Election bannerElection banner
Published:Updated:

ஹேர் டை பயன்படுத்துறீங்களா ..?

உஷார்... உஷார்! ம.பிரியதர்ஷினி, எம்.மரிய பெல்சின்

##~##

பிரபல புகைப்படக் கலைஞர் சித்ரா சுவாமிநாதன், அண்மையில் இறந்துபோனார். அவருடைய இறப்புக்கு மிகமுக்கிய காரணமாக அவருடைய குடும்பத்தினர் சொல்வது... ஹேர் டை!

''அப்பாவுக்கு 25 வருஷமா டை அடிக்கிற பழக்கம் இருந்தது. கொஞ்ச நாளைக்கு முன்ன அவரோட

ஹேர் டை பயன்படுத்துறீங்களா ..?

உடல்நிலை மோசமானப்போ, பரிசோதிச்ச டாக்டர்கள்... 'நுரையீரல் பாதிப்படைஞ்சுருக்கு. இத்தனை வருஷமா அவர் பயன்படுத்தின டை, இதுக்கு ஒரு முக்கியமான காரணம்'னு சொன்னாங்க!'' என்று சோகம் பொங்கச் சொல்கிறார் சித்ரா சுவாமிநாதனின் மகன் ஜான்சன்.

'டை அடிப்பது சகஜமாகிவிட்ட இக்காலத்தில்... இப்படியரு அதிர்ச்சியா..?' என்று திகைத்த நாம், 'இது எந்த அளவுக்கு உண்மை?' என்று சென்னை, ராஜீவ் காந்தி, அரசு பொது மருத்துவமனையின் 'அலர்ஜி ஸ்பெஷலிஸ்ட்' டாக்டர் முத்து செல்லக்குமாரிடம் கேட்டோம்.

''டை பயன்படுத்துவதால்... அலர்ஜியில் ஆரம்பித்து, ஹார்மோன் சமச்சீரின்மை, புற்றுநோய் வரை ஆபத்து நேரலாம்'' என்கிற அதிர்ச்சியோடு ஆரம்பித்தவர்,

''தொடர்ந்து உபயோகிக்கும்போது, நம் தலைமுடியுடன் மட்டும் அது வினைபுரிவதில்லை. உடலிலும் சென்று ரத்தத்திலும் கலக்கிறது. இரண்டு நாட்கள் வரை தங்கும் செமி டெம்ப்பரரி டை; 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை நீடித்திருக்கும் பெர்மனன்ட் டை; ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கும் பெர்மனன்ட் டை என எல்லா டைகளுமே ரசாயன தயாரிப்பு என்பதுதான் பிரச்னையே!

ஹேர் டை பயன்படுத்துறீங்களா ..?

டைகளில் இருக்கும் பினலின்டயமின், அமோனியா, ஹைட்ரஜன் பெராக்ஸைடு போன்ற பல ரசாயனப் பொருட் கள்... நம் ஹார்மோன்களைச் சரியாக செயல் படவிடாமல் தடுக்கின்றன. இதன் காரணமாக வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு வரின் உடல்நிலையைப் பொறுத்து ஒவ்வொரு விதமான பாதிப்பு ஏற்படும். அலர்ஜி, உடம்பின் எதிர்ப்பு சக்தி குறைவது, கேன்சர், சிறுநீர்ப்பை கேன்சர் என்று பல பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

மீசைக்கு டை அடிப்பதும் அதிகமாகவே இருக்கிறது. அப்படி அடிக்கும்போது சுவாசத்தின் வழியாக உள்ளே சென்று நுரையீரலை பாதிக்கக்கூடும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. அதேசமயம், மீசைக்கு கீழே இருக்கும் தோல் வழியாகவும் அது உடலில் ஊடுருவும் என்பதை மறக்கவேண்டாம்'' என்று எச்சரிக்கை கொடுத்த டாக்டர்,

''செம்பருத்தி, மருதாணி போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி, நரையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கலாம். எல்லாவற்றையும்விட, நரை முடியை அதன் அழகோடு ஏற்றுக்கொள்வது மிகமிகச் சிறந்தது!'' என்று எளிமையான வழியைக் காட்டினார்.

அழகுக்கலை நிபுணர் வசுந்தராவிடம் பேசிய போது, ''டை என்ற வார்த்தையே இப்போது உபயோகத்தில் இல்லை. 'டை' (Dye) என்ற வார்த்தையின் உச்சரிப்பு, இறப்பு (Die) என்பதையும் குறிப்பதால்... 'கலரிங்' (Coloring) என்கிற சொல்லுக்கு உலகம் மாறிவிட்டது.

ஹேர் டை பயன்படுத்துறீங்களா ..?

பொதுவாக... 'டை'யில் மூன்று வகை உண்டு மெட்டாலிக் டை, ஹெர்பல் டை, அனிலைன் டை. இதில் சின்ன சின்ன பாக்கெட்டுகளில் ஏழு ரூபாய்க்குகூட கிடைக்கும் டை... மெட்டாலிக் வகையைச் சார்ந்தது. இதில் ஏகப்பட்ட கெமிக்கல்கள் சேர்ந்திருக்கும். இதை உபயோகித்தால், அப்படியே முடியில் தங்கிவிடும். 'ப்ளீச்’ செய்ய முடியாது. இது உடலுக்கு தீங்கையே ஏற்படுத்தும். இதற்கு மாற்றாக வந்த ஹெர்பல் டை... அவுரி விதை மற்றும் ஹென்னா கலந்து வந்தாலும், கூடவே கெமிக்கலும் கலக்கப்பட்டே வருவதால்... இதுவும் உடலுக்கு கேடு ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இப்படிப்பட்ட டைகள் எல்லாம் முடியில் மட்டும் இல்லாமல்... உடலுக்குள்ளும் ஊடுருவி சென்று விடுவதுதான் ஆபத்துகளுக்கு அழைப்பு வைத்துவிடுகிறது.

மூன்றாவது வகையான 'அனிலைன் கலர்' எனப் படும் டை, அமோனியா கலக்காமல் வந்துள்ளது. இதையும்கூட எல்லோருக்குமே உடனே நாங்கள் போட்டுவிடுவதில்லை. பேட்ச் டெஸ்ட் என்கிற டெஸ்ட் செய்வோம். அதாவது, காதுக்கு பின்புறம் இதை அடித்துவிட்டு, வீட்டுக்கு போகச் சொல்லி விடுவோம். 24 மணி நேரத்துக்குக்குள்... அரிப்பு, தடிப்பு எந்த பிரச்னைகளும் வராமல் இருந்தால் மட்டுமே... அதை அவர்களுக்கு கலரிங் செய்ய பயன்படுத்துவோம்'' என்ற வசுந்தரா...

''அலர்ஜி உள்ளவர்கள், சிம்பிளாக மரு தாணியை தலையில் தடவ சொல்லிவிடுவோம். இயற்கையான கலரிங் பொருளான மருதாணியில் எந்தத் தீங்கும் இல்லையே!’' என்று சொன்னார்.

ஆக, இனி டை அடிக்கும் முன்... யோசியுங்கள்!

இதோ... இயற்கை டை!

''டை, கலரிங் என்று கெமிக்கல்களுடன் போராடி, உயிருக்கு உலை வைத்துக் கொள்வதைவிட, இயற்கையாகவே சாயத்தைத் தரும் அவுரிச் செடி இலைகளைப் பயன்படுத்தினால்... எந்தக் கவலையும் இல்லாமல், கருகரு முடியோடு கலக்கலாமே!'' என்று சொல்லும் கடலூர் அன்னமேரி பாட்டி, அவுரி சாயம் தயாரிக்கும் முறையையும் அழகாக எடுத்து வைத்தார். இதோ அவர் சொல்லும் இயற்கை டெக்னிக்!

ஹேர் டை பயன்படுத்துறீங்களா ..?

அவுரி இலை - 50 கிராம், மருதாணி இலை - 50 கிராம், வெள்ளை கரிசலாங்கண்ணி - 50 கிராம், கறிவேப்பிலை - 50 கிராம், பெருநெல்லி (கொட்டை நீக்கியது) - 10 எண்ணிக்கை... இவை அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும். ஒரு மடல் சோற்றுக் கற்றாழையை மிக்ஸியில் அரைத்து (சிறுசிறு துண்டுகளாகவும் வெட்டி சேர்க்கலாம்). அரைத்து வைத்திருக்கும் அவுரி கலவையுடன் சேர்த்து, ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மிதமான தீயில் காய்ச்ச வேண்டும். கொதி நிலைக்கு வரும்போது இறக்கி வடிகட்ட வேண்டும். இதை பத்திரப் படுத்தி வைத்து, தினசரி தலைக்கு எண்ணெய் பூசுவது போல பயன்படுத்தலாம். நாளடைவில் முடியின் நிறம் மாறுவதோடு புதிதாகவும் முடி வளரும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு