Published:Updated:

கறுப்பு - வெள்ளை முதல் கலர் வரை !

ஒரு ஃப்ளாஷ்பேக்... ம.மோகன், படங்கள்: அ.ரஞ்சித்

##~##

சென்னையில் 1975-ல் தூர்தர்ஷன் சேனல் தொடங்கப்பட்ட கறுப்பு - வெள்ளை காலம்... தமிழக சேனல் வரலாற்றின் பொன்னூஞ்சல் காலம்! வெள்ளிதோறும் மாலையில் வரும் ஒலியும் - ஒளியும், ஞாயிறுதோறும் மாலையில் ஒளிபரப்பாகும் தமிழ்த் திரைப்படம் மட்டும்தான் பொழுதுபோக்கு தமிழ் நிகழ்ச்சிகள். அதனாலேயே இந்நிகழ்ச்சிகளுக்கு அப்போது ஏக வரவேற்பு!

கிட்டத்தட்ட 15 ஆண்டு காலம் உருண்ட நிலையில், 1990-களில் சன் டி.வி. திறந்து வைக்கப்பட்டபோது... இந்த வரவேற்பு இன்னும்கூட கூடுதலானது. 'கேபிள் டி.வி. கனெக்ஷன் வேணும்' என்பதை... 'சன் டி.வி. கனெக்ஷன் வேணும்' என்று கேபிள்காரர்களிடம் மக்கள் கேட்கும் அளவுக்கு... பல மடங்கு வரவேற்புதான்!

ஆனால், அதைத் தொடர்ந்து புற்றீசல்களாக தமிழ் சேனல்கள் பல்கிப் பெருகி... 24 மணி நேரமும் சினிமா, பாட்டு, டாக் ஷோ என்று மூச்சு முட்ட வைக்க... 'சலிச்சுப் போச்சுப்பா' என்று சொல்லும் அளவுக்கு தலைகீழாகிவிட்டது! இதற்கு காரணம்... சேனல்கள் பெருகியதா... அல்லது நிகழ்ச்சிகளின் தரம் குறைந்ததா?

''சென்னையில தூர்தர்ஷன் ஆரம்பிச்ச பிறகு, சின்னத்திரையின் முதல் மெகா சீரியல்... 'விழுதுகள்’. அதுல நான் முக்கியமான நெகட்டிவ் ரோல்ல நடிச்சிருப்பேன். அந்தக் காலகட்டத்துல ஒரு தடவை கோடம்பாக்கம் பக்கமா நண்பரைச் சந்திக்கப் போனப்போ... வழியில பார்த்த சில பெண்கள், தண்ணி குடத்தால அடிக்க வந்த சம்பவமும் நடந்திருக்கு!'' என்று வாய்விட்டுச் சிரித்த 'விழுதுகள்’ சந்தானம்,

கறுப்பு - வெள்ளை முதல் கலர் வரை !

''ஆனா, இன்னிக்கு அந்த அளவுக்கு மக்களை ஈர்க்க முடியல. நொடிக்கு ஒரு சீரியல்னு வந்துகிட்டே இருக்கே! இருந்தாலும் வண்டி ஓடிட்டுதான் இருக்கு. இப்பவும் சீரியல்கள்ல நடிக்கிறேன். 45-க்கும் மேற்பட்ட மெகா சீரியல்களை கடந்தாச்சு!

முன்னயெல்லாம் பத்து பாரா வசனம் பேசி, கரெக்டா ஃபெர்மான்ஸ் பண்ணினாத்தான்... டேக் 'ஓ.கே’ ஆகும். தப்பாயிடுச்சுனா... முதல் புரோட்டாவுல இருந்துதான் ஆரம்பிக்கணும். ஆனா, இன்னிக்கு அப்படியில்ல... தொழில்நுட்ப வளர்ச்சி மூலமா இந்த சிக்கல்களை ஈஸியா சமாளிச்சுடலாம். அதேசமயம், இன்னிக்கு நடிக்க வர்றவங்க... பார்ட் டைம் ஜாப் மாதிரி வந்துட்டு போறதால... பெருசா ஈடுபாடு இருக்கற மாதிரி தெரியல. அதுதான், டி.வி. மேலான மரியாதையை மக்கள்கிட்ட குறைக்குது'' என்று கவலையை வெளிப்படுத்தினார்.

பெரிய திரை... சின்னத்திரை என்று இரண்டிலுமே கொடி நாட்டியவர்களில் ஒருவரான மௌலியும் கவலையோடுதான் இந்த விஷயத்தை அலசுகிறார். ''டி.வி, ஒரு காலத்துல வசதி படைச்சவங்க பார்க்கற ஓர் ஊடமாகத் தான் இருந்துச்சு. அதனாலதான் அப்போ வெல்லாம் அந்த வாழ்க்கை சூழலுக்கு தகுந்த நிகழ்ச்சிகளா கொடுத்துக்கிட்டிருந்தாங்க. காலப்போக்குல நிலைமை மாறி, எல்லா தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும்படியான சூழல் உண்டாகவே... நிகழ்ச்சிகள்ல மாறுதலை கொடுக்க வேண்டிய கட்டாயம் வந்துச்சு. ஆனா, அந்த மாறுதலே... இன்னிக்கு நெகட்டிவ் விளைவை கொடுக்குது.

கறுப்பு - வெள்ளை முதல் கலர் வரை !

வன்மம், குடும்ப பிரச்னைனு தொடங்கி அது சார்ந்த எல்லாவித அவலங்களையும் ஸீன்ல கொண்டு வர்றேன்னு கண்டதையும் காட்டறாங்க. கூடவே, பாஸ்ட் ஃபுட் போல காட்சிகளை ஷூட் செய்ற நிர்ப்பந்தம். 'இன்னிக்கு 24 பக்க காட்சிகளை எடுத்தே ஆகவேண்டும். ரிகர்சலுக்கு நேரம் இல்லை!’னு வசனங்கள ஒப்பிச்சு, அரைகுறையா விஷ§வல் பிடிக்கிற சூழலும் ஃபீல்டுல இருக்கு. மக்கள் மனசுல நிரந்தரமா இடம் பிடிக்கணும்னா... ஒண்ணு ரெண்டு நிகழ்ச்சிங்கள மட்டும் மாத்தினா போதாது. ஒட்டுமொத்தமா சின்னத்திரை முழுக்கவே மாற்றத்தைக் கொண்டு வர்றதுக்கு முயற்சிக்கணும்.

தூர்தர்ஷன் ஆரம்பிச்ச காலத்துல சில நாடகங்களை நிகழ்த்திட்டு... அப்படியே சினிமா பக்கம் ஒதுங்கின ஆளு நான். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2002, 2003-ல சின்னத்திரைக்குள்ள நடிகனா வந்தேன். இப்ப 'நாதஸ்வரம்' சீரியல் நல்லா போயிட்டிருக்கு. கூட்டுக்குடும்பம், பெரியவங்களோட புத்திமதி, குழந்தைங்களோட வளர்ச்சிக்குனு நல்ல ஆலோசனைகளை கொடுக்குற கதை அம்சம் கொண்ட தொடர்களா தேர்ந் தெடுத்துதான் நடிக்கிறேன். வளரும் தலைமுறைக்கு சின்னத்திரை மூலம் நிறையவே சொல்லலாம். அதை சாதிக்கும்போது... சினிமாவைப் போல சின்னத்திரையும் தனி முத்திரையைப் பதிக்கும்!'' என்று தன் கருத்துக்களை முன் வைத்தார்.

சின்னத்திரையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீலேகா ராஜேந்திரனின் பார்வை, கொஞ்சம் வித்தியாசம்தான். ''மெகா சீரியலோட மொத்த எபிசோடையும் செல்போன்ல பார்த்து முடிக்கற அளவுக்கு வசதிகள் வந்தாச்சு. அப்படிப்பட்ட அவசர யுகத்துக்கு ஏத்த மாதிரிதான் இன்னிக்கு பலரும் ஃபீல்டுல இருக்கறாங்க. காலத்துக்கு தகுந்தபடி ஓடணும்ங்கிற வேகம் ஒவ்வொருத்தர்கிட்டேயும் இருக்கு. அதனாலதான் கொஞ்சம் போரடிச்சாலே டிராக் மாத்திடறாங்க... இல்ல, அந்த கேரக்டரையே தூக்கிடறாங்க. இதுவும் ஒரு வகையில ஆரோக்கியமான மாற்றம்னு தான் சொல்லணும்.

அதேசமயம், பழையபடி மக்கள் மனசுல ஆழமா இடம் பிடிக்கற முயற்சிகளையும் முன்னெடுக்கணும்கிறது முக்கியம். இன்னிக்கு 30, 35 வருஷமா இந்த ஃபீல்டுல நாங்க நிக்கறோம்னா அதுக்குக் காரணம்... அர்ப்பணிப்புதான். ஆனா, இளைய தலைமுறைகிட்ட இந்த விஷயம் ரொம்ப ரொம்ப குறைவாவே இருக்கு. இதையெல்லாம் சரிப்படுத்திக்கிட்டா... எல்லாருமே நிலைச்சு நிக்கலாம்... எங்கள போல'' என்று சொல்லி கலர் கலராக சிரித்தார்.

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே !

கறுப்பு - வெள்ளை முதல் கலர் வரை !

'பிளாக் அண்ட் வொயிட்’ காலம் தொடங்கி... 'கலர்' காலம் வரை தங்களின் டி.வி. ஞாபகங்களை இங்கே 'மறுஒளிபரப்பு’ செய்கிறார்கள் பொன்னேரியைச் சேர்ந்த தனலட்சுமி மற்றும் அவருடைய கணவர் ரெங்கநாதன்.

''பக்கத்து தெருவுல தெரிஞ்சவங்க வீட்டில் டி.வி வாங்கியிருக்காங்கனு கேள்விப்பட்டதும்... அடுப்பில் வெச்சுருந்த சமையல் வேலையை அப்படியே போட்டுட்டு ஓடிப்போய் டி.வி-யைப் பார்த்த பொண்ணுங்கள்ல... நானும் ஒருத்தி! டி.வி. வெச்சுருக்கவங்க... அப்போ தனி மிதப்பில் இருப்பாங்க. வீட்ல நொறுக்குத் தீனிக்கு கொடுக்குற காசை சேர்த்து வெச்சு, 25 பைசா, 50 பைசானு கொடுத்து, டி.வி. பார்த்துட்டு வருவாங்க குழந்தைங்க. சுவர்ல சாய்ஞ்சு உக்கார்ந்து டி.வி பார்க்கறதுக்கு இடம் பிடிக்கிறது, டி.வி. வெச்சுருக்கவங்க வீட்ல சொல்ற வேலைகளை எல்லாம் சமத்தா செய்றதுனு, வாண்டுகள் எல்லாம் கூடுற அந்த வீடே திருவிழா போல இருக்கும். பாய், தலையணை எல்லாம் கொண்டுபோய், டி.வி-யில படம் பார்த்துட்டு திரும்பறதுக்குள்ள... வீட்டுல திருடன் புகுந்த சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கு'' என்று தனலட்சுமி சிரிக்க...

''சென்னையில தூர்தர்ஷன் சேனல் தொடங்கினதுல இருந்தே டி.வி வாங்கணும்... வாங்கணும்னு ஒரு கனவாவே இருந்துச்சு. ஆனா... ரெண்டு, மூணு வருஷம் கழிச்சுதான் வாங்கினோம். அதை வீட்டுக்குள்ள கொண்டு வந்தப்போ, சினிமா தியேட்டரையே வீட்டுக்குள்ள கொண்டு வந்ததா மனசு பறந்துச்சு. தொடக்கக் காலத்துல டெல்லியில் இருந்து ஒளி பரப்பாகற மகாபாரதம், ராமாயணம்னு எந்த நிகழ்ச்சியா இருந்தாலும், வாயைப் பொளந்துகிட்டு பார்ப்போம்... இந்தி தெரியாமலே!'’ என்று தானும் சிரித்தார் ரெங்கநாதன்.

அடுத்த கட்டுரைக்கு