Published:Updated:

நான் வேம்பு பேசுகிறேன்..!

வசுமதி கண்ணன்

நான் வேம்பு பேசுகிறேன்..!

வசுமதி கண்ணன்

Published:Updated:
##~##

எங்கள் வீட்டு வாசலில் இடப்புற ஓரம் வேப்ப மரமும், வலப்புற ஓரம் மாமரமும் வளர்ந்து உயர்ந்து நின்று மனதுக்கும் கண்களுக்கும் அளிக்கும் புத்துணர்ச்சியை, நாங்கள் நாளும் அனுபவிக்கும் சுகானுபவத்தை சொற்களால் விவரிக்க இயலாது!

வேம்பின் கனத்த பட்டைகளைத் தடவியபடி அதனடியில் நிற்கிறேன். இலைகள் அனுப்பும் காற்று, பால்ய காலத்து ஞாபகங்களை என்னுள் விசிறி விடுகிறது!

சிறு வயதில், வேப்பங்கொழுந்து இலைகளோடு சீரகம், உப்பு சேர்த்து அரைத்து, சீடை போல் உருட்டிக் கொடுக்க வரும்போது, அம்மாவின் பிடியில் சிக்காமல் ஓடி, சிக்கிக் கொண்ட அந்த நாட்கள்...

காய வைத்த வேப்பம் பூக்களின் அருமை தெரியாமல், ஊதிப் பறக்கவிட்டு விளையாடியது...

'தினமும் வேப்பிலைக் கொழுந்தை ஒரு கிள்ளு கிள்ளி, வெறுமனே மென்னு விழுங்கறதால எனக்கு தலைவலி, ஜுரமே வந்ததில்ல’ என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் மாமாவின் ஆரோக்கியமான தேகம்...

கரும்புத் தோட்டத்தின் பம்ப்செட் தொட்டி மேல் அமர்ந்து, வேப்பங் குச்சி நுனியை பிரஷ் போல் தட்டி, பல் துலக்குபவர்களின் லாகவம்...

நான் வேம்பு பேசுகிறேன்..!

'வாயு, பசியின்மை, குமட்டல், வாந்தி, மயக்கமா..? வேப்பம்பூ ரசம், துவையல் பண்ணி சாப்பிடு’, 'குடல் புழுக்கள் அழிய, வேப்பங்கொட்டைய வெல்லம் கூட்டி அரைச்சுக் கொடு', 'சொறி, சிரங்குக்கு வேப்பம் பழ சர்பத் கொடு’, 'புரையோடிய புண்ணுக்கு வேப்பங்கொட்டைக் குள்ள உள்ள பருப்பை அரைச்சுப் பூசு’

- மருத்துவம் படிக்காத மங்கம்மா பாட்டியின் பழுத்த அனுபவம்...

தமிழ் வருடப் பிறப் பன்று, இலையில்  ஸ்பெஷல் அயிட்டமாக இடம் பெறும் வேப்பம் பூவும், மாங்காயும் இணைந்த வெல்லப் பச்சடியின் தனிச் சுவை...

- இப்படி, எத்தனை எத்தனையோ நினைவுகள் நெஞ்சை விட்டு நீங்காமல்!

வயலில் அம்மா நாற்று நட, களத்து மேட்டு மரத்தில் குழந்தை தூங்கும் தூளி போல, சென்னை மாநகராட்சியில் உள்ள சந்தடி நிறைந்த அம்பத்தூர் தெருவில் நிற்கும் எங்கள் வீட்டின் வேப்ப மரத்திலும் அன்று ஒரு தொட்டில்! பக்கத்து வீட்டில் வேலை பார்க்கும் பெண், தூளி கட்டி, குழந்தையை தூங்க வைத்துச் சென்றிருந்தார். கண்கள் மலர மலர அதை ரசித்துக் கொண்டிருந் தேன்.

''என்ன பார்க்கறே?'' என்றது வேம்பு என்னிடம்! பரவசமாகி நிமிர்ந்து அதன் இலை முகம் பார்த்தேன்.

நான் வேம்பு பேசுகிறேன்..!

''குழந்தை மட்டும் என் மடியில தூங்கல. அதோ பார்... பசு மாடு வெயிலுக்கு இளைப்பாற வந்திருக்கு. துணி மூட்டையை சைக்கிள்ல தள்ளிட்டு போறவரு உச்சி வெயில் தாளாம, சித்த நேரம் நின்னு போறாரு. வண்டிங்க கூட சூட்டுக்கு பயந்து நிக்குதுங்க. கூலி வேலை செய்யறவங்க, மதிய சாப்பாட்டை என் நிழல் மடியில் உட்கார்ந்து சாப்பிட்டு, கொஞ்சம் கண் அசந்துட்டுப் போறாங்க. பொழுது சாஞ்சா பறவைகள்லாம் ஓடி வருது. நிம்பா, வேம்பு, கொண்ட வெப்ப, பேவு, ஆர்யா வெப்பு, நிம், லிம்டோனு இடத்துக்கு இடம் பெயர்ல மாறுபட்டாலும், என்னுள்ள இருக்கும் மருத்துவ குணம் எப்பவுமே மாறாதது!

நான் வேம்பு பேசுகிறேன்..!

அந்த மாமரத்தைப் பார். அவ என் தோழி. நிலம், பட்டா, பிளான், லோன்னு எந்த ஆவணங்களும் தேவைப்படாம, காக்கா சொந்தமா அவ மேல கூடு கட்டி, குஞ்சுகளைக் காப்பாத்தி குடும்பம் நடத்துது. இதெல்லாம் சாம்பிள்தான். இன்னும் எவ்வளவோ இருக்கு எங்களோட மகிமை''

- வேம்பின் பேச்சில் நிறைய கர்வம். தகுதியான கர்வம்!

வேம்புவை இந்திய தபால் தலையில் அச்சிட்டதற்கும், மா-வை வங்க தேசம் 'தேசிய மரம்' என்று பெருமைபடுத்தியதற்கும் நன்றி கூறிய அதேசமயம், நம்மை இடித்துப் பேசவும் மறக்கவில்லை வேம்பு!

''மடியும் வரை, பூ பூத்து, காய், கனிகளைத் தவறாமல் தந்து, வழுக்கை விழுந்தாலும் மறுபடி தழைச்சு வந்து, வெட்ட வெட்ட கிளர்ந்தெழுந்து, காற்றை சலவை செஞ்சு, விண்ணிலிருந்து மண்ணுக்கு மழையை வரவழைச்சு, இயற்கை வளத்துல மனிதர்களையும், பறவைகளையும், விலங்குகளையும் ஒரு சேர காத்து நிக்கிற எங்கள, நீங்க என்ன பண்றீங்க? நெடுஞ்சாலை போடறேன், வீடு கட்டுறேன்னு தாறுமாறா வெட்டித் தள்ளுறீங்க. எங்களோட ரத்தத்தின் நிறம் தெரியுமா உங்களுக்கு? அது வேறொண்ணுமில்ல... இன்னும் சில வருஷங்கள்ல, வெட்டின மரங்களோட விளைவுகளால நீங்க விடப் போற கண்ணீர்தான்!''

- நடு உச்சியில் நங்கூரம் பாய்ச்சியதுபோல் பேசி விட்டு, சிணுங்கிய குழந் தைக்கு ஜில் காற்று விசிறத் திரும்பியது வேம்பு!

நீங்களும் நிருபர்தான்!

வாசகிகளே... இது உங்களுக்கான பக்கம்! 'செய்திகளை சேகரிப்பதில், பெண்களுக்கு நிகர் வேறு யாரும் இருக்க முடியுமா என்ன?'

அசத்தலான, அற்புதமான, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கின்ற விஷயங்கள்; 'அட, நாமும் இதேபோல முன்னேறலாமே' என்று நம்மை சொல்ல வைக்கின்ற சாதனைப் பெண்கள்; இன்னும், இன்னும் பலதரப்பட்ட செய்திகளும் உங்களிடமும்... உங்கள் அக்கம் பக்கத்திலும் கொட்டித்தானே கிடக்கின்றன! அத்தகைய செய்தி களில், பிரசுரத்துக்குத் தகுதியான செய்திகளைத் தேர்ந்தெடுத்து, நேர்த்தியான புகைப்படங்களுடன், அசத்தலான செய்திக் கட்டுரையாக எழுதி அனுப்புங்களேன் தோழிகளே! பிரசுரமாகும் கட்டுரைகளுக்கு தகுந்த பணப்பரிசு உண்டு!

பின்குறிப்பு: உங்களின் கட்டுரைகள் நூறு சதவிகிதம் உண்மையானவையாக இருப்பது முக்கியம். கட்டுரைகளை தபால், இ-மெயில் மூலமாக அனுப்பலாம்.

தபாலில் அனுப்புபவர்கள்... 'நீங்களும் நிருபர்தான்’, அவள் விகடன், 757 அண்ணா சாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கு அனுப்பவும். இ-மெயில்: aval@vikatan.com