Published:Updated:

என்னவரே...என்னவரே...

கிரேஸ் கருணாஸ் படம்: வீ.நாகமணி சந்திப்பு: ம.மோகன்

என்னவரே...என்னவரே...

கிரேஸ் கருணாஸ் படம்: வீ.நாகமணி சந்திப்பு: ம.மோகன்

Published:Updated:
##~##

சை, நகைச்சுவை என்று நம்மை மகிழ்விக்கும் கலைஞன், கருணாஸ். புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள தாஞ்சூர் என்ற கிராமத் தில் இருந்து... சென்னைக்குப் புறப்பட்டு வந்த இளைஞன், இன்று... தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி முகங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கிறார். இன்னும் ஹீரோ, மியூசிக் டைரக்டர் என்று கிளை விரித்துச் சிறப்பாகப் பயணித்துக் கொண்டிருக்கும் கருணாஸ்... தன் ஒவ்வொரு பேட்டியிலும் மறக்காமல் உச்சரிக்கும் சங்கீத வார்த்தை, 'கிரேஸ்!’

''உச்சிக் குளிர வைக்கும் கருணாவின் ஆத்மார்த்தமான அன்பில்தான்... என் பூமியே சுழன்று கொண்டிருக்கிறது!'' என்று கவிதையாய் ஆரம்பித்தார் கிரேஸ் கருணாஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சென்னை, குயின் மேரிஸ் கல்லூரியில்... 98-ம் வருடம் பி.ஏ, சவுத் இண்டியன் மியூசிக் கோர்ஸ் படித்துக் கொண்டிருந்தேன். கற்றுக் கொள்ளும் இசை... கடவுளுக்குப் படைக்க மட்டுமே என்பதில் என் அப்பா தீவிரமாக இருந்தார். அதனால் கல்ச்சுரல்ஸ், லைட் மியூஸிக் என்ற என் ஆசையெல்லாம் வீட்டுக்குத் தெரியாமல்தான் அரங்கேறிக் கொண்டிருந்தது. ஒரு காலேஜ் கல்ச்சுரல் நிகழ்ச்சியில் நான் டீமாகக் கலந்து கொண்டபோது, நிகழ்ச்சிக்கு நடுவர்களாக சரத்குமார் சாரும், கருணாஸும் வந்திருந்தனர். எங்கள் 'டீம்’தான் வெற்றிக் கோப்பையைத் தட்டியது.

என்னவரே...என்னவரே...

வெற்றியைக் கொண்டாட... மறுநாள் 'மாஸ்’ கட் அடித்துவிட்டு ஷாப்பிங், தியேட்டர் எனச் சுற்றக் கிளம்ப, என்னைத் தேடி கல்லூரிக்கு வந்திருக்கிறார் கருணாஸ். மறுநாள் நான் கல்லூரிக்குச் சென்றபோது, 'ஏய் கிரேஸ்... உன்னைத் தேடி காதுல கடுக்கன் மாட்டிக்கிட்டு, அவர் வந்திருந்தாரு. ஏதோ 'வாய்ஸ் பேங்க்’ வெச்சுருக்காராம். அன்னிக்கு நீ ஸ்டேஜ்ல பாடின 'பூப்பூக்கும் ஓசை...’ பாட்டு அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததாம். அவரோட 'ஆல்பம்’ல பாட வைக்கணும்னு சொல்லி போன் நம்பர் கொடுத்துட்டுப் போயிருக்கார்!’ என்று கடகடவென ஒப்பித்தாள் ஒரு தோழி.

வீட்டில் லைட் மியூசிக், ஆல்பம் இவற்றுக்கெல்லாம் பெரிய 'தடா’ என்பதால் நான் மறுக்க... 'ஒரு ஃபார்மாலிட்டிக்காச்சும் பார்த்துட்டு வரலாம்டி...’ என்று வற்புறுத்தி அழைத்துச் சென்றார்கள் தோழிகள். அங்கு சென்ற பின் அவருடைய பேச்சு, அவர் ஆல்பத்தில் பாடும் விருப்பத்தை உண்டாக்கியது. அடுத்த ஆறு மாதங்களில் ஆல்பம் வேலைகளுக்காக தினமும் அவர் அலுவலகத்துக்குப் போக வேண்டிய சூழல். எந்த வேலையாக இருந்தாலும் மாலை 6.30-க்குள் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்பது அப்பாவின் ஆர்டர். அன்று ரெக்கார்டிங் நீண்டு... மணி ஆறரையை நெருங்கிக்கொண்டு இருந்ததால்... பயங்கரப் படபடப்பு. அதைப் பயன்படுத்திக் கொண்டு, 'நான் பைக்ல டிராப் பண்ணட்டுமா..?’ என்றார் இவர். கிளம்பினோம். ஆனால், பைக் நேராக மெரினாவில் போய் நின்றது.

'உன்னைக் காதலிக்கிறேன். உனக்குச் சம்மதம்னா கல்யாணம் பண்ணிக்கலாம். நீ 'நோ’ சொன்னாலும் பரவாயில்லை... நான் தற்கொலை எல்லாம் பண்ணிக்க மாட்டேன்!’ என்று சிரித்தார்.

