Published:Updated:

'பொம்பளைங்க அரும, பெரும தெரிஞ்சு நடந்துக்கோங்கய்யா!'

ஓவியம்: எஸ்.சிவபாலன் கே.கே.மகேஷ்,படங்கள்: பா.காளிமுத்து

'பொம்பளைங்க அரும, பெரும தெரிஞ்சு நடந்துக்கோங்கய்யா!'

ஓவியம்: எஸ்.சிவபாலன் கே.கே.மகேஷ்,படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
##~##

பெண்கள் இல்லாத வீடுகளில் நிகழும் தடுமாற்றங்களையும், தவறுகளையும் பார்த்துத்தான் 'பெண்கள், வீட்டின் கண்கள்!’ என்று சொல்லியிருப்பார்கள் போல! அதை முழுவதுமாக உணர்ந்து, தவித்து, இப்போது உயிர் துறந்திருக்கிறார் விவேகானந்தன்!

மதுரை, கண்ணனேந்தல் எம்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் விவேகானந்தன். சப்-இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டார். மகள், திருமணமாகி வேறு ஊரில் வசிக்கிறார். மகனுக்கு திருமணமாகி, அவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குப் போய்விட்டார் மருமகள். ஆக, பெண்கள் இல்லாத அந்த வீட்டில் கடைசியாக விவேகானந்தனும், மகன் விக்னேஸ்வரன் மட்டுமே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில்... விபத்து ஒன்றில் சிக்கி, கிட்டத்தட்ட கோமா நிலைக்கு மகன் சென்றுவிட, விவேகானந்தன் தாயுமானார். படுக்கையில் இருக்கும் மகனிடம் அன்பு காட்டவும், பணிவிடை செய்யவும் அவரால் முடிந்தது. ஆனாலும் ஏதோ ஒரு குறை. அதேபோல, தள்ளாத வயதில் இருந்த தன்னிடம் அன்பு காட்ட ஆளில்லையே என்ற ஏக்கமும் அவருக்கு இருந்தது. மே 31 அன்று இரவு மகனை கருணைக் கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டார் விவேகானந்தன்.

'பொம்பளைங்க அரும, பெரும தெரிஞ்சு நடந்துக்கோங்கய்யா!'

''பொம்பள இல்லாத வீடு... வீடா தம்பி?'' என்று பொங்கி வரும் அழுகையை அடக்கிக் கொண்டு கேட்கும் விவேகானந்தனின் நண்பரும், 80 வயதைக் கடந்தவருமான அழகரின் கேள்விக்கு நம்மிடம் பதிலில்லை.

''பாவம் அவரு ரொம்பக் கஷ்டப்பட்டுப் போயிட்டாரு. யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு மிடுக்கா திரிஞ்ச மனுஷனுக்கு, வீட்டு வேலை எதுவும் தெரியாது. எல்லாத்தையும் அவரோட சம்சாரம் தமிழரசிதான் பார்த்துக்கிடும்.

படுத்த படுக்கையான மகனை, பல லட்சம் செலவழிச்சும் குணப்படுத்த முடியல. டாக்டர்களும் கையை விரிக்க, வீட்டுக்குத் தூக்கியாந்துட்டாங்க. அந்தம்மாதான் விழுந்து விழுந்து கவனிச்சுது. அவங்களுக்கு ஏற் கெனவே பிரஷர். பையனை நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டே இருந்ததால, உடம்பு மோசமாகி... ஹார்ட் அட்டாக் குல போய்ச் சேர்ந்துட்டாங்க.

'பொம்பளைங்க அரும, பெரும தெரிஞ்சு நடந்துக்கோங்கய்யா!'

மனைவி இறந்ததும், இந்த மனுஷன் ரொம்பவே இடிஞ்சி போயிட்டாரு. சமைக்கத் தெரியாது. கஷ்டப்பட்டு சோறு மட்டும் வடிப்பாரு. பக்கத்து வீட்டுக்காரங்கதான் குழம்பு கொடுத்து உதவுவாங்க. அதைச் சாப்பிட உட்கார்ற நேரத்துல, படுக்கையிலயே பையன் ஏதாவது பண்ணிடுவான். பழக்கம் இல்ல பார்த்தீங்களா? அதைச் சுத்தம் பண்ணிட்டு வந்து அவரால சாப்பிட முடியாது. ஆனாலும், பையன் பாசத்துல தனி ஆளா போராடிட்டே இருந்தாரு.

நாளாக நாளாக பையனுக்கு முதுகெல்லாம் புண்ணாயிடுச்சி. வீட்டுக்குள்ள இருக்க முடியாத அளவுக்கு வாடை கிளம்பிருச்சு. ஒரு கட்டத்துல அந்தப் பையனே, 'என்னைக் கொன்னுருப்பா!’னு புலம்பியிருக்கான். இதை எல்லாம் என்கிட்ட சொல்லி, 'மகராசி எனக்குத் துணையா இல்லாம இப்படித் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாளே’னு குழந்தை மாதிரி அழுவாரு விவேகானந்தன்'' என்ற அழகரின் பேச்சுக்கு தடைபோட்டது, முட்டிக் கொண்டு வந்த கண்ணீர்.

பேச்சைத் தொடர்ந்த அழகரின் மகன் கண்ணன், ''30-ம் தேதி ராத்திரி என்னோட பலசரக்குக் கடைக்கு வந்தார் விவேகானந்தன். அவருக்கு என் புள்ளைங்கனா உசுரு. 'எங்கப்பா, என் பேரப்புள்ளைங்க?’னு கேட்டாரு. 'மாமனாரோட ஊருக்குப் போயிருக்காங்கய்யா’னு சொன்னேன். ஓங்கித் தலையில அடிச்சுக்கிட்டவரு, 'சே புள்ளைகளைப் பார்த்துட்டுப் போயிடலாம்னு பார்த்தேனே...’னு புலம்பினாரு. 'அதுக்கு எதுக்குய்யா தலையில அடிக்கிறீங்க. அதான் ரெண்டு, மூணு நாள்ல வந்துருவாங்கள்ல’னு சொன்னேன். அப்புறம் எங்கப்பாவ கையப்பிடிச்சு தன்னோட வீட்டுக்கு கூட்டிட்டிப் போனாரு...'' என்று நிறுத்த, மீண்டும் தொடர்ந்தார் அழகர்...

''வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போய் மகனுக்குத் துருநூறு போடச் சொன்னாரு. போட்டு முடிச்சதும் எனக்கு ஒரு கிளாஸ் தண்ணி (மது) கொடுத்தாரு. மறுபடியும் குடிக்கச் சொன்னாரு. 'யப்பா என் வயசுக்கு இதுவே அதிகம்’னு சொல்லிட்டு வந்துட்டேன். வீட்டு வாசல் வரைக்கும் கொண்டு வந்து

'பொம்பளைங்க அரும, பெரும தெரிஞ்சு நடந்துக்கோங்கய்யா!'

விட்டுட்டுப் போன மனுஷன் ராத்திரியோட ராத்திரியா இந்தக் காரியத்தைப் பண்ணிட்டாருப்பா'' மறுபடியும் வெடித்து அழுகிறார்.

''பையனுக்கு விஷத்தைக் கொடுத்துட்டு, அவரும் தற்கொலை பண்ணிக்கிட்டாரு. காலையில, வீட்டு வாசல் தெளிச்ச எதிர்வீட்டு பொண்ணுதான், வேப்பமரத்துல அவர் தூக்குப் போட்டு தொங்கறதைப் பார்த்திருக்கு'' என்று அதிர்ச்சி விலகாமல் சொன்ன அழகர்,

''வயசான காலத்துல, ஆம்பள செத் துட்டு... பொம்பள இருந்துடலாம். ஆனா, பொம்பள போயிட்டா ஆம்பளையால இருக்க முடியாதுனு சொல்லுவாங்க. இதுவே இந்த வீட்டுல ஒரு பொண்ணு இருந்திருந்தா, ரெண்டு உசுருக போயிருக்குமா..? பொம்பள இல்லாத வீடு சுடுகாடுனு சும்மாவா சொன்னாங்க? இதோ இப்ப இங்க அது நடந்துருச்சே. வீட்டுக்கு வீடு சமைச்சுப் போடவும், சுக துக்கம் பகிர்ந்துக்கவும் ஒரு பொம்பளை இல்லைனா, உலகமே சுடுகாடாதான் இருக்கும். வீட்டுல இருக்கிற பொம்பளைங்க அரும, பெரும தெரிஞ்சு நடந்துக்கோங்கய்யா!'' என்றார் அழகர் கண்ணீர் துடைத்தபடி!

தேவை, பாஸிட்டிவ் எண்ணம்!

மதுரையைச் சேர்ந்த மனநல நிபுணர் வி.கே.அரவிந்த், இந்த கொடுமையான சம்பவம் பற்றி பேசும்போது... ''தனி ஆளாக மகனைப் பராமரித்து, தன்னுடைய தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டு, வயதான ஒரு ஆண் வாழ்வது... மிகவும் கஷ்டமான காரியம். பேரக்குழந்தைகள் இருந்தாலாவது, ஒரு தெம்பு கிடைத்திருக்கும். இங்கே அதுவும் இல்லாமல், எந்தவித பொழுதுபோக்கும் இல்லாமல் போனதுதான் விவேகானந்தனின் துரதிர்ஷ்டம். இதுபோன்ற சூழ்நிலையில்தான் மனஅழுத்தம் பல மடங்கு கூடிப்போய் எதிர்மறை சிந்தனைகளும், தற்கொலை எண்ணமும் அதிகரிக்கும்.

'பொம்பளைங்க அரும, பெரும தெரிஞ்சு நடந்துக்கோங்கய்யா!'

விவேகானந்தன் போன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது. அப்படி வந்துவிட்டால்...  தனிமையில் போராடாமல், பிரத்யேக காப்பகங்கள் அல்லது தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடலாம். ஏழைகளாக இருந்தால், சுயமாக தன்னுடைய வேலைகளைச் செய்ய முடியாதவர்களுக்கு அரசின் நிதி உதவி கேட்டு மாவட்ட மறுவாழ்வு மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

'கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது! நாம் நலமுடன் இருந்தால்தான், மற்றவர்களைக் கவனித்துக் கொள்ள முடியும்' என்கிற பாசிட்டிவ் எண்ணத்தோடு எப்போதும் இருப்பதுதான் பெரியவர்களுக்கு நல்லது'' என்று சொன்னார் அக்கறை பொங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism