Published:Updated:

வேலு பேசறேன் தாயி!

புருசன் வூட்டில் வாழப் போகும் பொண்ணே..!வடிவேலு ஓவியம்: கண்ணா

வேலு பேசறேன் தாயி!

புருசன் வூட்டில் வாழப் போகும் பொண்ணே..!வடிவேலு ஓவியம்: கண்ணா

Published:Updated:

 நகைச்சுவை புயலின் நவரச தொடர்

 ##~##

கல்யாணம் ஆன ஒடனேயே... தனிக்குடித்தனத்துக்கு கூட்டிக்கிட்டுப் போற பொண்ணுக இன்னிக்கு பெருத்து கிடக்கறாக. ஆனா... இந்த வெசயத்துல எம்பொண்டாட்டி அப்புடி ஒரு அதிசயப் பொறப்பு. அவ என்னைய வுட்டுப் போனாலும் போவாளே தவிர, எங்கம்மா... அதான் அவளோட மாமியாரை விட்டு செத்த நாழிகூட பிரிய மாட்டா. கொழம்பு வெக்கிறது தொடங்கி... கோயிலுக்குப் போற வரைக்கும் ரெண்டு பேருக்கும் பெவிக்கால பூசிவுட்ட மாதிரி அப்புடியரு பிணைப்பு. வார்த்தைக்காக இதச் சொல்லல. எங்க வூட்டுப் பக்கம் வந்துப் பாத்தீகனா மாமியா - மருமக பாசத்தப் பாத்து ஆத்து ஆத்துப் போவீக!

எங்க வூட்ல மொத்தமா 16 உருப்படி. பொண்டாட்டி, புள்ளைக தொடங்கி... பாட்டி, அத்தைனு அத்தனை பேரையும் மொத்தமா எங்க வூட்ல பாக்கலாம். அப்பாவோட தங்கச்சி... அதான் எங்க அத்தை இன்னிவரைக்கும் எங்க வூட்லதான் இருக்காங்க. சின்ன வயசுலேயே மாமாவ பறிகொடுத்துட்டாங்க. எங்க அப்பாவுக்கு அத்தை மேல அம்புட்டுப் பாசம். சாகுறப்ப, 'எங்கூடப் பொறந்தவள கண்ணு கலங்க வுட்டுறாதப்பா... தாத்தா, பாட்டிய பத்திரமா பாத்துக்க''னு சொல்லி கண்ண மூடினாரு. அப்பஞ் சொல்ல காப்பாத்துற சமத்துப்புள்ள நானு.

எனக்கு சம்சாரமா அமைஞ்ச எந்தங்கந்தேன் எல்லாத்துக்கும் காரணம். யாரையும் ஒதுக்கி வெச்சுப் பாக்கத் தெரியாத பச்சப்புள்ள மனசு அவளுக்கு. அவுக அம்மா... அதான் எம் மாமியார் அதவிட சொக்கத் தங்கம். 'எம்மருமகப் புள்ளக்கி நல்லா சமைச்சுப் போடுடீ... வெமானத்த விட வேகமா பறந்த புள்ள, இப்பத்தேன் கால் தங்கி வீடு வாசனு பாக்குது. இப்ப ஒடம்பத் தேத்து னாத்தேன் உண்டு’னு இந்த மாப்புளைய அவுக கவனிக்கிற கவனிப்பு இருக்கே... ஆத்தாடி, எனக்கு ஏழேழு ஜென்மத்துக் கும் இந்த வரம் வாய்க்கணும். உண்மையா சொல்லணும்னா எனக்கு ரெண்டு தாயிங்க. ஒண்ணு என்னப் பெத்த எங்க ஆத்தா... இன்னொரு தாயி எம் மாமியா! எங்கம்மாவ எம் பொண்டாட்டி எப்புடி உயிருக்குயிரா மதிக்கிறாளோ... அதே அளவுக்கு மாமியார மதிக்கிறேன்.

வேலு பேசறேன் தாயி!

குடும்பம்னா இப்புடித்தேன் இருக்கணும். ஆனா, எத்தனக் குடும்பத்துல மாமியாரும் மருமகளும் ஒண்ணா இருக்காக? மகன் என்னதான் வசதி வாய்ப்பா வாழ்ந்தாலும், பெத்தவ கஞ்சிக்கு வழியில்லாம கதறி அழுகிறத எத்தனயோ இடங்கள்ல பாக்குறோமே.

மாமியாவா இருந்தாலுஞ் சரி... மருமகளா இருந்தாலுஞ் சரி... யாரும் வேணும்னே ஒருத்தர ஒருத்தர் வெட்டி விட்றணும்னு அலையிறது இல்ல. சின்னச் சின்ன விசயங்கள்ல மொளைக்கிற பெரச்சனதேன் பெரிசா கெளை விட்டு ஒருத்தர ஒருத்தர் பிரிக்கிற அளவுக்கு இம்சயக் கொடுத் துடுது. வார்த்தையில நிதானம் இருந்தா... எந்தச் சொந்தத்தையும் யாரும் பிரிக்க முடியாது. 'அத்தைதானே பேசுறாக... வயசானவங்க பேசுறதால நாம எந்த வெதத்துலயும் கொறைஞ்சுட மாட்டோம். அவுகளுக்குத் தேவையானத செய்வோம். ஒரு நாளைக்கு நம்மளப் பத்தி அவுக புரிஞ்சுப்பாக’னு மருமக நம்பினா... அவங்க வூட்ல எப்புடி அடுத்து சண்டை வரும்? மருமகள தப்பாப் பேசிட்டோமேனு அடுத்த நிமிஷமே மாமியாரும் மனசு மாறி கையப் புடிச்சுக் கண்ணுல ஒத்திக்கிடுவாகளா இல்லீயா..?

மாமியாரா இருக்குறவுகளும், 'நம்ம மகனுக்குத் தொணையா இருக்கிறவதானே பேசினா... புதுசா வந்தவ புரிஞ்சுக்காமதேன் நடந்துப்பா... எல்லாம் போகப் போகச் சரியாகிடும்’னு ஒரு நிமிசம் நெனச்சாகனு வைங்க... அந்தக் குடும்பம் அடுத்த நாளே கோயிலா மாறிடும்.

எம்பொண்டாட்டியோட ஒரு நாளு வேலைகளச் சொல்றேன்... கேட்டா, கிறுகிறுத்துப் போயிடுவீக. வூட்டுல இருக்குற பதினாறு பேருக்கும் சமைக்கணும். வூடு... வாச கூட்டணும்; மனசு சரியில்லாத தம்பி இளங்கோவ பராமரிக்கணும்; தாத்தா, பாட்டிக்குப் பக்குவம் பண்ணணும்; நா எங்கே இருந்தாலும் தேடிப் புடிச்சு எனக்கு வேண்டியத எல்லாஞ் செஞ்சு அனுப் பணும்; எம்புள்ளைங்கள பள்ளிக்கூடம், காலேஜுனு அனுப்பணும்; ஊரு, ஒறமொறனு யாரு வந்தாலும் ஒக்கார வெச்சு ஒபசரிக்கணும்; படம், பஞ்சாயத்துனு எனக்கான பெரச்சனைக வூடு தேடி வந்தா... அதப் பத்தி எம்மேனேஜருக்கு ஒடனே தகவல் சொல்லணும். இன்னுஞ் சொல்லிக்கிட்டே போகலாம். சொல்ற எனக்கே வாய் வலிக்குதுனா.... பாக்குற எம் மனைவிக்கு எம்பூட்டு கஷ்டமா இருக்கும்?

எங்கேயோ பொறந்து எங்கேயோ வாக்கப்படுற வாழ்க்கதேன் பொண்ணுகளுக்கு. பெத்தவங்களப் பிரிஞ்சு மத்தவன கைப்புடிக்கிற வாழ்க்க எவ்வளவு கஷ்டமானதுனு எல்லாருக்கும் தெரியும். புருசங்காரன் சம்பாதிச்சாலுஞ் சரி... சறுக்கி விழுந்தாலுஞ் சரி... அவனோட மனசு நோகாம, என்னிக்குஞ் சாதிக்கிற சக்தியோட அவன நெல நிறுத்த பொஞ்சாதியா அமைஞ்ச ஒரு பொண்ணாலதேன் முடியும்.

ரெண்டு வாரத்துக்கு முன்ன நானும் எம்மனைவியும் மனசுவிட்டுப் பேசிக்கிட்டு இருந்தோம். ''எந்நேரமும் பரபரப்பா இருந்த நா இப்போ செவனேனு இருக்கிறதப் பாக்க ஒனக்கு வருத்தமா இல்லையா..?''னு கேட்டேன். அவ என்ன சொன்னா தெரியுமா?

''முன்னக் காட்டியும் இப்பத்தாங்க ஒங்ககூட மனசு விட்டுப் பேச முடியுது. 'வடிவேலுவோட பொண்டாட்டி’னு நாலுபேரு சொல்றதப் பெருமையா கேட்டாலும்... எம்புருசனோட கையப் புடிச்சுக்கிட்டு நிக்கிற இந்தப் பெருமைக்கு ஈடாகுமா? சொன்னா நம்ப மாட்டீக... புதுசா வாக்கப்பட்டு வந்தப்பகூட நான் இவ்வளவு சந்தோசமா இல்ல... இருவத்தி நாலு மணி நேரமும் ஒங்கள பாத்துக்கிட்டே இருக்குற இந்த வாழ்க்கதேன் புடிச்சிருக்கு!''னு சொன்னா பாருங்க... இந்தக் கறுத்த தோலு மேல எவ்வளவு காதலு? அவ பொஞ்சாதி இல்லீங்க... எதையுஞ் சரிசமமாப் பாக்குற எஞ்சாதி!

- நெறய்ய பேசுவோம்...