'நமக்குள்ள ஃப்ரெண்ட்ஷிப் மட்டும்தான்!’ என்று அன்று கிளம்பிவிட்டேன். ஆனால், எங்கள் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியபோதுதான்... அவரை நான் காதலிப்பதை உணர்ந்தேன். வீட்டின் சம்மதம் நிச்சயமாகக் கிடைக்காது என்று தெரிந்ததால், நண்பர்கள் முன்னிலையில் பதிவுத் திருமணம் நடந்தேறியது.

என்னவரே...என்னவரே...

இருவரும் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தோம். 'சரிகம’ என்ற பெயரில் இருந்த அவரின் மியூசிக் ஆர்கெஸ்ட்ரா குழு, எங்கள் திருமணத்துக்குப் பிறகு 'மேஸ்ட்ரோ’ என்று பெயர் மாறியது. கருணா உருவாக்கிய 'ஓகே லா’ ஆல்பம், அவருக்கு சினிமா என்ட்ரி கொடுத்தது. காதில் கடுக்கன், கழுத்தில் புரளும் முடி என இருந்த கருணாவின் படத்தை, டைரக்டர் பாலா சார் 'ஓகே லா’ ஆல்பத்தின் கவர் பேஜில் பார்த்துவிட்டு, 'நந்தா’வில் 'லொடுக்குப்பாண்டி’ வாய்ப்புத் தந்தார். அந்த நாட்களில் ஆர்க்கெஸ்ட்ரா, நடிப்பு என்று இரண்டையும் பேலன்ஸ் செய்து வெற்றிப்படிகளில் ஏறிக் கொண்டிருந்த கருணாவின் ஒவ்வொரு முயற்சியிலும், உழைப்பிலும் நானும் உடன் இருந்த பெருமையும், நிறைவும் எனக்குண்டு.  

திருமணமான புதிதில் சமையலுக்கும் எனக்கும் ரொம்பத் தொலைவு. இன்றோ கரூரில் இயங்குகிற எங்கள் ஹோட்டலில் ரெகுலராகத் தயாராகிற பத்து வகையான உணவு வகைகளுக்கும் நான்தான் டிப்ஸ் கொடுக்கிறேன். சமையலில் நான் அந்தளவுக்கு முன்னேறியதற்குக் காரணம்... கருணாதான்! ஷூட், ஃபங்ஷன் என்று அவர் செல்லும் இடங்களில் எல்லாம், ஏதாவது சாப்பாடு ருசியாக இருந்தால், அதைத் தயார் செய்தவர்களைத் தேடிக் கிச்சனுக்கே சென்றுவிடுவார். 'அருமையா இருந்தது!’ என்று அவர்களைப் பாராட்டிவிட்டு, 'இதை எப்படி செஞ்சீங்கனு என் மனைவிக்கு கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்...’ என்று போனில் அவர்களை என்னோடு பேச வைப்பார். பின் வீட்டுக்கு வந்தவுடன், 'இந்த சண்டே... அதை நீ வீட்டுல செய்யேன்..!’ என்பார். அப்படித்தான் எனக்கு அத்தனை சமையலும் அத்துப்படி ஆனது.

சென்னையைச் சுற்றி எங்கே ஷூட் நடந்தாலும், வீட்டுச் சாப்பாடுதான் வேண்டும் அவருக்கு. சில நேரங்களில் ஷூட் முடித்துத் திரும்புகிற நேரம் அதிகாலை ஐந்து மணியாக இருந்தாலும், அந்த நேரத்திலும், 'ரெண்டு இட்லி உன்னோட கையால ஊத்திக்கொடேன்!’ என்று அவர் கேட்டுச் சாப்பிடும்போது, என் மனதுக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்.

என்னுடைய இந்த ஹேர் ஸ்டைல்கூட அவரின் சாய்ஸ்தான். ஆரம்பத்தில் நான் நீளமான முடிதான் வைத்திருந்தேன். 'ஹேர்-ஐ ஷார்ட் செய்துக்கோப்பா... அதுதான் உன் புரொஃபஷனுக்கு இன்னும் அட்ராக்ஷனா இருக்கும். உனக்குதான் டான்ஸ் நல்லா வருமே... ஸ்டேஜ்ல பாடும்போது கொஞ்சம் டான்ஸ் மூவ்மென்ட்ஸும் கொடு!’ என்று என்னைச் செதுக்கியவர் அவர்தான்.

'நீ லைட் மியூசிக், சினிமா பாடல்கள் பக்கம் போகவே கூடாது. மியூசிக்ல பிஹெச்.டி., வரைக்கும் படிக்கணும். உனக்கு அருமையா ஒரு பையனை பார்க்கிறோம்!’ என்று என் மீது அன்பு பொழிந்த என் அப்பாவுக்கு, என் திருமணத்தின் மூலம் நான் கொடுத்த அதிர்ச்சி பெரிது. 'இனி என் அப்பாவை சந்தோஷப்படுத்தவே முடியாமல் போய்விடுமோ...’ என்று நான் அழுத இரவுகள் பல. ஆனால், இன்று கருணாவின் உழைப்பும், வளர்ச்சியும் என் அப்பாவின் ஆசீர்வாதத்தையும் அன்பையும் எங்களுக்குப் பெற்றுத் தந்துள்ளது. இப்போதெல்லாம் எப்போதும் தன் மருமகனை மெச்சிக்கொண்டே இருக்கிறார் என் அப்பா!

சொல்லுங்கள்... கிரேஸ் கொடுத்து வைத்தவள்தானே?!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism