Published:Updated:

பஞ்சரான வாழ்க்கை வழிகாட்டிய வல்கனைசிங் !

விதியை வென்ற விஜயலட்சுமிஆர்.குமரேசன் படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

பஞ்சரான வாழ்க்கை வழிகாட்டிய வல்கனைசிங் !

விதியை வென்ற விஜயலட்சுமிஆர்.குமரேசன் படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Published:Updated:

பிஸினஸ் வெற்றிக் கதைகள்

உன்னால் முடியும் பெண்ணே!

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சோம்பல், சோர்வு என்ற சின்னச் சின்ன ஆணிகளால்... பஞ்சராகிப் போன பொருளாதாரச் சக்கரத்தை ஓட்ட வழி தெரியாமல், ஓய்ந்து கிடக்கிறார்கள் எண்ணற்ற தோழிகள். அவர்களுக்கு மத்தியில், பல காரணங்களால் பஞ்சராகிப் போன தனது பொருளாதாரச் சக்கரத்தில், 'உழைப்பு' என்கிற காற்றை நிரப்பி, வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார் கரூரைச் சேர்ந்த விஜயலட்சுமி.

ஆம், வாகனங்களுக்கு பஞ்சர் பார்ப்பதன் மூலமாக பணம் பார்த்துக் கொண்டிருக்கும் இவர், ஆண்களுக்கு நிகராக டிராக்டர், ஜே.சி.பி. என கனரக வாகனங்களின் டயர்களைக்கூட அசால்டாக கழற்றி மாட்டுகிறார்!

கரூரிலிருந்து செல்லும் திண்டுக்கல் சாலையில் சுக்காளியூர் செக் போஸ்ட் அருகே சாலையோரம் இருக்கிறது 'லோகநாயகி வல்கனைசிங் வொர்க்ஸ்’. ஆஸ்பெட்டாஸ் கூரையில் பழைய டயர்கள், டியூப்கள் சிதறிக் கிடக்க, கழற்றிப் போட்ட டயர் மீது அமர்ந்து டியூப்க்கு பஞ்சர் போட்டுக் கொண்டிருந்தார் விஜயலட்சுமி.

''வாழ்க்கையை ஓட்டுறதுக்கு ஒவ்வொருத்தரும் ஒரு தொழிலை செய்றாங்க. நான் இதைச் செய்யுறேன். அவ்வளவுதான். இதுல எழுதறளவுக்கு என்ன பண்ணிட்டேன்?!''

பஞ்சரான வாழ்க்கை வழிகாட்டிய வல்கனைசிங் !

- வெள்ளந்தியாக ஆரம்பித்தவர், தனது கதையைச் சொல்லத் தொடங்கினார்.

''16 வயசுல கல்யாணம் செஞ்சு கொடுத்துட் டாங்க. ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. வூட்டுக்காரரு தங்கவேலு... கெவருமென்ட் பஸ் டிரைவர். ஒரு தடவை ஆக்ஸிடென்ட் ஆகி... பலமான அடியோட உயிர் பிழைச்சவரை, ஆஸ்பத்திரியில வெச்சு வைத்தியம் பார்த்து பெரிய போராட்டத்துக்கு அப்புறம்தான் காப்பாத்தினோம். இது நடந்தது... 24 வருஷத்துக்கு முன்ன. அப்ப, அவரை சஸ்பெண்ட் வேற பண்ணிட்டாங்க. ஆஸ்பத்திரி, கேஸு, கோர்ட்னு அலைஞ்ச அலைச்சலை, இப்ப நினைச்சாலும் நடுக்கமா இருக்கு. பட்ட கால்லயே படும்னு சொல்லுவாங்க. அந்த நேரத்துல, பள்ளிக்கூடத்துல படிச்சுகிட்டு இருந்த என் மக லோகநாயகி... குளத்துல மூழ்கி இறந்துட்டா. செத்துப்போன பிள்ளைய நினைச்சு அழறதா, வீட்டுல கெடக்குற புருஷனை நினைச்சு அழறதா... பசிக்கு முகம் பார்த்து அழற மிச்ச ரெண்டு புள்ளைங்கள நினைச்சு அழறதானு தெரியல. இதுக்கு மேல என்ன வந்துடப் போகுதுனு ஒரு கட்டத்துல மனசுக்குள்ள வைராக்கியம் வந்துடுச்சு.

பஞ்சரான வாழ்க்கை வழிகாட்டிய வல்கனைசிங் !

வேலை இல்லாததால வருமானம் போச்சு. கஷ்டமான வேலை எதுவும் பார்க்க முடியாததால வீட்லயே முடங்கிக் கிடந்தாரு. அப்ப அவரு அண்ணன், தம்பிக எல்லாம் வல்கனைசிங் கடை வெச்சுருந்தாங்க. அதனால நாமளும் அப்படி ஒரு கடையை வெக்கலாம்னு சொன்னேன். 'அது ரொம்ப கஷ்டமான வேலை, என்னால செய்ய முடியுமா?’னு தயங்கினாரு. 'நான் இருக்கேன் தைரியமா ஆரம்பிப்போம்!’னு நம்பிக்கை கொடுத்து, சம்மதிக்க வெச்சேன். ஆனா, கடை ஆரம்பிக்க கையில காலணா காசு இல்ல...'' என்பவருக்கு அதற்கான முதல் கிடைத்த விதம்... படுஉருக்கம்.

''அப்பத்தான் எம் மக படிச்ச ஸ்கூல் வாத்தியார் வந்து, 'உங்க மக ஸ்கூல் இன்ஷூரன்சுல ரெண்டு ரூபா கட்டியிருந்துச்சு. இப்ப அது இறந்து போனதால பணம் கொடுப்பாங்க’னு சொன்னாரு. அவ கட்டினது வெறும் ரெண்டே ரூபாதான். அதுகூட அந்த நிமிஷம் வரைக்கும் எங்களுக்குத் தெரியாது. இன்ஷூரன்ஸ்காரங்க 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க. அதை வெச்சுத்தான் கடையை ஆரம்பிச்சோம். செத்தபிறகும் எங்க வாழ்க்கையில ஒளி ஏத்தின அவ பேரையே கடைக்கு வெச்சுட்டோம்'' எனும்போது அவருக்குத் தவிர்க்க முடியாமல் துளிர்க்கிறது கண்களில் நீர்.

''ஆரம்பத்துல வீட்டுக்காரருக்கு உதவியா இருந்து, கொஞ்ச நாள்ல தொழிலை முழுசா கத்துகிட்டேன். அவருக்கும் உடம்பு தேறிவர, அவரை லாரி ஓட்டற வேலைக்கு அனுப்பிட்டு, நானே கடையைப் பார்த்துக்க ஆரம்பிச்சேன். கடை ஆரம்பிச்சு 20 வருஷத்துக்கு மேல் ஆச்சு. ரெண்டு பசங்களுக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுட்டோம். வாடகை வீட்டுல இருந்த நாங்க, சொந்தமா வீடும் கட்டிட்டோம். கொஞ்சம் நெலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயமும் பண்ணுறோம்'' என்ற விஜயலட்சுமி, பஞ்சர் ஒட்டிய டியூப்பை டயரில் பொருத்திவிட்டு மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.

பஞ்சரான வாழ்க்கை வழிகாட்டிய வல்கனைசிங் !

''இப்ப எனக்கு வயசு 42. ஓடியாடி உழைச்சு, வலுவாத்தான் இருக்கு உடம்பு. நானே பஸ் ஸ்டெப்னியை கழட்டி மாட்டி டுவேன். டிராக்டர், லாரினு கழட்டாத டயரே இல்லை. டிராக்டர் ஓட்டுறது, டிரக் ஓட்டுறதுன்னு எதையும் விட்டு வெக்கிறது இல்லை. சிம்பிளா பார்த்தாலும்... தெனமும் 300 ரூபாய்க்கு குறையாம வருமானம் வந்துடும் பஞ்சர் மூலமா. சில நேரத்துல 500, 1000 எல்லாம் வரும். எப்படியும் மாசம் 10 ஆயிரத்துக்குக் குறையாது.

என்னைப் பொறுத்தவரைக்கும் பொம்பளைங்க ஆம்பளை கையை எதிர்பார்த்துட்டு இருக்கக் கூடாது. ஆம்பளைதான் இந்த வேலையைச் செய்யணும், பொம்பளை செய்யக்கூடாதுனு எந்த கணக்கும் இல்ல. உடம்புல வலுவும், மனசுல தெம்பும் இருந்தா பொம்பளைங்க எந்த வேலையையும் செய்யலாங்க!''

- கைகளில் அப்பியிருக்கும் கறை துடைத்துச் சிரிக்கிறார் விஜய லட்சுமி!

- லாபம் வளரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism