 6|ம் வகுப்புக்கு திண்டுக்கல் வந்துட்டேன். ஒரு ஹாஸ்டல்ல தங்கிட்டு இதே ஸ்கூல்லதான் படிச்சேன். 10|ம் வகுப்புக்கு மட்டும் தினமும் வீட்டுக்கு போயிட்டு வருவேன்.

கரன்ட் இல்லை...காசு இல்லை... மார்க் உண்டு...

காலையில 7 மணிக்கு வீட்டுல இருந்து கிளம்பினா... ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் நடந்துதான் வருவேன். அங்க பஸ் பிடிச்சு ஸ்கூலுக்கு வர்றதுக்கு    9 மணி ஆகிடும். சாயங்காலம் ஸ்டடிஎல்லாம் முடிச்சுட்டு, வீடு போய்ச்சேர 8 மணி ஆகிடும். தினமும் 60 கிலோ மீட்டர் பஸ் பயணம், 2 கிலோ மீட்டர் நடை பயணம்னு பயங்கர சோர்வாயிடும். அதுக்கு மேல படிக்க உட்கார்ந்தா கண்ணெல்லாம் சொக்கும். ஆனாலும் தினமும் ஒரு பாடத்தைப் படிச்சுட்டுதான் தூங்குவேன்.

என் படிப்புச் செலவுக்கு ஆனந்த்னு ஒரு அண்ணாதான் உதவி செஞ்சாங்க. இப்போ ப்ளஸ் ஒன்-க்கு நந்தவனப்பட்டியில இருக்கிற அன்பாலயம் ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கப் போறேன். இந்த வருஷமும் அந்த அண்ணா உதவி செய்றேன்னு சொல்லியிருக்காங்க. ஐ.ஏ.எஸ் ஆகறதுதான் என் லட்சியம். எனக்கு உதவி செய்றவங்களுக்கு எல்லாம் நான் தர்ற பிரதிபலனும், பெருமையும் அதுவாதான் இருக்கணும்!''

பிளாட்பாரம் டூ ஸ்கூல் ஃபர்ஸ்ட்..!

திவ்யா (427/500 மதிப்பெண்கள், மாநகராட்சி  உயர்நிலைப் பள்ளி, வால்டாக்ஸ் ரோடு சென்னை): ''எல்லாரையும் வீட்டுல போய் பேட்டி எடுத்திருப்பீங்க. என்னை பிளாட்பாரத்துலதான் பேட்டி எடுக்கணும். ஏன்னா, எங்க பாட்டி ஓட்டுற இந்த மீன்பாடி வண்டியும், என்.எஸ்.சி. போஸ் ரோடு பூக்கடை தெருவில் இருக்கும் இந்த பிளாட்பாரமும்தான் எங்களுக்கு வீடு. நான் பிறந்து, வளர்ந்து, பத்தாம் வகுப்புத் தேர்வுக்குப் படிச்சது எல்லாமே இந்த பிளாட்பாரத்துலதான். அம்மா, அப்பா சண்டை வரவே, நெருப்பு வெச்சுட்டு இறந்து போயிட்டாங்க அம்மா. எங்களை விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிக்கிட்டார் அப்பா. நான், ஒரு தங்கச்சி, ரெண்டு தம்பி... எல்லாரையும் பாட்டிதான் பார்த்துக்கிட்டாங்க.

நடுவுல திடீர்னு பாட்டிக்கு உடம்பு முடியாம போக, படிப்பை நிறுத்திட்டு பூ கட்டி வித்து, டீ கடையில டோக்கன் போட்டுட்டு இருந்தேன். ரேவதி மிஸ்தான் மறுபடியும் ஸ்கூல்ல சேர்த்துவிட்டாங்க. ஸ்கூல்ல இன்டர்வல்,லஞ்ச் பீரியட்லயே ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சுட்டு, சாயங்காலம் பாட்டிக்குப் பூ கட்டி கொடுப்பேன்.

கரன்ட் இல்லை...காசு இல்லை... மார்க் உண்டு...

ரோடு அமைதியாக லேட் நைட் ஆயிடும். அப்போதான் படிக்க உட்காருவேன். கரன்ட் போயிடும். இந்தத் தெரு விளக்கும் அப்பப்ப வேலை செய்யாது. பிளாட்பார கடை அண்ணாகிட்ட டார்ச் லைட் வாங்கி படிச்சுட்டுக் கொடுப்பேன். நைட் எல்லாம் கண்ணு முழிச்சுப் படிச்சா, 'இந்த சிறுக்கி தெரு விளக்குல படிச்சுதான் கிழிக்கப்போறாளாம்,’ 'படிச்சு என்னத்தப் பண்ணப்போற, பேசாம பூ வியாபாரம் பண்ணு’னு எல்லாரும் பேசுவாங்க. எதையும் கண்டுக்காமப் படிச்சேன். இப்போ இந்த மார்க்கைப் பார்க்கும்போது, படிக்கிறதுக்காக நான் பட்ட கஷ்டமெல்லாம் பறந்துடுச்சு. நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். ரிசல்ட் பார்க்கக்கூட காசில்லாம இருந்த எனக்கு, எங்க ஸ்ரீமதி மிஸ்தான் மார்க் பார்த்துச் சொன்னாங்க.

நல்ல மார்க் வாங்கியிருக்கிறதுல பாட்டிக்கு அவ்வளவு சந்தோஷம். 'அக்கா மாதிரி நீங்களும் படிக்கணும்... பாட்டி தலையை அடமானம் வெச்சாவது படிக்க வைப்பேன்’னு தம்பி, தங்கச்சிங்ககிட்ட சொல்லிட்டு இருக்காங்க.

ஊருல இருக்கற எல்லா தம்பி தங்கச்சிங்களுக்கும் நான் சொல்லிக்கறது... டியூஷன் இல்ல, கம்ப்யூட்டர் இல்ல, யூ.பி.எஸ் இல்லைனு சொல்லி, படிக்கறதுக்கு அப்பா, அம்மாகிட்ட வம்பு பண்ணாதீங்க. என்னை எல்லாம் நினைச்சுப் பார்த்தா, நீங்க எல்லாம் எவ்வளவு பாக்கியம் செஞ்சவங்கனு புரியும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism