Published:Updated:

களத்தில் விகடன்

'தானே' துயர் துடைத்தோம் !

களத்தில் விகடன்

'தானே' துயர் துடைத்தோம் !

Published:Updated:
##~##

கடலூர் மாவட்டம், நொச்சிக்காடு கிராமத்துப் பெண்களுக்கு 20 தையல் இயந்திரங்களை வாங்கிக் கொடுத்து, அவர்களின் தினசரி வருமானத்துக்கு வழி செய்த 'விகடன் தானே துயர் துடைப்பு அணி’, அதே பெண்களுக்கு இன்னொரு தொழில் வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்துள்ளது. அது, சானிடரி நாப்கின் உருவாக்கும் பயிற்சி!

மாத விலக்கு நாட்களை சமாளிக்க, நகர்ப்புறங்களில் வீதிக்கு வீதி நாப்கின்கள் கிடைக்கின்றன. ஆனால், வறுமையும் அறியாமையும் சூழ்ந்த கிராமத்துப் பெண்களில் பெரும்பாலானவர்கள்... இன்றும் பழைய துணிகள் மூலம்தான் அத்துயரம் களைகின்றனர். அடிப்படைத் தேவைகளுக்கே திண்டாடும் நிலையில், நாப்கின் செலவுகளை அவர்களால் எதிர்கொள்ளவே முடியாது என்பதுதான் உண்மை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதனாலேயே நாப்கின்களை மிகக் குறைந்த விலையில் தயாரித்து வழங்கும் சுயதொழில் திட்டத்தை அவர்களிடையே அறிமுகப்படுத்த முடிவெடுத்தோம். கோயம்புத்தூரைச் சேர்ந்த முருகானந்தம், பயிற்சி அளிக்க முன்வந்தார். நம்முடைய பங்களிப்பாக நாப்கின் தயாரிக்கும் எளிய இயந்திரம் மற்றும் மூலப்பொருட்களை வாங்கித் தந்தோம்.

''இது என்னாடி இது... புதுசா இருக்கு. ஒன்னியும் புரியலயே!''

களத்தில் விகடன்

- இயந்திரத்தைப் பார்த்ததும் அப்பெண்களின் கண்களில் ஆச்சர்யம். இயந்திரத்தின் உதிரி பாகங்களை ஒன்றிணைக்க... கோவை, ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸில் இருந்து ராஜன் மற்றும் மேகநாதன் ஆகியோர் நொச்சிக்காடு வந்திருந்தனர்.

ஒரு கம்ப்ரஸர், அச்சு இயந்திரம், சீலிங் இயந்திரங்கள் எட்டு, காட்டன் பஞ்சுகளை மிருதுவாக்கும் கிரைண்டர் ஆகியவை இணைக்கப்பட்டன. தயாரிக்கப்பட்ட நாப்கின்களில் கிருமி அண்டாமல் இருக்க புற ஊதாக் கதிர்ப் பெட்டகம் ஒன்றும் இருந்தது. இல்லத்தரசிகள் கலைவாணி, வளர்மதி, பொறியியல் மாணவி ஜெயபிரதா, பத்தாம் வகுப்பு மாணவிகள் சாந்தி மற்றும் ஷீலா ஆகியோருக்கு முதல்கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது.

''இறுகிய பஞ்சுகளை கிரைண்டரில் அரைத்து மிருதுவாக்கி, அதில் இருந்து 10 கிராம் எடுத்து, ஒவ்வோர் அச்சிலும் வைத்து அழுத்தம் தர வேண்டும். அழுத்தப்பட்ட பஞ்சுகளைப் பக்குவமாகப் பிரித்து, அதன் பின் பக்கத்தை நீல நிறத் துணியில் வைத்து ஒட்ட வேண்டும். அடுத்து, பஞ்சுடன் கூடிய நீல நிறத் துணியை காட்டன் உறையில் போர்த்தி சீலிங் இயந்திரம் மூலம் அனைத்துப் பக்கங்களிலும் சீல் செய்ய வேண்டும். கிருமித் தொற்று ஏற்படாமல் இருக்க, சீல் செய்யப்பட்ட சானிடரி நாப்கின்களை புற

களத்தில் விகடன்

ஊதாப் பெட்டகத்தில் 120 விநாடிகள் வரை வைத்து பின்பு பேக் செய்ய வேண்டும்'' என்று விளக்கிய ராஜன்,

''ஒரு நாளைக்குக் குறைந்தது 3,000 நாப்கின்கள் வரை தயாரிக்கலாம். ஒரு நாப்கினுக்கான தயாரிப்புச் செலவு 1 ரூபாய் 50 பைசா. கூடுதலாக ஒரு ரூபாய் வைத்து விற்றாலும், மாதம் ஒன்றுக்கு சராசரியாக 15 ஆயிரத்துக்குக் குறையாமல் வருமானம் ஈட்டலாம். பிரசவ காலத்தில் பயன்படும் பெரிய அளவு நாப்கின்களையும் இந்த இயந்திரத்தின் மூலமே தயாரிக்கலாம்'' என்றும் சொன்னார்.

இயந்திரத்தை உருவாக்கிய முருகானந்தனிடம் நாம் பேசியபோது, ''கடையில் விற்கும் நாப்கினைப் பிரிச்சுப் பார்த்ததும், நானே நாப்கின் தயாரிக்கலாம்னு முடிவு பண்ணி களத்துல இறங்கி னேன். அமெரிக்காவில் இருந்து ஃபைன் மரப் பஞ்சை இறக்குமதி செஞ்சேன். ஆறு மாசம் போராடி இந்த இயந்திரத்தையும் பிரத்யேகமா உருவாக்கினேன். 'சமூக மாற்றத்துக்கான சிறந்த கண்டுபிடிப்பு’னு இது அறிவிக்கப்பட்டிருக்கு. இந்தியா முழுக்க 643 இயந்திரங்களைத் தயாரிச்சுக் கொடுத்திருக்கேன்'' என்றார் பெருமிதத்தோடு!

நொச்சிக்காட்டைச் சேர்ந்த இல்லத்தரசி வளர்மதி நம்மிடம், ''இத்தனை வருஷத்துல நாப்கினை டி.வி. விளம்பரத்துல மட்டும்தான் பார்த்திருக்கோம். அதை வாங்குற வசதிகூட எங்களுக்குக் கிடையாது. இப்ப அதையே தயாரிக்கிற சக்தியை விகடன் வாசகர்கள் எங்களுக்குக் கொடுத்திருக்காங்க. நொச்சிக்காடு மக்கள் சார்பா எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி'' என்றார் நெகிழ்வாக.

அத்தனை நன்றிகளும் விகடன் வாசகர்களுக்கே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism