##~##

தாய் - சேய் உறவுக்கும், ஆண் - பெண் ரொமான்டிக் உறவுக்கும் இருக்கும் இன்னொரு முக்கியமான ஒற்றுமை: நிபந்தனையற்ற எல்லை இல்லா அன்பு (Unconditional love)!

எந்தத் தாய்க்கும், தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை என்ன நிறத்தில், உயரத்தில், வடிவில், திறமையோடு பிறக்கும் என்று தெரியாது. எது எப்படியோ... தனக்குப் பிறந்த குழந்தை, தன்னுடையது என்கிற ஒரே காரணத்துக்காக தன் குழந்தையின் மேல் அன்பைக் கொட்டோ கொட்டு என்று கொட்டுவாள். 'நீ இப்படி எல்லாம் இருந்தாதான் நான் உன்னைக் கவனிப்பேன்’, 'நீ இதை எல்லாம் சாதித்தால்தான் உன் மேல் அன்பு காட்டுவேன்’ என்று எந்தத் தாயும் இயற்கையில் சொல்ல மாட்டாள். அதனால்தான் அதை 'நிபந்தனையற்ற அன்பு' என்கிறோம்!

'அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே.. இன்றைய கால தாய்மார்கள் குழந்தைகளுக்கு என்னென்னவோ நிபந்தனைகள் விதிக்கிறார்களே? இன்னதுதான் படிக்க வேண்டும், இவ்வளவு மதிப்பெண் வாங்க வேண்டும், இந்த வேலைக்குப் போக வேண்டும் என்று ஏகப்பட்ட கண்டிஷன்ஸ் போடுகிறார்களே..?’ என்கிறீர்களா... அதுவும் உண்மைதான்.

ஆனால், காட்டில் வாழும் விலங்குத் தாய், இப்படி நிபந்தனைகள் விதிப்பதில்லை. அவ்வளவு ஏன், 'நவீன கல்வி' என்கிற விஷயம் உருவாவதற்கு முன்புவரை, எந்த மனிதத் தாயும்... இவ்வளவு நிபந்தனைகள் விதித்ததில்லை. கல்வி மாதிரி ஒரு செயற்கையான திணிப்பை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல், மனிதத் தாயும் தடம் புரள்கிறாளோ என்னவோ?! ஆனாலும்கூட, நிபந்தனைகள் விதிப்பாளே தவிர, தான் எதிர்பார்த்த மதிப்பெண்களை எடுக்காததற்காக தன் பிள்ளையை தனதில்லை என்று கூறிய அம்மாக்கள் எத்தனை பேர்? 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பதுதான் இங்கு தாய்மையின் வரலாறு.

சரி, நாம் ரொமான்ஸ் மேட்டருக்கு வருவோம். ஒரு தாயிடம் குழந்தை எதிர்பார்க்கும் அதே துணைநலத்தைதான், வளர்ந்த பிறகு எதிர் பாலினத்திடமும் எதிர்பார்க்கிறது. வாலிப வயதைத் தாண்டிய பிறகு தன்னுடைய அன்புத் தேவைகளை தாய் மட்டும் பூர்த்தி செய்வது, அதற்கு திருப்தி அளிப்பதில்லை. எதிர்பாலினர் ஒருவர் வந்து தாயைப் போன்ற பாசத்தைப் பொழிய வேண்டும், அப்போதுதான் எனக்கு திருப்தி என்றே மனம் ஏங்க ஆரம்பிக்கிறது. பெண் மனம் இன்னும் ஒரு படி மேலே சென்று, அம்மாவின் பாசம், அப்பாவின் பாதுகாப்பு, இரண்டையுமே சேர்ந்து கொடுக்கிறவன் வேண்டும் என்று தேட ஆரம்பிக்கிறது.

ரொமான்ஸ் ரகசியங்கள் !

இவர்கள் இவ்வளவு ஆசைப்படும் இந்த நிபந்தனையற்ற அன்பு எப்படித்தான் இருக்கும்?!

'நீ எப்படி இருந்தாலும் என் செல்லம்தான். உன் நிறம், உயரம், வடிவம், உடல்வாகு, படிப்பு, சாதனை, லொட்டு லொசுக்கு எதுவுமே முக்கியமில்லை. உன்னை இப்படியே ஏற்றுக்கொள்கிறேன்!’ என்கிற டோட்டல் அக்சப்டன்ஸ் (Total acceptance).

'என் கவனம் எல்லாம் உன் மேல்தான். நீ சாப்பிட்டாயா, தூங்கினாயா... என்கிற சின்ன அன்றாட விஷயங்களில் ஆரம்பித்து, நீ சந்தோஷமாக இருக்கிறாயா என்கிற பெரிய விஷயம் வரை, எப்போதும் உன் சுகத்தையே மையப்படுத்தி நான் இருக்கிறேன்!’ என்கிற கமிட்மென்ட் (Commitment).

'நீ என்ன செய்தாலும் நான் ரசிக்கிறேன். இதே விஷயத்தை பக்கத்து வீட்டுக் குழந்தையும் செய்திருக்கும். ஏன்... இந்த உலகில் பிறந்த எல்லா குழந்தைகளுமே செய்திருப்பார்கள். அதெல்லாம் எனக்கு முக்கியமில்லை. ஆனால், நீ செய்யும் ஒவ்வொரு விஷயமும் எனக்கு ரசனைக்கு உரியதாக இருக்கிறது!’ என்கிற உச்சகட்ட ரசிப்பு (Appreciation).

'இந்த உலகமே உனக்கு எதிராக இருந்தாலும், நீ தோற்றுப் போனாலும்கூட, நான் எப்போதுமே உன்னோடுதான்!’ என்கிற முழு விசுவாசம் (Absolute loyalty).

'என்ன நடந்தாலும் என்னிடம் சொல்லலாம். நான் உன்னை விமர்சிக்காமல் உன்னை உள்ளபடி அப்படியே ஏற்று, எதற்காகவும் என் அன்பை குறைத்துக்கொள்ள மாட்டேன்!’ என்று தன்னை வெளிப்படையாக வெளிப்படுத்திக் கொள்ளக்கூடிய முழு சுதந்திரம் (Total freedom).

ரொமான்ஸ் ரகசியங்கள் !

'உனக்கு ஏதாவதுனா, என் அடி வயிறு அப்படியே கலங்கிடும்!’ என்கிற உச்சகட்ட அக்கறை (Concern).

இவை எல்லாம்தான், ஒரு தாய், தன் குழந்தைக்குத் தரும் உணர்வு ரீதியான உத்தரவாதங்கள். இதே உத்தரவாதங்களைத்தான் தங்கள் துணைவர்களிடமும் மனிதர்கள் எதிர்பார்க்கிறார்கள். அது 14 வயதில் ஏற்படும் இன்ஃபேச்சுவேஷனாக  இருந்தாலும் சரி, எழுபது வயதில் ஏற்படும் முதிர்ந்த காதலாக இருந்தாலும் சரி... இந்த உத்தரவாதங்கள் தென்பட்டால் போதும், அதுவே ஒரு போதை மாதிரி ஆகிவிடும். அந்த உறவில் அப்படியே தொபக்கடீர் என்று விழுந்துவிட்டார்கள் என்றால், அதில் இருந்து மீள்வது அவ்வளவு எளிதல்ல. இப்படி இந்தப் பாசத்துக்குக் கட்டுப்பட்டிருந்தால்தான்... இந்த ஆணும் பெண்ணும் தங்கள் வாழ்நாள் முழுக்க ஒன்றாகவே இருப்பார்கள். இவர்கள் இப்படி ஒற்றுமையாக இருந்தால்தான், அவர்களின் குட்டிகளுக்குப் பூரண பாதுகாப்பு. அதனால் இயற்கை இப்படி எல்லாம் ஆணையும் பெண்ணையும் கட்டிவைக்க பல திருவிளையாடல்களைப் புரிகிறது.

ஆனால், ஒருவருக்கு தன் துணையிடம் இப்படி எல்லாம் நிபந்தனையற்ற அன்பும்... அரவணைப்பும் தரத் தெரியவில்லை என்று வையுங்களேன்.  அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? 'சே, எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி ஒரு வெற்று வாழ்க்கையோ..?’ என்ற அதிருப்தியிலேயே வாழ்வின் சுவையை இழந்துவிடுவார்கள். தன் துணைவரைத் தவிர, வேறு யாராவது வந்து இதே உணர்வு ரீதியான உத்தரவாதங்களை அளித்தால் போச்சு, கொஞ்சமும் யோசிக்காமல் சுய கட்டுப்பாட்டையும், சமூக கட்டுப்பாடுகளையும் மீறி... இன்னொரு காதலில் வீழ்வார்கள். ஏற்கெனவே இருந்த உறவில் பிறந்த பிள்ளைகளையும் புறக்கணித்துவிட்டு, புது காதலன்/காதலியோடு கொஞ்சிக் கொண்டிருப்பதிலேயே தம் நிலை மறந்து போவார்கள்.

இயற்கையின் ஆட்டத்தில் ஏன் இந்த காய் நகர்த்தல்கள்?

- நெருக்கம் வளரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு