Published:Updated:

வேலு பேசறேன் தாயி !

அது ஆறுதல் இல்ல..அசரீரி !வடிவேலு ஓவியம் : கண்ணா

வேலு பேசறேன் தாயி !

அது ஆறுதல் இல்ல..அசரீரி !வடிவேலு ஓவியம் : கண்ணா

Published:Updated:

நகைச்சுவை புயலின் நவரச தொடர்

##~##

''நீ பெரிய ஆளா வருவடா... காரு, பங்களானு பெரிசா சம்பாதிப்பே... நாங்கெல்லாம் ஒன்னய வந்து பாக்க, காத்துக் கெடக்குற காலம் வரும் பாருனு நான் சொன்னது ஒனக்கு ஞாபகம் இருக்காப்பா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எப்புடிம்மா அந்த வார்த்தைகள மறக்க முடியும்..? சொத்துனு வெச்சுருந்த ஒரேயரு சைக்கிளை அப்பா வித்துட்டதுக்காக நா தேம்பித் தேம்பி அழுதப்ப, நீ சொன்ன வார்த்தம்மா இது. அன்னிக்கு ஏதோ ஆறுதலுக்காக சொல்றேன்னு நெனச்சேன். இன்னிக்குத்தேன் நீ சொன்னது ஆறுதல் இல்ல... அசரீரினு புரியுது!''

அம்மாவும் நானும் இப்போ நெறய்ய பேசுறோம். பண்டது பழையது, சொந்தஞ் சொடுசுக, நல்லது கெட்டதுனு எதையும் விட்டு வைக்காம பேசுறோம். படுத்தபடுக்கையா கெடந்த தாய, நல்லபடியா மீட்டு எடுத்துக் கொண்டாந்த பெறகு, என்னோட பேச்சுத்தேன் அம்மாவுக்கு ட்ரீட்டுமென்ட்டு.

இருவத்தி நாலு மணி நேரமும் நடிப்பு, காமெடி, டிராவல்னு அலையா அலைஞ்ச காலத்துலயெல்லாம் அம்மாகிட்ட பேச நேரமே இல்லாமப் போச்சு. ஆனா, அதுக்கெல்லாம் சேத்துவெச்சு இப்போ பேசிக்கிட்டு இருக்கேன். சொத்து, சொகம் செல்வாக்குங்கிறது தாயோட தலைமாட்டுலதேன் இருக்குங்கிறது... இப்போதேன் புரியுது.

அப்போ எனக்கு பதினெட்டு வயசு. அம்மா நெருப்புல வெந்து, இட்லி சுட்டு, விக்கிறதுக்காக எங்க தலையில கட்டி விடுவாக. ஊரெல்லாம் கூவிக்கூவி வித்தாலும்... உருப்படியா கையில ஏதுந்தேறாது. தொண்டத் தண்ணி வத்தி, காய்ஞ்ச இட்லியும் கருகிப்போன மூஞ்சியுமா வீட்டுக்கு வருவேன். 'இட்லி விக்காட்டி என்ன ராசா கவலை... இந்த இட்லியில எல்லாம் ஒன்னோட பேருதேன் எழுதி இருக்குபோல... ஓம்பேருக்கான இட்லிய, ஊர்க்காரவுக எப்ட்ரா சாப் புட கொடுத்து வைக்கும்?’னு சொல்லி, ஆறுதலா அந்த இட்லிகள அம்மா ஊட்டிவிடும். இன்னிக்கு நெனச்சாலும் கண்ணுல நீர்க்கோக்குது.

வேலு பேசறேன் தாயி !

இட்லி யாவாரம் சரிப் படலனு நானும் எந்தம்பிகளும் கண்ணாடிக் கடைக்கு வேலைக்கு போக ஆரம்பிச்சோம். ஈய தூக்குல பழைய சோறும்... சின்ன வெங்காயமும் போட்டு அம்மா அனுப்பி வைக்கும். தக்காளியையும் பச்ச மொளகாயையும் நல்லா நச்சு, கொஞ்சம் வெங்காயம், பொடியளவு உப்பு சேர்த்து அம்மா செய்ற அந்தத் தொவையல்... இப்பவும் எச்சு ஊற வெக்குது.

மூணு மைலுக்கும் மேல தம்பிகளோட நடந்து போறப்ப மேம்மூச்சு கீமூச்சு வாங்கும். தம்பிங்க நடக்க முடியாம சோந்து சோந்து ஒக்காருவாக. சொந்தமா ஒரு சைக்கிளு வாங்கினா... சுலுவாப் போயிடலாமேனு மனசுக்குள்ள ஆசை. ஆனா, அம்புட்டுக் காசுக்கு எங்க போறது? சாதாரணமாவே எனக்கு சைக்கிளு ஓட்டணும்னு கொள்ள ஆசை. வேலை இல்லாத நாள்ல வாடகைக்கு சைக்கிளு எடுத்து ஊருலகம் சுத்தி, ஒரு ஆத்தாகிட்ட அடிவாங்குன கதைய ஏற்கெனவே ஒங்ககிட்ட சொல்லிருக்கேன்.

சொந்தமா சைக்கிளு வாங்கணும்கிற ஆசை நாளுக்கு நாளு அதிகமாயிடிச்சு. கண்ணாடிக் கடையில ஓவர் டூட்டி பாத்து அம்மா, அப்பாவுக்குத் தெரியாம கொஞ்சங் கொஞ்சமா காசு சேக்க ஆரம்பிச்சேன். மொத்தமா அறுபது ரூபா சேந்தவொடனே, ஊரெல்லாம் தேடிப்புடிச்சு ஒரு சைக்கிளு வாங்கினேன். பழைய சைக்கிளுதேன்... அதக் கழுவிக் காயப்போட்டு, புத்தம் புதுசாக்கி திருவிழா கொண்டாடாததுதேன் பாக்கி. தம்பிகளுக்கும் சந்தோசம் தாங்கல. முன்னால ஒரு தம்பி, பின்னால ஒரு தம்பினு ஏத்திக்கிட்டு... கண்ணாடி கடை வேலைக்குப் போவேன்.

சைக்கிள வேகமா மிதிச்சு, கை ரெண்டையுங் காத்துல மெதக்க விட்டு புயலா பறக்குற பரவசத்தை வார்த்தையால சொல்ல முடியாது. அந்த சைக்கிளு எங்கைக்கு வந்த ஒடனே... வாழ்க்கையே சந்தோசமா மாறிடிச்சு.

ஒருநாளு முக்கியமான சோலியா மதுரைக்குப் போயிருந்தேன். தம்பிகளுக்குப் பலகாரம் பண்டம் வாங்கிட்டு சந்தோசமா வீட்டுக்கு திரும்பி வந்தேன். வாசல்ல குதுர மாதிரி நிக்கிற சைக்கிள காணல. தம்பிங்க யாரும் எடுத்து ஓட்டுறாங் களோனு அங்கேயும் இங்கேயுமா தேடுறேன். எங்கேயும் காணல.

''என்னப்பா தேடுறே..?''னு கேட்டாரு அப்பா.

''சைக்கிளக் காணேம்ப்பா...''னு சொல்றேன்.

கண்ணு கலங்கினபடியே... ''தப்பா எடுத்துக் காதடா தம்பி... நாந்தேன் மொடையா இருக்குனு சைக்கிள வித்துப்புட்டேன்...''னு அப்பா சொன்ன ஒடனே, எனக்கு அழுக தாங்கல.

''ஒங்களோட காசுலயா சைக்கிளு வாங்குனேன்... என்னோட காசுல வாங்குன சைக்கிள ஏன் வித்தீங்க''னு அழுகையும் ஆதங்கமுமா சண்டை போட்டேன். அப்போதேன் என்னையச் சமாதானப் படுத்தி மடியில படுக்கப் போட்டுக்கிட்டுப் பேசிச்சு அம்மா... ''சாதாரண சைக்கிளுக்காக ஏண்டா சங்கடப்படுறே... வருங்காலத்துல காரு, பங்களானு நீ என்னென்னமோ வாங்கிக் குவிக்கப்போற பாருடா..!''னு அம்மா சொன்னாலும், எனக்கு ஆத்திரம் தாங்கல. கோவத்தோட எழுந்து போயிட்டேன். அப்போ ஒரு கிலோ அரிசி மூணு ரூபா. சைக்கிளு வித்த காசுல, இருவது கிலோ அரிசி வாங்கிட்டு வந்தாரு அப்பா. ஒரு மாச வயித்துப் பாட்டுக்கு வழி பண்ணுன நிம்மதி அவருக்கு. சைக்கிளு போயிடிச்சேங்கிற வயித்தெரிச்சல் எனக்கு!

இருதய நோயால அல்லாடுன அப்பாவ, ஆசுபத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போனப்ப... ஒரு லட்ச ரூபா தேவைப்பட்டுச்சு. கண்ணாடிக் கடையில அஞ்சுக்கும்... பத்துக்கும் வேலை பாத்த நாங்க, அம்புட்டுப் பணத்துக்கு எங்க போவோம்? கையில, காதுல கெடந்தத எல்லாம் வித்துக் கொடுத்தும் அப்பாவக் காப்பாத்த முடியல. குடும்ப பாரம் எந்தலையில விழுந்துச்சு. அம்மா, மூணு தம்பிங்க, ரெண்டு தங்கச்சிங்கனு சின்ன வயசுல சொமந்த பாரம் ரொம்ப அதிகம். ஆனா, இன்னிக்கு அந்த வாழ்க்கைய நெனச்சா, இப்பேர்ப்பட்ட புயலைக் கடந்து எப்புடி வந்தோம்னு என்னயவே கிள்ளிப் பாக்கத் தோணுது.

பொறந்ததுல இருந்தே வசதியா இருந்துட்டோம்னா, அந்த வாழ்க்கை எப்புடி நமக்கு இனிக்கும்? 'அழுத கொழந்தைக்குத்தேன் ஆகாரம் செரிக்கும்'னு சொல்வாக. அந்த மாதிரி கடனும் கஷ்டமுமா அல்லாடி, இருப்பமா... சாவமானு போராடி, ஒருவழியா வாழ்க்கையோட சூட்சும கயித்த புடிக்கிறதுதேன் சொகம். வானத்துல இருந்து குதிச்ச மாதிரி பிரமாண்டமா வாழுறது, அலையே இல்லாத கண்ணாடித் தொட்டிக்குள்ள மீனு வாழுற மாதிரி.

அம்மாவும் நானும் பழைய நெனவுகள எல்லாம் அசைபோட்டு பேசிக்கிட்டு இருந்தப்ப, இப்புடிக் கேட்டேன்...

''அம்மா, கார், பங்களா எல்லாம் வாங்குவேன்னு அன்னிக்கு சொன்னியே... வெறுமனே வார்த்தைக் காகச் சொன்னியா... இல்ல, நெஜமாவே நம்பிக்கையா சொன்னியா?''

சிரிச்சுக்கிட்டே அம்மா சொன்னுச்சு... ''இப்ப வும் சொல்றேண்டா... நீ இன்னும் பெரியாளா வருவ... ஒலகமே ஒன்னோட காமெடியப் பெருசா பேசும்டா. நாடு விட்டு நாடு பறக்குற அளவுக்கு ஓஹோனு இருப்படா!''

- நெறய்ய பேசுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism