Election bannerElection banner
Published:Updated:

பிஸினஸும் ஒரு குடும்பம்தான்...

அப்பாவின் பிஸினஸை அசத்தலாக வளர்க்கும் மகள்! எஸ்.ஷக்தி படங்கள்: வி.ராஜேஷ், தி.விஜய்

##~##

''தன்னம்பிக்கை மட்டுமில்ல... நன்னம்பிக்கையும்தான் பிஸினஸ் சூத்திரம். எதையுமே குறுகின பார்வையில பார்க்காம, விசாலமான பார்வை... ப்ளஸ் நேர்மறையான எண்ணங்களோடு அணுகினா, நாமதான் வெற்றிகரமான பிஸினஸ் உமன்!''

- அழகான வார்த்தைகளில் அனுபவ ஆலோசனை தருகிறார் மல்லிகாதேவி.

சிவன் ஆலயத்தில் நவக்கிரகங்களை சுற்றி வருகையில்... எள் மற்றும் எண்ணெயுடன் எதிர்படும் நங்கை போல் நளினமாக இருக்கிறார் மல்லிகா. கோடிகள் உலா வரும் பிஸினஸில் இருக்கும் பெண்களின் அடையாளமான பாப் கட் ஹேர்ஸ்டைல், நுனிநாக்கு ஆங்கிலம், லேப்டாப், வெஸ்டர்ன் ஸ்டைல் பொழுதுபோக்கு போன்ற எந்த மேற்கத்திய சாயமும் படியாத பக்குவம், பளிச்சென கவர்கிறது. டெக்ஸ்டைல் பிஸினஸ் சார்ந்த இயந்திரங்கள் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் போன்றவற்றை வடிவமைத்து உருவாக்கும் கோவையைச் சேர்ந்த 'கான்ஃபிடன்ட் இன்ஜினீயரிங் இண்டியா பிரைவேட் லிமிடெட்’ என்ற ஹார்டுவேர் நிறுவனத்தின் இயக்குநர், மல்லிகா.

சிதறாத வெற்றிச் சிந்தனையுடன் உழைத்ததன் மூலம், புதிய பரிமாணங்களுடன் அபரிமிதமான லாபத்தை தொட்டு அசத்தலாக ஓடிக்கொண்டிருக்கிறது பிஸினஸ் குதிரை. அதன் கடிவாளத்தை கையில் வைத்திருக்கும் மல்லிகா, வெற்றியின் ரகசியங்கள் பேசுகிறார் இங்கே!

பிஸினஸும் ஒரு குடும்பம்தான்...

''திருப்பூர்ல டெக்ஸ்டைல் பிஸினஸ் விறுவிறுனு வளர்ந்துட்டு இருந்த காலகட்டத்துல... அந்தத் தொழிலுக்குப் பயன்படுகிற மாதிரியான இயந்திரங்களை வடிவமைத்து உருவாக்குற பிஸினஸை, தன்னோட பார்ட்னர் ரத்தினகுமாரோடு சேர்ந்து ஆரம்பிச்சு, ஸ்க்யூசர், காம்பாக்டர், ஸ்லிட்டர்-னு வரிசையா இயந்திரங்களை தயாரிச்சார் எங்க அப்பா 'ஆல்டெக்’ சுப்பிரமணியம். அப்பா இப்படி ஒரு பிஸினஸ் பண்றாருங்கிறதைத் தவிர, அதில் வேறெந்த உள்விவரமும் தெரியாம வளர்ந்த நான், எம்.டெக், மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் முடிச்சுட்டு... காலேஜ்ல வேலை, திருமணம், குழந்தைனு செட்டிலாயிட்டேன்.

பிஸினஸும் ஒரு குடும்பம்தான்...

ஜென்மத்துக்கும் மறக்க முடியாத துயரத்தைத் தந்தபடி திடீர்னு ஒருநாள் அப்பா இறந்துட்டார். எங்களை மாதிரியே பிஸினஸும் நிராதரவாகிடுச்சு. என்னோட சகோதரிங்க யாராலயும் அதைக் கையில்எடுக்க முடியாத சூழல்ல, தொழிலை விட்டு விலகலாமானுகூட யோசனைகள் குறுக்கிட்டுச்சு. ஆனா, 'இது நம்ம பிஸினஸ். இதை நாம தொடர்ந்தே ஆகணும்’ங்கிற உத்வேகத்துல களமிறங்கிட்டேன். ஈகோ இல்லாம, ரத்தினகுமார் அங்கிள் சப்போர்ட் கொடுத்தது... பெரிய டானிக்!'' என்று மரியாதையைச் சமர்ப்பிக்கிறார்.

''இந்த ஃபீல்டைப் பத்தி எந்த ஞானமும் இல்லாம, கால் வெச்ச நான், தொழிற்சாலைக்குள்ளேயும், வெளியேயும் சந்திச்ச சவால்கள் அசாதாரணமானது. முக்கியமா, தொழிலாளர்களுக்கும் நமக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகுறது பெரிய விஷயம். சம்பளப் பிரச்னை, போனஸ் விவகாரம் இதையெல்லாம் தாண்டி... வேற சில சிக்கல்கள் இருந்துச்சு. புதுசா ஒரு ஐடியாவை புகுத்தும்போது, 'இவங்க அப்பா காலத்துல இருந்து உழைக்கிறோம். எங்களுக்குத் தெரியாதா!’னு சில அலுப்பு குரல்கள், கடுப்பு குரல்கள் கேட்டுச்சு. அதையெல்லாம் ரொம்பக் கூலா டீல் பண்ணினேன். தொழிலாளர்கள் அறிவுல கொஞ்சமும் குறைஞ்சவங்க இல்லை. அவங்க சொல்ற ஆக்கப்பூர்வமான ப்ளஸ் அனுபவ ஆலோசனைகளுக்கு காதுகொடுத்து, அவங்களுக்கு இடையிலான உறவை சீர் பண்ணினேன். பிஸினஸும் ஒரு குடும்பம்தான். குடும்பத்துக்குள்ளே வர்ற பிரச்னைகளை சமர்த்தா சரி பண்ணுற எந்தப் பெண்ணாலேயும், பிஸினஸ் உலகத்துலேயும் ஜெயிக்க முடியும்'' என்று ரசிக்கப் பேசியவர்,

''எங்க கம்பெனியில எந்திரங்களை வடிவமைக்கிற டிசைனிங் டீமை ரொம்ப 'பவர் பேக்ட்’டாக மாத்தினது... வெளிநாடுகள்ல நடக்கிற கண்காட்சிகள்ல கலந்துக்கிட்டு புதிய தொழில்நுட்பங்களை கத்துக்கறது இதெல்லாமே... பெரிய அளவுல கை கொடுக்குது. கம்பெனிக்காக பேங்க்ல லோன் வாங்கவும் தவறுறது இல்ல. கடன்ங்கிறது... வழுவழுப்பான கத்தி மாதிரி. விறுவிறுனு கட் பண்ணி வேலையைச் சுலபமா முடிக்கலாம் அதேசமயம், கவனத்தோட கையாளாம விட்டா... கையை பதம் பார்த்துடும். அதனால லோன் விஷயத்தை ரொம்ப நேர்த்தியா பயன்படுத்துற கலையைக் கத்து வெச்சுக்கிட்டதோடு முறையா திருப்பியும் செலுத்தி 'குட் கேர்ள்’ பெயர் வாங்கி வெச்சுருக்கேன்''

- தொய்வில்லாமல் கவனிக்க வைத்தன மல்லிகாவின் வார்த்தைகள்.

பிஸினஸும் ஒரு குடும்பம்தான்...

''வகைவகையா சமைச்சு வெச்சாச்சு. ஆனா, பக்காவா சந்தைப்படுத்தினாதானே பிஸினஸ் சக்சஸாகும்! இந்த இடத்துல கைகொடுக்க வந்தார், என் கணவர் ராஜேஷ். மார்க்கெட்டை கைக்குள்ளே கொண்டு வர்ற விஷயம் தொடர்பா நாங்க ரெண்டுபேரும் நிறைய பேசுவோம். ஆரம்பத்தில் எங்களுடைய தயாரிப்பை ஏற்றுமதி மட்டுமே பண்ணிட்டிருந்தோம். பிறகு, உள்நாட்டு தேவைக்கும் கொடுக்க ஆரம்பிச்சோம். இப்பவும் கென்யா, அர்ஜென்டினா உட்பட 16 நாடுகளுக்கு எங்களோட தயாரிப்புகளை எக்ஸ்போர்ட் பண்ணிட்டிருக்கோம். வீட்டுல ஒவ்வொரு ஜீவனும் என்னோட தடையில்லா ஓட்டத்துக்கு கைகொடுத்ததுதான் இந்த வெற்றிக்கு காரணம்'' என்று மகிழ்வுடன் பகிர்ந்தவர்,  

''கண் எதிர்லேயே எங்க பிஸினஸ் ரொம்ப ரொம்ப ஹெல்தியா வளர்ந்திருக்கிறதை நல்லாவே உணர்றேன். இந்த முன்னேற்றம் சந்தோஷத்தை தருது. இந்த பிஸினஸை பெரிய கார்ப்பரேட் நிறுவனமா மாத்துறதுதான் என்னோட லட்சியமே. இவ்வளவு கடந்துட்ட என்னால... நிச்சயம் சாதிக்க முடியும்ங்கிற நன்னம்பிக்கை இருக்குது!''

- பெருவிரல் உயர்த்தி புன்னகைக்கிறார் இந்த பிஸினஸ் மேக்னெட்!  

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு