Published:Updated:

21-ம் நூற்றாண்டு... 20 ஆண்டுகளில் பெண்கள் வென்றெடுத்திருக்கும் உரிமைகள்!

பெண்கள் உரிமைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்கள் உரிமைகள்

#Motivation

21-ம் நூற்றாண்டு... 20 ஆண்டுகளில் பெண்கள் வென்றெடுத்திருக்கும் உரிமைகள்!

21- ம் நூற்றாண்டில் இருக்கிறோம் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கிறோம். என்றாலும், இன்றும் உலகெங்கும் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்துவரும் கொடுமைகள், வழங்கப்படாத உரிமைகள் பல. அவற்றில் சிலவற்றைத் தங்கள் தொடர் போராட்டங்களால் மாற்றி எழுதியிருக்கிறார்கள் பெண்கள். அப்படி, 21-ம் நூற்றாண்டின் இந்த முதல் 20 ஆண்டு களின் நிறைவில், பெண்கள் தங்கள் முழக்கங் களால் பெற்றிருக்கும் மைல்கல் வெற்றிகள் இங்கே!

நோ மீன்ஸ் நோ

இந்த நூற்றாண்டின் தொடக்கம் முதலே, இந்தியா உட்பட உலகம் முழுவதும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்தன. விளைவாக உலகம் முழுவதும் பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டன. இந்தியாவில், நிர்பயா சட்டத்திருத்தத்தின் மூலம் பாலியல் வன்கொடுமை என்பதற்கான வரையறை மாற்றப்பட்டது. 10 அல்லது 10-க்கும் மேற்பட்டவர்கள் பணிசெய்யும் வேலையிடங்களில், `விஷாகா கமிட்டி' என்ற உள் விசாரணைக் குழு அமைப்பது கட்டாய மாக்கப்பட்டது. Marital Rape எனப்படும் மனைவிமீது நடத்தப்படும் பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்களைக் கிட்டத்தட்ட 30 நாடுகள் இயற்றியுள்ளன. பாலியல் வன்முறைக்கு எதிராக ஹாலிவுட்டில் தொடங்கிய MeToo பிரசாரம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அலையைத் தொடங்கியது. இந்த நூற்றாண்டில் பெண்கள் முக்கியமாக வென்றெடுத்தது, பாலியல் வன்முறைக்கு எதிரான பொதுபுத்தியைத்தான். இந்த நூற்றாண்டின் கோஷம், நோ மீன்ஸ் நோ!

21-ம் நூற்றாண்டு... 20 ஆண்டுகளில் பெண்கள் வென்றெடுத்திருக்கும் உரிமைகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குடும்ப வன்முறைக்கு எதிரான சட்டங்கள்

பெண்கள் போராட்டங்களின் விளைவாக, பல நாடுகள் குடும்ப வன்முறைக்கு எதிரான சட்டங்களை இயற்றியுள்ளன. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளைப் பொறுத்தவரை குடும்ப வன்முறையை கிரிமினல் குற்றமாக இல்லாமல் சிவில் குற்றமாகப் பட்டியலிட்டிருந் தாலும், இந்த முதல் படி வரவேற்புக்குரியதே. மேலும், இந்தச் சட்டங்கள் உடல் மீதான வன்முறையை மட்டுமல்லாமல், மன ரீதியான தாக்குதல்களையும் குற்றமாக அடையாளப் படுத்துகின்றன.

கருக்கலைப்பு உரிமை

2012-ம் ஆண்டு அயர்லாந்தில், கருக்கலைப்பு சட்டத்தைக் காரணம்காட்டி மருத்துவமனை கருக்கலைப்பு செய்ய மறுத்ததால் இந்தியப் பெண் சவிதா மரணம் அடைந்தார். அது மிகப்பெரிய போராட்டமாக வெடித்தது. இதன் விளைவாக அயர்லாந்தின் அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு, அவசர காலங்களில் கருக்கலைப்பு செய்வது சட்டபூர்வமாக்கப்பட்டது. சிலி, ஸ்பெயின், இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கருக்கலைப்பு செய்வதை சட்டபூர்வமாக்கின; கருக்கலைப்பு செய்வதற்கான கால வரையறையை அதிகமாக்கின.

சம்பளத்துடன்கூடிய மகப்பேறு விடுப்பு

இன்றைக்கு உலகை இயக்குவதில் ஆண் களுக்கு நிகராக, சில நேரங்களில் ஆண்களைவிட பலமடங்கு அதிகமாகப் பெண்கள் வேலைபார்க்கிறார்கள். இந்த நிலையில், சம்பளத் துடன்கூடிய மகப்பேறு விடுப்பு 21-ம் நூற்றாண்டின் அவசியமாகியிருக்கிறது. உலகம் முழுக்கப் பல்வேறு நாடுகள், குறிப்பிட்ட வாரங்கள் சம்பளத்துடன்கூடிய மகப்பேறு விடுப்பை கட்டாய மாக்கியிருக்கின்றன. குறிப்பாக, இந்தியாவில் 2017-ம் ஆண்டு சட்டத்திருத்தத்தின்படி, சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், வாய்ப்பிருக்கும் அலுவலகங்களில் ஆறு மாதங்களுக்குப் பிறகு வீட்டிலிருந்தே வேலைபார்க்க அனுமதிக்கலாம் என்றும், 50-க்கும் மேற்பட்டவர்கள் பணிசெய்யும் நிறுவனங்களில் குழந்தைகளுக்கான பரிந்துரைக் கப்பட்ட வசதிகளுடன்கூடிய நர்சரியை அமைக்க வேண்டும் என்றும், குழந்தையை நாள் ஒன்றுக்கு நான்கு முறை பார்ப்பதை அனுமதிக்கவும் இந்தச் சட்டத்திருத்தம் பரிந்துரைக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஊதிய இடைவெளி

ஆண், பெண் பணியாளர் களுக்கு இடையிலான ஊதிய இடைவெளிக்கு எதிரான போராட்டங்கள் கடந்த ஐந்தாண்டுகளில் செய்தித் தாள்களை அதிக அளவில் நிரப்பியிருக்கின்றன. 2015-ம் ஆண்டு சோனி நிறுவனத்தின் சில முக்கிய ஆவணங்கள் கசிந்தபோது,

பிரபல நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ் சக ஆண் நடிகர்களைவிட தனக்குக் குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டிருந்ததை அறிந்து, அதைப் பற்றி வெளிப் படையாகப் பேசினார்.

அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஊதிய இடைவெளிக்கு எதிராகப் பெண்கள் அலுவலகங்களில் இருந்து ஒருநாள் வெளிநடப்பு செய்து போராட்டம் நடத்தினர். ஐஸ்லாந்து உள்ளிட்ட சில நாடுகள் இந்த ஊதிய இடைவெளிக்கு எதிரான சட்டங்களை இயற்றின. ஏற்கெனவே சட்டங்கள் இருக்கும் சில நாடுகள், அவற்றைக் கடுமையாக்கின.

21-ம் நூற்றாண்டு... 20 ஆண்டுகளில் பெண்கள் வென்றெடுத்திருக்கும் உரிமைகள்!

மாதவிடாய் விடுப்பு

மாதவிடாய் காலங்களில் சம்பளத்துடன்கூடிய அல்லது சம்பளமில்லாத விடுப்பை வழங்கத் தொடங்கியிருக்கின்றன சில நிறுவனங்கள். Nike உள்ளிட்ட சில பெருநிறுவனங்கள் மட்டும் தற்போது மாதவிடாய் விடுப்பை வழங்குகின்றன. இந்தோனேசியா, தைவான், ஜப்பான், தென்கொரியா, ஜாம்பியா போன்ற நாடுகளில் மாதவிடாய் விடுப்பு சட்டரீதியாக கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. தென் கொரியாவில் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு கொடுக்கப் படுவதுடன், அந்த விடுப்பைப் பயன்படுத்தாதவர்களுக்கு அந்த இரண்டு நாள்களுக்கான சம்பளம் கூடுதலாகக் கொடுக்கப்படுகிறது. ஜாம்பியாவில், மாதவிடாய் விடுப்பு தர மறுத்தால் அந்த அலுவலகத்துக்கு எதிராக வழக்கு தொடரும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.

ஒற்றை பெற்றோர்

உலகம் முழுவதும் ஒற்றைப் பெற்றோராக இருக்கும் பெண் களுக்கான உரிமைகள் அதிக அளவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் 2015-ம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் CARA எனப்படும் தத்தெடுப்பதற்கான வழிமுறையைத் திருத்தி வெளியிட்டது. இதன்படி, தனியாக வாழக்கூடிய பெண் எந்தப் பாலினத்தைச் சேர்ந்த குழந்தையை வேண்டுமானாலும் தத்தெடுக்க முடியும். பெண்கள் குழந்தையைத் தத்தெடுப்பதற்கான குறைந்தபட்ச வயது 30-லிருந்து 25 ஆகக் குறைக்கப் பட்டிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றம் 2018-ல் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயரைக் குறிப்பிடத்தேவையில்லை என்று தீர்ப்பளித்தது. திருச்சியைச் சேர்ந்த விவாகரத்தான பெண், பின்னர் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக்கொண்டபோது, `தன் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயரைக் குறிப்பிடத் தேவையில்லை' என்று அவர் தொடர்ந்த வழக்கில் கிடைத்த தீர்ப்பு இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாகனம் ஓட்டும் உரிமை

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவது தடை செய்யப் பட்டிருந்தது. இதற்கு எதிரான போராட்டங்கள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. 1990-ம் ஆண்டு ரியாத்தில் சில பெண்கள் தடையை மீறி காரை ஓட்டியதற்காகக் கைது செய்யப்பட்டனர்.

2011-ம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்ற அரேபிய எழுச்சி, வாகனம் ஓட்டும் உரிமைக்கான போராட்டங்களை தீவிரமாகத் தூண்டிவிட்டது. இன்னும் பல்வேறு தொடர் போராட்டங்களின் விளைவாக, 2018-ம் ஆண்டு சவுதியில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டது. இதற்கு சில மாதங்களுக்கு முன்புதான், பெண்களுக்கு சைக்கிள் ஓட்டும் உரிமையும் வழங்கப்பட்டது.

சபரிமலை கோயில் நுழைவு

மாதவிடாய் வயது (10-50 வயதுக்கு உட்பட்ட) பெண்கள் சபரிமலை கோயிலுக்குச் செல்லக் கூடாது என்ற விதிமுறை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் நீக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு நாடு முழுக்க விவாதங்களை எழுப்பியது; கேரளாவில் கலவரங்களும் நடந்தன. 2019 ஜனவரியில் உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு, மாதவிடாய் வயதுப் பெண்கள் 51 பேர் தீர்ப்புக்குப் பிறகு, சபரிமலை கோயிலில் தரிசனம் பெற்றிருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தது. இன்னொரு பக்கம், உச்ச நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு குறித்து மறு ஆய்வு செய்வதற்காக மனு செய்யப்பட்டுள்ளது.

பெண்ணுறுப்புச் சிதைவுக்குத் தடை

பெண்ணுறுப்புச் சிதைவு என்பது சிறுமிகள், இளம் பெண்களுக்கு அவர்கள் இனத்தின் மூத்த பெண்கள் பிளேடு, கத்தியைப் பயன்படுத்தி, உடலுறவில் இன்பம் தரும் பகுதியை வெட்டி எடுப்பது. மேலும், அவர்கள் பெண்ணுறுப்பை மாதவிடாய் வெளியேறும் அளவுக்குச் சிறிய துவாரத்தை மட்டும் விட்டுவிட்டு தைத்துவிடுவார்கள். இதன் மூலம் பெண்களின் இன்பம் அனுபவிக்கும் உரிமையைப் பறித்து விட்டால், கணவனைத் தவிர வேறோர் ஆணுடன் உடலுறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காகவே இந்த வழக்கம்.

2016-ம் ஆண்டு அறிக்கையில் யுனிசெஃப் அமைப்பு, உலகில் 200 மில்லியன் பெண்கள் பெண்ணுறுப்புச் சிதைவால் (Female Genital Mutilation) பாதிக்கப்பட்டு வாழ்வதாகக் கூறியது. இந்தக் கோரத்துக்கு ஆளான பெண்களின் தொடர் கோஷங்களின் விளைவாக வும், ஐ.நா-வின் தொடர் பிரசாரங்களினாலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகள் பலவும், உலகின் பல்வேறு நாடுகளும் பெண்ணுறுப்புச் சிதைவை தடை செய்திருக்கின்றன.

பெண்களின் முன்னேற்றத்துக்குத் தடைபோடும் பழைமைகளில் சிலவற்றையே நாம் சட்டங்களைக் கொண்டு நகர்த்தியுள்ளோம். அவற்றையும்கூட முழுவதும் தகர்க்கவில்லை என்பதே உண்மை. அதேபோல, இன்னும் மாற்ற வேண்டிய பிற்போக்கு வாதங்கள், ஒழிக்க வேண்டிய கொடுமைகள், உடைக்க வேண்டிய சங்கிலிகள் நூறு மடங்கு உள்ளன. தொடர்ந்து பயணிப்போம்.