Published:Updated:

வாழுறதுக்கு இது போதாதுங்களா..? !

நாட்டுவாசிக்கு பாடம் சொல்லும் காட்டுவாசிஎஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்

வாழுறதுக்கு இது போதாதுங்களா..? !

நாட்டுவாசிக்கு பாடம் சொல்லும் காட்டுவாசிஎஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்

Published:Updated:
##~##

''ஆத்தாவும் அப்பனும் கத்துக் கொடுக்காத வித்தையவா... உங்க பள்ளியூடம் சொல்லிக் கொடுத்துடப் போகுதுங்? தலமுறை தலமுறையா படிப்பு பக்கமே போகாம இருந்ததால எங்க சனம் கெட்டுப்போனது ஒண்ணும் கிடையாது. இப்போ படிக்கப் போற சிறுவைகளால (குழந்தைகள்) எங்க பொழப்பு மாறிடப் போறதும் கிடையாதுங்!''

- பொளேர் வார்த்தைகளில் புதிய தத்துவம் சொல்கிறார்கள் பழங்குடிப் பெண்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்றைக்கு உலகமே... ஸ்கூல் அட்மிஷனுக்குப் பின்னால் அலைமோதிக் கொண்டிருக்கிறது. தன் குழந்தையின் இரண்டாவது வருட பிறந்த நாள் பரிசாக... ப்ளே ஸ்கூல் அட்மிஷனைக் கொடுக்கும் அளவுக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது. சமூகத்தின் ஒரு முகம் இப்படியிருக்க, குழந்தை... ஆறேழு வயதைத் தொட்ட பிறகு, போனால் போகிறதென்று பள்ளிக்கூடம் அனுப்புவது... அல்லது வாழ்நாள் முழுக்க படிப்பே தேவையில்லை என்று தீர்மானிப்பது என்பதை காலகாலமாக கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் மக்களும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக... ஈரோடு மாவட்டம், கடம்பூர் வனப்பகுதியிலுள்ள பழங்குடி கிராமங்களில் வாழும் ஊராளிகள்... இதற்கு சரியான உதாரணம்!

பள்ளிக்கூடம் என்பது வெறும் புத்தக அடக்கங்களைக் கற்றுத்தரும் கட்டடம் மட்டுமல்ல, சமுதாயத்தில் சக மனிதர்களோடு இணைந்து வாழ்வது எப்படி, பல பிரச்னைகளை எதிர்கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என்பது உள்ளிட்ட வாழ்க்கைப் பாடங்களை கற்றுத்தரும் பயிற்சி பட்டறையும்கூட. ஆனால், இதைப் பற்றியெல்லாம் துளிகூட கவலைப்படாமல் இந்த மக்கள் வாழ்வதெப்படி?

வாழுறதுக்கு இது போதாதுங்களா..? !

சில யானைகளைக் கடந்து... குன்றி, அணில்நத்தம், நாயகன்தொட்டி, கரேதொட்டி, மாகாளிதொட்டி போன்ற பழங்குடி கிராமங்களுக்குச் சென்று ஊராளிகளைச் சந்தித்தோம். பன்னிரண்டு, பதினைந்து வயதைத் தொட்டுவிட்ட குழந்தைகள்கூட பள்ளிக்குச் செல்லாமல்... மண்வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தன.

'படிக்க வைப்பதில்லையா?’ என்று பெரியவர்களிடம் கேட்டபோது, சட்டென்று விளக்கம் கொடுக்க வந்தார் சடச்சி.

''பொழப்பே காடு, மேடுலதான். இப்போ சில வருஷமாதான் இப்படி வூடுகள கட்டி குடியிருக்கோம். இதுக்கு முன்ன வெறும் சாலைகள (குடிசை) போட்டு, காட்டாறு பக்கம் அங்கேயிங்கேனு பொழச்சுட்டு கெடந்த மக்கதானே நாங்க. ஆனையும், சிறுவனும் (சிறுத்தை) சுத்தி நின்னு கூத்தடிக்கிற காட்டுக்குள்ளே... ராகியும், பீன்ஸையும் வெளய வெச்சுகிட்டு எங்க பொழப்ப ஓட்டிகிட்டிருக்கோம். இதுல வர்ற வருமானம் வூட்டுல உள்ளவங்களோட அரைவயிற கூட நிரப்புறதில்லீங்க. அதனால சத்தியமங்கலம், கோபிசெட்டிப்பாளையம்னு தரைப்பகுதிக்கு ஆறு மாசம், ஏழு மாசம் கரும்பு வெட்ட போயிடுறோம்.

கரும்பு வெட்டப் போறப்ப கைப்புள்ளைகளை மட்டும் தூக்கிட்டு போயி, வேலை பார்க்க இடத்துலேயே மர நிழல்லேயும், பம்பு செட்டுக்குள்ளேயுமா வெச்சு வளக்குறோம். பால் குடி மறந்த புள்ளைங்கள... கூட்டிகிட்டு போறதில்லை. ஊர்ல இருக்கிற பொம்பளைங்கள்ல பாதி பேர் கரும்பு வெட்ட போயிட்டாங்கனா... மீதி, வூட்டுலதான் இருப்பாங்க. அவங்க தன் புள்ளைங்களோட பக்கத்து வூட்ல உள்ள புள்ளைங்களையும் சேர்த்து பார்த்து வளத்துப்பாங்க. அடுத்த வூட்டு புள்ளைங்கதானேனு அலட்சியமா வுட்டுடமாட்டாங்க. ஏன்னா அடுத்த ஆறுமாசத்துக்கு, தான் கீழே போறப்ப... தன் புள்ளைய அடுத்தவங்கள நம்பித்தானே வுட்டுப்போட்டு போகோணும்?

வாழுறதுக்கு இது போதாதுங்களா..? !

பொம்பளைங்க நாங்களே இப்படி காடாறு மாசம் நாடாறு மாசம்னு அலையுறப்போ, ஆம்பளைங்க வூட்டுலேயா தங்குவாங்க? அவங்களும் அங்கேயிங்கேனு பொழப்புக்கு போயிடுறாங்க. நிலைமை இப்படியிருக்க, சிறுவைகளை ஸ்கூலுக்கு அனுப்புறதுஎப்படி? சிறுவைக நல்லா வளந்து பக்குவத்துக்கு வந்துட்டா, பசங்கள கட்டட வேலை, மில் வேலைனு அனுப்பிட்டு, பொண்ணுங்களுக்கு நூல் போட்டு (திருமணம் செய்து) அனுப்பிடுவோம். அப்புறம் அந்தப் பொண்ணும் புள்ளைங்களப் பெத்து, வளர்த்து கரும்பு வெட்டக் கிளம்பினு பொழப்பப் பார்க்கப் போயிடுவா...'' என்று எதார்த்த வாழ்க்கையைச் சொன்னார்.

அடுத்துப் பேசிய கல்பனா, ''அரசாங்கமே பார்த்து ஸ்கூலை கட்டியிருக்காங்க. மதியம் சத்துணவு போடுறாங்க, டிரெஸ், புக்கெல்லாம் கொடுக்குறாங்கதான். ஆனா... எங்க தொட்டியில இருந்து (வீடுகள் இருக்கும் பகுதியில் இருந்து) ஒன்றரை கிலோ மீட்டர், ரெண்டு கிலோ மீட்டர் நடந்து போகணும். எப்போ ஆனை வரும், சிறுவன் வருமுன்னே சொல்ல முடியாது. மழைக் காலத்துல மதிய நேரத்துலேயே கறுகறுனு கறுத்து மழை கொட்ட ஆரம்பிச்சுடும். இருட்டுக்குள்ளே எங்கே ஆன நிக்குதுன்னே கண்ணுக்கு அகப்படாது. இதுமாதிரியான பிரச்னைகளாலயும்தான் பள்ளியூடம் அனுப்பறதில்ல. இதையெல்லாம் மீறி பள்ளியூடம் போற சிறுவைகளும் இருக்கத்தான் செய்யுது.

வாழுறதுக்கு இது போதாதுங்களா..? !

எது எப்படியோங்க... எங்க சனத்துல முக்கால்வாசி பேர் படிக்கலதான். ஆனாலும் நாங்க ஒண்ணும் கெட்டுப் போகலிங்க. வூட்டுலேயே எல்லாத்தையும் கத்துக் கொடுத்துதான் வளக்குறாங்க பெரியவங்க. இது மாமா, இது அண்ணினு உறவுகளை சொல்லிக் கொடுக்கறதுல ஆரம்பிச்சு... பக்கத்து வூட்டுல உள்ளவங்ககிட்டே பழகுற நாகரிகம் வரை கத்துக்கொடுக்கிறோம் சிறுவைகளுக்கு. வயசுக்கு வந்த பொண்ணுங்கனா... சுத்தபத்தமா நடக்குறதெப்படி, ஆம்பளைங்களோட பார்வைக்கும், தொடுதலுக்கும் அர்த்தமென்ன, வேத்து ஆம்பளைங்ககிட்ட எப்படி நடந்துக்கோணும்னும் கத்துக் கொடுக்குறோம். கல்யாணமாகி போன வூட்டுக்குள்ளே மாமனார், மாமியார்கிட்ட எப்படி நடக்கோணும்னு கத்துக் கொடுத்துதான் அனுப்புறோம். பசங்களுக்கும் ஒழுக்கத்தை சொல்லிக் கொடுத்துதான் வளக்கிறோம். வாழறதுக்கு இதெல்லாம் போதும்தானுங்களே!'' என்றார் அழுத்தமாக!

'பதில் தெரியலையேம்மா...' என்று முணுமுணுத்தபடியே திருப்பி நடந்தோம்... 100% நகரவாசியான நாம்!

படிக்க வைத்தே தீருவோம்!

வாழுறதுக்கு இது போதாதுங்களா..? !

'ஊராளிக் குழந்தைகளை மாணவர்களாக்கியே தீருவது' என்று விடாது முயற்சித்து வருகிறது 'சுடர்’ என்கிற தன்னார்வ அமைப்பு. இதன் இயக்குநரான நட்ராஜ், ''ஊராளி மக்கள் சொல்ற வார்த்தை உண்மையானதுதான். கல்வியிலிருந்து தள்ளி நின்னாலும்கூட ஒழுக்கத்தை உயிராட்டம் மதிக்கிற மக்கள் அவங்க. அபாயங்கள், அசௌகரியங்களைக் கடந்து சில கிலோ மீட்டர்கள் நடந்து வந்து படிக்கிறது சிரமமா இருக்கறதால மாற்று யோசனை செஞ்சுருக்கோம். 'தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளி’ திட்டத்தின் கீழ் சில வசதிகளை செய்து கொடுக்கிறோம். அதன்படி அந்தந்த கிராமங்கள்லேயே ஒரு வீட்டைப் பள்ளிக்கூடமா மாத்திட்டிருக்கோம். ஊர்ல ஓரளவு படிச்சவங்களையோ அல்லது ஓரளவு சூட்டிப்பா இருக்கறவங்களையோ ஆசிரியராக்குறோம். வழக்கமான பாடத்திட்டத்தை முதல்ல கத்துத் தராம... செய்முறைக் கல்வியைக் கத்துக் கொடுத்து அவங்களை பள்ளி பக்கம் ஆர்வமா இழுத்து... இயல்பான பாடத்திட்டத்துக்கு கொண்டு வர்றோம்.

ஆசனூர்ல உண்டு, உறைவிட பள்ளி நடத்துறோம். விருப்பப்படுற மாணவர்கள் அங்கே தங்கியிருந்தே படிக்க ஏற்பாடு பண்ணியிருக்கோம். மாவட்ட நிர்வாகத்தோட ஆதரவு இருக்கறதால... இதெல்லாம் சாத்தியமாகி இருக்கு'' என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism