Published:Updated:

நாலு வீட்டுச் சாப்பாடு எங்களுக்குப் போதும்... நீ கவலைப்படாதே!''

ஒரு போராளிக்கு உணர்வூட்டிய பெண் ஓவியம்: பாரதிராஜா கி.மணிவண்ணன்

நாலு வீட்டுச் சாப்பாடு எங்களுக்குப் போதும்... நீ கவலைப்படாதே!''

ஒரு போராளிக்கு உணர்வூட்டிய பெண் ஓவியம்: பாரதிராஜா கி.மணிவண்ணன்

Published:Updated:

வணக்கத்துக்குரிய பெண்ணை நினைவுகூரும் பக்கங்கள்

##~##

மதுரை சிறைச்சாலை... பார்வையாளர் பகுதி... கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. தூக்குக் கயிறை எதிர்நோக்கி நின்ற மூன்று தோழர்கள்... அவர்களின் மனைவிகள், குழந்தைகள், கூடவே சக இளம் தண்டனைக் கைதிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ரெண்டொரு நாள்ல தீர்ப்பு வந்துடும். இவங்க மூணு பேருக்கும் தூக்கு கெடைக்கும்னுகூட சொல்றாங்க. நீங்கள்லாம் தைரியமா இருக்கணும்...''

- வக்கீல் என்.டி.வானமாமலை சொன்னதாக, மூவருடைய குடும்பத்தினரிடமும் தெரிவித்தனர் உடனிருந்த தோழர்கள்.

''நாலு வீட்டுக்கு நடந்து ஊர்ச்சாப்பாடு வாங்கியாவது எங்க வயித்தக் கழுவிக்குவோம்... பீடி சுத்தியாவது நம்ம பிள்ளையள கரையேத்திடுவேன். கூடவே நம்ம தோழர்களும் இருக்காங்க... நீ எங்களப்பத்தி கவலப்படாம தைரியமா இரு!''

- ஏழ்மை வதைத்த ஒரு பெண், தீர்ப்புக்குக் காத்திருக்கும் கணவர் வேலாயுதத்திடம் சொன்னார். அந்த வைராக்கிய வார்த்தைகள், பக்கத்திலிருந்து அவற்றைக் கேட்ட சக கைதி ஒருவரின் மன உறுதியை மேலும் நூறு மடங்கு கூட்டியது... அவரது பொதுவாழ்க்கைப் பயணத்துக்கு உரமூட்டியது. போராட்டம் ஒன்றையே சொத்தாகக் கொண்டிருந்த ஒரு சவரத் தொழிலாளி மனைவியின் குரல் அது. அந்தப் பெண்... பாப்பம்மாள். அவர் வார்த்தைகளை அருகில் இருந்து கேட்ட கைதி... 70 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் உரிமைப் போராளி, 'தோழர் ஆர்.என்.கே.' என்றழைக்கப்படும் ஆர்.நல்லக்கண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்!

''அய்யா... உங்ககிட்ட பேசணுமே..?''
- தொலைபேசியில் கேட்டேன்.
''இப்ப வீட்லதான் இருக்கேன்... வாரியளா...?''

நாலு வீட்டுச் சாப்பாடு எங்களுக்குப் போதும்...  நீ கவலைப்படாதே!''

முதிர்ந்த வேப்ப மரமும், உயர்ந்த நெட்டிலிங்க மரங்களும்... கூடவே வாகன இரைச்சலும் சூழ்ந்த வீடு. கதவு திறந்து புன்னகையோடு வரவேற்று, சிவப்பு நாற்காலியில் உட்காரச் சொன்னார்.

''வெயில் அதிகமாயிருக்கே... தண்ணி எதுவும் சாப்புடுறியளா?'' -  கதர் பனியனை சரிசெய்தவாறே கேட்டுவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

''நாம கேட்ட உண்மையான சுதந்திரம் கெடைக்கலனு கம்யூனிஸ்ட் கட்சி 1948-ல சொன்னது. 'வெளிநாட்டான் போயிட்டான்; இப்போ உள்ளூர்ல அடிமையாயிட்டோம்’னு சொன்னதால... கட்சியைத் தடை பண்ணிட்டாங்க. தஞ்சை சதி வழக்கு, கோவை சதி வழக்குனு... கட்சித் தோழர்களையெல்லாம் கைது பண்ணிட்டாங்க. நெல்லை சதி வழக்குல எங்கள தேடவே... நாங்க தலைமறைவாயிட்டோம்.''

- மெல்லிய குரலில் தொடர்ந்தார்.

''அப்புறம் போலீஸ் எங்கள கைது பண்ணி, ஜெயில்ல வெச்சாங்க. நாலு மாசத்துக்கப்புறம் சிலருக்கு விடுதலை, சிலருக்கு ஆயுள் தண்டனையும், மூணு பேருக்கு தூக்கும் கெடைக்க வாய்ப்புருக்குனு வக்கீலெல்லாம் சொன்னாங்க.

தூக்குத் தண்டனை எதிர்பார்த்த மூணு பேர்ல ஒருத்தரு வேலாயுதம். திருநெல்வேலி மாவட் டத்துல, வாகைக்குளம் சொந்த ஊரு. சவரத் தொழில் செஞ்சுகிட்டே கட்சிப் போராட்டங்கள்ல தீவிரமாயிருந்தவரு. அவரோட மனைவிய கூப் புட்டு விஷயத்த சொன்னோம். நாங்க ஆறுதல் சொன்னப்போ... தன்னோட வீட்டுக்காரர்கிட்ட பாப்பம்மா அப்படிச் சொல்லும்னு நான் எதிர் பாக்கல. அந்த அம்மா கையால நானும் அந்த ஊர்ச் சாப்பாட்டை வாங்கிச் சாப்பிட்டிருக்கேன்''

- குரல் தழுதழுக்கிறது தோழருக்கு.
''பாப்பம்மாவைப் பத்திச் சொல்லுங்களேன்...''
- கொஞ்ச நேரம் கழித்துக் கேட்டேன்.

நாலு வீட்டுச் சாப்பாடு எங்களுக்குப் போதும்...  நீ கவலைப்படாதே!''

''சவரத் தொழில் செய்ற குடும்பம். ரெண்டு பொம்பள பிள்ளைங்க. கிராமத்து வீடுகள்ல ஊர்ச் சாப்பாடு வாங்கிச் சாப்பிடுற நெலைமை. நாங்க தலை மறைவா இருந்த நாட்கள்ல, சாப்பாடு கெடைக்காது. அப்போ அந்தம்மா வாங்கின ஊர்ச்சாப்பாட்டை... எங்களுக்குக் கொடுத்து அனுப்பும். பல வீட்டுச் சாப் பாடு... சாம்பார், ரசம், புளிக்கொழம்புனு ஒரு கலவையா இருக்கும். பாப்பாம்மா கொடுத்த சாப்பாடுதான் எங்க வயித்த காயவிடாம அப்போ காப்பாத்துச்சு.''

வாசலில் அழைத்த பால்கார அம்மாவுக்கு தானே போய் பதில் சொல்லிவிட்டு வருகிறார்.

''நாங்க ஜெயில்ல இருந்தப்போ வேலாயுதத்துக்கு பாப்பம்மாகிட்ட இருந்து கடிதம் வரும். அதுல சில வார்த்தைகளை அதிகாரிங்க கறுப்பு மையால மறைச் சிருப்பாங்க. நாங்க அதப் படிக்கணும்கிற ஆர்வத்துல அதுல எண்ணெயைத் தடவி வெளக்கு வெளிச்சத்துல பாப்போம். அப்படி வந்த ஒரு லெட்டர்ல...

'ஜெயிலுக்குள்ளே க்ஷயரோகத்தால் (காச நோய்) கஷ்டப்படும் நான், வெளியே வந்தால் என்ன வேலை செய்துவிடப் போகிறேன்’ என்று எழுதியிருந்தீர்கள். அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். நான்கு வீடுகளில் சோறு வாங்க எனக்கு தைரியமிருக்கிறது. நம் தோழர்களோட சந்தோஷமாயிருங்கள்.’

''அந்த ஏழ்மையான பெண்ணோட ஈரமான மனசும், வைராக்கியமும் ரொம்ப பெருசு. வார்த்தையில சொல்றது கஷ்டம். தீர்ப்பு வந்தது... தோழர்கள் வேலாயுதம், கே.பி.எஸ்.மணி, அழகுமுத்து மூணு பேருக்கும் ஆயுள் தண்டனை. எனக்கு ஆயுள் தண்டனையோட சேர்த்து... இன்னும் சில வருடங்கள். வேலாயுதத்தையும், இன்னொரு தோழரையும் ஆஸ்பத்திரியில சேர்க்கணும்னு உண்ணாவிரதம் இருந்தோம். தாம்பரம், டி.பி. ஆஸ்பத்திரியில சேர்த்த கொஞ்ச நாள்ல இறந்துட்டார் வேலாயுதம்.''

உரிமைக்கு குரல் கொடுக்க கணவனை தாரைவார்த்து, தனது வாழ்க்கையையும் கொடுத்திருக்கிறார் பாப்பம்மாள்.

''என் அரசியல் வாழ்க்கையில நெறைய மனக்கஷ்டம், பிரச்னைகள் வந்திருக்கு. அந்த நேரத்துல எல்லாம் பாப்பம்மாவோட பேச்சு, வாழ்க்கைதான் எனக்கு உந்துதலா இருந்துச்சு. மக்கள் பிரச்னைகளுக்காக போராடுற வேகமும் கெடைச்சுது.''

'எங்களுக்கு, வயல் எங்கேப்பா இருக்கு... வயிறுதான் இருக்கு’ என்று சொன்ன ஏழைகளுக்கு நிலப்போராட்டம்... திருநெல் வேலி கம்பா நதியில் தடுப்பணைக் கட்ட போராட்டம்... ஏழை விவசாயிகளை சாணிப்பால் குடிக்க வைப்பது, சவுக்கடி போன்ற கொடுமைகளுக்கு எதிரான மனித உரிமைப் போராட்டம்... பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கான உரிமைப் போராட் டம்... தாழ்த்தப்பட்டோர் மீதான அடக்கு முறைக்கு எதிரான போராட்டம்... 80 வயதைக் கடந்து இன்றும் தாமிரபரணி ஆற்று மணல் திருட்டைத் தடுக்க வெயிலில் இறங்கிப் போராட்டம்... இப்படியாகப் போராட்டப் பாதைகளில் தனது பொது வாழ்க்கைப் பயணத்தை, விளம்பரம் இல்லாமல் தொடரும் இந்த எளிய மனிதரின் போர்க் குணத்துக்கு ஆதர்சமாக இருப்பது ஓர் எளிய பெண்ணின் குரல்!

''சிறைக் கொடுமைகளை, அனுபவங்களை தோழர் ஆர்.எஸ்.ஜேக்கப் புத்தகமா எழுதினாரு. அதுலயிருந்து கெடைச்சதோட... நாங்களும் கொஞ்சம் பணம் சேர்த்து பாப்பம்மா குடும்பத்துக்குக் கொடுத்தோம். தோழர்கள் உதவி செஞ்சாங்க. ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. இன்னிக்கு பாப்பம்மா    உயிரோடு இல்லை. அந்தக் குடும்பத்துக்கு இன்னும் செய்யணும்ணு தோணுது.''

கொஞ்ச நேர அமைதி... நெகிழ்வுடன் தொடர்ந்த தோழர், ''எத்தனையோ பெண்களுக்கு எங்களோட மக்கள் போராட்டங்கள்ல சிறப்பான பங்கு இருக்கு. ஆனாலும் 'நாலு வீட்டு சாப்பாடு போதும்... உன்ன தூக்குல போட்டாலும் எங்களப்பத்தி கவலைப்படாதே’னு கணவர் வேலாயுதத்தின் போராட்ட வாழ்க்கையைப் பெருமைப்படுத்திய பாப்பம்மாளின் குரல் எனக்குள் கேட்டுக்கிட்டே இருக்கு..!''

அவரின் தோழமை உணர்வுகளில் நானும் கலந்தேன். வாசலில் கிடந்த ரப்பர் செருப்பைக் கூட போட்டுக் கொள்ளவில்லை. நெட்டிலிங்க மரத்தின் சருகுகளை மிதித்துக் கொண்டே நடந்து... வாசல் வரை வந்து வழியனுப்புகிறார் தோழர் ஆர்.என்.கே.!

- வருவார்கள்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism