Published:Updated:

அருள் தரும் அம்மன் உலா!

அருள் தரும் அம்மன் உலா!

அருள் தரும் அம்மன் உலா!

அருள் தரும் அம்மன் உலா!

Published:Updated:

கரு.முத்து

ஆத்தா... வனபத்தரகாளியே !

'அன்னை தரும் எலுமிச்சம்பழம் அனைத்தையும் செய்யும்' என்பது கோயம்புத்தூர் மண்டல மக்களின் நம்பிக்கை. வீட்டு வாசலில் அன்னை மடி எலுமிச்சை இருந்தால், எந்த துர்தேவதையும் உள்ளே வர முடியாது... தொழில் சிறந்து விளங்க தொழிலிடத்தில் ஆத்தாளின் எலுமிச்சை இருந்தால் போதும்... திருஷ்டியைப் போக்கவும், திருஷ்டி படாமல் காக்கவும் அந்த எலுமிச்சை ஒன்றே போதும் என்று வாழ்வனைத்தையும் அன்னை வனபத்தரகாளியின் எலுமிச்சையிடம் ஒப்படைத்து விடுகிறார்கள் அவளுடைய பக்தர்கள்! அந்த அன்னை வனபத்தரகாளி இருப்பது மேட்டுப்பாளையம் அருகில் உள்ள தேக்கம்பட்டி எனும் சிற்றூரின் பவானி நதிக்கரையில்!

அருள் தரும் அம்மன் உலா!
##~##

தேவர்களுக்கும் மாந்தர்களுக்கும் பெரும் தொல்லைகள் கொடுத்து வந்த நிசும்பன், சும்பன் எனும் இரண்டு அசுரர்களை ஆங்காரத்துடன் வதம் செய்த அன்னை, அந்த ஆங்காரத்தைப் போக்கிக் கொள்வதற்காக அமைதியையும், தனிமையையும் தேடி வந்தமர்ந்த இடம்தான் இந்த நதிக்கரை.

பீடத்தின் மேலே கல் விக்கிரகமாக எழுந்தருளியிருக்கும் அன்னையைத் தரிசிக்க, தினசரி ஆயிரக்கணக்கில் திரண்ட வண்ணமே இருக்கிறார்கள் பக்தர்கள். 'அவளுடைய கடைக்கண் பார்வை பட்டால், எல்லா பிரச்னைகளும் ஒன்பதே வாரத்தில் ஓடிப் போய்விடும்' என்கிற நம்பிக்கைதான் காரணம்!

மேட்டுப்பாளையத்தில் இருந்து வாரம் தவறாமல் வந்து விடும் பக்தர்களில் பூவதி, ரெங்கநாதன் தம்பதியும் ஒன்று. ''நடக்கற வயசு வந்தும்கூட, நடக்காமலே இருந்தா எங்க பொண்ணு. பார்க்காத வைத்தியம் இல்ல. கடைசியில, அவள கொண்டு வந்து ஆத்தா காலடியில போட்டு, 'உன் பொறுப்பு’னு சொன்னோம். இப்ப அவ நல்லா நடக்க ஆரம்பிச்சுட்டா. அதைவிட எங்களுக்கு வேற என்ன செய்யணும் இந்த ஆத்தா..! ஆனாலும், இன்னிக்கு வரை எங்க வீட்டுல நடக்கற எல்லாத்தையும் அவதான் பார்த்துக்கறா'' என்று ஆத்தாளின் அருட்கருணையைச் சொன்னார்கள்.

அருள் தரும் அம்மன் உலா!

இன்று, நேற்றல்ல... பாரதக் கதை விளங்கும் காலத்துக்கு முன்பிருந்தே காவல் தெய்வமாக இங்கே வீற்றிருக்கும் இந்த வனபத்திரகாளி, பாண்டவர்களையும் காத்தருளியவள் என்கின்றன புராணச் செய்திகள்!

ஒரு காலத்தில் இந்தப் பகுதி, நெல்லூர்பட்டணம் என்ற பெயரில் விளங்கியது. இதை ஆரவல்லி மற்றும் சூரவல்லி ஆகியோரோடு சேர்த்து மொத்தம் ஏழு சகோதரிகள் மந்திர சக்தியாலும், சூனியத்தாலும் ஆண்டு வந்தார்கள். அவர்களை அழிக்கச் சொல்லி கண்ணன் உத்தரவிட, அதை ஏற்று நெல்லூர்பட்டணம் வந்தான் பீமன். சகோதரிகள் ஏவிய அத்தனை சக்திகளையும் முறியடித்தாலும், ஒரு சூது விளையாட்டில் தோற்றுப்போய், அவர்களிடம் சிறைப்பட்டான். இதைஅறிந்து மாய சக்தியால் அவனை சிறை மீட்டான் கண்ணன்.

அருள் தரும் அம்மன் உலா!

தொடர்ந்து, 'பெண்களுக்கு பயந்து ஓடிய நீயும் ஒரு ஆண் பிள்ளையா?’ என்று வல்லி சகோதரிகள் ஓலை அனுப்ப, ஆத்திரமுற்ற பாண்டவர்கள், தங்கள் தங்கை சங்கவதியின் (இப்பகுதியில் சொல்லப்படும் கதையின்படி பாண்டவர்களுக்கு சகோதரி உண்டு) குமாரன் அல்லிமுத்துவிடம் வல்லி சகோதரிகளை அழிக்கும் பணியை ஒப்படைத்தார்கள். வனபத்தரகாளியை பணிந்து, வல்லி சகோதரிகளை அழிக்கும் சக்தியை கொடுக்க வேண்டினான் அல்லிமுத்து. அன்னை அவனுக்கு திருநீறும், சக்தி வாளும் கொடுத்தாள். அந்த சக்தியோடு போரிட்டு, சகோதரிகளை சரணடையச் செய்தான் அல்லிமுத்து.

இதையடுத்து, தங்கள் மகள் பல்வரிசையை அவனுக்குப் பரிசாகத் தந்தார்கள். அவளை அழைத்துக் கொண்டு தன் நாட்டுக்குத் திரும்பினான் அல்லிமுத்து. செல்லும் வழியில் அன்னையின் திருநீறு அணிய மறந்துபோனவனுக்கு தாகமும், மயக்கமும் ஏற்பட... தன்னிடமிருந்த எலுமிச்சையை பிழிந்து குடிக்கக் கொடுத்தாள் பல்வரிசை. அது வல்லி சகோதரிகள் சூனியம் செய்து தந்த எலுமிச்சை. அதில் சூனியம் இருப்பது பல்வரிசைக்கே தெரியாது. அதைக் குடித்தவுடன் சுருண்டு விழுந்து உயிரை விட்டான் அல்லிமுத்து.

இதையறிந்த பாண்டவர்கள் தங்கள் முழு படையோடு நெல்லூர்பட்டணம் வந்து, அன்னையின் அருளோடு சகோதரிகளின் தேசத்தை அழித்தனர். சகோதரிகளில் ஒருத்தி மட்டும் தப்பித்து மலையாள தேசம் போய் கம்பளத்து பகவதியாக நின்றுவிட்டாள். மீதமுள்ள ஆறு பேரையும் மூக்கை அறுத்து மாய்த்தனர். வானுலகத்திலிருந்து அல்லிமுத்துவின் உயிரை மீட்டு, அவனுடைய சடலத்துக்கு உயிர் கொடுத்தான் அபிமன்யு.

இப்படி வல்லி சகோதரிகள் ஏவிய அத்தனை சூனியங்களையும், மந்திர சக்திகளையும் அழிக்கக் காரணமாக இருந்த இந்த அன்னைதான், அதேபோலவே இன்றும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கும் உதவுகிறாள் என்ற நம்பிக்கை அனைவரிடமும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

அருள் தரும் அம்மன் உலா!

தீப நெய் தடவிய எலுமிச்சையுடன் வந்தார்கள் சிறுமுகையை சேர்ந்த லலிதாமணி, கண்ணப்பன் தம்பதி. ''எங்க குழந்தைங்களுக்கு ஏதாவது ஒண்ணுனா... இங்க வந்து மூணு வாரம் தீபம் ஏத்துவோம்.

அருள் தரும் அம்மன் உலா!

எல்லாம் சரியாயிடும். இவ கருணையாலதான் எங்க பிள்ளைங்க நல்லா படிச்சு, ஆளாகி, அமெரிக்கா வரை போயிருக்காங்க. ஒவ்வொரு முறையும் இங்க வந்துட்டுப் போறப்பல்லாம் பூமி, டிராக்டர், வீடுனு ஏதாவது பொருள் வாங்குவோம்'' என்று பரவசமாகக் கூறினார் லலிதாமணி.

பத்து கைகள், பத்து தலைகள், மூன்று கண்கள் கொண்டவளாக, எருமை மற்றும் சிங்க வாகனங்களோடு இருக்கிறாள் அன்னை. பீடத்தில் ஏற்றி வைத்திருக்கும் தீபத்தின் புகையால் ஏற்பட்டிருக்கும் மையை, எலுமிச்சம்பழத்தில் தடவி பிரசாதமாக தருகிறார்கள். அது இருக்கும் வீட்டுக்கு திருஷ்டி உட்பட எந்தத் தீங்கும் ஏற்படாது என்பது நம்பிக்கை. ஆடி மாதம் முழுவதுமே அன்னைக்கு திருவிழாதான். அப்போது 36 அடி நீள பூக்குண்டம் (நெருப்பு) அமைக்கப்பட்டு குண்டம் இறங்குதல் நடைபெறுகிறது.

''வரப்பிரசாதியான இந்த அம்மனை அமாவாசை நாட்கள்ல வழிபடறது ரொம்ப உகந்தது. அப்போ கேட்கற வேண்டுதல்களை எல்லாம் அப்படியே நிறைவேத்தி தர்றா ஆத்தா. திருமணத் தடை இருக்கறவங்க ஒன்பது செவ்வாய்க்கிழமை கோயிலுக்கு வந்து எலுமிச்சை தீபம் ஏத்தினா, மாலை கூடும். இங்க இருக்கற துரத்தி மரத்துல தொட்டில் கட்டினா, குழந்தை பாக்கியம் கிடைக்கும். இப்படி கேட்டதை எல்லாம் கொடுக்கற இவளோட விபூதிதான்... நமக்கு பிரசாதம், கவசம், அருள் எல்லாம்!'' என்கிறார் ஆலயத்தின் தலைமை பூசாரி குமரேசன் சாமிகள்.

- சக்தி வருவாள்...

எப்படிச் செல்வது?

 

மேட்டுப்பாளையம் வரை ஏராளமான பேருந்து வசதி இருக்கிறது. ரயில் வசதியும் உண்டு. இங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் கோயிலுக்கு நகரப் பேருந்துகள் நிறைய இருக்கின்றன. காலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை கோயில் திறந்திருக்கும். மதியம் நடை சாத்தும் வழக்கமில்லை. அமாவாசை நாட்களில் காலை 4.30 மணிக்கே திறந்து விடுவார்கள். தொலைபேசி எண்கள்: 04254 - 222286, 225510.

படங்கள்: வி.ராஜேஷ்